புதிய வெளிச்சம்! ஏன் இந்த வேட்கை?

போரையும் வாழ்வையும் ஒரு சேர தூக்கிச் சுமந்த மண்ணின் மக்களின் வலியை அனுபவித்தாலன்றி ஒரு போதும் உணர்ந்திடமுடியாது. ஆனால் நாளை மீதான நம்பிக்கையை, வடுக்களின் மேல் ஒரு ஒத்தடத்தை, இருளின் மேல் சிறு வெளிச்சத்தை, வெளியில் இருந்தோ அருகில் சென்றோ கொடுத்துவிடமுடியும். அப்படியான நினைவுகளில் எண்ணத்தில் ஆதங்கத்தில் அலையும் ஆத்மாவின் அந்தரிப்பில் ஆரம்பித்தது புதிய வெளிச்சம்.
ஒன்றாய் இரண்டாய் சேர்ந்த ஒத்துழைப்புகள், தோளோடு தோள்கொடுத்த நட்புகள், தமிழகம் தாண்டி வந்த பேரன்பு என ஒரு சிறு செயற்குழுவாக கடந்த இரண்டு வருடங்களாக ஈழத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களை மையப்படுத்திய மாணவர்கள் மற்றும் பெண்களை நோக்கிய உளவியல் கருந்தரங்குகளையும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் இயற்கை விவசாயம் உட்பட்ட செயலமர்வுகளையும் தன் வல்லமையைத் தாண்டி இதுவரை செய்து முடித்திருக்கிறது புதிய வெளிச்சம்.
வெறும் சொல்லால் மெல்லுவதைக்கடந்து விளையும் செயலை விதைத்திருக்கிறது. அறிந்தவர்கள் அனைவரதும் நம்பிக்கையைம் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறது புதிய வெளிச்சம். அத்தனை பேரன்பும் பேராதரவும் அடுத்த செயல்திட்டத்திற்காக ஆயத்தப்படுத்தவைக்கிறது.
இனி என்ன என்பது ஒற்றைக் கேள்விதான். அதற்கான பதிலிற்குள் ஆயிரம் தேவைகளும் அதற்கான சேவைகளும் பூர்த்திசெய்யப்படவேண்டிக்காத்திருக்கின்றன.
நாம் மீண்டும் மீண்டு; சொல்லுவதும் சொல்ல விரும்புவதும் புதிய வெளிச்சம் செய்தது செய்யவேண்டியது செய்யவிரும்புவது சகமனிதரிற்கு உதவும் மனித நேயப்பணி மட்டுமல்ல காலப்பெரும்சுடுவெளியில் எம்மைத்தூக்கிச் சுமந்து துயரப்பட்டு நிற்கும் தாய்மண்ணை காக்கவேண்டிய கட்டிஎழுப்பவேண்டிய கடமையும் கூட என்பதுதான்.
இதில் உங்கள் ஒவ்வொருவரின் பங்கும் இருப்பதே சாலப்பொருத்தமானது. ஆனாலும் கடந்தகாலங்களிலும் தற்போதும் எமது சமூகத்தில் நடைபெற்ற நடைபெறும் பண வசூலிப்புகளும் மோசடிகளும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தையும் அச்சத்தையும் கருத்தில் கொண்டு நாம் உங்களிடம் இருந்து எந்தவித அன்பளிப்புகளையோ பண வசூலிப்புகளையோ பெறவிரும்பவில்லை.
மாறாக அடுத்த இதழ் முதல் இகுருவி பத்திரிகை இலவசத்திலிருந்து ஒரு டாலருக்கு மதிப்பேற்றம் செய்யப்படுகிறது. இகுருவி பத்திரிகை கிடைக்கும் இடங்களில் இருக்கும் சிவப்புப் பெட்டிகளில் பத்திரிகைக்கான பெறுமதியான ஒரு டொலரை மட்டும் செலுத்தினால் போதும். 
நீங்கள் செலுத்தும்; ஒரு டொலர் என்பது
பிரெஞ்சு மானிடவியல் அறிஞர் Claude Levi-Strauss விமர்சித்ததைப்போல் நாம் பேசுவதும் எழுதுவதும் ஆத்மதிருப்திக்காக என்பது கோழைத்தனம். அவற்றிற்கு ஒரு இலக்கு எங்கும் எப்போதும் இருப்பதுண்டு.
அப்படித்தான் இகுருவியும் தன் சிறகு விரித்துக் காட்டும் ஒவ்வொரு எழுத்தும் செயலும் ஆத்மதிருப்தி என்ற கோழைத்தனத்தைத்தாண்டி தனது தாய் தேசமும், உள்ளும் வெளியுமாக பரந்தும் உழன்றும் சுழன்றும் இயங்கிக்கொண்டிருக்கும் அதன் பிள்ளைகளும் இந்த உலகில் சிம்மாசனமிட்டமரவேண்டும் என்ற பேரவாவை உங்களுடன் சேர்ந்து வெளிப்படுத்திச் சிறகடிக்கும் எழுத்திற்கும் உழைப்பிற்கும் நோக்கிற்குமானதாய் இருக்கும்.