கலிபோர்னியாவில் காட்டுத்தீ – 7000 ஏக்கருக்கு மேல் தீ பரவியது

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சில்மார் பகுதியில் கடந்த 10 ஆம் தேதி(வியாழக்கிழமை) அன்று காட்டுத்தீ ஏற்பட்டது. வளிமண்டலத்தில் ஈரப்பதம் மிகவும் குறைந்த நிலையில் காணப்பட்டதால், அதிக வெப்பம் காரணமாக இந்த தீ பற்றியிருக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பகுதியில் சாண்டா அனா என்று அழைக்கப்படும் காற்று வீசியதால் காட்டுத்தீ மிக வேகமாக பரவியது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வடக்கு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கு பகுதிகளில் காட்டுத்தீ கடுமையாக பற்றி எரிய துவங்கியது. வேகமாக வீசிய காற்றின் காரணமாக மேற்கு பக்கம் நோக்கி தீ பரவ ஆரம்பித்தது. நேற்று மாலை நிலவரப்படி சான் ஃபெர்நாண்டோ பள்ளத்தாக்கில் சுமார் 7,542 ஏக்கர் காட்டுப் பகுதி தீக்கிரையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீயினால் வெளியான கடும் புகை குடியிருப்பு பகுதிகளில் பரவியது. நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. காட்டுத்தீ பரவி வரும் திசையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்பு துறை அதிகாரி ரால்ஃப் டெராஸ் கூறுகையில், “தீயை அணைக்கும் பணியில் சுமார் 1000 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலமாக தண்ணீர் பாய்ச்சி தீயை அணைத்து வருகிறோம்.
இதுவரை 2 பேர் கடும் புகையினால் உயிரிழந்துள்ளனர். மேலும் 76 வீடுகள் எரிந்துள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். விரைவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்படும்” என்று தெரிவித்தார்.