கடித்து குதறும் கடிநாயும்  மரக்கறி வெட்டப் பயன்படும் கனேடியத் தமிழ் பத்திரிகைகளும்

கடந்த சில நாட்களாக கனேடிய தமிழ்ச் சமூகத்தின் பேசு பொருளாக ஒரு குடும்பத்தின் மரணமும் அதனை சுற்றிச் சுழலும் சர்ச்சைகளும் மாறிப்போயிருக்கின்றன.

ஒரு குடும்பத்தின் ஆணிவேர்களாக கருதப்படும் தாயும்; தந்தையும் அடுத்தடுத்து மரணத்தை தழுவிய நிலையில் அநாதரவாக கைவிடப்பட்டுள்ள அவர்களின் குழந்தைகள் அவர்களின் மனநிலை அவர்களின் எதிர்காலம் குறித்து அக்கறை செலுத்த வேண்டிய நாம் அதனை விட்டு அவர் சரி இவர் பிழை என்பது போன்ற விவாதங்களை நடத்திக் கொண்டிருப்பது உண்மையில் கவலைக்குரியது.

தாய் தந்தையை ஒரே நாளில் இழந்து நிரக்கதியாக நிற்கின்ற அந்த பிள்ளைகளை அவர்களின் உறவினர்களோ நண்பர்களோ ஆற்றுப்படுத்த முடியாத அவலச் சூழலில் நாம் சிக்கிக் கிடக்கின்றோம்.

வழமைபோன்ற நாட்களாக இருந்;தால் அவர்களை உறவினர்களும் நண்பர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறி ஆற்;றுப்படுத்தியிருபபார்கள் ஆனால் கொவிட் 19 அந்த வாய்ப்பினை தடுத்திருக்கின்றது.

தாய் தந்தையில் இறுதிச் சடங்குகளை கூட செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்ற அந்த குழந்தைகள் குறித்து நாம் அதிகம் அக்கறை கொள்ள வேண்டும்.

பெற்றோரை இழந்த அந்த குழந்தைகள் ஆற்றுப்படுத்துவாரின்றி தனித்து விடப்பட்டிருக்கின்ற சூழல் குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

அவர்களை ஆற்றுப்படுத்துவதற்கும் ஆறுதல் படுத்துவதற்கும் பதிலாக அவர்களின் பெற்றோர்களின் மரணத்தை மையப்படுத்திய வாதப்பிரதிவாதங்கள் அந்த மனங்களில் மேலும் வேதனைகளையும் காயங்களையுமே ஏற்படுத்தும்.

ஒரு சமூகமாக அந்த குழந்தைகளின் எதிர்காலத்தையும்; உடனடித் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு அவர்களின் நண்பர்களால் உருவாக்கப்பட்ட நிதி சேகரிப்பு முயற்சியும் இடையில் முடக்கப்பட்டு மீண்டும் தொடர்ந்து ஒரு இலட்சத்தை தாண்டியிருக்கின்றது.

அது முடக்கப்படாமல் அதற்கு எதிராக பரப்புரைகள் இடம்பெறாமல் தொடர்ந்திருந்தால் மக்களின் பங்களிப்பு இன்னும் அதிகமாக மாறியிருக்கும்.
பணத்தால் இழந்த உயிர்களை மீளக் கொண்டுவர முடியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

ஆனால் அந்த குழந்தைகள் தமது வாழ்வில் அடுத்தடுத்த நிலைகளை நோக்கி நகர வேண்டும். அதற்கு சேகரிக்கப்பட்ட அந்த நிதி பேருதவியாக அமையும் என்பதை அவர்களின் உறவினர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

இங்குள்ள சமூக அமைப்பும் பொருளாதார கட்டமைப்பும் தமது குடும்பத்தின் பாரத்தை தாண்டி வேறு குடும்பங்களை பல காலம் பராமரிப்பதற்குரிய சந்தர்ப்பத்தை இங்குள்ளவர்களுக்கு வழங்குவதில்லை.

தாயகத்தில் நிலமை வேறுமாதிரியானது அங்கு ஒரு குடுப்பத்தை அவர்களின் உறவினர்கள் தாங்குவது சாத்தியமானது ஆனால் இங்கு அது போன்ற நிலை காணப்படவில்லை.

எனவே இந்த முயற்சியை தமது தனிப்பட்ட விரோதங்களுக்காக தடுக்காமல் இருந்திருந்தால் கணிசமான ஒரு தொகையினை அந்த குழந்தைகள் பெற்றிருக்கலாம்.

அவர்களின் எதிர்கால முன்னனேற்றத்திற்கு அது நிச்சயம் உதவியாகவே அமைந்திருக்கும்.

இது போன்ற நிலையில் நம்பிக்கையான நிதி சேகரிப்பை நகர்த்துவது என்பது சாவல் மிக்கது இலவசமாக அதனை வினைத் திறனுடன் செய்ய முடியாது இது தான் உலக நியதி.

அதனால் தான் Gofund போன்ற நிதி சேகரிப்பு முறைகளை பலரும் நாட வேண்டியிருக்கின்றது.

அந்த முயற்சியினை யார் குற்றியேனும் அரிசியானால் சரி என்ற மன நிலையில் அணுக வேண்டும் மாறாக நாம் செய்யத் தவறியதை வேறு ஒருவர் செய்வதா என்ற ஆதங்கத்தில் அதனை முடக்க முயல்வதும் அதற்கு ஆதரவாக பலர் பொங்கி எழுந்து நியாயம் பேசுவதும் ஒரு சமூகமாக நாம் தோற்றுக் கொண்டிருப்பதை தான் காட்டுகின்றது.

இளம் தலைமுறை தாமாக சிந்தித்து இது
போன்ற ஒரு முயற்சியினை முன்னெடுத்திருந்தமை வரவேற்பிற்குரியது. பலரும் செய்யத் தயங்கும் அல்லது செய்ய மறந்த ஒரு விடயத்தை இளம் தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் மேற்கொண்டமை வரவேற்பிற்குரியது.
இவ்வாறான முயற்சிகளை தட்டிக் கொடுத்து வரவேற்பதன் மூலமாகத் தான் எமது சமூகத்தில் இருந்து சமூக அக்கறை கொண்ட புதிய தலைமைத்துவத்தை நாம் உருவாக்கலாம்.

மாறாக இவ்வாறன முயற்சிகளை வேரிலேயே கிள்ளி எறிகின்ற செயல்பாடுகளை நாம் முன்னெடுத்தால் ஒரு சமூகமாக நாம் தோற்றுப் போய்விடுவோம்.

எதோ ஒரு ஆதங்கத்தில் ஒருவர் இவ்வாறான முயற்சியை எதிர்க்கின்றார் என்றால் எந்தவிதமான ஆராச்சிகளும் இல்லாமல் அவருக்குப் பின்னால் அணி திரண்டு அவரை ஆதரிப்பதற்கு ஒரு கூட்டம் இருப்பது வேதனைக்குரியது.

எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிப்பதை மட்டுமே முழுநேரத் தொழிலாக கொண்டிருந்தால் வாழ்கையில் எம்மைச் சுற்றி நடக்கும் நல்லவற்றை எங்களால் பார்க்க முடியாமலேயே போய்விடும்.

ஒரு இளம் பெண் தனது தனி முயற்சியினால் ஒரு பாதிக்கப்பட்ட குடுப்பத்திற்கு உதவி செய்வதற்கு ஆரம்பித்த முயற்சிக்கு உங்களால் பங்களிப்பு வழங்க முடியாவிட்டால் பரவாயில்லை வழங்குகின்றவர்களையும் வழங்கும் நோக்கில் இருக்கின்றவர்களையும் ஏன் தடுக்கின்றீர்கள்.

இதனால் யாருக்கு இலாபம்.
அவர் கூறியது போலவே குறிப்பிட்ட நிதி சேகரிப்பு நிறுவனம் தனது சேவைக்கட்டணத்தை எடுத்துக் கொண்டு மிகுதிப்பணத்தை வழங்கினாலும் அது மிகப் பெரிய தொகை அல்லவா அது அந்த குடும்பத்திற்கு பல வழிகளிலும் உதவும் அல்லவா அதனை ஏன் நாம் சிந்திக்கத் தவறுகின்றோம்.

பத்திரிகை விநியோகம் என்பது மிகக் கடினமானது குறைந்த வருமானத்தை பெற்றுத் தரக் கூடியது அதனை ஒருவர் தொடர்ந்து செய்து வருகின்றார் என்றால் அவருடைய பொருளாதார நிலை குறித்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உறவினர் இருக்கின்றோம் குடம்பம் இருக்கின்றது என்று இப்போது வாய் கிழியப் பேசுகின்றவர்களால் ஏன் அவர் உயிரோடு இருக்கும் போது அவருக்குபத்திரிகை விநியோகத்திற்கு பதிலாக வேறு ஒரு நல்ல வேலைவாய்பினை பெற்றுக் கொடுக்க முடியவில்லை.
எதிர் மறை சிந்தனைகளுக்கும் செய்திகளுக்கும் இருக்கும் வலிமை நேர்மறை சிந்தனைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் இல்லை என்பதை நாம் உணர முடிகின்றது.

இது ஆரோக்கியமானது அல்ல வெட்கப்பட வேண்டியது.
மறுபுறம் தனிப்பட்ட விரோதங்களை ஒரு குடும்பத்தின் இழப்பின் மத்தியில் பழிவாங்குவதற்கு பழி சுமத்துவதற்கும் பயன்படுத்துவதையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஒரு பத்திரிகை விநியோகஸ்தராக இருந்தவர் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டதை தெரிந்து கொண்ட பத்திரிகை நிர்வாகம் அவரால் பத்திரிகை விநியோகிகப்பட்ட இடங்களுக்கு அதனை தெரியப்படுத்தியிருக்க வேண்டியது தார்மீக கடமை.

அவர் இறுதியாக எப்போது அங்கு சென்றார் அப்போது அவருக்கு கொவிடட தொற்று இருந்ததா இல்லையா என்ற கேள்விகளுக்கு அப்பால் சமூகப்பாதுகாப்பு கருதி அவரால் பத்திரிகை விநியோகிகப்பட்ட இடங்களுக்கு ஒரு தகவலாக இதனை தெரிவித்திருந்தால் இன்று பல விமர்சனங்களையும் பிரச்சினைகளையும் தவிர்திருக்கலாம்.

அதனால் நன்மதிப்பு தான் அதிகரித்திருக்குமே தவிர இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது.

இதனை குறிப்பிட்ட பத்திரிகை நிர்வாகம் உணர்ந்திருக்கும்.

ஆனால் குறித்த பத்திரிகை நிர்வாகத்திற்கு அவர் கொவிட் 19 பாதிப்பை எதிர் கொண்டுள்ளார் என்ன விடயம் தெரியப்படுத்தப்படது , அப்படியானால் எப்போது எவ்வாறு யாரால் அது குறித்து அறிவுறுத்தப்பட்டது என்ற கேள்விகள் முன்வைகப்பட வேண்டும்.

தனக்கும் அல்லது தனது குடும்பத்திற்கு கொவிட் 19 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது என்பதை சம்பந்தப்பட்ட நபர் தானாக முன்வந்து தெரியப்படுத்தா விட்டால் அவரோடு தொடர்புடைய ஏனையவர்களு அந்த விடயம் தெரிய வருவதற்கு வாய்ப்பில்லை.

உண்மையில் கொவிட்ட 19 பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காணும் மருத்து நிலையங்கள் அவர்களோடு தொடர்புடையவர்களுக்கு அதனை தெரியப்படுத்துவற்கான பொறிமுறையை கொண்டிருக்க வேண்டும்.

மத்திய மற்றும் மாகாண அரசுகள் மற்றும் நகர சபைகள் இதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் அப்போது தான் இந்த நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

மறுபுறம் கொவிட் 19 பாதிப்பு உள்ளவர்கள் தங்களை வெளிப்படுத்த முன்வருவதில்லை என்ற ஆதங்கமும் நியாயமானது.

அதன் காரணமாகக் கூட சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு பத்திரகை விநியோகத்தர் பாதிக்கப்பட்ட தகவலை பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு இக்கட்டான நிலை பத்திரிகை நிர்வாகத்திற்கு ஏற்பட்டிருக்கலாம் என்ற ஒரு பக்கத்தில் உள்ள நியாயத்தையும் நாம் புரிந்து கொளள் வேண்டும்.

ஆனால் அது நியாயப்படுத்தக் கூடியது அல்ல.

கொரான என்பது சாதாரணமாக கடந்து செல்லக் கூடிய நோய் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மரணங்கள் சம்பவித்த பின்னர் தான் அதன் ஆபத்தை நாம் புரிந்து கொண்டிருக்கின்றோம்.

இதனை ஒரு பாடமாக எல்லோரும் கொள்ள வேண்டும்.

தமிழர்கள் சுமார் 20 பேர் கொரானாவால் உயிரிழந்திருக்கிறார்கள் பலர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் அவர்கள் அனைவரும் யார் யாரோடு தொடர்பில் இருந்தார்கள் எங்கு சென்று வந்தார்கள் என்ற விடயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

தமக்கு பாதிப்பு உள்ளது என்பதை அவர்களோடு தொடர்பு பட்டவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் ஆனால் அதனை எத்தனை பேர் செய்திருக்கின்றார்கள் ?

அது குறித்து நாம் அக்கறை செலுத்த மறந்து விடுகின்றோம்.

அண்மையில் தமிழர் ஒருவர் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று குணமடைந்திருக்கின்றார்.

அவர் நோய் தாக்கத்திற்கு ஆளான காலத்தில் எங்கு சென்றார் யார் யாரோடு பழகினார் என்ற விடயங்களை அவர் வெளிப்படுத்த வேண்டும் என்று சமூக அக்கறையுள்ள தரப்புகள் எவையும் அவரை கோரவில்லை என்பது ஆச்சரியத்திற்குரியது.

பத்திரிகை விநியோகத்தரால் பல இடங்களுக்கு பரவும் என்பது எவ்வளவு தூரம் உண்மையோ ஒரு சாதாரண ஒருவராலும் பல இடங்களுக்கு அது பரவும் என்பதும் உண்மை.

அப்படியானால் ஏன் நாம் அவரிடம் கேள்வி கேட்காமல் பத்திரிகை நிர்வாகத்தை மட்டும் குறுக்கு விசாரணை செய்ய முனைகின்றோம்.

நீதி எல்லோருக்குமானது தானே ? பணம் படைத்தவர் செல்வாக்கனவர் எனக்கு பிடித்தவர் எனக்கு பிடிக்காதவர் என்னை மதித்தவர் மதிக்காதவர் என்ற பேதங்களின் அடிப்படையில் சிலரை வைத்துச் செய்வதும் சிலரை தப்ப விட்டு வேடிக்கைப்பார்ப்பதும் நியாமில்லை நியாயமாரே..!

இன்றைய உலக ஒழுங்கில் கொரான இருப்பதாக சொல்வது பாவச் செயல் என்பது போல பலரும் மறைப்பதற்கு முயல்வது நிலமையினை மேலும் மோசமாக்கும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.

அதே நேரம் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்ற தனி நபர் மீது கடுமையான விமர்சனம் கொண்டுள்ள பலர் இருக்கின்றார்கள் என்பதையும் குறிப்பிட்ட பத்திரிகை நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும்.

தனது நலன்களுக்காகவும் சுயலாபத்திற்காகவும் அடிக்கடி தடம்மாறினால் இது போன்று பல பகைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

தனது கொள்கை நிலைப்பாட்டை அவர் அடிக்கடி மாற்றியதும் சில தவாறன செயல்பாடுகளுக்கு துணைபோய் முண்டு கொடுத்ததும் இன்று அவருக்கு எதிரான பரப்புரைக்கு உரம் சேர்த்திருக்கின்றது.

இதனை சம்பந்தபட்டவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த உலகில் எல்லோரையும் திருப்திப்படுத்துவது சாத்தியமற்றது ஆனால் தனது நிலைப்பாட்டை மாற்றாமல் வைத்துக் கொண்டால் விசுவாசம் மிக்க தரப்புகளையாவது தக்கவைக்க முடியும்.

அண்மையில் இது தொடர்பாக இடம்பெற்ற சி.எம்.ஆர் வானொலி நிகழ்சியின் போது கனேடியத் தமிழ் பத்திரிகைகளின் பயன்பாடு குறித்து வெளிப்படுத்தப்பட்ட விடயங்களும் மீளாய்வு செய்யப்பட வேண்டியவை.

காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சு என்ற ஒரு பழ மொழி உண்டு.

கனடாவில் வெளியாகின்ற அல்லது வெளிவந்து நின்று போன ஒவ்வொரு பத்திரிகையின் ஒவ்வொரு பிரதியின் பின்னாலும் ஒரு பிரசவ வேதனையிருக்கின்றது.

அதில் வரும் ஆக்கங்களை எழுத்தாளர்களிடம் இருந்து இரந்து பெறுவது என்பது கல்லில் நார் உரிப்பது போன்றது. இந்த பத்தியாளர் உட்பட பல கட்டுரையாளர்களும் எழுத்தாளர்களுக்கும் பத்திரிகை ஆசிரியர்களுக்கு கொடுக்கும் நெருக்கடிகள் சொல்லில் அடங்காதவை.

அச்சுக்கு போகும் வரை கட்டுரை வரும் வரும் என்று காத்திருந்து விட்டு பின்னர் காலவதியான ஓரு கட்டுரையை அல்லது விளம்பரக் கட்டணம் செலுத்தாத ஒரு வர்த்தக விளம்பரத்தை போட்டு பத்திரிகையை ஒப்பேற்றும் நிலை தான் பலருக்கும் இருக்கின்றது.

ஒரு சமூகத்தின் பதிவாக பத்திரிகைகள் தான் இருக்கும்.

இலத்திரனியல் ஊடகங்களும் இணைய ஊடகங்களும் மக்களிடம் நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தாலும் பத்திரிகை ஊடகங்களால்; தான் சமூகத்தின் பயணத்தை சரியாக பதிவு செய்ய முடியும் ஆவணப்படுத்த முடியும் அது மிகவும் முக்கியமானதும் கூட.

அதனை ஏதோ ஒரு வகையில் இங்குள்ள சில பத்திரிகை ஊடகள் செய்து வருகின்றன என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இங்கு வெளியிடப்படும் மற்றும் வெளியிட்பட்ட எல்லா பத்திரிகைகள் சஞ்சிகைகளும் ஏதோ ஒரு வகையில் சமூகத்தின் பிரதிபலிப்பை பதிவு செய்திருக்கின்றன செய்து வருகின்றன.

பத்திரிகைகளுக்காக காத்திருந்து எடுத்துச் செல்கின்றவர்களும் பத்திரிகைகளை மட்டுமே தமது நம்பிக்கைக்குரிய செய்தி ஊடகங்களாக கருதுகின்றவர்களும் எம் மத்தியில் இருக்கின்றார்கள்.

வெள்ளி சனி ஞாயிறு தினங்களை பத்திரிகை வாசிப்பில் கடத்துகின்றவர்கள் இருக்கின்றார்கள்.

பத்திரிகைகளின் ஊடாக தமக்கு வியாபாரம் பெருகும் என்று நம்பிக்கையோடு அதில் தொடர்ந்து விளம்பரம் செய்கின்ற பல வர்த்தகர்கள் வர்த்க நிறுவனங்கள் இருக்கின்றன.

ஒப்பீட்டளவில் அது இலத்திரனியல் ஊடகத்தை விடக் குறைவான கட்டணத்தை அறவிடுவதால் பத்திரிகைகளை குறைமதிப்பீடு செய்ய முடியாது செய்யவும் கூடாது என்பதே இந்த கட்டுரையாளரின் நிலைப்பாடு.

பத்திரிகையை மரக்கறி வெட்டுவதற்கும் புட்டவிப்பதற்கும் கால்களில் குளிர் ஏறாமல் தடுப்பதற்கும் தான் பாவிப்பதாக சொல்லக் கூடியவர்களை அங்கீகரிப்பதும் அவர்களுக்கு வாய்ப்பளிப்பதும் வரவேற்பிற்குரியது அல்ல. ஒரு பத்திரிகை ஆசிரியரின் தவறு தொடர்பில் ஆராய முற்படும் நிகழ்ச்சில் எல்லாப் பத்திரிகையினையும் ஒரே தராசில் போடும் தமிழ் பத்திரிகைகள் அனைத்துமே தரம் தாழ்ந்தவை என்ற பொது நிலைப்பாட்டை நோக்கி நகர்த்துவதும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

புத்தகங்கள் கால்களில் பட்டால் தொட்டுக் கும்பிட வேண்டும் என்று கூறி வளர்க்கப்பட்ட ஒரு சமூகம் பத்திரிகைகளை கால் துடைப்பான்களாக பயன்படுவதாக கூறுவதை அனுமதிப்பது தவறானது.

பத்திரிகைகளின் பயன்பாடுகள் எவ்வாறாயினும் இருந்து விட்டுப் போகட்டும். அது அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தது. அதனை பொதுமைப்படுத்துவது என்பது பலரையும்; பாதிக்கக் கூடியது.

பத்திரிகை என்பது வெறுமனே அதன் ஆசிரியர் என்ற ஒரு தனிமனிதரல்ல. மாறாக அது எழுத்தாளர்கள், விளம்பரதாரர்கள், வாசகர்கள் என பலதரப்புகளையும் கொண்டது அதன் ஒரு முக்கிய பகுதியாக புட்டவிக்கின்றவர்களும் மரக்கறி வெட்டுகின்றவர்களும் இருக்க முடியாது எனவே அவர்களை முன்வைத்து கனேடிய தமிழ் பத்திரிகைகள் அனைத்தையும் குப்பைகளாக்க முனைவது தவறானது.

குறிப்பிட்ட வானொலி உiராயடலில் பத்திரிகை ஆசிரியர் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பினை சரியாக பயன்படுத்தியிருக்க வேண்டும்.

மாறாக தன்னை நியாயப்படுத்த முயன்றிக்கக் கூடாது. தனது தரப்பை சரியாக வெளிப்படுத்தியிருந்தால் அவர் மீதான எதிர் விமர்சனங்களை தவிர்த்திருக்கலாம் அல்லது குறைத்திருக்கலாம்.

இது மனித மனங்கள் ஆறுதலை தேடி நிற்கின்ற காலம். அவலங்களை கடந்து நாம் பயணப்படுவதற்கான நம்பிக்கையூட்டல்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவருக்கும் வழங்க வேண்டும்.

நான் சரி நீ பிழை என்ற வாதப்பிரதிவாதங்களை கொரனா கடந்து போன பின்னர் வைத்துக் கொள்வோம்.

அது வரை அனைவருக்காகவும் நாம் ஒன்றிணைவோம்.

ஒன்றாய் கொடு நோயை எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்.

Ramanan Santhirasegaramoorthy