கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் மார்ச் 25 மாதம் ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை

கோவிட்-19 உலகளாவிய பெருந்தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று (மார்ச் 25, 2020) பின்வரும் விடயங்களை அறிவித்தார்:

 • மக்களுக்கு விரைவாக உதவியை வழங்குவதற்கான அவசர சட்டமூலம் 2020 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆந் திகதி அதிகாலை நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் தற்போது செனட்சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதும், மார்ச் 18 ஆந் திகதி அறிவிக்கப்பட்ட முதற்கட்ட அவசர நடவடிக்கைகளைச் செயற்படுத்திக் கனடியர்களுக்குத் தாமதமின்றி நிதி உதவியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கக் கூடியதாயிருக்கும்
 • விண்ணப்ப நடைமுறையை எளிதாக்குவதற்கும், இலகுவாக நிதி உதவியைப் பெற்றுக் கொள்வதற்குமாக கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவைக் (Canadian Emergency Response Benefit (CERB)) கனேடிய அரசு அறிவித்துள்ளது:

– கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட அவசர பராமரிப்பு உதவி, அவசர ஆதரவுக் கொடுப்பனவு ஆகிய இரண்டுக்கும் பதிலாக கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவு (Canadian Emergency Response Benefit (CERB)) நடைமுறைப்படுத்தப்படும். மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்றவாறாகவும், நடைமுறையை எளிதாக்குவதற்காகவும் இந்த மாற்றம் செய்யப்படுகிறது.

– கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவின் (Canadian Emergency Response Benefit (CERB)) மூலம், கோவிட்-19 காரணமாக வருமானத்தை இழந்த பணியாளர்களுக்கு எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு மாதமொன்றுக்கு 2,000 டொலர் வீதம் வழங்கப்படும். இதில் பின்வருவோரும் அடங்குகிறார்கள்:

கோவிட்-19 காரணமாக வேலை இழந்த முழு நேர அல்லது ஒப்பந்த அல்லது சுய தொழில்புரியும் பணியாளர்கள்,

நோயுற்ற அல்லது கட்டாய மருத்துவ தனிமைப்படுத்தலுக்கு (quarantine) உட்படுத்தப்பட்டுள்ள அல்லது கோவிட்-19 தொற்றிய யாரையாவது பராமரிக்கும் பணியாளர்கள்,

பிள்ளைகளைப் பராமரிப்பதற்காகச் சம்பளம் இன்றி வீட்டில் தங்கியிருப்போர்

வேலை இருந்தாலும், நெருக்கடி நிலையால் சம்பளம் வழங்கப்படாதிருப்போர்.

– கோவிட-19 காரணமாக வேலையில் பாதிப்பை எதிர்கொள்ளும், வேலைக் காப்புறுதிக் கொடுப்பனவைப் பெறுவதற்குத் தகுதி பெற்றவர்களும் கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கு (CERB) விண்ணப்பிக்கலாம்.

வேலைக்காப்புறுதி (EI) அல்லது வேலைக்காப்புறுதி சுகவீன கொடுப்பனவுக்கு (EI sick benefits) ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

தற்போது வேலைக்காப்புறுதிக் கொடுப்பனவைப் பெறுவோர், அவர்களது வேலைக்காப்புறுதிக் கொடுப்பனவு 2020 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மூன்றாந் திகதிக்கு முன்பாக முடிவடைந்தால், அது முடிவடைந்ததும் கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கு (CERB) விண்ணப்பிக்கலாம்.

கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவு (CERB) வழங்கப்படும் 16 வார காலத்தின் பின்னரும் வேலைவாய்ப்பு அற்றிருக்கும், வேலைக்காப்புறுதிக்குத் தகுதியான பணியாளர்கள், வழமையான வேலைகாப்புறுதிக் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இணையப் பக்கம் ஒன்றைக் கனடா வருமானவரி முகவரகம் (CRA) இயலுமான விரைவில் அமைக்கும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பத்து நாட்களுக்குள் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும்.

 • கடந்த வாரத்தில் மட்டும் வேலைக்காப்புறுதிக் கொடுப்பனவுக்காக ஒரு மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. வழமையான காலத்தில் சராசரியாக 27,000 விண்ணப்பங்களே சமர்ப்பிக்கப்படும். அதிகரித்த தேவையை எதிர்கொள்வதற்காக:

– அரச பணியாளர்கள் இரவு பகலாகப் பணிபுரிகிறார்கள்,

– மார்ச் 16 ஆந் திகதியில் இருந்து ஏற்கனவே 143,000 வேலைக்காப்புறுதி விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுவிட்டன,

– அதிக எண்ணிக்கையான விண்ணப்பங்கள்; குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டியிருப்பதால், வேறு திணைக்களங்களில் இருக்கும் பணியாளர்களையும் அரசு பயன்படுத்துகிறது,

– கடந்த பத்து நாட்களில் வேலைக்காப்புறுதி விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 1,300 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது,

– விண்ணப்ப நடைமுறையை வேகப்படுத்துவதற்காக, விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் தேவையான அதிகரித்த வல்லமையைக் கொண்டுள்ள கனடா வருமானவரி முகவரகம் கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கான (CERB) விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளவுள்ளது.

 • இந்தப் புதிய அறிவிப்புகள் கோவிட்-19 நெருக்கடியை எதிர்கொள்வதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளில் அடங்குகின்றன. மாறிவரும் சூழ்நிலையை எதிர்கொள்வதற்குத் தேவையான புதிய திட்டங்களும், உதவிகளும் எதிர்வரும் நாட்களிலும், வாரங்களிலும் செயற்படுத்தப்படும்.
 • இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கு ஏதாவது உதவிகளைச் செய்ய முடியுமாவெனச் சிந்திக்குமாறு அனைத்துக் கனேடியர்களிடமும் பிரதம மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.
 • கோவிட்-19 இற்கான பரிசோதனை, பரிசோதனை முடிவுக்கான காத்திருப்பு நேரம் ஆகியவற்றை உள்ளடக்கிய முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கும், அனைவருக்கும் ஆதரவு கிடைப்பதை உறுதி செய்வதற்கும் கனேடிய அரசு மாகாணங்களுடனும், பிராந்தியங்களுடனும், முதற்குடிகள் (First Nations), இனுயிட் (Inuit), மேட்டி தேசம் (Metis Nation) ஆகிய சமூகங்களுடனும் இணைந்து செயலாற்றி வருகிறது. அத்துடன், முகமூடிகள், சுவாச உதவிக் கருவிகள், தடுப்பு மருந்துகள், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் என்பவற்றைத் தயாரித்து விநியோகம் செய்வதற்காக நிறுவனங்களுடனும், ஆய்வுகூடங்களுடனும், விஞ்ஞான நிறுவனங்களுடனும் அரசு செயலாற்றி வருகிறது.
 • கனடாவில் தற்போது நாளொன்றுக்குப் 10,000 பேர் பரிசோதனை செய்யப்படுகிறார்கள். கனடாவின் தலைமைப் பொதுச் சுகாதார அதிகாரி மருத்துவர் தெரீசா ராம் (Dr.Theresa Tam) வெளியிட்ட இந்தப் புள்ளிவிபரம், கனடாவின் பரிசோதனை வல்லமை குறுகிய காலத்தில் மாபெரும் அதிகரிப்பைக் கண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது.
 • இந்த நெருக்கடி தொடர்பாகக் கனடா எமது சர்வதேச பங்காளிகளுடனும் செயலாற்றி வருகிறது.

– இன்று, மார்ச் 25 ஆந் திகதி பிரதம மந்திரி சில தலைவர்களுடன் உரையாடினார்:

செனெகலின் ஜனாதிபதி சோள் (Sall), ருவாண்டாவின் ஜனாதிபதி ககாமே (Kagame) ஆகியோருடனான உரையாடலின்போது, மக்களைப் பாதுகாப்பதற்கான மூலோபாயங்கள் குறித்தும், இந்த உலகளாவிய பெருந்தொற்று நோயால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்iபை எதிர்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டது.

எதியோப்பிய பிரதம மந்திரி அபிய் (Abiy), கென்ய ஜனாதிபதி கென்யாட்டா (Kenyatta) ஆகியோருடன், சர்வதேச ஒத்துழைப்புக் குறித்து அவர் ஆராய்ந்தார்.

– நாளை மார்ச் 26 ஆந் திகதி, கனடாவின் பதில் நடவடிக்கைகளை உலகளாவிய ரீதியில் மேலும் ஒருங்கிணைப்பது குறித்து ஜீ-20 நாடுகளின் தலைவர்களுடன் அவர் கலந்துரையாடுவார்.

 • கனேடியர்களுக்கு உடனடிச் செய்திகளும், தகவல்களும் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கத்துடனும், ஊடகவியலாளர்கள் அவர்களது இன்றியமையாத பணியைத் தொடர்வதை உறுதி செய்யும் நோக்கத்துடனும் அவர்களுக்கு உதவியான புதிய நடவடிக்கைகளை அரசு அறிவிக்கவுள்ளது. கனேடிய பாரம்பரியம் தொடர்பான அமைச்சர் ஸ்ரீவென் கில்போ (Steven Guilbeault) பொதுச் சுகாதார விளம்பரங்களைக் கனேடிய ஊடகங்களில் வெளியிடுவதற்கு 30 மில்லியன் டொலரை ஒதுக்குவதாக அறிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக, ஊடகவியல் வரிச் சலுகைகளைப் பெறுவதற்குத் தகுதியுள்ள ஊடகங்கள் குறித்த சுதந்திர, பல்கலாச்சார, பல்லின ஆலோசனைச் சபையொன்று அமைக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஊடகவியல் வரிச் சலுகைகளைப் பெறுவதற்குத் தகுதியான ஊடக நிறுவனங்களுக்கு இருக்கவேண்டிய – தகுதிபெற்ற கனேடிய ஊடகவியல் அமைப்புக்கான (Qualified Canadian Journalism Organization – QCJO) தராதரங்களை இந்தச் சபை முடிவு செய்யும்
 • அனைவரும் சமூக இடைவெளியைப் பேணுவதன் முக்கியத்துவதை மீண்டும் வலியுறுத்திய பிரதம மந்திரி, இந்த முக்கியமான நேரத்தில் கனேடியர்களுக்கு உதவிபுரிவதற்காகக் கடுமையாக உழைக்கும் சுகாதாரத்துறைப் பணியாளர்களுக்கும், அரச பணியாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
 • மருத்துவ தனிமைப்படுத்தல் சட்டம் ( Quarantine Act ) இன்று நள்ளிரவு முதல் (12:00am March 26th, 2020) நடைமுறைப்படுத்தப்படுமெனச் சமஷ்டி சுகாதார அமைச்சர் பட்டி ஹய்டு (Patty Hajdu) அறிவித்துள்ளார். இதன்படி, கனடாவிற்குள் வரும் அனைவரும் கனடாவை வந்தடைந்ததில் இருந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவேண்டியது சட்டப்படி கட்டாயமாக்கப்படுகிறது.

சுயமாகத் தனிமைப்படுத்திக் கொண்ட பயணிகள், 14 நாட்களுக்குப் பலசரக்குக் கடைகள், மருந்தகங்கள் உட்பட்ட எந்தத் தேவைக்கும் எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியே செல்வதற்குத் தடை விதிக்கப்படுகிறது. நோய் அறிகுறிகளைக் கொண்டிருப்போர், தொலைபேசி மூலம் அவர்களது உள்ளுர் பொதுச் சுகாதார அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு மருத்துவ உதவி கோரவேண்டும்.

சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு முன்னர் விடுக்கப்பட்ட அறிவிப்புத் தற்போது அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைப் பேணுதல், தனிமைப்படுத்திக் கொள்ளல் என்பன தொடர்பான விதிகள் பின்பற்றப்படாவிட்டால், மேலும் கடுமையான நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் நடைமுறைப்படுத்தப்படுமெனக் கனேடிய அரசு மீண்டும் வலியுறுத்துகிறது.

 

மேலதிக தகவல்களுக்கும், ஊடகங்களின் கேள்விகளுக்கும்:

டொறீன் சவுந்தரநாயகம்

Gary.Anandasangaree.C1A@parl.gc.ca

416 559 1749