வணிகத் திட்டம் – BUSINESS PLAN

கனேடிய சமூக நீரோட்டத்தில் தமிழ் மக்களுக்கும், வணிகத்துறைக்கும் இடையேயான தொடர்பு மிகவும் நெருக்கமானது. தமிழர்கள் வணிகம் செய்யாத துறைகளே இல்லை என்று கூறும் அளவிற்கு முன்னேறியுள்ள எமது சமூகம் வீடு விற்பனை, அடமானக் கடன், காப்புறுதி, கணக்கியல், வாகனம் திருத்துதல், வைத்திய நிலையம், சட்ட அலுவலகம், உணவுச்சாலைகள், தொழிற்சாலைகள், தகவல் பரிமாற்றம், அரசியல் என்று பல வகையான துறைகளில் ஆழமாகக் கால்பதித்து முன்னேறி வருகின்றது.

வணிகத்துறையை நீண்டகால நோக்கில் அவதானித்து, அதன் வளர்ச்சிக்குரிய ஒவ்வொரு விடயத்திலும் அக்கறை காட்டி அதன் மூலம் முன்னேற்றம் காண்பது எந்தவொரு துறைக்கும் அவசியமானது. ஒரு வணிகத்துறையின் அபிவிருத்திக்கு அத்திவாரமாகவும், அடிப்படைக் கோட்பாடாகவும் விளங்குவது Business Plan எனப்படும் வணிகத் திட்டம். ஒரு வணிகம் செழிப்பதற்கோ அல்லது பின்தங்குவதற்கோ வணிகத் திட்டத்தின் பங்கு பெருமளவில் தங்கியுள்ளமை ஒரு நிறுவப்பட்ட சமன்பாடாகும்.

வணிகத் திட்டம், வணிகத்துறைக்கு மட்டுமல்ல சாதாரண வீட்டு நிர்வாகத்திற்கும் கூடத் தேவையான ஒரு விடயம். சரியான திட்டமிடல் இன்றி இயங்கும் எந்த ஒரு குடும்பமும் வாழ்க்கையில் தடுமாறுவது தவிர்க்க முடியாதது. “If you fail to plan, you have planned to fail” என்ற வகையில் நாங்கள் எந்தவொரு விடயத்திலும் திட்டமிடத் தவறினால், தோல்வி அடைவதற்கு திட்டமிட்டுவிட்டோம் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

ஒரு வணிகத் திட்டம், புதிய வணிகம் தொடங்குவதற்கு மட்டுமல்லாமல், நடப்பில் உள்ள வணிகத்தின் விரிவாக்கங்களுக்கும், வணிக மீளாய்வு நடவடிக்கைகளுக்கும், வணிக வளர்ச்சிகளை அடையாளம் காண்பதற்கும் அல்லது அது தொடர்பான விபரங்களைப் புதுப்பிக்கவும் பயன்படும் பெறுமதியான ஒரு கருவியாக உள்ளது. ஒரு வணிகத் திட்டத்தின் அடிப்படையானது வணிகத்தை விபரிக்கக் கூடியதாகவும், வணிகத்தின் இயல்புகளை இயம்புவதாகவும், தமது சேவைகள் மற்ற நிறுவனங்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது என்பதாகவும், பொருளாதார நிலை குறித்ததாகவும் அமைந்திருக்கும். வணிகத்துறையின் வளர்ச்சியில் ஆரோக்கியமான விடயமாகக் கருதப்படும் இந்தத் திட்டத்தின் குறைபாடு, பல வணிகத்துறை தோல்விகளுக்கு மறைமுகக் காரணியாகவும் அமைந்து விடுகின்றது.

ஒரு வணிகத்திற்குரிய குறிக்கோளை எடுத்துக்கொண்டு, அதை அடைவதற்குரிய சகல செயல் திட்டங்களையும் அமுல் படுத்தாமல், அரைகுறையாக சில முயற்சிகளை மட்டும் செய்துவிட்டு, தோல்வி ஏற்பட்டதும் தம் வாழ்க்கையே இருண்டு விட்டது போல் நினைத்து, அந்த வணிகத்தைத் தலைமுழுகுபவர்களே அதிகளவில் உள்ளார்கள். தோல்வி என்பது எமது முட்டாள்தனமல்ல என்பதையும், அது வெற்றி கொள்வதற்குக் கற்றுத்தரும் ஒரு பாடம் என்பதையும், புரிந்து கொள்வதற்குரிய மனநிலையை ஒரு வணிகத் திட்டம் இறுதியில் வெளிப்படுத்துகின்றது.

ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் நாம் பல படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். சிறந்த வணிகத் திட்டமிடல் மூலம் அதனை சரிசெய்து மீண்டும் புத்துணர்ச்சி பெற்று, மரணமில்லாத வாழ்க்கையை குறிக்கும் பீனிக்ஸ் பறவையைப் போல் சாம்பல் மேட்டில் இருந்து மீள உருவாக வேண்டும்.

பிரபல விஞ்ஞானி தோமஸ் அல்வா எடிசனைப்பற்றி நாங்கள் அறிந்திருக்கின்றோம். கிட்டத்தட்ட 1093 வெவ்வேறு வகையான விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் அவர் பெயரில் பதிவிலுள்ளதாக தகவல் உள்ளது. இந்த சாதனையுடன் இன்னுமொரு பெரிய சாதனையும் அவர் பெயரில் பதிவிலுண்டு. உலக சரித்திரத்தில் அதிக தோல்விகளைச் சந்தித்த ஒரே மனிதர் என்பதே அது. அவரது கண்டுபிடிப்புக்களில் அனைவரும் அறிந்த ஒன்று மின்குமிழ். இந்த மின்குமிழைக் கண்டுபிடிக்க அவர் செய்த முயற்சிகளில் ஆயிரமாவது முயற்சியே வெற்றி பெற்றதாக கூறப்படுகின்றது.

மனம் தளராமல் தொடர்ந்து செய்த 999 பரிசோதனைகளில் தோல்வியை சந்தித்து இறுதியில் வெற்றியும் கொண்டார். அவரிடம் சிலர் கேட்டனர் ‘இத்தனை முறை தோற்றீர்களே உங்கள் மனம் சோரவில்லையா?’ என்று. அதற்கு எடிசன் ‘இல்லவேயில்லை. இதுவரை ஒரு மின்குமிழ் வேலை செய்யாமல் போவதற்குரிய 999 காரணங்களைக் கண்டுபிடித்திருக்கிறேன்…இது மிகப் பெரிய சாதனைதானே’ என்றாராம். எத்தனை முறை சறுக்கி விழுந்தோம் என்பது பெரிதல்ல. எவ்வளவு விரைவாக நம்மை சுதாகரித்துக் கொண்டு மீண்டும் விழாமல் எழுந்து நிற்கின்றோம் என்பதே முக்கியம். இது தான் வணிகத்துறை முன்னேற்றத்தின் அடிப்படையும், வணிகத் திட்டத்தின் அவசியமும் ஆகும்.

வணிகத்துறையின் சந்தை நிலவரத்தின் புரிதலைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கான ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்திருப்பது வணிகத் திட்டம். வளமாக வளரும், நிலையான தொழில் என்ற நம்பிக்கையில், மாற்றங்கள் செய்யக் கூடிய வகையில் வணிகத் திட்டமிடல் செய்தல் அவசியம். நம்மிடம் காணப்படாத திறன்களைக் கொண்டிருக்கும் நபர்களை வேலைக்கு அமர்த்துதல், நிதியியல் கட்டுப்பாடு, முகாமைத்துவம் போன்றவற்றில் அக்கறை கொண்டு வணிகத் திட்டத்தை வரைய வேண்டும்.

நுகர்வோர்களை இலகுவில் சென்றடையும் சந்தைப்படுத்தல், வணிகக் கோட்பாடு (Business concepts), ஒழுங்கு படுத்;தப்பட்ட குறிக்கோள் (objective, mission statement), தரப்படுதல் கொள்கை (Quality control), பிரச்சனைகள் மற்றும் அதற்குரிய தீர்வுகள் (Corrective actions), வியாபார முகாமைத்துவம் (Business management), சேவை அளவீடுகள் (KPI எனப்படும் Key Performance Indicators) மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் (Continuous improvements) போன்ற பல விடயங்கள் வணிகத் திட்டமிடலில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.

உங்கள் தனித்துவமான வணிகத்திற்கு பிரத்தியேகமான வணிகத் திட்டம் அவசியம் தேவை என்பதில் உறுதியாக இருங்கள்.

இலக்கை இலகுவில் அடையுங்கள்.

– மோகன் செல்லையா