அரசியல் சோர்வினை தமிழ் மக்கள் கடக்க வேண்டும்!

-புருஜோத்தமன் தங்கமயில்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து நாட்டின் பாதுகாப்பும், ஓரளவு மேம்பட்டிருந்த இயல்பு நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக முகாம்களுக்குள் குறிப்பிட்டளவு முடக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் பாடசாலைகள், அரச அலுவலகங்கள் மற்றும் வணக்க ஸ்தலங்களின் வாயில்களில் துப்பாக்கியோடு காட்சி தருகிறார்கள். உணவுப்பொதிகள் தொடங்கி, அனைத்தையும் சோதனையிடுகிறார்கள். சாதாரண வாழ்கையின் ஒரு பாகமாக இராணுவத்தினரின் பிரசன்னம் மீண்டும் திணிக்கப்பட்டிருக்கின்றது.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் பொறுப்புக்கூறு வேண்டிய ஜனாதிபதியும், அவர் தலைமையிலான தேசிய பாதுகாப்புச் சபையும், ஒட்டுமொத்தமாக தவறிழைந்திருக்கிற நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல்களை  நடத்தியிருக்கிறார்கள். இதனால், 250க்கும் அதிகமான அப்பாவி மக்கள் பலிவாங்கப்பட்டிருக்கிறார்கள். அந்த மன அழுத்தத்தினால், நாட்டு மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கும் போது, அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்திக் கொண்டு, பாதுகாப்பு உறுதிப்படுத்தல் எனும் போர்வையில், வடக்கு- கிழக்கில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை அதிகப்படுத்தியிருக்கறார்கள். ஒரே நாளில் முளைத்த சோதனைச்சாவடிகள் மக்களை  அலைக்கழித்தன. பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகிய கொழும்பிலோ, அதனை ஆண்டிய பகுதிகளிலோ, இராணுவத்தினரின் பிரசன்னம் என்பது, மக்களை அச்சுறுத்தும் அளவுக்கு ஒரு சில நாட்கள் மாத்திரமே இருந்தன. ஆனால், வடக்கு- கிழக்கில் அது, தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. இது, இறுதி மோதல் காலத்தில் வடக்கு- கிழக்கை அச்சுறுத்தல்களுக்குள் வைத்திருந்த இராணுவத்தின் நடவடிக்கைகளை ஒத்த ஒன்றாக மாறியிருக்கின்றது.

இந்த நிலை, தமிழ் மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை மாத்திரமல்லாமல், பெரும் சோர்வையும் ஏற்படுத்தியிருக்கின்றது. அது, அவர்களின் சாதாரண வாழ்க்கை மீதான பெரும் அழுத்தமாக மாறியிருப்பதுடன், அரசியல் உரிமைகள் குறித்த உரையாடலையோ, செயற்பாடுகளையே மட்டுப்படுத்தியிருக்கின்றது.

தமிழ் மக்களின் அரசியல் இயங்குநிலை என்பது, இன்றைக்கு அரசியல்வாதிகள் அளவுக்கு குறிப்பிட்டளவு சுருங்கிவிட்டது. 2015 ஆட்சி மாற்றத்தோடு, தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த சமூக செயற்பாட்டு இயக்கங்களோ, குழுக்களோ தங்களின் செயற்பாடுகளை ஒரேநாளில் கைவிடும் நிலை அல்லது மட்டுப்படுத்திக் கொண்டு ஒதுங்கும் நிலை உருவாகியிருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியல் என்பது, எதிரியோடு மட்டுமில்லாமல், தனக்குள்ளும் முட்டிமோதிக் கொண்டுதான், தன்னை குறிப்பிட்டளவு சீர்செய்து வந்திருக்கின்றது. குறிப்பாக, சாதாரண மக்கள் நேரடி அரசியலில் தலையிடுகளை அதிகளவில் செய்யாது இருந்தாலும், அந்த அரசியல் அவர்களைச் சுற்றியதாகவே இருந்திருக்கின்றது. அவர்களிடையேயான சாதாரண அரசியல் உரையாடல்களிலேயே செழுமை இருந்து வந்திருக்கின்றது. அதுதான், அரசியல் தலைமைகளையும் ஓரளவுக்கு கட்டுக்குள்ளும், மக்களின் பக்கத்திலும் நிற்கவும் வைத்தது. ஆனால், அந்தச் சூழல் மாற்றமடையும் போது, உரையாடல்களுக்கான களம் மாத்திரமல்ல, அதன் அடுத்த கட்டங்களும் காணாமற்போகவும் வாய்ப்புக்களையும் உண்டு பண்ணியிருக்கின்றன. அது, வெளிச்சக்திகளை உள்ளுக்குள் அனுமதிக்கும் சூழலையும் ஏற்படுத்தி விட்டிருக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னரான சூழலில் முஸ்லிம்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறார்கள். அவர்களின் சாதாரண வாழ்க்கை மீது என்றைக்கும் இல்லாத அளவுக்கான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது. நாளாந்தம் ஒவ்வொரு புதிய விடயங்களைத் தூக்கிக் கொண்டு தென் இலங்கையில் சக்திகள், முஸ்லிம்களை நோக்கி வருகிறார்கள். தாக்குதல் நடத்துகிறார்கள்; நெருக்கடியை வழங்குகிறார்கள். அது மட்டுமல்லாமல், தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழ் மக்களையும் இணைத்துக் கொண்டு செயற்பட்ட வேண்டும் என்கிற சதித்திட்டமொன்றை அவர்கள் முன்னெடுக்கிறார்கள். குறிப்பாக, தென் இலங்கையில் காவிக்கூட்டமும், அதன் ஆதிக்க அரசியலும் சந்தர்ப்பத்தை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு செயற்படுகின்றன. அவர்களின் சதித்திட்டங்களுக்கு ஒத்தூதும் செயற்பாடுகளை, சிவ சேனை உள்ளிட்ட சில அடிப்படை அறத்துக்கு அப்பாலான அமைப்புக்கள் வழங்குகின்றன.

எழுபது ஆண்டுகால தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதில் காவிக் கூட்டமும், அதன் அரசியலும் செலுத்திய தாக்கத்தினை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இன்றைக்கும், முல்லைத்தீவின் நீராவியடி, திருகோணமலையில் கன்னியா உள்ளிட்ட தமிழ் பாராம்பரிய நிலங்களில், புத்தர் சிலைகளை ஆடாத்தாக அமைத்துக் கொண்டு ஆக்கிரமிப்பு அரசியலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள், காவிதரித்த பிக்குகளும், தென் இலங்கையிலிருந்து அழைத்துவரப்படும் அடிப்படைவாதிகளும் நீராவியடியையும், கன்னியாவையும் தங்களின் சொத்துக்கள் என்று உரிமைகோரி வருகின்றனனர். இந்த அடாவடித்தனங்கள் குறித்தெல்லாம், சிவசேனைவுக்கோ, அதன் ஸ்தாபகர் மறவன்புலவு சச்சிதானந்தனுக்கோ, அவர்களை ஒத்த கூட்டத்துக்கோ தெரிவதில்லை. அந்த அடாவடிகள் குறித்தும் வாயே திறப்பதில்லை. ஆனால், தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை அதிகப்படுத்தும் செயற்பாடுகளை காவிக்கூட்டம் முன்னெடுத்தால், ஓடிப்போய் அவர்களுக்கு முட்டுக்கொடுக்கிறார்கள். சிறுபான்மைச் சமூகங்களை பிரித்தாளுவதன் ஊடகவே, சிங்கள பௌத்த பேரினவாதம் இந்த நாட்டை பெருமளவு சூறையாடி வந்திருக்கின்றது. அப்படிப்பட்ட நிலையில், அடிப்படை அறத்துக்கு அப்பால் நின்று செயற்படுகின்ற தமிழ்த் தரப்புக்கள் குறித்து மக்கள் எரிச்சலடைந்திருக்கிறார்கள்.

சில வாரங்களுக்கு முன் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தை அத்துரலிய ரத்ன தேரர் தலைமையில் காவிக்கூட்டம் போராட்டமொன்றை நடத்தியது. கடந்த வாரம், அந்தக் காவிக் கூட்டம், கல்முனையில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதாகக் காட்டிக் கொண்டிருக்கின்றது. கல்முனை வடக்கு (தமிழ்) உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரமுடைய பிரதேச செயலகமாக தரமுயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை மூன்று தசாப்தகாலமாக அம்பாறை மாவட்ட தமிழ் மக்களிடம் இருக்கின்றது. ஆனால், கடந்த காலத்தில் அது குறித்து எந்தவித அக்கறையையும் இந்தக் காவிக் கூட்டம் கொண்டிருந்ததில்லை. ஆனால், முஸ்லிம்களுக்கு எதிரான  வெறுப்பு மனநிலையை வளர்ப்பதற்கான களமாக கல்முனை பிரதேச செயலக விடயத்தைக் கொள்ள முடியும் என்று தெரிந்ததும், அதனைக் கையில் எடுத்துக் கொண்டு செயற்பட்டிருக்கின்றது.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கடந்த எழுபது ஆண்டுகாலமாக ஆக்கிரமிப்புக் கொடூரங்களினால் அல்லாடி வருகிறார்கள். ஒருபக்கம் சிங்களக் குடியேற்றங்கள், இன்னொரு பக்கம் முஸ்லிம்களின் காணி பிடிப்புக்கள் என்று அச்சுறுத்தல்கள் அதிகம். அப்படியான நிலையில், எஞ்சியுள்ள தங்களின் பூர்வீக நிலங்களையும், இருப்பையும்  தக்க வைப்பதற்கான ஒரு கட்டமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அவர்கள் பார்க்கிறார்கள். அப்படியான நிலையில், அதனை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று போராடி வருகிறார்கள். அந்த மக்களின் நியாயபூர்வமான போராட்டத்தை முஸ்லிம்களுக்கு எதிரான ஒன்றாக மாற்றிக் கொண்டு காவிக்கூட்டம் கடந்த வாரம் நடத்திய சதிராட்டம் சகிக்க முடியாததாக இருந்தது.

இனவாதத்தின் அண்மைய முகவரியாக அடையாளம் பெற்ற பொதுபலசேனாவின் ஞானசார தேரரும்,  புலிகளுக்கு எதிரான மோதல்களை மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பிக்க வேண்டும் என்று திருகோணமலையில் உண்ணாவிரதம் இருந்து, இறுதிப் பேரழிவுக்கு வித்திட்டவர்களில் ஒருவரான அத்துரலிய தேரரும் கல்முனையில் தமிழ் மக்களுக்கு ஆதரவான போராட்டங்களில் தென்படுகிறார்கள் என்பது, எவ்வளவு அபத்தமானது. ஆனால், அந்த அபத்தங்கள் கடந்த வாரம் நிகழ்ந்தன. அவர்களின் கைகளைப் பற்றிக் கொண்டு, சில அரசியல் முகவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் வருகிறார்கள். இவ்வாறான நிலையெல்லாம் சேர்த்து கொண்டு தமிழ் மக்களை சோர்வடைய வைக்கின்றன.

இவ்வாறான கட்டத்தில்தான், சதித்திட்டங்களையும், அடக்குமுறைகளையும்  எதிர்கொண்டு எமக்கான அரசியலை நாமே பேச வேண்டும் என்கிற விடயத்தை ஒவ்வொரு கணமும் தமிழ் மக்கள் தமக்குள் ஒரு நெருப்பாக வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுதான், சோர்வான மனநிலையைக் கடந்து நின்று, எமது அரசியலைப் பலப்படுத்தும். இல்லையேன்றால், சதிகாரர்களின் வலைக்குள் சிக்கி, ஒட்டுமொத்தமாகக் காணாமல் போக வேண்டி வரும்.