ஐ.நா அமர்வும் தீர்மான வரைபும் – இந்தியாவைப் புரிந்துகொள்ளல்.

ஐ.நா அமர்வும் தீர்மான வரைபும் – இந்தியாவைப் புரிந்துகொள்ளல்.

 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ‘சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான தீர்மானம் 21.03.2019 அன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இத்தீர்மானம் ஏற்கெனவே இலங்கைதொடர்பாக நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களின் தொடர்ச்சியாக அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டுவருட கால அவகாசம் வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

இம் மூன்றாம்; தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் தீர்மானம் தொடர்பான முன்விவாதங்கள் நடைபெற்ற காலப்பகுதியில் இலங்கை அரசின் பிரதமர் தரப்பும் தமிழர் தரப்பின் சுமந்திரனும் இணை அனுசரனை வழங்குவதற்குத் தீர்மானித்திருந்த நிலையில்
20.03.2019 நடந்த விவாதத்தில் உரையாற்றிய இந்திய பிரதிநிதி ரஜீவ் கே சந்தர் அவர்கள்
நெருக்கமான அண்டை நாடான சிறிலங்காவின் நிலைமைகளில் இருந்து இந்தியா விலகியிருக்க முடியாது.

ஒன்றுபட்ட சிறிலங்காவில் சமத்துவமான, நீதியான, அமைதியான, கௌரவமாக வாழும் வகையில், இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரதும், அபிலாசைகளை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக, பல இன, பல மொழி, பல சமய, சமூக சிறிலங்காவின் குணவியல்பை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளித்து வந்துள்ளது.

சிறிலங்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மேற்கொண்ட சாதகமான நடவடிக்கைகளை கவனத்தில் கொள்கிறோம்.
சிறிலங்கா அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட அனைத்துலக சமூகத்திற்கு வழங்கிய, ஏனைய முக்கியமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம். என்று தெரிவித்தார்.

சமநேரத்தில் இதற்கு முந்தைய காலங்களில் ஐ.நா மனிதஉரிமைகள் சபையோடு நெருக்கமாகப் பணியாற்றிய இலங்கை நாடளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க மனித உரிமைகள் தொடர்பான விடயம் என்பது 1987 ஆம் ஆண்டு முதல் காணப்பட்ட விடயம் என்று கொழும்பில் பேசியிருந்தார்.
இந்தியா மனித உரிமைத் தீர்மானத்தைத் தாண்டி அரசியல் தீர்வை அழுத்துவதற்கும் இலங்கையின் கடும்போக்காளர்கள் 1987 ஆம் ஆண்டை நினைவுபடுத்துவதற்கும் வலுவான காரணங்கள் உண்டு.

போர்க்குற்றம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் போன்ற விடயங்களில் இலங்கையில் நேரடியாக ஈடுபட்டது இலங்கை இராணுவம் மட்டுமல்ல இந்திய இராணுவமும் கூடத்தான். எவ்வாறு இலங்கை அரசு இன்றுவரை பொறுப்புக்கூறலைத் தட்டிக்கழித்து வருகிறதோ அவ்வாறேதான் இந்திய அரசும் அமைதிப்படையினர் இலங்கையில் நிகழ்த்திய மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்கும் இன்றளவும் பொறுப்புக்கூறாமல் காலம் கடத்தி வருகின்றது.
உதாரணத்துக்கு 1987 இல் இந்திய அமைதிப்படையினர் இலங்கைக்குள் உள்நுழைந்த ஆரம்பகாலத்தில் தலைவர் பிரபாகரன் ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அது பின்வருமாறு அமைந்திருந்தது.

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்
யாழ்ப்பாணம்
16.11.1987

செயலாளர் நாயகம்
ஐக்கிய நாடுகள் சபை
நியூயோர்க்
ஐக்கிய அமெரிக்கா

அதி உத்தம செயலாளர் நாயகம் அவர்களே,
ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியாவின் அமைதி காக்கும் படைகள் இழைத்துவரும் மனிதாபிமானமற்ற கொடுமைகளையும் மனித உரிமை மீறல்களையும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். இந்திய இராணுவத்தால் பெரும்தொகையில் அப்பாவிப் பொதுமக்கள் கொலைசெய்யப்பட்டுவருவதால் தமிழ்ப்பகுதிகளில் நிலைமை மிகவும் பாரதூரமான ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளது. இந்தப் பிரச்சினையை உலக சமுதாயம் தனது உடனடியான அவசர கவனத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் அடுத்து இந்திய அமைதி காக்கும் படையினர் தமிழ்ப்பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர் என்பதையும் தமிழ்ப்போராளிகளிற்கும் சிறீலங்கா ஆயுதப்படையினரிற்கும் மத்தியில் போர் நிறுத்தத்தைப் பேணுவதே இவர்களது முக்கிய கடப்பாடாக இருந்தது என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆரம்பத்தில் அமைதிப்படையை எமது மக்கள் மிகவும் நம்பிக்கையோடு வரவேற்றார்கள். தமது நீண்டகால துண்ப துயரங்களிற்கு ஒரு முடிவு வரும் என்றும் தமது தாயகத்தில் ஒரு நிரந்தரமான சமாதானம் ஏற்படும் எனவும் தமிழ் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களது எதிர்பார்ப்பிற்கு மாறாக நிலைமை ஒரு புதிய திருப்பத்தை எடுத்தது. எமது விடுதலை இயக்கத்தை முற்று முழுதாக நசுக்கிவிடும் நோக்கத்தோடு இந்திய அரசாங்கம் எமக்கு எதிராக ஒரு முழு அளவிலான இராணுவ நடவடிக்கையை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.
அமைதியைப்பேணி மக்களைப் பாதுகாக்கும் மனுவுடன் இந்திய இராணுவம் இங்கு வந்துது. ஆனால் இப்பொழுது இந்த இராணுவம் ஒரு ஆக்கிரமிப்புப் படையாக மாறி எமது மக்களுக்கு எதிராக தயவு தாட்சண்யமற்ற ஒரு கொடூர யுத்தத்தை ஏவிவிட்டிருக்கிறது.
பொதுசனக் குடியிருப்புகள் மீது கண்மூடித்தனமாக எறிகணைகளை ஏவியும், பீரங்கித் தாக்குதல்களை நடத்தியும் விமானக்குண்டுவீச்சுக்களை மேற்கொண்டும் கண்டபடி துப்பாக்கிப் பிரயோகங்களைச் செய்தும் பெருந்தொகையான மக்களை இந்திய இராணுவம் கொண்று குவித்துள்ளது. இதுவரைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இருநூறிற்கும் மேற்பட்ட தமிழ்ப்பெண்கள் மீது பாலியல் வன்முறை புரியப்பட்டுள்ளது. இத்தகைய சட்டவிரோதக்கொலைகள் ஒருபுறமிருக்க, யாழ்ப்பாணக்குடாநாட்டில் மின்சாரத்தையும் குடிநீர் விநியோகத்தையும் துண்டித்துவிட்ட இந்திய இராணுவம் மக்களை பாரிய கஸ்டங்களிற்கு ஆளாக்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தின் பிரதான வைத்தியசாலையில் இப்பொழுது இந்தியப்படைகள் குடிபுகுந்துள்ளன. இதனால் எமது மக்கள் வைத்திய வசதியின்றி அவதிப்படுகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்திய இராணுவ நடவடிக்கைகள் தொடர்வதாலும் ஊரடங்குச் சட்டம் காலவரையறையற்று நீடிக்கப்படுவதாலும் எமது மக்கள் தாங்கொணாத்துன்பங்களை எதிர்நோக்கியுள்ளனர். போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளதால் உணவு விநியோகம் பாதிக்கப்பட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்கள் பட்டினியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எமது மக்கள் எதிர்கொள்ளும் அவலநிலைபற்றி நாம் இந்தியப் பிரதம மந்திரியின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் இந்த இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துமாறும் பல தடவைகள் வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் எமது கோரிக்கைகளுக்கு சார்பாக இந்திய அரசு இன்னும் பதிலளிக்காதது எமக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் கொடுக்கிறது.
இந்திய அரசாங்கமும் சிறீலங்கா அரசாங்கமும் கூட்டாகச் சேர்ந்து தமிழ்ப் பகுதிகளில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகள் பற்றிய செய்திகளுக்கு முழுதாக இருட்டடிப்புச் செய்துள்ளன. இந்திய இராணுவம் தனது ஆயுத பலத்தை பிரயோகித்து உள்ளுர் பத்திரிகைகளிற்கும் மற்றும் மக்கள் தொடர்பு நிறுவனங்களிற்கும் வாய்ப்பூட்டு இட்டுள்ளது. தனது இராணுவ அட்டூழியங்களை மூடிமறைப்பதற்காக இந்திய அரசு சர்வதேசப்பத்திரிகையாளர்களிற்கும் தடைவித்தித்திருக்கிறது.
இவ்விதம் மனித உரிமைகளை இந்திய அரசு மீறி வருவதுடன் எமது இயக்கத்தைக் களங்கப்படுத்தும் வகையில் மிகவும் கீழ்த்தரமான பொய்ப்பிரச்சாரத்தையும் முடுக்கிவிட்டிருக்கிறது. தமிழ்ப்பகுதிகளில் மிகவும் வியக்கத்தக்க முறையில் மனிதாபிமான செயல்களில் ஈடுபட்டு சமாதானத்தைப் பேணிவருவதாகவும் இந்திய அரசு பொய்ப்பிரச்சாரம் வாயிலாக உலக சமுதாயத்தையும் ஏமாற்றி வருகிறது.
இந்திய அமைதிப்படை புரிந்துள்ள பாரதூரமான அட்டூழியங்கள் சிலவற்றை நாம் ஐ.நா சபையின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்.
1987 அக்டோபர் 21ஆம் திகதியன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து வெறியாட்டம் ஆடிய இந்திய இராணுவத்தினர் மூன்று வைத்தியர்களையும் கிட்டத்தட்ட நூறு நோயாளர்களையும் சுட்டுக்கொன்றனர். தாதிமார் பத்துப்பேர் மிருகத்தனமாக கற்பழிக்கப்பட்டு கொலையுண்டனர். வைத்திய மாணவர்கள் சிலரும் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
1987 அக்டோபர் 22ஆம் திகதியன்று அராலித்துறையில் குவிந்து நின்ற பயணிகள் மீது இந்திய கெலிகாப்டர் ஒன்று ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதால் 35 பயணிகள் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
1987 அக்டோபர் 24ஆம் திகதியன்று கொக்குவில் இந்துக் கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த அகதிகள் மீது இந்திய இராணுவம் பீரங்கித்தாக்குதலை நடத்தியதில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 80 பேர் காயமடைந்தனர். அன்றைய தினம் சங்குப்பிட்டி என்னுமிடத்தில் 13 இந்திய சிப்பாய்கள் ஒரு தாயின் முன்பாக அவரது புதல்விகள் இருவரை மிருகத்தனமாக கற்பழித்து பின்பு அவர்களைக் கொலைசெய்தனர்.
1987 அக்டோபர் 26ஆம் திகதி அளவெட்டியில் ஒரு இந்து ஆச்சிரமம் மீது இந்திய இராணுவத்தினர் நடத்திய கெலிகாப்டர் தாக்குதலில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்தனர்.
1987 அக்டோபர் 27ஆம் திகதியன்று சாவகச்சேரி சந்தையில் பொதுமக்கள் குழுமி நின்ற வேளையில் இந்திய கெலிகாப்டர் ஒன்று ரொக்கட்டுகளை ஏவித் தாக்குதல் நடத்திய கோர சம்பவத்தில் 68 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 75 பேர் படுகாயமடைந்தனர்.
1987 அக்டோபர் 28ஆம் திகதி இந்து மகளிர் கல்லூரியில் அமைந்திருந்த அகதிமுகாம்மீது இந்திய இராணுவத்தினர் நடத்திய பீரங்கித்தாக்குதலில் 3 குழந்தைகள் கொல்லப்பட்டதுடன் 8 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.
1987 நவம்பர் 3ஆம் திகதியன்று இந்திய இராணுவம் பொன்னாலைக் கிராமம் மீது தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலின்போது அங்கிருந்த கிருஸ்ணர் கோவில் பெரும் சேதத்திற்கு இலக்காகியது. கோவிலில் தஞ்சம்பெற்றிருந்த நூற்றுக்கணக்கான அகதிகள் அங்கிருந்து பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டனர்.
1987 நவம்பர் 4ஆம் திகதியன்று இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அகோர விமானத்தாக்குதலில் மூளாய் வைத்தியசாலையும் அதன் சுற்றுப்புறமும் பலத்த சேதத்திற்கு இலக்காகின.
1987 நவம்பர் 5ஆம் திகதியன்று இந்திய இராணுவம் மேற்கொண்ட பீரங்கித் தாக்குதலில் மூளாய் வைத்தியசாலை பலத்த சேதத்திற்கு இலக்காகியது. 5 பொதுமக்கள் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். இப்பகுதியில் காயமடைந்தோர் வைத்திய வசதிகள் எதுவுமின்றி அவதிக்கு இலக்காகியுள்ளனர்.
1987 நவம்பர் 11 ஆம் திகதியன்று நெடுங்கேணியில் குடியிருப்புகள் மீது இந்திய கெலிகாப்டர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 25 பேர் காயமடைந்தனர். இப்பகுதியிலிருந்த வைத்தியசாலை ஒன்றும் கடும் சேதத்திற்கு இலக்காகியதுடன் வைத்தியசாலையிருந்த நோயாளர் சிலரும் காயமடைந்தனர்.
இப்படியாக இந்திய இராணுவம் எமது மக்கள்மீது மிகவும் கொடுமையான அட்டூழியங்களைப் புரிந்துவருகிறது. அப்பாவிப் பொதுமக்கள்மீது இத்தகைய அட்டூழியங்கள் இழைக்கப்படுவதை தடுத்து நிறுத்துவது உலக சமூகத்தின் மனிதாபி;மான தார்மீக கடப்பாடாகும். இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் ஐநா சாசனத்து மனித உரிமைப் பிரமாணங்களை மீறுவதாக அமைந்துள்ளன என்பதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இந்த சூழ்நிலையில் இராணுவத் தாக்குதல் நடவடிக்கைகளை கைவிட்டு சமாதான வழியில் பேச்சுக்கள் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண இந்திய அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ளுமாறு நாம் உங்களைப் பணிவுடன் கோருகிறோம்
வே.பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்

இதே போல் அமைதிப்படையினர் வெளியேறும் காலத்திற்கு அண்மையாக சர்வதேச மன்னிப்புச் சபை ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

Thursday 17th

August 1989

AMNESTY INTERNATIONAL CALLS ON SRI LANKA GOVERNMENT TO END RISING TIDE OF HUMAN RIGHTS VIOLATIONS

Amnesty International has called for full investigations into the killings of unarmed civilians by members of the Indian Peace Keeping Force (IPKF) in northern Sri Lanka early this month.

On 2 August at least 51 people-including six women and seven children were reportedly killed in a reprisal attack by the IPKF at Valvedditturai after Liberation Tigers of Tami Eelam had ambushed an IPKF patrol in the town, killing six Indian soldiers.

Many victims were reportedly pulled from their houses and shot in the back; others were lined up against walls and shot. Over a hundred houses were burnt along with dozens of shops, vehicles and fishing boats.

The Indian authorities have said that 24 people died in cross-fire when the guerilla group attacked, but this has been denied by witnesses and independent sources in the town.

 

இது 1989 இல் நடந்த வல்வைப்படுகொலை தொடர்பானது. அமெரிக்கப்படைகள் வியட்னாமில் நிகழ்த்திய மைலாய்படுகொலைக்கு ஒப்பானதாக சர்வதேச ஊடகங்களாலும் மனித உரிமை அமைப்புகளாலும் கண்டிக்கப்பட்ட விடயம். இதற்கு முறையான நீதி விசாரணை நடத்தவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை கேட்டுக்கொண்ட இன்று வரை கிடப்பில் போடப்பட்டிருக்கும் கடிதம்.
மேற்குறிப்பிட்ட அமைதிப்படையின் தொடக்க காலத்தோடும் இறுதிக்காலத்தோடும் தொடர்புபட்ட இரண்டு அறிக்கைகள் அல்லது கடிதங்கள் போதும் இடைப்பட்ட காலத்தில் இந்தியப்படைகளால் நிகழ்த்தப்பட்ட மனிதஉரிமை மீறல் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான கொடூரங்களைப் புரிந்துகொள்வதற்கு.

இவையெல்லாவற்றையும் நன்கு அறிந்துவைத்திருக்கும் இலங்கை இராஜதந்திரம், இலங்கையை போர்க்குற்ற விசாரணைக்கோ பொறுப்புக்கூறலுக்கோ இந்தியா நிர்ப்பந்திக்க முடிவெடுக்கும் அல்லது முடிவெடுக்கக்கூடிய நேரங்களில் எல்லாம் இந்தியாவும் பொறுப்புக்கூறவேண்டும் என்று மறைமுகமாகவும் நேரடியாகவும் சொல்லி வருவதும். தமக்கு வாய்ப்பானதும் இந்தியாவிற்கு எதிரானதுமான நாடுகள் ஊடாக இவ்விடயத்தை ஊதிவிடுவதுமாக இந்தியாவை கட்டுப்படுத்தி திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் வைத்திருப்பதே யாதார்த்தம். அதற்கான அண்மைய சிறிய உதாரணமே மேற்குறிப்பிட்ட மகிந்த சமரசிங்கவின் பேச்சு.

ஆகையால் மனித உரிமைச் சபையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் இந்தியா தான் விரும்பினால் கூட இலங்கையை வலுவாக எதிர்க்கமுடியாத நிலை. ஒருவேளை இந்தியா பொறுப்புக்கூறல் விடயத்தில் தீவிர முடிவெடுக்கவேண்டும் என்றால் முன்மாதிரியாக அமைதிப்படை நிகழ்த்திய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்கு பொறுப்புக்கூறிவிட்டு தன்னை முன்னுதாரணம் காட்டி இலங்கையை கண்டிக்கவோ கட்டுப்படுத்தவோ பேரம்பேசவோ முடியும்.
ஆனால் அவ்வாறான பண்பியல்புகளை கொண்டியங்கும் நிலைக்கு இந்தியா இன்னமும் வரவில்லை. எனவே மனித உரிமைச்சபையில் விருப்பு வெறுப்பு இலாப நட்டங்களிற்கு அப்பால் இந்தியாவின் நிலை திருடனிற்கு தேள்கொட்டிய நிலைதான்.
இந்த விடயத்தில் இலங்கை அரசு வாலாட்டவும் இந்தியாவின் பகை நாடுகளைக்கொண்டு நெருக்குதல் கொடுக்கவும் காரணமான ஒரே விடயம் இலங்கையில் இந்தியப்படைகள் என்ற ராஜீவ்காந்தியின் வரலாற்றுத்தவறு. ஜே.ஆர்.ஜெயவர்த்தனேவின் தீர்க்கதரிசனம் மிக்க இராஜதந்திரம்.
இந்தியாவின் காலடியில் நீண்டு கிடக்கும் சிறு துண்டாக இலங்கை இருந்தாலும் பல சந்தர்ப்பங்களில் காற்சட்டைப்பையிற்குள் கையெறிகுண்டை வைத்திருப்பதுபோல்தான் இந்தியாவை உணரவைக்கிறது.

இலங்கைத் தலைவர்களின் ஒவ்வொரு நகர்வும் இந்தியத்தலைவர்களின் ஒவ்வொரு நகர்வும் பலதசாப்தங்கள் கடந்தும் செல்வாக்குச் செலுத்தும் வல்லமை வாய்ந்தது என்தை இரு தரப்புமே புரிந்தும் கற்றும் வைத்திருக்கிறார்கள்.
ஆனால் அனேகமானவற்றில் மிகப்பெரிய வல்லரசான இந்தியாவை இலங்கைதான் வென்றுகொண்டிருக்கிறது என்பது இந்திய ராஜதந்திரத்திற்கு இன்னமும் இலங்கை விடுத்துவைத்திருக்கும் நிறைவேற்றப்படாத சவால்தான்.
இந்நிலையில் ஐ.நா மனித உரிமைச்சபையில் பொறுப்புக்கூறல் அழுத்தத்தையும் கடந்து 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அரசியல் தீர்வு அழுத்தத்தை இந்தியா கோடிட்டுக்காட்டியிருக்கிறது.
13 ஆம் திருத்தச்சட்டத்தைப் பொறுத்தவரை அது இந்தியாவின் குழந்தைதான். வடக்குக்கிழக்கு இணைந்த காணி காவல்துறை அதிகாரங்கள் கொண்ட சமஸ்டிக்கு குறைவானதும் தற்போதைய மகாணசபைக்கு அதிகமானதுமான அதிகாரங்கள் கொண்ட இந்தியா முன்வைத்து இலங்கையும் இந்தியாவும் ஏற்றுக்கொண்ட ஒரு ஒப்பந்தம்.

அதன்படி மாகாணசபையைக்கொண்டுவந்து அதற்கு வரதராஜப்பெருமாளை முதல்வராக்கிய இந்தியாவால் 13 ஆம் திருத்தச்சட்டத்தில் சொல்லப்பட்ட காணி காவல்துறை அதிகாரம் உள்ளிட்ட சரத்துக்களை நடைமுறைப்படுத்தவைக்கமுடியவில்லை.
இதை பின்னாளில் 13 ஆம் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவற்குப் போதிய அழுத்தத்தை இலங்கைக்கு இந்தியா கொடுக்கவில்லை என வரதராஜப்பெருமாளே பதிவு செய்திருக்கிறார்.

அதே வரதராஜப்பெருமாள் செயலற்ற சபையைக்கலைத்து தமிழீழத்தைப் பிரகடனப்படுத்திவிட்டு இந்தியாவிற்கே தப்பிச்சென்ற வரலாறும் இந்தியாவின் இராஜதந்திரத்தோல்விகளின் பட்டியலில் இடம்பிடிக்கக்கூடியதுதான்.

பின்னர் 13 ஆம் திருத்தச்சட்டத்தில் எஞ்சியிருந்த வடக்கு கிழக்கு இணைப்பைக்கூட சரத்தில் செருகப்பட்டிருந்த தற்காலிக இணைப்பு என்ற பதத்தைப்பாவித்து நீதிமன்றம் மூலம் பிரி;த்தெடுத்து இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஆணிவேரையே புடுங்கி எறிந்திருக்கிறது இலங்கை அரசு. இதிலும் மதிநுட்பமாக தோற்றிருப்பது இந்தியாதான்.

ஏனெனில் தமிழீழத்தை அங்கீகரிக்க முடியாத இந்தியா வடகிழக்கு இணைப்பு அடங்கலான காணிகாவல்துறை அதிகாரம் மிக்க தமிழ்ப்பிரதேசம் ஊடாக திருகோணமலைத்துறைமுகம் உட்பட கேந்திர முக்கியத்துவம்மிக்க பிரதேசங்களை கையாளலாம் எனவும் வடகிழக்கை இந்தியாவின் தெற்கு அரணாக மெல்ல மெல்ல மாற்றியமைக்கலாம் எனவும் நம்பியது.

ஆனால் இன்று சம்பூரிற்கும் பலாலிக்கும் மத்தளவிற்கும் என்று சின்னச்சின்ன விடயங்களிற்கு கூட இலங்கை அரசின் பின்னால் திரியும் நிலைபோதாதென்று பாக்குநீரிணைக்கேவந்து வெளிப்படையாக சீன உயர்மட்டத்தினர் படம்பிடிக்கும் நிலைக்குச்சென்றிருக்கிறது நிலமை.
மேற்குலகுபோல் போர்க்குற்றம் பொறுப்புக்கூறல் என்று இலங்கையைக் கையாள முடியாத வரலாற்றுத்தோல்வியை இச்சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்னமே அதாவது ராஜீவ்காந்தி காலத்திலேயே இந்தியா அடைந்துவிட்டது.

இப்போது மிச்சம் இருப்பது, இந்தியா தன்னைப் பலப்படுத்த அல்லது பாதுகாக்க அல்லது பேரம்பேச எடுத்துக்கொள்ளக்கூடியது இரண்டே இரண்டு விடயங்கள்தான். ஒன்று பதிமூன்றாம் திருத்தச்சட்டம். அடுத்தது தமிழீழத் தனியரசிற்கான ஆதரவு. ஐ.நா மனித உரிமைச்சபையில் இந்தியாவின் சமகால பேச்சின்படி இந்தியா இப்போது நிற்பது 13 ஆம் திருத்தச்சட்டம். இது 1887 இல் நின்ற இடம்.

இந்திரன் ரவீந்திரன்
27.03.2019

இந்திரன் ரவீந்திரன்  அவர்களால் ஏப்ரல் மாத இகுருவி பத்திரிகையில் எழுதப்பட்டது