பாகிஸ்தானுக்கு ரூ.9,360 கோடி அவசர கடன் – ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி பதவி ஏற்றார். அந்த நாள் முதல், இந்த நாள்வரை பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது.

இந்த நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரு வழியின்றி அந்த நாடு தவிக்கிறது.

பிரதமர் இம்ரான்கான் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அதெல்லாம் அந்த நாட்டை நிதி நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்து விடாது என்று சொல்லப்படுகிறது.

தனது நெருங்கிய நட்பு நாடுகளான சீனாவிடமும், சவுதி அரேபியாவிடமும் இம்ரான்கான் தொடர்ந்து கடன் கேட்டு வருகிறார். நாட்டின் நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உதவிக்கரம் நீட்டுங்கள் என்று அந்த நாடுகளை அவர் கேட்டு வருகிறார்.

பாகிஸ்தான் பொருளாதாரத்தை மோசமான நிலையில் இருந்து மீட்டெடுப்பதற்கு இப்போது ஆசிய வளர்ச்சி வங்கி உதவிக்கரம் நீட்ட முன் வந்துள்ளது.

அந்த வகையில் பாகிஸ்தானுக்கு அவசர கடனாக ஆசிய வளர்ச்சி வங்கி 1.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9,360 கோடி) கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதில் 1 பில்லியன் ( ரூ.7,200 கோடி) பாகிஸ்தான் நடப்பு கணக்கு பற்றாக்குறையை மேம்படுத்தவும், தனது வருவாய் தளத்தை வலுப்படுத்திக்கொள்ளவும் வழங்கப்படுகிறது.

30 கோடி பில்லியன் (சுமார் ரூ.2,160 கோடி) எரிசக்தி திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளவும் வழங்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த சில வருடங்களாகவே பாகிஸ்தான் தனது எரிசக்தி தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு முக்கியத்துவம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.9,360 கோடி கடன் வழங்குவது குறித்து, அந்த வங்கியின் மத்திய மற்றும் மேற்கு ஆசிய பிரிவுக்கான தலைமை இயக்குனர் வெர்னர் லீபாச் கூறும்போது, “பாகிஸ்தான் பொருளாதாரத்தை பலப்படுத்தவும், வெளி பொருளாதார அதிர்ச்சிகளின் ஆபத்துகளை குறைக்கவும் இந்த அவசர கடன்களை அளிக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்த ரூ.9,360 கோடி கடனுடன் சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிடம் இருந்து பாகிஸ்தான் 10.40 பில்லியன் டாலர் (சுமார் ரூ.74 ஆயிரத்து 880 கோடி) கடன் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கடன்களை பாகிஸ்தான் வாங்கி இருப்பது, அன்னிய செலாவணி கையிருப்பை பெருக்கி கொள்வதற்கும், பழைய கடன்களை திரும்பத்தருவதற்கும்தான் என்று தகவல்கள் கூறுகின்றன.