தலைவர்கள் ஆங்கிலமொழி விவாதம் – அவதானிப்புக்கள்

தலைவர்கள் ஆங்கிலமொழி விவாதம் – என் அவதானிப்புக்கள்

சிறப்பாகச் செய்தவர் – புதிய சனநாயகக் கட்சித் தலைவர் – ஜஸ்மீட் சிங்
மிக மோசம் – கனடா மக்கள் கட்சித்தலைவர் – மக்சி பேனியர்

ஜஸ்ரின் ரூடோ (லிபரல்க்கட்சி) – கியூபெக் விவாதத்தில் காட்டிய ஆக்கிரோசம் இங்கு காணாமல் போனது. பெரிதாக தவறேதும் செய்யாவிட்டாலும்இ பெரிதாக சோபிக்கவும் இல்லை. எதிர்பார்த்த மாதிரி அனைவரின் தாக்குதலுக்கும் இலக்கானார். தனித்துவமாக எழுந்து நிற்காததால் பெரும்பான்மையை வெற்றியை நோக்கி நகர்வது தற்போது பெரும் சவாலாகிறது. அனைவரிலும் தனித்துவமாக மிளிர்ந்த ஜஸ்மிட் சிங்கை இனப்பாகுபாடு விடயத்தில் ஏனையவர்கள் புகழ் தனித்து எதிர்கொண்டது தவறான அணுகுமுறை. என்.டி.பியின் வாக்குகளே பெரும்பான்மையை நோக்கி நகர அவசியம் என்ற நிலையில் ஜஸ்மிட் சிங்கை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் தவறி அவரை மேலும் வலுப்பட அனுமதித்தது முடிவுகளில் பாதகத்தை ஏற்படுத்தலாம். அன்ரூ செயரை எதிர்கொள்வதிலும் பெருமளவில் வெற்றி பெறாதது பலவீனமே. கடந்ததேர்தல் போல் இளையவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதிலும் வெற்றி பெறவில்லை. நேரடி விவாதங்களில் இருந்து ஜஸ்ரினை அவரது அலோசகர்கள் பெருமளவில் விலக்கி வைத்திருந்தமை தவறோ என எண்ணத் தோன்றுகிறது.

அன்ரூ செயர் (கன்சவேட்டிவ் கட்சி) – பெரிய தவறெதுவும் இழைக்கவில்லை. அதேவேளை லிபரல்க் கடசிக்கு மாற்றான ஆட்சியாளர் என்ற நிலையையும் எய்தவில்லை. ஜஸ்ரின் ரூடோவே இலக்கு என்பதில் இறுதிவரை தெளிவாக இருந்தார். ஆரம்பத்தில் கேள்விக்கு பதிலளிக்காமல் ஜஸ்ரின் மீதான தாக்குதலில் கருத்தாக இருந்து ஆரம்பித்தது எதிர்வினையாகவே அமைந்தது. எனினும் பின்னர் சுதாகரித்துக் கொண்டு நகர்ந்தார். ஜஸ்மின் சிங்குடன் பொருதுவதை பெரும்பாலும் தவிர்த்தார். ஜ்ஸ்மின் சிங்கின் வளர்ச்சி லிபரலையே பாதிக்கும் என்பதிற்காக. மொத்தத்தில் தற்போதுள்ள தனது கட்சியின் நிலையை தக்கவைக்க முனைந்தாரே அன்றி முன்நோக்கி நகர முனையவில்லை.

ஜஸ்மின் சிங் (என்.டி.பி) – ஒரே ஒரு சிறுபான்மைத் தலைவரான இவர் கடந்த ஒரு வாரமாக அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறியே வெளிப்படுகின்றார் என்பதே உண்மை. ஜஸ்ரின் ரூடோவை விட ஏனைய தலைவர்கள் யாவரும் பெரிதாக அனைத்துக் கனடியர்களாலும் அறியப்படாத புதுமுகங்கள் என்ற நிலையில் தற்போது அறியப்பட்டுள்ள மேலும் ஒரு தலைவராக தன்னை ஜஸ்மிட் சிங் மாற்றியுள்ளார் என்பதே யதார்த்தம். சுற்றுச் சூழல்ப்பாதுகாப்புஇ சுகாதாரம்இ வர்ழ்க்கைத் தரத்தைத் தாங்கிக் கொள்ளல்இ பன்முகத்தன்மை போன்ற பல விடயங்களை தொடர்ந்தும் முதன்மை கருக்களாக பேசிக் கொண்டிருந்தமை வாக்காளர் மனப்பதிவிற்கு சிறந்தமுறை. பஞ்ச் வேட் என்பார்கள். அவ்வாறு கைதட்டல் வாங்கும் வகையிலான கருத்துக்களை ரூடோவும் செயரும் தமக்குள் மோதிக்கொள்ளும் போது பேசி பலரைக் கவர்ந்தார். கிளிப்பிள்ளை போல் ஒப்புவிக்காது மிகவும் இயல்பாக விவாதித்தவராக வேறு மிளர்ந்தார். இது இவர் கட்சியின் நிலையை வரும் நாட்களில் நிச்சயம் மேம்படுத்தும். அத்துடன் தேர்தலுக்கு பின்னரான இவரது தலைமைக்கான ஆபத்தான நிலையை இல்லாது செய்வதில் கணிசமாக வேறு உதவியுமுள்ளது எனலாம்.

எலிசபெத் மே (பசுமைக்கட்சி) – ஒரே ஒரு பெண் தலைவர். ஆண்கள் அரசியல் கிளப்பில் ஓரளவு காணாமலே போயிருந்தார். தொடர்ந்தும் சுற்றுச் சூழல்ப்பாதுகாப்பு விடயத்தையே ஆணித்தரமாக பேசிக் கொண்டிருந்தாரே அன்றி அதைக்கடந்து வேறு விடயங்களில் சோபிக்கவில்லை. இவரது நேரடிப் போட்டி என்.டி.பியின் வாக்கு வங்கியே என்ற நிலையில் ஜஸ்மிட் சிங்குடன் பெருமளவில் மோதிய தலைவராகவும் அமைந்தார். கன்சவேட்டிவ் கட்சியை ஆட்சியில் அமர அனுமதித்துவிடக் கூடாது என்ற நிலையில் ஜஸ்ரின் ரூடோவிற்கான ஓரளவு அனுசரணைப் போக்கை வெளிப்படுத்திய ஒரே தலைவராகவும் திகழ்ந்தார். எனினும் பெரும்பான்மை ஆட்சியை வழங்கிவிடாதீர்கள் எனவேறு மண்டாடி வேண்டிக்கொண்டார்.

பிராங்கோசிஸ் பிளஞ்செட் (புளொக் கியூபெக்) – வரும் வியாழன் நடைபெறவுள்ள பிரெஞ் விவாதத்திற்கென தகவல் சேகரிக்க வந்தவர் போலவே நடந்து கொணடார். இவரது கட்சி கியூபெக்கிற்கு வெளியே எங்கும் போட்டியிடாததால் இவரை இவ்விவாதத்தில் தவிர்த்தே இருக்கலாம். என்ன பேசினாலும் கியூ+பெக் என்ற பெட்டிக்குள் இருந்தே விளையாடிக் கொண்டிருந்தார். அதனால் பலரின் கவனத்தையும் பெரிதும் ஈர்க்கவில்லை என்றே கூறலாம். ஆனால் வியாழன் இந்த விவாதத்தை அதிகம் இழுத்துப் பேசப்போபவரும் இவரே. எனினும் ஏனையவர்கள் கனடா அணிக்கென விளையாட நிர்ப்பந்திக்கப்பட இவர் கியூபெக் அணியில் தனித்து விளையாடியமை இவரது கட்சி வாக்கு வங்கியில் கியூபெக்கில் சிறிதான அதிகரிப்பையாவது செய்யும் என்பதை மறுப்பதற்கில்லை.

மக்சி பேனியர் (கனடிய மக்கள் கட்சி) – இவரை அழைப்பதா? இல்லையா எனத் தொடர்ந்த விவாத்தின் பின் ஈற்றில் அழைக்கப்பட்டார். ஆனால் இவரை ஏன் அழைத்தார்கள் என்பதே பலரின் கேள்வியாக இருக்கும். ஆரம்பம் முதலே தனக்கென தனித்துவமான ஒரு பெட்டியைப் போட்டு அதற்குள் தனித்து விளையாடிக் கொண்டிருந்தார். அந்தபெட்டி என்ன என்பது பலவேளைகளில் அவருக்கே புரியவில்லை என்பது தான் வெளிப்பட்டது. இவரின் கருத்துகள் பல முகம் சுளிக்கவைத்தன. பலவேளைகளில் சிரிக்க வைத்தன. ஆனால் யாரையும் சிந்திக்க வைத்ததாகத் தெரியவில்லை. வெள்ளை இனவாதத்தை பிரதிபலித்து வெற்றிபெறலாம் என்ற இவரது கனவு பொய்த்துப் போனது என்பதை வரும் தேர்தல் இவருக்கு வெளிப்படுத்தும்.

நெறியாளர்கள்: ஜந்து முதன்மை கனடிய ஊடகங்களில் இருந்து ஜவர் கலந்து கொண்டனர். அனைவரும் பெண்கள் என்பது பெருமை தரும் விடயம். இதில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவரும் கப்ரிங்டன் போஸ்டைச் சேர்ந்த அலித்தியா ராஜ் அனைவரிலும் சோபித்தார். சி.பி.சி.யின் ரோஸ்மேரி பேட்டனும் சிறப்பாகச் செய்தார். ஏனையவர்கள் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். நேரக் கட்டுப்பாட்டை கவனித்துக் கொள்ளல்இ ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் பேசுவதைத் தடுத்தல்இ அனைவருக்குமான சமத்துவமான அனுமதி என்பதைக் கடைப்பிடிப்பதில் சவால்கள் தென்பட்டன.

விவாத வடிவமைப்பு – மிக மோசமான வடிவமைப்பு. இதனால் மிக மோசமான தோல்வியாளர்கள் மக்களே. என்றும் இல்லாத ஆறு தலைவர்கள். ஜந்து நெறியாளர்கள். ஜந்து முக்கிய தலைப்புக்கள். எந்தவொரு விடயமும் ஆழமாக பேசப்படவில்லை. அதனால் தெளிவான விளக்கங்கள் மக்களுக்கு எதிலும் இல்லை. இந்த வடிவமைப்பில் எவ்வாறு சிறப்பாக செயற்படுவது என்பது தலைவர்களுக்கு மட்டுமல்ல இதன் நெறியாளர்களுக்குமே பெரும் சவாலாகவே இருந்தது. இந்நிலையில் இவ்வாறான விவாதங்களின் நோக்கம் என்ன? என்பதே புரியவில்லை.

நேரு குணரட்ணம்