ஆறாத சோகம் தீராத துயரம்

ஆறாத சோகம் தீராத துயரம்

பி.மாணிக்கவாசகம்

அது, ஆறாத சோகம். தீராத துயரம். அந்த இழப்புக்கள் ஆழமானவை. மிகமிக ஆழமானவை. அந்த சோகத்தையும், துயரத்தையும் இழப்புக்களையும் மீட்டுப்பார்க்க நெஞ்சம் பதைபதைக்கும். அந்தப் பதைபதைப்பு அடி மனம் வரையும் பாய்ந்து அப்படியே உலுக்கி எடுக்கும். முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை இதுதான்.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து பத்து வருடங்கள் ஓடிவிட்டன. அந்தப் பாதிப்புக்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மீட்டுப்பார்க்கவே விரும்புவதில்லை. ஆனால் அந்த நினைவுகள் நனவுகளாக எந்தெந்த சந்தர்ப்பங்களில் மேலெழுந்து மெய் நடுங்கி மனம் நோகச் செய்யும் என்பது அவர்கள் எவருக்குமே தெரியாது.

கதைப் போக்கில் முள்ளிவாய்க்கால் பற்றி பிரஸ்தாபித்தாலே போதும். அங்கு நடந்த கோரக்காட்சிகள் மனங்களில் வாழ்வியலாக விரிந்து நடுங்கச் செய்யும். ஆற்றாமையும், இயலாமையும் ஆட்கொள்ள இதயம் அசுர வேகத்தில் துடிக்கும். தலைகனத்து சம்மட்டியால் அடித்தது போன்று இடிக்கத் தொடங்கிவிடும். என்னவோ செய்வது போல வயிறு கனத்து கலங்கி ஏதேதோ நினைவுகள் மனதில் முட்டி மோதும்.

பத்து வருடங்கள் என்ன, நூறு வருடங்கள் கடந்தாலும், முள்ளிவாய்க்கால் நினைவுகள் மனங்களில் இருந்து மறைந்து போகாது. அந்த அளவுக்கு முள்ளிவாய்க்கால் துயரங்கள் சக்தி வாய்ந்தவை. அந்த நினைவுகளில் சிக்கி காலச்சக்கரத்தில் சென்றது போன்று அன்றைய வாழ்வியலுக்கே சிலர் ஆளாகிவிடுவதுண்டு.

உளவியல் ரீதியான முள்ளிவாய்க்கால் துயரங்கள் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்தத் துயரத்தை ஒரு கூட்டு நிகழ்வாக நினைவுகூர்ந்து, அழுது அரற்றி ஆற்றிக்கொள்வதற்கு அவர்களுக்கு இன்னுமே சந்தர்ப்பம் சரியாகக் கிட்டவில்லை.

துயரம் காரணமாகத் துவண்டு போகின்ற மனங்களுக்கு உள ஆற்றுப்படுத்தல் மிக மிக அவசியம். தன்னோடு பாதிக்கப்பட்ட ஏனையவர்களுடன் மனந்திறந்து பேசி, அந்த கூட்டுத் துயரத்தில் தமது கவலைகளையும், துன்பங்களையும், இழப்புக்களையும் பகிர்ந்து கொண்டு ஆறுதல் பெறுவதற்காக பாதிக்கப்பட்டவர்களின் உள்ளங்கள் இன்னும் ஏங்கிக் கொண்டிருக்கின்றன.

முள்ளிவாய்க்கால் அவலத்தில் சிக்கித் தவித்தவர்கள் இந்த உளவியல் பாதிப்பில் இருந்து மீள முடியாவர்களாகவும், அந்த துன்பக்கிடங்கில் இருந்து மேலெழுந்து வர முடியாதவர்களாகவும் சமூகத்தில் காணப்படுகின்றார்கள்.

அங்கு அரச படைகள் நடத்திய கோர தாண்டவத்தின்போது, பெற்றவர்கள், பிள்ளைகள் மற்றும் உற்றவர்கள் உடல் சிதறி உயிரிழந்து போக, அந்த இழப்பின்போது அழுது அரற்றி துன்பத்தை வெளிப்படுத்தி மனம் கசிந்து கண்ணீர் உகுத்து, பலருக்கும் அவர்களை அடக்கம் செய்ய முடியாமல் போனது.

மழையென பொழிந்த எறிகணைகளிலும், சீறி வந்த துப்பாக்கிக் குண்டுகளிலும், கடற்பரப்பில் இருந்து பாய்ந்து வந்த பீரங்கிக் குண்டுகளும் உடல்களைப் பிய்த்தெறிந்து ஆட்களை சின்னாபின்னமாக்கியதனால் சிதறிய உடற்பாகங்களைப் பொறுக்கி எடுத்து ஒன்றாக்கி, பாதிப்புகளில் இருந்து உயிர்தப்பியவர்களினால் ஓர் அடக்க நிகழ்வை செய்ய முடியாமல் இருந்தது.

இறந்தவர்கள் போக மிஞ்சியவர்கள் உயிர்களைக் காத்துக்கொள்வதற்காக ஓடித்தப்ப வேண்டிய நிர்ப்பந்தம். இதனால் படுகாயமடைந்து குற்றுயிராகக் கிடந்தவர்களையும் கண்ட கண்ட இடங்களில் கைவிட்டுச் செல்கின்ற அவல நிலைமை. கல்நெஞ்சம் கொள்ள வேண்டிய அந்தத் தருணங்களுக்கு ஆளாகித் தவித்தவர்களின் துயரங்களை எழுத்தில் வடிக்க முடியாது.

இரத்த உறவுகளையும், உற்றவர்களையும் அநியாயமாக சாகக் கொடுத்த துயரம் ஒருபக்கம். இறுதி நேரத்தில் அவர்களுக்குச் செய்ய வேண்டிய உதவிகளையோ அல்லது அவர்களுக்கு செய்ய வேண்டிய மரியாதைகளையோ செய்ய முடியமால் போய்விட்டதே என்ற மாளாதத் துன்பம் பாதிக்கப்பட்டவர்களுடைய மனங்களில் மண்டிக்கிடக்கின்றன. இந்தத் துயரங்கள் அவர்களைத் துரத்தித் துரத்தி வாட்டி எடுக்கின்றன.

அரசியலாகிப் போனது

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது முழுக்க முழுக்க உளவியல் சார்ந்தது. ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் ஒழுங்கமைப்பில் ஆரவாரமின்றி அமைதியான முறையில் ஆன்மீக சிந்தனையோடு அனுட்டிக்கப்பட வேண்டியது. அத்தகைய ஒழுங்கமைப்பு கடந்த பத்து வருடங்களில் ஒரு தடவையேனும் நினைவேந்தலை ஒழுங்கு செய்தவர்களினால் செய்யப்படவில்லை.

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகள் முதன் முதலாக எதிர்ப்புகளுக்கும், இராணுவ, புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. அச்சமான சூழலில் முன்னெடுக்கப்பட்ட அந்த நினைவேந்தல்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மனங்களிலும், ஏனையவர்களுடைய மனங்களிலும் சிறிதளவு ஆறுதiலைத் தந்தன.

அச்சுறுத்தலையும் மீறி அனுட்டிக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்றதற்காக இராணுவத்தினரும், புலனாய்வாளர்களும் தேடி வருவருவார்களோ, தேடி வந்து என்னென்ன செய்வார்களோ என்ற அச்சம் கவிழ்ந்த மன நிலையில் நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் நிம்மதி இழந்து தவிக்க நேர்ந்திருந்தது.

இந்த நிம்மதியற்ற நினைவேந்தலினால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது ஆறுதலளிப்பதாகவோ அவலமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்காக மனதாரப் பிரார்த்தனை செய்து மனம் ஆறத்தக்கதாகவோ அமைந்ததாக அவர்களில் எவராலும் உணர முடியவில்லை.

அந்த நினைவேந்தல்களில் கலந்து கொண்டால் இராணுவத்தினராலும், புலனாய்வு பிரிவினராலும் தங்களுக்கு எந்தெந்த வகையில் என்னென்ன தீங்கு நேருமோ, என்று நெஞ்கம் கலங்கிய நிலையில் முள்ளிவாய்க்கால் துயரந்தோய்ந்த நெஞ்சம் கொண்ட பலரும் வீடுகளில் ஏங்கித் தவித்து வீடுகளில் முடங்கிக் கிடந்ததுண்டு. இந்த அவல நிலைமை அரசியல் உரிமைக்காகப் போராடி, பயங்கரவாதிகள் என பெயர் சூட்டப்பட்டு முள்ளிவாய்க்கால் வரையில் அடித்து நொறுக்கப்பட்டவர்களுக்கே நேர்ந்திருந்தது. இந்த அவலத்தினதும், துயரத்தினதும் அளவையும் வேதனையையும் எவராலும் எடுத்துரைத்து விளக்கிக் கூற முடியாது