ஆஸ்திரேலியா காட்டுத்தீ – 113 விலங்கினங்கள் அழிந்துவிடும் அபாயம்

ஆஸ்திரேலியாவில் கோடை வெயில் காரணமாக அந்த நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்லாந்து மாகாணங்களில் தொடர்ந்து 6 மாதங்களாக காட்டுத்தீ பற்றி எரிந்தது.
இந்த காட்டுத்தீயில் கோலா கரடிகள் உள்ளிட்ட பல அரிய வகை வன உயிரினங்கள் செத்து மடிந்தன. பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன என சுமார் 100 கோடி வன உயிரினங்கள் இந்த காட்டுத்தீயில் அழிந்திருக்கலாம் என விலங்கியல் ஆய்வாளர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட 113 விலங்கினங்களுக்கு உடனடி உதவி தேவை என்றும், அப்படி உதவி கிடைக்காவிட்டால் அந்த விலங்கினங்கள் முற்றிலுமாக அழிந்துவிடும் என்றும் விலங்கியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீ கட்டுக்குள் வந்த பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட பின்னர் விலங்கியல் ஆய்வாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:
காட்டுத்தீயில் சிக்கி தீக்காயங்களுடன் உயிர் தப்பியுள்ள சில விலங்குகள், ஏறக்குறைய தங்களின் இருப்பிடத்தை முற்றிலுமாக இழந்துள்ளன. 113 விலங்கினங்களுக்கு மருத்துவம் மற்றும் பாதுகாப்பான இருப்பிட வசதி உடனடியாக கிடைக்காவிட்டால் அவை முற்றிலும் அழிந்துவிடும் நிலையில் உள்ளன. காட்டுத்தீ ஏற்பட்ட இன்னும் பல பகுதிகளுக்குள் சென்று கள ஆய்வு செய்ய முடியவில்லை. அங்கும் ஆய்வு செய்தால் மட்டுமே, முழுமையான தகவல்கள் தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினார்.