ஆப்கானிஸ்தானில் குண்டு செயலிழக்க செய்தபோது வெடித்து 3 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் மாகாணத்தில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு வாகனம் ஒன்றில் வெடிகுண்டுகள் பொருத்தி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து தகவல் அறிந்து, அந்த இடத்துக்கு தேசிய பாதுகாப்பு இயக்குனரகத்தை சேர்ந்த உளவு அதிகாரிகள் விரைந்தனர். வாகனத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை கைப்பற்றி அவற்றை ஒரு திறந்தவெளி மைதானத்துக்கு எடுத்துச்சென்று செயலிழக்க செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் குண்டுகள் வெடித்து சிதறியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் ஈடுபட்டபோது 3 உளவு அதிகாரிகள் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.