புதிய ஹிட்லர் அலெக்ஸ்சான்டர் Alexander Gauland

புதிய ஹிட்லர் அலெக்ஸ்சான்டர்

Alexander Gauland

– ரதன்

ஹிட்லர் பிறந்த மண்ணிலிருந்தே புதிதாக ஒரு ஹிட்லர் தோன்றியுள்ளார். கிழக்கு ஜேர்மனியில் 1941ல் பிறந்த இவர், 1959ல் மேற்கு ஜேர்மனிக்கு புலம் பெயர்ந்து, அங்கு உயர் கல்வி கற்றார். அரசியல் விஞ்ஞானத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். பிரான்க்போர்ற் மேயர் அலுவலகத்தில் பிரதம அதிகாரியாக பத்து வருடங்கள் கடமையாற்றினார். பின்னர் மேற்கு ஜேர்மனி அரசில், பிரதம அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். 1991-2006 காலப் பகுதியில் ஜேர்மனியிலிருந்து வெளிவரும் Märkische Allgemeine பத்திரிகையின் ஆசிரியராக இருந்துள்ளார்.
இவர் தனது அரசியல் தளத்தை, தற்போதைய ஜேர்மன் அதிபர் அன்கெலா மெர்க்கலின் கட்சியான Märkische Allgemeine ல் கட்சியிலிருந்து ஆரம்பித்தார். அதன் உறுப்பினராக இருந்துள்ளார். இக் கட்சி ஒரு மத்திய வலது சாரிக் கட்சி. இதனை ஒரு தீவிர வலது சாரிக் கட்சியாக மாற்றும் முயற்சியில் பேர்ளின் சேர்க்கில் என்ற குழு முயற்சித்தது. இக் குழுவில் இணைந்து பணிபுரிந்துள்ளார். (Berliner Kreis (“Berlin circle”)) அமெரிக்காவில் இயங்கும் ரீ பார்ட்டி போன்றது பேர்லின் சேர்க்கிள். 2010ல் அன்கெலா மெர்க்கல் முதலில் கிறீசுக்கு எந்த வித பண உதவியும் ஜேர்மனி வழங்காது என தெரிவித்திருந்தார். பின்னர் சில மணி நேரங்களிலேயே தனது கூற்றை மாற்றி, கிறீசுக்கு நிதியுதவி வழங்குவதாக ஐரோப்பிய பாரளுமன்றத்திடம் தெரிவித்திருந்தார். அன்கெலா மெர்க்கலின் இந்த நடவடிக்கை, ஜேர்மனியின் பழமைவாதிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கிறிஸ்ரியன் டெமோகிரடிற் கட்சிக்கு மாற்றீடாக ஒரு கட்சி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என பழமைவாதிகள் தீர்மானித்தனர். அதன் விளைவு Konrad Adam, Bernd Lucke, Alexander Gauland ஆகியோர் இணைந்து மாற்று ஜேர்மனிக் கட்சியை ஆரம்பித்தனர். இக் கட்சி ஜேர்மன் மொழியில் Alternative für Deutschland vd miof என அழைக்கப்படும் (AFD). 2013 சித்திரையில் ஆரம்பிக்கப்பட்ட இக் கட்சி, 2013 புரட்டாதியில் நடைபெற்ற தேர்தலில் 5வீத வாக்குகளையே பெற்றிருந்தனர். 2017 பொதுத் தேர்தலில் 94 ஆசனங்களைக் கைப்பற்றினர். மொத்தம் 598 ஆசனங்களைக் கொண்ட ஜேர்மன் பாராளுமன்றத்தில் அதிபர் அன்கெலா மெர்க்கலின் கட்சி 246 ஆசனங்களையே பெற்றது. 2013 தேர்தலை விட 65 ஆசனங்கள் குறைவாக பெற்றது. இரண்டாம் இடத்தை மார்ட்டின் சுல்ஸ்ன் சோசியல் டெமோகிரடிட் கட்சி பெற்றது. மூன்றாம் இடத்தையே மாற்று ஜேர்மனிக் கட்சியால் பெறமுடிந்தது. பிறீ டெமோகிரடிட் கட்சி (FDP), இடது சாரிக்கட்சி, பசுமைக் கட்சி ஆகிய கட்சிகள் முறையே 10.7, 9.2, 8.9 வீத வாக்குகளைப் பெற்றனர். ஜேர்மன் பாராளுமன்றம் ஒரு தொங்கு பொறி பாராளுமன்றமாகியது. இக் கட்சிகளுள் மாற்று ஜேர்மனிக் கட்சியே இளமையானதும், புதியதுமாகும். எனவே இக் கட்சியின் வெற்றியானது ஜேர்மன் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படுத்துகின்றது.

மாற்று ஜேர்மன் கட்சியை பல பெயர்களில் விபரிக்கின்றார்கள். அல்லது விமர்சிக்கின்றார்கள். ஜேர்மன் தேசியவாதிகள், (German nationalist) வலது ஜனரஞ்சக அணி, (right-wing populist), Eurosceptic, (ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரானவர்கள்)என்ற பெயர்கள் இவர்களுக்கு சூட்டப்பட்டுள்ளன. இக் கட்சியினஙர் தீவிர வலது சாரி குழுவான பெகடா ((Pegida) (Patriotic Europeans Against the Islamisation of the Occiden)) வுடன் இணைந்து செயற்படுகின்றனர். பெகடா ஒரு தீவிர முஸ்லீம் எதிர்ப்பு அணி- தேசிய ஜேர்மன் அணி. அத்துடன் தீவிர வலது சாரி அணி. செனபோபியா (வெளிநாட்டவருக்கு எதிரான), ஐடென்ரிரெரியன் ( identitarian movement – வெள்ளை இனவாத அமைப்பு) , நியோ நாசி அமைப்புக்களுடனும் இணைந்து செயற்படுகின்றது.

மாற்று ஜேர்மனிக் கட்சியின் இணைத் தலைவரான அலெக்ஸ்சான்டர் கவ்லன்ட், கட்சியின் கொள்கைகளை பிரச்சாரப்படுத்துவதில் வல்லவர். இக் கட்சியானது டொனால்ட் ரம்ப்ன் ஒற்றை அமெரிக்கா அல்லது அமெரிக்கா மட்டும், அமெரிக்கா அமெரிக்கருக்குரியது என்ற கொள்கையை கடைப்பிடிக்கின்றார்கள். ஜேர்மன், ஜேர்மனி மக்களுக்கு மட்டுமானது என்பது இக் கட்சியின் கொள்கை. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயத்தை இக் கட்சி நிராகரிக்கின்றது. ஜேர்மனிக்குள் வரும் அகதிகளையும் இக் கட்சி நிராகரிக்கின்றது. குறிப்பாக முஸ்லீம் அகதிகள் வருகை நிறுத்தப்பட வேண்டும் என்பது இக் கட்சியின் தீவிர கொள்கையாகவுள்ளது.

அலெக்ஸ்சான்டர் கவ்லன்ட் பல மேடைகளிலும், செவ்விகளிலும் கூறிய கருத்துக்கள் ஊடகங்களில் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளன. அதே சமயம் இது இவருக்கு ஜேர்மன் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது. யுரோ 2016 உதைபந்தாட்டப் போட்டியின் போது ஜேர்மனி அணியில் விளையாடிய ஜெரோமி பொட்டிங் (Jérôme Boateng) மேற்கு ஜேர்மனியில் பிறந்தவர். இவரது தாயார் ஒரு ஜேர்மனியர். தந்தையார் கானா நாட்டிலிருந்து ஜேர்மனிக்கு புலம் பெயர்ந்தவர். இவரைப் பற்றி அலெக்ஸ்சான்டர் கவ்லன்ட் “எனது வீட்டிற்கு அருகில் இவரைப் போன்ற ஒருவர் இருப்பதனை நான் விரும்பமாட்டேன்” எனக் கூறினார். இது பின்னர் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி, இறுதியில் மன்னிப்புக் கேட்டார். ஆனால் கருத்து நிலையில் இவர் மாறவில்லை.

டொனால்ட் ரம்ப், முஸ்லீம் மக்கள் அதிகம் வாழும் எட்டு நாட்டு பிரசைகள் அமெரிக்காவினுள் நுழைவதைக் கட்டுப்படுத்தினார். அதே போன்ற ஒன்றை ஜேர்மனியும் சட்டமாக்க வேண்டும் என பல தடவைகள் கவ்லன்ட் தெரிவித்துள்ளார். “not everyone who holds a German passport is German,” – ஜேர்மன் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஜேர்மனியர்கள் அல்ல என்ற கவ்லன்ட்ன் பேச்சும் ஊடகங்களால் பிரபல்யப்படுத்தப்பட்டது. அடிப்படையில் இது ஒரு இனவாதக் கருத்து. குறிப்பாக ஜேர்மனியில் உள்ள குடிவரவாளர்களுக்கு எதிரானது இக் கருத்து.

Frankfurter Allgemeine Zeitung  என்ற ஜேர்மன் நாளேட்டில், அலெக்ஸ்சான்டர் கவ்லன்ட் எழுதிய ஒரு பத்தி, ஹிட்லரின் கருத்துக்களை ஒத்தது என பல அரசியல் விஞ்ஞானிகள், விமர்சகர்கள் கருதுகின்றனர். 1933 கார்த்திகை மாதம், பேர்லினில் ஹிட்லர் clique – தன்னலக் குழு என்ற பதத்தை விபரித்தார். “அவர்கள் இங்குள்ளார்கள். நாளை எங்கும் இருப்பார்கள் அவர்கள் பிறந்த இடத்தில், வளர்ந்த இடத்தில் அவர்களுக்கான இடமில்லை. இன்று பேர்லினில் உள்ளார்கள், நாளை புறுசெல்ஸ்லில் இருப்பார்கள். மறு நாள் பரிசில் இருப்பார்கள், பின்னர் வியன்னா, லண்டன் என பரவுவார்கள். அங்கு அவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள் அவர்கள் தங்கள் வீட்டை எங்கும் அமைப்பார்கள்”. இப் பேச்சு அன்று யூத இனத்தவர்களை நோக்கியே ஹிட்லரால் பேசப்பட்டது.

இன்று அதே ஒத்த கருத்தை அலெக்ஸ்சான்டர் கவ்லன்ட் எழுதியுள்ளார். clique – தன்னலக் குழுக்கு பதிலாக globalised class சர்வதேச வகுப்பினர் என்ற பதத்தை பாவித்துள்ளார். “இவர்கள் பிரதான நிறுவனங்களில் அங்கம் வகிக்கின்றார்கள். ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள், என்.ஜி.ஓக்கள், அரசியில் கட்சிகள் என அனைத்திலும் உள்ளார்கள். அவர்கள் குறிப்பாக மிகப் பெரிய நகரங்களில் வாழ்கின்றார்கள். ஆங்கிலம் நன்றாக பேசுவார்கள். அவர்கள் பேர்லினிலிருந்து சிங்கப்பூருக்கோ, லண்டனுக்கோ வேலை நிமித்தம் செல்லும் போது அங்கும் நல்ல வசதி வாய்ப்புக்களுடன் வாழ்வார்கள். அவர்கள் தங்களுக்குள்ளேயே விருந்தோம்பல்களை, கேளிக்கைகளை நடத்துவார்கள்”. culturally colourful – என்ற பதத்தையும் இவர் தனது கட்டுரையில் மேற்கூறியவாறு விபரித்துள்ளார். ஹிட்லர் யூத இனத்தை குறிவைத்து பேசினார். கவ்லன்ட் குடிவரவாளர்களை குறிப்பாக முஸ்லீம் குடிவரவாளர்களை குறிவைத்து எழுதியுள்ளார்.

மாற்று ஜேர்மனிக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் “நான் வீதியில் நிற்கும் பொழுது, ஒருவரைப் பார்த்து அவர் ஜேர்மனியர் என்று என்னால் கூற முடியாமல் உள்ளது” “When I’m on the street, I can’t tell if someone is a German citizen just by looking at them” இது அடிப்படையில் இக் கட்சி குடிவரவாளர்களை எவ்வாறு பார்க்கின்றது என்பதையே சுட்டிக் காட்டுகின்றது. அலெக்ஸ்சான்டர் கவ்லன்ட் 2017 தேர்தலின் போது இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் இராணுவம் செயலாற்றிய முறை பாராட்டுக்குரியது எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜேர்மன் சரித்திரத்தில் ஹிட்லரின் செயற்பாடு முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

Hitler and the Nazis are just a speck of bird poop in more than 1,000 years of successful German history, only those who acknowledge the part have the power to shape the future.
– Alexander Gauland

வளர்ந்து வரும் நாடுகளில் மேற்கால் தோற்றுவிக்கப்பட்ட இன வேற்றுமை அரசியல் திட்டங்களால், தேசிய இனப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. அதன் விளைவாக பல இலட்சம் மக்கள் மேற்கை நோக்கி புலம் பெயர்கின்றனர். ஜேர்மனியிலும், ஐரோப்பா, கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா என பரந்து இவர்கள் புலம் பெயர்ந்துள்ளனர். ஜேர்மனி, இத்தாலி, சுவீடன் என தோன்றியுள்ள புதிய ஜனரஞ்சக குடிவரவாளர்கள் எதிர்ப்பு வலது அணிக் கட்சியினர், இனத் துவேசத்தை பரப்பி வருகின்றனர். அதன் விளைவு குடிவரவாளர்கள் மேல் தாக்குதல்கள் நடைபெறலாம். தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலை இல்லாமல் போகும் பொழுது கூட, குடிவரவாளர்களே குறிவைக்கப்படுவார்கள். பல ஐரோப்பிய நாடுகளில் சிறுபான்மை அரசுகளே ஆட்சியில் இருப்பதனால், இவ்வாறான இனவாதக் கட்சிகள் தங்கள் கொள்கைகளை அரசின் மீது திணிக்கின்றன. இது மிகவும் ஆபத்தானது. அலெக்ஸ்சான்டர் கவ்லன்ட் போன்றோரின் வளர்ச்சி என்பது தமிழருக்கும் ஆபத்தானது. அவரது மாற்று ஜேர்மனிக் கட்சியில் தேர்தலுக்கு நின்று “தமிழா;, தமிழருக்கு வாக்களியுங்கள்”எனக் கேட்டால், தயவு செய்து வாக்களிக்காதீர்கள். நீங்கள், உங்கள் அழிவையே தீர்மானிக்கின்றீர்கள்.