அனைத்துத் தரப்பு மக்களின் குரல்களையும் கேட்போம்… அதுதான் இப்போதைய தேவை!

அனைத்துத் தரப்பு மக்களின் குரல்களையும் கேட்போம்… அதுதான் இப்போதைய தேவை!     -புருஜோத்தமன் தங்கமயில்

கடந்த இரண்டு வருடங்களாக தாயகத்துக்கு வந்து செல்லும் புலம்பெயர் தேசத்து செயற்பாட்டாளர் ஒருவரை கடந்த மாவீரர் தினத்துக்குப் பின்னரான நாளொன்றில் சந்தித்தேன். மாவீரர் தினத்தன்று காலையில் கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்துக்கும், மாலையில் கோப்பாய் துயிலுமில்லத்துக்கும் சென்றதாக அவர் கூறினார். இலங்கையில் ஆட்சிக்குழப்பம் ஏற்பட்டிருக்கின்ற நிலையிலும், நெருக்கடிகளை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் மாவீரர் துயிலுமில்லங்களை நோக்கி வந்திருப்பதைக் காணும் போது, ஈழ விடுதலைப் போராட்டத்துக்கான அர்ப்பணிப்பு என்பது வீரியத்தோடு இருப்பதை உணர முடிந்ததாகக் கூறினார். அவரே, அவசர அவசரமாக, இன்னொரு விடயத்தையும் கூறினார், மாவீரர் தினத்தைத் தாண்டி தாயக மக்களை யோசிக்கும் போது, போருக்குப் பின்னரான தாக்கங்களிலிருந்து  சிறிதும் வெளிவராத மக்களின் துன்பம், தன்னுள் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார். இவ்வாறான வார்த்தைகளை புலம்பெயர் தேசத்து செயற்பாட்டாளர்கள் மற்றும் நண்பர்களைச் சந்திக்கின்ற எல்லாத் தருணங்களிலும் கேட்டிருக்கிறேன்.

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்தும் நேரத்தில் (கழுகுப் பார்வையில்) எடுக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது. ஆயிரக்கணக்கான தீபங்களின் வீச்சம் பார்ப்பவர்களை புல்லரிக்க வைத்தது, உணர்ச்சி மேலீட்டால் கண்ணீரை வரவழைத்தது. ஆனால், அந்த உணர்ச்சி மேலீட்டுக்கு அப்பாலான கேள்வியையோ, அது கொடுக்கும் கடப்பாட்டையோ யாரும் அவ்வளவாக கணக்கில் எடுப்பதில்லை. அதுதான், முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழ் மக்கள் மீளெழுவது குறித்து சிந்திக்க முடியாமைக்கான காரணமாகும்.

முப்பது வருடங்களுக்கு மேலாக கொடூர ஆயுத மோதல்களைச் சந்தித்த சமூகமாகவும், விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்ற  சமூகமாகவும் தமிழ் மக்கள் அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் மிகுந்த அக்கறையோடு இருக்க வேண்டும். குறிப்பாக, போரின் விளைவுகளை பெரும் வடுக்களாக தாங்கியிருக்கின்ற சமூகமாக ஒவ்வொருவரின் கடப்பாடும் மிகப்பெரியது. ஆனால், தமிழ் மக்களிடையே நிகழ்ந்து கொண்டிருப்பது என்ன? ஏன் ஒன்பதரை வருடங்களின் பின்னரும் முள்ளிவாய்க்காலில் எப்படி நின்றோமோ அதே மாதிரியான நிலையொன்றோடு இன்றைக்கும் நிற்க வேண்டியிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் மாவீரர் நாட்களில் வெளிப்படுத்தப்படும் கூட்டுணர்வினை, நாம் ஏன் மற்றைய நாட்களில் வெளிப்படுத்த முடியவில்லை?

2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான நாட்களில் புலம்பெயர் தேசத்து செயற்பாட்டாளர்கள், குறிப்பாக இளம் செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டளவில் தாயகத்தை நோக்கி வந்தார்கள். இன்னமும் அது தொடர்கிறது. ஆனாலும், போக்குவரத்து அச்சுறுத்தல் இருந்த காலத்தில் தாயக மக்களிடமும் புலம்பெயர் மக்களிடமும் காணப்பட்ட இடைவெளியின் அளவு, போக்குவரத்து அச்சுறுத்தல்கள் குறைந்துவிட்ட கடந்த மூன்று ஆண்டுகளிலும் கூட முன்னேற்றம் அடையவில்லை. புலம்பெயர் தேசத்திலிருந்து வருகை தரும் செயற்பாட்டாளர்கள், தங்களுக்கு இணக்கமான தரப்புக்களை தாயகத்தில் தேடுகின்றன. அவ்வாறான தரப்பு என்பது, எப்போதுமே சனத்தொகையில் மிகமிக சிறியதாகவே இருக்கின்றது. ஆனால், அப்படியான தரப்புக்களோடு உரையாடல்களை நடத்திவிட்டு, பெருமளவு மக்களின் மனங்களை புரிந்து கொள்வதிலிருந்து தவறிவிடுகிறார்கள். அரசியல் கருத்தியல் ரீதியில் ஒத்த நிலையில் இருப்பவர்களோடு, இணைந்து வேலை செய்வதோ, திட்டங்களை வகுப்பதோ தப்பில்லைத்தான். ஆனால், பெருமளவான மக்களின் குரல்களை கேட்பதிலிருந்தே தவறி நிற்கின்ற தருணம் என்பது, இடைவெளியின் அளவை எந்த விதத்திலும் குறைப்பதற்கு உதவவில்லை. மாறாக, ஒருவித ஒவ்வாமையையே ஏற்படுத்தி விட்டிருக்கின்றது.

அதிக பட்சம் இன்னும் பத்து வருடங்கள்தான் தாயகத்துக்கும் புலம்பெயர் தேசத்துக்குமான தொடர்பு என்பது நேரடியான தலைமுறைகளுடனானதாக இருக்கும். அதன்பின்னர், தொடர்பு என்பது, புலம்பெயர் தேசங்களிலேயே பிறந்த தலைமுறைகளுக்கும் தாயகத்தில் பிறந்த தலைமுறைக்குமானதாக மாறிவிடும். அது, இன்னும் இன்னும் இடைவெளியின் அளவை அதிகரிக்கவே செய்யும். புலம்பெயர் தேசத்தில் பிறந்த பிள்ளைக்கு தன்னுடைய பிறந்த நாடு, முதல் தெரிவாக இருப்பது தவிர்க்க முடியாதது. தன்னுடைய தாய் வழி, தந்தை வழி தேசம் என்பது இரண்டாம் பட்சமாக மாறும். அதுவும், உலக மயமாக்கம் கோலோச்சும் இன்றைய காலத்தில், தேசியவாதம் இடர்பாடுகளைச் சந்தித்து, புதிய தலைமுறையிடம், தமிழர் தேசத்துக்கான கடப்பாடு ஏன் என்பதையே கொண்டு சேர்க்க முடியாத ஒரு சூழலை உருவாக்கிவிடும். இதனை, 1980களின் ஆரம்பத்தில் புலம்பெயர்ந்துவிட்டவர்களுக்கும் மற்றவர்களுக்குமான இடைவெளியின் அளவைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். இயல்பாக, அவர்களிடம் தமிழும், தமிழர் தேசமும் இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அவ்வாறான சூழலை நாங்கள் மிகவேகமாக சரிசெய்ய வேண்டும்.

அதன்போக்கில்தான், புலம்பெயர் செயற்பாட்டாளர்கள், அமைப்புக்களை தாயகத்திலுள்ள அனைத்துத் தரப்பினரோடும் உரையாடல்களை நிகழ்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. அரசியல் ரீதியாக, சிந்தனை ரீதியாக முரண்பாடுகள் ஏற்படுவது சகஜமானது. ஆனால், அந்த முரண்பாட்டினை ஒரு உள்ளக போராக நாம் மாற்ற முடியாது. முரண்பாடுகளுக்கு அப்பால் நின்று இணக்கப்பாட்டின் புள்ளியை, உரையாடல்களின் வழியில் கண்டடைய வேண்டும். மாறாக, குழும மனநிலையில் மாத்திரம் நின்று கொண்டு, தாயகச் சூழலை அவர்கள் சுமந்திரனின் ஆட்கள், அவர்கள் விக்னேஸ்வரனின் ஆட்கள், அவர்கள் கஜேந்திரகுமாரின் ஆட்கள், அவர்கள் டக்ளஸின் ஆட்கள் என்று பிரிவுகளை அடையாளங்களை உருவாக்கிவிட்டு, அதன் மீது நின்று ஒழுக ஆரம்பித்தால், இடைவெளியின் அளவு அதிகரிப்பதை எந்த வகையிலும் தவிர்க்க முடியாது.

 இன்னொரு பக்கத்தில், தாயகத்தை நோக்கி வரும் செயற்பாட்டாளர்கள், தாயகத்தின் உண்மையான நிலைமையை உணர்ந்தாலும், அதில் தங்களுக்கு எது தேவையோ அதனை எடுத்துக் கொண்டு மற்றவை பற்றி பேசுவதே இல்லை. குறிப்பாக, மக்களின் பொருளாதாரம், தொழில் தேவைகள் பற்றி எந்தச் சிந்தையையும் வெளிப்படுத்துவதில்லை. அதிலும், குறிப்பாக, முன்னாள் போராளிகளும், போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்துக்காக அல்லாடும் மக்களைக் குறித்தும் பேசுவதில்லை. இது ஒருவகையில், சுயநல போக்கிலானதா என்கிற கேள்வியை எழுப்பிவிடுகின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் இழைத்த போர் குற்றங்களுக்கு எதிராக நாம் நீதியைத் தேடியே ஆக வேண்டும். காணாமலாக்கப்பட்டவர்களை மீட்பதற்காக போராடி ஆக வேண்டும். இது, ஒவ்வொருவரினதும் கடமை. அதனை தாயகத்திலும் சர்வதேசத்திலும் தளராது முன்னெடுக்க வேண்டும். அதில், எந்தவித மாற்றுக்கருத்துக்களும் இல்லை. அதுபோலவே, தாயகத்திலுள்ள மக்களின் சமூக- பொருளாதார பிரச்சினைகளை, குறிப்பாக வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் பேச வேண்டும். அவை, குறித்தும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் அமைப்புக்களும் அதிக கரிசனை கொள்ள வேண்டும்.

ஏனெனில், காலம் வேகமாக உருண்டோடிவிடும். அது, நாம் செய்ய வேண்டிய வேலைகளை எம்மிடமிருந்து அகற்றிவிடும். அவ்வாறான சூழலொன்றையே நாம் தற்போது சந்தித்து நிற்கின்றோம். அப்படியான தருணத்தில், குற்ற உணர்ச்சிகள் குறித்து நாம் பேசுவது என்பது தார்மீகமற்றது. ஏனெனில், எங்களது பொறுப்புக்களை நிறைவேற்றாது விட்டு, குற்ற உணர்ச்சிகள் குறித்து பேசி எந்தப் பயனும் இல்லை. அவ்வாறான கட்டத்தில்தான், இனி வரப்போகும் நாட்களிலாவது, குழும மனநிலைகளைக் கடந்து எல்லா மக்களின் குரல்களையும் கேட்டு, அதன்போக்கில் இயங்கும் சூழலொன்றை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு, கருத்தியல் முரண்கள் தாண்டி முன்வர வேண்டும். அதுதான், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் நாட்களின் மீது நாம் வெளிப்படுத்தும் கடப்பாடாக இருக்கும்.