தேசிய பாதுகாப்பு, அபிவிருத்தி தொடர்பான 3 உடன்படிக்கைகள் கைச்சாத்து

சீன அரசாங்கத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய முதலீடுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியத்துவம் வாய்ந்த 3 உடன்படிக்கைகளில் சீனாவுக்கான ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திடவுள்ளார்.

சீனாவில் இருந்து வருடாந்தம் அதிகளவிலான சுற்றுலா பிரயாணிகள் இலங்கைக்கு வருகை தருவதோடு, பாரிய முதலீட்டு வேலைத் திட்டங்களும் சீன அரசாங்கத்தினால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுவதனால் இந்த ஒப்பந்தங்கள் இலங்கைக்கு மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றது.

இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பின் போது கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் இலங்கையில் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மக்களின் பாதுகாப்பிற்காகவும் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய முக்கியமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும் ஜனாதிபதியின் விசேட வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 100 ஜீப் வண்டிகளை வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

சீனாவின் பீஜிங் நகரில் நாளை இடம்பெறவுள்ள ஆசிய கலாசாரங்கள் பற்றிய சர்வதேச மாநாட்டில் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் நாட்டின் எதிர்கால நலனிற்காக முன்னெடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி சர்வதேச தலைவர்களின் முன்னிலையில் தெளிவுபடுத்தவுள்ளார்.

அரச தலைவர் என்ற வகையில் அண்மையில் இடம்பெற்ற துன்பியல் சம்பவத்தை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்துள்ள பின்னணியில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள மற்றும் முதலீடுகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள தரப்பினருக்கு நம்பிக்கையளிப்பதற்கும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தவுள்ளார்.

அடிப்படைவாத குழுக்களின் குறுகிய நோக்கங்களுக்கு இடமளிக்காது சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தி நாட்டில் அமைதியை பேணிப் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி மேற்கொண்டிருப்பதுடன். அந்த பொறுப்பினை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்காக பாதுகாப்பு துறையினருக்கும் அரச அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது உலக தலைவர்களுக்கு தெளிவுபடுத்துவார்.