சாம்பார் கூட்டணியும் மற்றும் ஒற்றுமை லாஜிக்கும் : கூட்டமைப்பு,விக்கினேஸ்வரன் மற்றும் முன்னணியும் 

கூட்டமைப்பு முன்னணியை ஒற்றுமை குழப்பிகள் என்று 10 வருசமாக சொல்லுகினம். விக்கினேஸ்வரன் ஐயாவையும் ஒற்றுமை குழப்பி என ஒரு நாலு ஐந்து வருசமா கூட்டமைப்புகாரர் சொல்லுகினம். விக்கினேஸ்வரன் ஐயாவோ இப்போது முன்னணியை ஒற்றுமை குழப்பி என்கின்றார். (கூட்டமைப்பின் ஒற்றுமையை 2010 இல் குழப்பியவர்கள் என்பதை ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கிறார். இப்படி சொல்வதில் உள்ள முரண்பாட்டை அவர் கவனிக்க தவறுகிறார்) ஆகவே கூட்டமைப்பிற்கும் கூட்டணிக்கும் ‘ஒற்றுமை’ எல்லாவற்றையும் விட (அரசியல் நிலைப்பாடுகளை விட) முக்கியமானது – கூடுதல் அரசியல் பெறுமதி வாய்ந்தது என்பது தெளிவாகின்றது.

இந்த ஒற்றுமை லாஜிக் ஈழத் தமிழ் தேர்தல் அரசியலில் 10 வருசமாக கோலோச்சியுள்ளது, வெற்றியும் பெற்று தந்துள்ளது. முன்னணியின் தொடர் தோல்விகளுக்கும் காரணமாய் இருந்துள்ளது. இதை விளங்கி வைத்துள்ள விக்கினேஸ்வரன் ஐயா சுரேஸோடும் சிறீகாந்தா சேரோடும் ‘சாம்பார் கூட்டணி’ (சிறீகாந்தா சேரின் வார்த்தைகளில்) வைத்திருப்பதற்கான காரணம் பலரை சேர்த்து ஒற்றுமை பிம்பம் – ஒரு ‘கூட்டமைப்பை’ காட்ட வேண்டும் என்பதும் அத்தகைய பிம்பம் தான் கூட்டமைப்பிற்கு மாற்று சக்தியாக தமிழ் மக்கள் மனங்களில் இடம் பிடிப்பதற்கு உதவும் என்பதுமே. ஒற்றுமை லாஜிக்கை ஒற்றுமை லாஜிக் கொண்டே கையாள வேண்டும் என்று சாம்பார் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். அத்தகைய பிம்ப உருவாக்கத்தில் / கெத்து காட்டுவதில் அக்கறை இல்லை என்பது முன்னணியின் நிலைப்பாடு. கொள்கைகளோடு முரண்படாத உத்தி சார் நகர்வுகள் தேர்தல் அரசியலில் அறுவடைக்கு அவசியம் என்பது முன்னணிக்கு விளங்குதில்லை. அதை விடுவம்.

இந்த ஒற்றுமை லாஜிக்கை கூட்டமைப்பின் வசமிருந்து அபகரிப்பது ஒரு மாற்று அரசியலை பிரசவிக்கும் என்றால் இந்த லாஜிக் கைப்பற்று முயற்சி அரசியல் ரீதியாக, உபகரண ரீதியில் பயன் உள்ளது என என்னை போன்ற ஒற்றுமை லாஜிக்கில் லயிப்பு இல்லாதவர்கள் கூட திருப்திப்படலாம். அதாவது சாம்பார் கூட்டணியில் எந்த கொள்கை பருப்பும் இல்லாவிட்டாலும் நாங்கள் தான் ஒற்றுமைவாதிகள் என்ற உத்தி, பிம்பக் கட்டமைப்பு என்பதற்கு பின்னால் ஓர் நேர்த்தியான அரசியல் நிகழ்ச்சி நிரல் இருக்குமாயின் இந்த உத்தியில், பிம்பத்தில் பெரும் நம்பிக்கை இல்லாட்டாலும், ஆதரவு தரலாம். ஆனால் இங்கு அரசியல் நிகழ்ச்சி நிரல் தான் என்ன? தனியே நின்றும் என்னால் வெற்றி பெற முடியும் என்பது மாத்திரம் தானே?

கூட்டமைப்பிற்கு கொள்கையற்ற மாற்று அரசியல் அவசியம் தானா? ஒற்றுமை தான் எல்லாவற்றிலும் முக்கியம் என்றால் ஏன் ஒற்றுமைக்காக தமிழ் தேசிய மக்கள் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தேர்தல் ஒப்பந்தம் போடக் கூடாது?