பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: வீடுகளில் பொதுமக்கள் பெருநாள் தொழுகை

இஸ்லாமிய நாள்காட்டியின்படி துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாள் ஈத் அல் அதா எனப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அமீரகத்தில் பொதுவாக ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகை தினங்களில் காலை நேரத்தில் திடல்களில் பெருநாள் தொழுகை எனப்படும் சிறப்பு கூட்டுத்தொழுகையானது நடத்தப்படும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக அமீரகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ஜும்ஆ தொழுகை மற்றும் பெருநாள் தொழுகைகள் ரத்து செய்யப்பட்டு வீடுகளில் தொழுகைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என இஸ்லாமிய விவகாரத்துறை அறிவுறுத்தி இருந்தது.

நேற்றுமுன்தினம் இரவு கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் சென்று தேவையான பொருட்களை வாங்கி வந்தனர். பலர் புத்தாடை வாங்குவதற்காக துணிக்கடையில் குவிந்தனர். இதனை அடுத்து நேற்று அதிகாலை நேரத்தில் நடைபெறும் பஜர் தொழுகை பள்ளிவாசல்களில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்ற பொதுமக்கள் தங்கள் வசிக்கும் இடங்களில் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து சமூக இடைவெளியுடன் பெருநாள் தொழுகை எனப்படும் கூட்டுத்தொழுகை நடத்தினர். பிறகு ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் எனக்கூறி வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர்.

பிறகு வீடுகளில் அசைவ சிற்றுண்டிகளை நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து சாப்பிட்டனர். பிறகு பலர் இறைச்சிக்கூடங்களில் கால்நடைகளை குர்பானி கொடுத்தனர். இறைச்சிகளை பெற்று எளியமக்களுக்கு பகிர்ந்து கொடுத்தனர். வெளிநாடுகளில் குடும்பத்தினரை விட்டு பிரிந்து வசித்து வருபவர்கள் செல்போன்களில் அழைத்து குடும்பத்தினருடன் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

பல்வேறு உணவகங்களில் உணவு வகைகளை அதிகமாக ஆர்டர் செய்து பலர் பெற்றனர். மாலை நேரத்தில் நண்பர்களுடன் கடற்கரை பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு வசிப்பவர்கள் சென்றனர். பலர் அதிகமான வெப்பநிலை காரணமாக வீடுகளில் தங்கி விட்டதாக கருத்து தெரிவித்தனர். அமீரகத்தில் வசிக்கும் தமிழர்கள் பலர் வீடுகளில் தங்கள் குடும்பத்தினருடன் சிறப்பு தொழுகை நடத்தினர். நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் பலர் சுற்றுலா மையங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். கொரோனா கட்டுப்பாட்டு காலத்திற்கு பிறகு வரும் பண்டிகை என்பதால் அமீரகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. போலீசார் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.