கை நழுவுமா ஒஷோவா ?

“GM Town” என்று வர்ணிக்கப்பட்ட ஒஷோவாவில் இயங்கிவரும் மோட்டார் வாகன தொழிற்சாலைக்கு 2019க்கு பின் எந்தவிதமான வாகன பொருத்தல் ஒதுக்கீடும் செய்யப்படாத நிலையில் அங்கு தொழில்புரியும் 2500கும் மேற்பட்ட தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
கனடாவில் சென் கத்தரின்ஸ் இங்கர்சொல் ஆகிய இடங்களில் இருக்கும் ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலைகளை காட்டிலும் மிகமுதன்மையானது என கருதப்படும் ஒஷோவாவின் இன்றைய நிலைக்கான பின்புலங்களை ஆராய்வதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கம்.
மக்லாகிலின் மரபு
1832இல் அயர்லாந்தில் இருந்து குடிபெயர்ந்த ஜோன் மக்லாகிலின் ஓஷோவாவில் ஆரம்பித்த குதிரை வண்டி தொழிற்சாலை காலபோக்கில் முதலாம் தலைமுறை மோட்டார் வாகனங்களை தயாரிக்க ஆரம்பித்தது.1921 இல் ஜெனரல் மோட்டர்ஸ் இத்தொழிற்சாலையை கொள்வனவு செய்ததன் பிற்பாடு 1953 இல் தற்போதும் இயக்கத்தில் இருக்கும் பிரதான பொருத்து தளம் நிறுவப்பட்டது. இங்கு Cadillac XTS,Chevrolet Impala,Chevrolet Silverado மற்றும் GMC Sierra வாகனங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வந்தாலும் ஐந்தாம் தலைமுறை Camaro உள்ளடங்கலாக பல மோட்டார் வாகனங்கள் 2015வரை தயாரிக்கப்பட்டு வந்தது. அவை படிப்படியாக மெக்சிக்கோ உள்ளிட்ட பிற நாடுகளுக்கு நகர்த்தப்பட பல வாகன உற்பத்தி தொழில்கள் ஒண்டாரியோ மாகாணத்தை விட்டு மறைய ஆரம்பித்தது. கடந்த முப்பது வருடங்களில் 25000 தொழிலாளர்களில் இருந்து வெறும் 2500ஆக இந்த எண்ணிக்கை குறைவடைந்தது.
2009 வங்குரோத்து பிணையெடுப்பு
2008 டிசெம்பரில் மத்திய மற்றும் மாகாண அரசின் 10.8 பில்லியன் டொலர் நிதி பாய்ச்சலின் மூலமாக பொருளாதார வீழ்ச்சியின் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்ட ஜெனரல் மோட்டர்ஸ் இன்றைய தேதிவரை 2.7பில்லியன் டொலர்களை மீள செலுத்தவில்லை. பொது மற்றும் முதன்மை பங்குகளை விற்றல், வட்டிவருமதி, மீள்செலுத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலமாக 8 பில்லியன் பணத்தை மத்திய மாகாண அரசுகள் திரும்ப பெற்றமையை அடுத்து இன்றுவரை கிரைஸ்லர் மற்றும் ஜெனரல் மோட்டர்ஸ் தொடர்பில் 3.7பில்லியன் டொலர்கள் மக்கள் வரிப்பணம் தூண்டு விழுந்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த தொழிற்சாலை உட்பட அமெரிக்காவின் 4 தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு ஜெனரல் மோட்டர்ஸ் சொல்லும் காரணங்கள் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. தர்க்க ரீதியாக சிந்தித்தால் ஜெனரல் மோட்டர்ஸ் அறிவிப்பின் பிரகாரம் தாம் தன்னியக்க மற்றும் மின்சார வாகனங்கள் பக்கம் தமது கவனத்தை திருப்புவதாகவும் அதன் விளைவே இந்த ஐந்து தளங்களின் செயற்பாடுகளை கைவிடும் முடிவு என்பதில் பெரும்பாலும் உண்மை இல்லை என்றே படுகிறது. இதற்கு காரணம் ஒஷோவா தளம் மிக இலகுவாக எந்தவித வாகனங்களுக்கும் ஏற்றாற்போல் மாற்றியமைக்கப்படக்கூடியது என்பதோடு உலகத்தரம் வாய்ந்த வர்ண பட்டறை மற்றும் விருது வென்ற தொழிலாளர்களையும் உள்ளடக்கியது. இன்னொரு திக்கில் சிந்தித்தால் அமெரிக்காவில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட தொழிற்சாலைகளே வோல்ட் ,போல்ட் போன்ற பச்சை வலு வாகனங்களை தயாரிப்பது அவர்கள் அறிவித்த காரணங்களை உடனடியாகவே பொய்ப்பிக்கின்றன.
Trump இன் அதிருப்தியும் Ford இன் புரிதலின்மையும்

Trump மாநில சந்திப்புகளில் உற்பத்தி சார் வேலைவாய்ப்புகள் மீள அமெரிக்காவுக்குள் எடுத்துவரப்படுவதாக சொல்லிவந்த கூற்றை பொய்ப்பித்துக்கொண்டு வந்திருக்கும் ஜெனரல் மோட்டர்ஸ் அறிவிப்பு Trumpஐ ஒருபோதும் குளிர்ச்சிப்படுத்துவதாக இருக்காது. இதன் உடனடி விளைவாக அமெரிக்காவில் இன்னமும் நடைமுறையில் இருக்கும் 7500 டொலர் தள்ளுபடியை நீக்கும் பிரேரணை குறித்து சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். இது ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்க நினைக்கும் பச்சை வலு வாகனங்கள் மீதான அழுத்தத்தை கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம்.
ஒண்டாரியோ மாகாணத்தை பொறுத்தவரை பதவியேற்ற பழமைவாதிகளின் அரசியல் தேன்நிலவு முடிவுக்கு வந்ததன் பின்னதாக சந்திக்கும் மிகப்பெரிய பின்னடைவு இதுவாக பார்க்கப்படுகிறது. முதல்வர் Ford தரப்பில் இருந்து ஏதேனும் அழுத்தம் மிக்க மந்திர தந்திரங்களை ஒஷோவா தொழிற்சாலை மூடல் குறித்து எதிர்பார்க்கமுடியாது.
டெஸ்லாவின் ஈலான் மஸ்க் மூடப்படும் ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலைகளை கொள்வனவு செய்வது குறித்து ஆர்வம் அடைந்துள்ள நிலையில் ஒஷோவாவில் டெஸ்லா தொழிற்சாலை அமைவது சந்தேகமே. முதன்மைக்காரணம் மாகாண பழமைவாத அரசு கைவிட்ட பச்சை வலு வாகன தள்ளுபடிகள் மற்றும் உள்வரும் பல்தேசிய கம்பெனிகளுக்கான நலன்புரி திட்டங்கள் டெஸ்லாவின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அதன் வரவை மிக சிக்கலாகும். இதுவே Ford முன்மொழிகின்ற ஒண்டாரியோவின் திறந்த வியாபார கொள்ளகையின் தன்முரணான நிலையாகும்.
மேலதிகமாக டெஸ்லாவின் உற்பத்தி வழிமுறைகள் பெரும்பாலும் தன்னியக்க மயப்படுத்தபட்டவை என்பதும் அவ்வாறான சந்தர்ப்பத்தில் புதிதாக தோன்றும் வேலைவாய்ப்புகள் நேரடியாக தற்போது பணியில் இருப்பவர்களுக்கே சென்றடையும் என்கிற எவ்வித உத்தரவாதத்தையும் தரமாட்டாது என்பதும் துணை காரணங்கள் ஆகும்.
தொழிற்சங்க நடவடிக்கைகள்
ஒஷோவா விவகாரம் கசிந்ததில் இருந்து தொடர்புபட்ட தொழில்சங்கமான Unifor தனது பங்குக்கு பெரும் அழுத்தங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளது. கைஎழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து நீதிமன்றங்கள் வரை இப்பிரச்சினை இழுபடலாம். இவை வரும் கோடைகாலத்துக்கு முன்னதாகவே ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கும் “வீட்டுக்கு அனுப்பும் படலத்தை” சற்று தாமதிக்க செய்யும் என்பதோடு ஒருபோதும் நிரந்தர தீர்வாக அமையாது. இத்தளத்தில் பணிபுரியும் பாதி எண்ணிக்கையானோர் ஓய்வுபெறுவதற்கு தகுதியானவர்கள் என்பதால் அவர்கள் ஏதேனுமொரு ஓய்வுப்பொதி ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு நிர்பந்திக்கப்படலாம். கனேடிய அதிருப்தியை வெளிக்காட்டும் முகமாக ஜெனரல் மோட்டர்ஸ் வாகன கொள்வனவை கனேடியர்கள் ஏற்கனவே புறக்கணிக்க ஆரம்பித்துள்ள நிலையில் ஆண்டுக்கு மூன்று இலட்சம் வாகனங்கள் என்கிற கனேடிய சந்தை நிச்சயம் ஜப்பானிய ஐரோப்பிய தயாரிப்புகள் பக்கம் திரும்ப ஆரம்பிக்கும் !
Triden V Balasingam