முள்ளிவாய்க்கால் நிழற்போர் – தீபச்செல்வன்

முள்ளிவாய்க்கால் நிழற்போர்


இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மாபெரும் இனப்படுகொலைதான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை.

சிங்கள இனவெறி அரசு, உலக வல்லாதிக்கங்களின் கூட்டு ஆதரவுடன், நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் ஒன்றரை இலட்சம் ஈழ மக்கள் கொன்றழிக்கப்பட்டார்கள். தமிழ் ஈழ நிலமே பெரும் நில அழிப்புக்கும், பண்பாட்டு அழிப்புக்கும் பொருளாதார அழிப்புக்கும் முகம் கொடுத்தது. தமிழ் இனத்தை உளவியல் ரீதியாகவும் அழித்திருந்த முள்ளிவாய்க்கால் போர், இன்னமும் நிழலாகத் தொடர்ந்து வருகிறது.

போர் முடிந்து இந்த வருடத்துடன் பத்து ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன. ஆனால், முள்ளிவாய்க்கால் போர் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல்வேறு வகையிலும் தமிழ் இன அழிப்பு நிகழ்ந்த வண்ணமுள்ளது. முன்னாள் போராளிகளின் வாழ்க்கையானது, பெரும் இன அழிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு, மாவீரர் தினத்தின்போது மட்டக்களப்பு வவுண தீவில் சிறிலங்கா காவல்துறையை கொலை செய்ததாக கூறி, முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டனர்.

தனது கணவரை விடுவிக்குமாறும் தமது தந்தையை விடுவிக்குமாறும் மனைவியும் குழந்தைகளும் தெருவில் நின்று போராடிய காட்சியை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். இப்போது வவுண தீவு கொலையே தமது முதல் தாக்குதல் என்று ஐ.எஸ் சர்வதேச பயங்கரவாத இயக்கம் உரிமை கோரியுள்ளது. பொய்க்குற்றச்சாட்டில், அபாண்ட பழி சுமத்தப்பட்டே முன்னாள் போராளிக் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கபள அரசானது முன்னாள் போராளிகளை தொடர்ந்து அழுத்தமான ஒரு சூழலில் வைத்து உளவியல் வாதைகளை புரிந்து அவர்களை அழிக்கிறது.

2009இற்குப் பின்னர் 200இற்கும் அதிகமான முன்னாள் போராளிகள் திடீர் மரணங்களுக்கு உள்ளாகியுள்ளனர். புற்றுநோய், இரத்த அழுத்த நோய், நீரிழிவு நோய் போன்ற நோய்களினாலும் காரணம் அறியாமலும் பலர் மரணித்துள்ளனர். எந்தவிதமான சலனங்களும் இல்லாமல், கத்தியின்றி, இரத்தமின்றி, அவர்கள் கொல்லப்படுகின்றனர். எவ்வாறு முள்ளிவாய்க்காலில் அவர்கள் அழிக்கப்பட்டார்களோ, அவ்வாறே தொடர்ந்தும் அழிக்கப்படுகின்ற நிலை நீடிக்கின்றது. எமக்காக போராடியவர்களின் மரணங்களை வெறும் இரங்கல் வார்த்தையுடன் எதுவரை கடக்கப்போகின்றோம்?

பல்வேறு ஆதாரங்களுடன் பெயர்கள் புள்ளி விபரங்களுடன் இந்த விடயத்தை எழுதினால், அரசியலுக்காகவும் இலாபத்திற்காகவும் இதனை எழுதுவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் முன்னாள் போராளிகளே இந்த மரணங்கள் தொடர்பில் கருத்து கூறியுள்ளார்கள். பேருந்து நிலையத்தில் பேருந்து நின்ற போராளி திடீரென மயங்கி தற்கொலை என்ற செய்திகள் பல இடத்தில் இருந்து வந்திருக்கின்றன.

இலங்கை அரசின் முன்னிலையில் முல்லைத்தீவில் சாட்சியம் வழங்கிய முன்னாள் போராளி ஒருவர், தனது உடலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தனது உடல் வலுவிழந்திருப்பதாகவும் தடுப்புமுகாமில் தமக்கு ஊசிகள் ஏற்பட்டதாகவும் அச்சத்துடன் சாட்சியம் வழங்கிய செய்தி ஊடகங்களில் வெளிவந்தது. எமக்காக போராடிய போராளிகளும் தெய்வங்களே. அவர்களை பாதுகாப்பதும், அவர்களின் வாழ்வு சிறப்பதும் மாவீரர்களுக்கு செய்கின்ற மரியாதையாகும்.

மற்றொரு புறத்தில் பெண்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நுண்டகடன் நிதி நிறுவனங்களால் தாயகத்தில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதிலும் பெண்களே 99 வீதமானவர்கள். போர் நடந்த வடக்கு கிழக்கு மண்ணில் நுண்கடன் நிறுவனங்களை அனுப்பி தமிழ் மக்களை அழிக்கிறதா சிங்கள அரசு? விடுதலைப் புலிகள் காலத்தில் ஒரு நுண்கடன் நிறுவனம்கூட தமிழர் மண்ணில் இல்லை. என்று எத்தனையோ தடைகளின் மத்தியிலும் நாம் நிறைவாகவும் நிமிர்ந்தும் வாழ்ந்தோம். நுண்கடன் நிறுவனங்கள் வலிந்து கடனை கொடுத்துவிட்டு மக்களை துன்றுபுத்தி கொல்கின்றது.

சி.எஸ்.சி என்ற இலங்கை அரசின் பாதுகாப்பு திணைக்களத்தில் சுமார் 5000 பேர் வேலைக்கு எடுக்கப்பட்டனர். தோட்டங்களிலும் முன் பள்ளிகளிலும் வேலை என்றே அவர்கள் சேர்க்கப்பட்டனர். வேலைக்கு சேர்த்துவிட்டு அவர்களை வங்கிகளில் கடன் எடுக்கவலியுறுத்தியதுடன் அவர்களுக்கு கடன் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களும் வழங்கப்பட்டன. இன்றைக்கு அவர்களுக்கு ஆயுதப் பயிற்ச்சி அளிக்கப்படுகின்றது. இராணுவச் சீருடையுடன் வேலைக்கு வரவேண்டும் என்று உத்தரவு.

அவர்கள் பெரும் உளவியல் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடன்களால் வேலையை விட்டு நிற்க முடியாத நிலையில். குழந்தைகளை வீடுகளில் விட்டு விட்டு தெற்கு இராணுவ முகாங்களில் அவர்கள் இராணுவ பயிற்சி எடுத்தவண்ணமுள்ளனர். இதற்கு அடுத்து, சிறுவர்கள் இலங்கை அரச படைகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். சிறுவர்களை போதைப் பொருள் கடத்தவும், அவர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்கவும் பல்வேறு வழிகளை இலங்கை இராணுவம் காண்பிக்கிறது. பல இடங்களில் போரில் தாய் தந்ததைய இழந்த பிள்ளைகள் தான் இராணுவத்தின் போதைப் பொருள் கடத்தல்காரர்கள். இதில் சிக்கி பல சிறுவர்கள் வழி தவறி, சிறைகளில் இருக்கின்றனர்.

பாடசாலை செல்லும் சிறுவர்களிடம் போதைப் பொருட்களை கடத்தும் இராணுவத்தினர், பாடசாலையை அண்டிய இடங்களை தமது போதை வலயமாக்க முயல்கின்றனர். அத்துடன் பாடசாலை மாணவிகளை திருமணம் செய்ய முற்படுகின்ற நிகழ்வுகளும் நடக்கின்றன. கிளிநொச்சியில் பாடசாலை மாணவி ஒருவரை இராணுவச் சிப்பாய் ஒருவர் காதலித்து திருமணம் முடித்துக் கொண்டார். புத்தகங்களை சுமக்க வேண்டிய வயதில் அந்த மாணவி குழந்தையை தூக்கி செல்கிறார்.

அண்மையில் வெளியான சாதாரண தர பெறுபேறுகளும் சரி, உயர்தர பெறுபேறுகளும் சரி பெரும் வீழ்ச்சியை எமக்கு எடுத்துரைத்துள்ளன. அகில இலங்கை அளவில் முதல் பத்து இடங்களில் ஒரு தமிழ் மாணவரும் இல்லை. கடுமையான போர்க் காலத்திலும் பல தடைகளின் மத்தியிலும், ஏன், முள்ளிவாய்க்கால் காலத்தில்கூட, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாண பெறுபேறுகள் இலங்கை மட்டத்தில் பேசப்பட்டன. இப்போது எல்லா வசதிகளும் வந்தும் ஏன் இப்படி பின் தள்ளப்பட்டுள்ளோம்? வசதிகளுடன் கல்வியை வீழ்த்தும் வலைகளையும் சிங்கள அரசு பின்னியிருப்பதுதான் நமக்கு தெரியாமல் இருக்கிறது.

சிறுவர்கள்மீதான இத்தகைய அழுத்தங்கள் ஏற்படவும் கல்வி பாதிக்கவும் அடிப்படையாக மற்றொரு பாதிப்பு, நமது பண்பாட்டின் வீழ்ச்சியாகும்.  போர்க் காலத்திலும் வீழாப் பண்பாடு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்களால் வீழ்ந்து கிடக்கிறது. வெளிப்படையாகவே, சிங்கள திணித்தல்கள், புத்தர் சிலை வைத்தல்கள் மிகவும் இறுமாப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. இராணுவக் களியாட்டங்களுக்கு திரள்பவர்களை பார்க்கும் ஈழ மண்ணில் கோயிலில் தேர் இழுக்க ஆள் இல்லை. அறக் கல்வி முற்றாக வீழ்ந்து வீட்டது. தொடர்பாடல் சூழல் குழந்தைகளின் கவனத்தையும் பாதையையும் முற்றாக மாற்றுகின்றது.

ஒரு குழந்தையை கருவிலேயே அழிப்பதையே அரச திட்டமாக சிங்கள அரசு செய்தது. மகிந்த ராஜபக்ச காலத்தில் கட்டாயக் கருத்தடை வடக்கில் மேற்கொள்ளப்பட்டு அதனால் பெரும் அரசியல் பிரச்சினைகளே ஏற்பட்டது. கருவில் அழிக்க முயலும் அரசு, பிறகு பிறந்த குழந்தையை சிறுவர் பராயத்தில் அழிக்க முற்படுகின்றது. பிறகு, வளர்ந்த பிறகும் பல்வேறு சூழ்ச்சிகளை பின்னுகிறது. ஒரு இனத்தை அழிக்க இப்படி எல்லாம் ஒரு அரசு செய்யுமா?  சிங்கள அரசு செய்யும். சிங்கள அரசின் முதன்மையான அரசியந்திர நடவடிக்கையே தமிழ் இன அழிப்பே.

இலங்கையில் எல்லாம் முடிந்துவிட்டது. போர் முடிந்து விட்டதால் அங்கு இனி பிரச்சினைகள் இல்லை என்று கூறுபவர்கள், இலங்கை அரசின் இந்த அழிப்புக்களுக்கு பதில் கூறட்டும். போர்க் காலத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டோம். இன்றும் அவ்வாறே கொல்லப்படுகிறோம். தொகுத்து பார்த்தால் அந்த கணக்குத்தான் வருகிறது. எனவே, முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சர்வதேச சமூகம் நீதியை வழங்க வேண்டும். அதுவே முள்ளிவாய்க்காலின் பின்னரும் தொடரும் நிழற்போரை தடுத்து ஒரே வழியும் தீர்வும் ஆகும்.

2009இற்குப் பின்னர் 200இற்கும் அதிகமான முன்னாள் போராளிகள் திடீர் மரணங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பெண்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நுண்டகடன் நிதி நிறுவனங்களால் தாயகத்தில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

சிறுவர்கள் இலங்கை அரச படைகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். சிறுவர்களை போதைப் பொருள் கடத்தவும், அவர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்கவும் பல்வேறு வழிகளை இலங்கை இராணுவம் காண்பிக்கிறது.

ஒரு குழந்தையை கருவிலேயே அழிப்பதையே அரச திட்டமாக சிங்கள அரசு செய்தது.

தீபச்செல்வன்