வியட்நாம் போர்

அமெரிக்க பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், உலகளவில் அமெரிக்காவின் வியட்நாம் வெறியாட்டம் வெளிச்சத்திற்கு வருகிறது..வேறு வழியின்றி, அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் வியட்நாம் போரை 1975-இல் நிறுத்தியபோது, இந்த 20 வருட நெடிய போரில் கொல்லப்பட்டவர்கள் ஏறத்தாழ 45 லட்சம் பேர் என அதிகாரபூர்வமான தகவல் வெளியானவுடன் உலகம் நிலைகுலைந்தது..லட்ச்சக்கணக்கான போர்வீரர்கள்/அப்பாவி பொதுமக்கள் உடல் உறுப்புகளை இழந்தார்கள்…வியட்நாமின் நீர் நிலைகள் மற்றும் வனாந்திரங்கள் பாழ்பட்டு உருக்குலைந்தன..

இருபதாம் நூற்றாண்டில், முதல், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மானுட குலம் சந்தித்த பேரழிவு—வியட்நாம் போர். இசைக்கலைஞர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட மேதைகள் அமெரிக்காவுக்கு எதிராகவும் குறிப்பாக போர் மற்றும் அணு ஆயுதங்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்..1970 களில் பனிப்போர் உச்சம் அடைந்த காலக்கட்டம்.. அமெரிக்காவும், ரஷ்யாவும் போட்டிப்போட்டிக்கொண்டு அணு ஆயுதங்களை குவித்து வந்தார்கள்..

உலக அமைதிக்காக பல கலைஞர்கள் பித்த நிலையில் தங்கள் படைப்புகளில் இயலாமையை பதிவுசெய்தார்கள்…அதில் ஒருவர்–இருபதாம் நூற்றாண்டின் அமெரிக்காவின் முக்கிய கவிஞர், மனித உரிமப் போராளி, கலகக்காரர் அலென் கின்ஸ்பெர்க்..

வியட்நாம் போர் முடிவுக்கு வந்தாலும், ஆயுத தளவாடங்களின் சேகரிப்பு ஒவ்வொரு நாட்டிலும் அதிகரித்தது…ஒவ்வொரு நாட்டின் ராணுவ பட்ஜெட்டும் மில்லியன் டாலரின் உயர்ந்த வண்ணம் இருந்தது… சக மனிதனை அழிப்பதற்கு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது… துகள் பொளதிகம், அணு அறிவியலின் கொடூர பின்விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பரவியது…

அலென் கின்ஸ்பெர்க் மகத்தான கவிஞன் மட்டுமல்ல…தன் சக மனிதனை நேசித்தவன்… வியட்நாம் போர் உச்சத்தில் இருந்தபோது, வெள்ளை மாளிகை முன்னால் நிர்வாணமாக நின்று தன் கவிதையை வாசித்தவன்,,,ஒரு டாலரோடு இந்தியாவுக்கு வந்து கொல்கத்தா வீதியில் பிச்சைக்காரர்களுடன் வாழ்ந்தவன்…உலக அமைதிக்காக இந்து உபநிஷத்தில் ஏதாவது வழி இருக்கிறதா என இந்திய தத்துவத்தை கற்றவன்…கங்கையில் கஞ்சா புகைத்து, அகோரிகளிடம் தீட்சண்யத்திற்கு முயற்சி செய்தவன்…இதெல்லாம் கின்ஸ்பெர்க் பித்த நிலையில் மானுட குலத்திற்கு ஏதாவது நல்லது நடக்காதா என்ற கையறு நிலையில் செய்த கலகக் கலைஞன்….

1978-ம் வருடம் விரக்தி நிலையில் அணு ஆயுத பரவலுக்கு எதிராக ”Plutonian Ode” என்ற நெடிய கவிதையை எழுதத் தொடங்கினார்..1978-ம் வருடம் ஜூலை 14 இல் கவிதை முடிக்கப்படுகிறது…அப்போது கொலரோடாவில் தங்கியிருந்த கின்ஸ்பெர்க்குக்கு Rocky Flats Truth Force என்ற அணு ஆயுதம் மற்றும் போருக்கு எதிரான தன்னார்வ குழுவோடு நெருங்கிய தொடர்பு இருந்தது.. அதே நாளில் கொலரோடாவில் அமெரிக்க அரசாங்கத்தின் அணு உலைக்கு கதிர்வீச்சு கச்சா பொருள் ரயில் வண்டியில் வருவதாக தகவல் வந்தவுடன், உடனடியாக கின்ஸ்பெர்க், பீட்டர் ஓர்லோவெஸ்கி ( கின்ஸ்பெர்க்கின் நெருங்கிய நண்பர்) மற்றும் தன்னார்வு குழு நண்பர்களோடு ரயில்வே டிராக்கில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டார்கள்…தான் எழுதிய ”Plutonian Ode” கவிதையை அவர் வாசித்தும், அனைவரும் இந்திய தியானத்தை அமைதியாக கடைபிடித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்…கைது செய்யப்படு, விடுதலையானார்கள்..

கின்ஸ்பெர்க் பீட் ஜெனரேஷனின் முக்கிய கவிஞர்…. சக மனிதனை மேல் அன்பையும் பிரியத்தையும் பொழிந்தற்கு மற்றொரு உதாரணம் அவருடைய மற்றொரு நெடிய கவிதை HOWL…

இருபதாம் நூற்றாண்டில், உயிரை பணயம் வைத்து அதிகார பீடங்களை எழுத்திலும், செயலிலும் எதிர்த்தவர்…தான் இறக்கும் வரை மதம், தேசம், இனம், பாகுபாடுகளைத் தாண்டி மானுட குலத்தை நேசித்த மகத்தான காதலன்….

Vasu Devan