கனடிய தேர்தல் களம் 2019 இம்முறை பெரும்பான்மை ஆட்சியமையுமா?

இன்னும் நான்கு வாரங்களில் ஒக்டோபர் 21ஆம் நாள் கனடாவில் 43வது பாராளுமன்றத்திற்கான தேர்தல் என்ற நிலையில் இன்றைய நிலையில் தேர்தல் களநிலவரம் என்ன? எனப் பார்ப்போம்.

கனடாவின் பாராளுமன்றத்திற்கான 338 தொகுதிகளில் 184 தொகுதிகளை கடந்த தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மைக்குத் தேவையான 170 தொகுதிகளை விட 14 தொகுதிகளை அதிகம் பெற்று ஜஸ்ரின் ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சியமைத்தது. அதேபோன்று அளிக்கப்பட்ட வாக்குகளில் 39.5 சதவீதத்தை அது பெற்றுக் கொண்டது. தற்போதைய நிலையில் அது மீண்டும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறும் நிலையில் இல்லை. அதன் ஆதரவு நிலை 35 சதவீதத்தைக் கடந்து இன்னும் இதுவரை செல்லவில்லை. கடந்த தேர்தலைவிட 20 முதல் 30 தொகுதிகளை குறைவாக வெல்லும் நிலையிலேயே அது உள்ளது. குறைந்தபட்சம் 38 சதவீத வாக்குகளையாவது பெற்றாலே பெரும்பான்மை ஆசனங்களை நோக்கி நகரலாம் என்ற நிலையில் அது வரும் வாரங்களில் பெரும் முன்னேற்றத்தை கண்டாக வேண்டும். ஆனாலும் தற்போதைய நிலையில் அதிக ஆசனங்களைப் வெல்லும் கட்சியாக அது தொடர்ந்தும் உள்ளது.

அதேவேளை எதிர்கட்சியான கன்சவேட்டிவ் கட்சி கடந்த தேர்தலில் 31.9 சதவீத வாக்குகளுடன் 99 தொகுதிகளை வென்றது. இன்றைய நிலையில் அது குறைந்தபட்சம் 40 தொகுதிகளையாவது மேலதிகமாக வெல்லும் நிலையிலேயே உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் லிபரல் கட்சியில் ஏற்ப்பட்ட சிறிய சரிவு இரண்டு கட்சிகளுக்குமிடையிலான வெற்றிபெறக்கூடிய தொகுதிகள் எண்ணிக்கையிலான இடைவெளியை மிகவும் குறைத்துவிட்டது என்பதுவும் உண்மை. கன்சவேட்டிவ் கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை வெற்றியைப் பெற வேண்டுமானால் அது தன்னை நோக்கிய ஒரு பெரும் அலையை வரும் நான்கு வாரங்களுக்குள் உருவாக்கியாக வேண்டும். அதற்கான அறிகுறிகள் எதுவும் தற்போது தென்படவில்லை. ஆனால் அதிக தொகுதிகளை வென்ற கட்சி என்ற நிலையை ஏய்துவதற்கான வாய்ப்பை அது தொடர்ந்தும் கொண்டிருக்கிறது.

அடுத்து மூன்றாவது கட்சியான என்டிபி எனப்படும் புதிய சனநாயகக் கட்சியை எடுத்துக் கொண்டால் அது கடந்த 2015 தேர்தலில் 19.7 சதவீத வாக்குகளுடன் 44 தொகுதிகளை வென்றது. அது அதே எண்ணிக்கையிலானதோ அல்லது அதைக் கடந்து அதிகரித்த எண்ணிக்கையிலான தொகுதிகளை வெல்லும் வாய்ப்புக்கள் அறவே கிடையாது என்ற நிலையிலேயே இத்தேர்தலை அது எதிர்கொள்கிறது. இன்றைய நிலையில் அது கடந்தமுறை எண்ணிக்கையில் இருந்து 20 முதல் 30 தொகுதிகளை இழக்கும் நிலையிலேயே உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் அதன்நிலை சற்று மேம்பட்டிருக்கிறது. இறுதியில் அதன் வாக்கு வங்கியில் ஒரு பகுதி லிபரல் கட்சிக்கு செல்லாது தடுக்க புதிய சனநாயகக்கட்சி தொடர்ந்தும் கடினமாக போராட வேண்டிய நிலையிலேயே உள்ளது. எதுஎவ்வாறாயினும் பாராளுமன்றத்தில் கட்சி அந்தஸ்சிற்கு தேவையான 12 ஆசனங்கள் என்ற நிலையை தக்கவைக்கும் நிலையிலேயே அது உள்ளது அதை எக்காரணம் கொண்டும் இழந்துவிடாது பார்த்துக் கொள்வது அதன் முக்கிய இலக்குகளில் ஒன்றாக உள்ளது.

அடுத்து கியூபெக் மாநிலத்தின் பிரிவினைவாதக் கட்சியான புளொக் கியூபெக் கட்சி கடந்த தேர்தலில் 4.7 சதவீத வாக்குகளைப் பெற்று கியூபெக்கின் 78 தொகுதிகளில் 10 தொகுதிகளையே வென்றது. இம்முறை அது அங்கு மேலதிக தொகுதிகளை வெல்லும் நிலையிலேயே இன்று உள்ளது. தேர்தல் அறிவிப்பின் பின் தன் வாக்குவங்கியை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் ஒரே கட்சியாகவும் இதுவே உள்ளது. அதற்கான ஆதரவு அங்கு மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இது இறுதியில் எட்டும் உயர்நிலை சிறுபான்மை ஆட்சியைத் தீர்மானிக்கும் முக்கிய விடயமாக அமையும் என்பதையும் கவனத்தில் கொள்க. இதன்மூலம் அது இம்முறை 12 ஆசனங்களையாவது வெற்றிகொண்டு பாராளுமன்றத்தில் கட்சி அந்தஸ்தை பெறும்நிலை இன்றைய நிலையில் பிரகாசமாகவே உள்ளது எனலாம்.

அடுத்து பசுமைக்கட்சி எனப்படும் கிறீன் கட்சி கடந்த தேர்தலில் 3.5 சதவீத வாக்குகளுடன் ஒரு தொகுதியை வெற்றி கொண்டது. 1983இல் தோற்றம் கண்டு 2011 தேர்தலில் முதன்முறையாக பாராளுமன்ற பிரவேசம் கண்ட பசுமைக்கட்;சி சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இரண்டாவது வெற்றியையும் கண்டது. கடந்தமுறையை விட நிச்சயம் அதிகரித்த அதாவது குறைந்தபட்சம் இரட்டிப்பான வாக்குவங்கியை இத்தேர்தலில் எட்டும்நிலை பிரகாசமாக உள்ளதால் அது தனது ஆசனங்களின் நிலையையும் இரட்டிப்பாக்கினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதன் பிரசன்னம் வரும் பாராளுமன்றத்திலும் நிச்சயம் உண்டு. இறுதியாக இம்முறை தேர்தல் களம் கண்டுள்ள மக்சி பேனியர் தலைமையிலான புதிய கட்சியான மக்கள் கட்சி தாக்கத்தை இத்தேர்தலில் செலுத்தும் நிலை இல்லை. அது பாராளுமன்ற பிரவேசத்தை ஒரு தொகுதியிலாவது வெற்றிபெற்று மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆகமொத்தத்தில் இன்றைய நிலையில் சிறுபான்மை ஆட்சியே என்ற நிலையே உள்ளது. இந்நிலையில் கடந்த தேர்தலில் அத்திலாந்திக் கனடாவின் 32 தொகுதிகளையும் ரோரன்ரோ மாநகரத்தின் 25 தொகுதிகளையும் ரோரன்ரோ பெரும்பாகத்தின் 54 தொகுதிகளில் 49 தொகுதிகளையும் ஒன்ராரியோவில் 80 கியூபெக்கில் 40 என தொகுதிகளின் வெற்றியினூடாகவே லிபரல் கட்சியின் வெற்றி சாத்தியமானது.

=============

மாநிலங்கள் ரீதியாக கட்சிகளின் நிலையும் தேர்தல் முடிவுகளில் அதன் தாக்கமும்

கனடாவின் 10 மாநிலங்களில் கட்சிகளின் நிலை இத்தேர்தல் களத்தில் எவ்வாறிருக்கிறது? அவர்கள் அம் மாநிலங்களில் எதிர்கொள்ளும் சவால்கள்? மேம்பாடுகளுக்கான வாய்ப்புகள்? என ஆய்விற்கு உட்படுத்துவோம்.

பிரிட்டிஸ் கொலம்பியா:

கனடாவின் மேற்குக் கரையோர மாநிலம். சனத்தொகையில் மூன்றாவது பெரிய மாநிலம். கனடாவின் 338 தொகுதிகளில் 42 தொகுதிகளை தன்னகத்தே கொண்டது. கடந்த 2015 தேர்தலில் லிபரல் 17 தொகுதிகளையும், என்.டி.பி 14 தொகுதிகளிலும், கன்சவேட்டிவ் 10 தொகுதிகளிலும், கிறீன் கட்சி ஒரு தொகுதியிலும் இங்கு வெற்றி பெற்றன. இங்கு கடந்த 40 வருடங்களில் லிபரல்க் கட்சி கண்ட உச்சம் அது. இம்மாநிலத்தில் லிபரல் கட்சி சிறப்பாக செய்வதில்லை என்பதே வரலாறு. அந்நிலை இத்தேர்தலிலும் மீண்டும் அரங்கேறக் காத்திருக்கிறது. என்.டி.பி சிறுபான்மை அரசைக் மாநில ரீதியாக கொண்டிருந்தாலும் அது பெரிய அளவில் அக்கட்சிக்கு மத்திய தேர்தலில் உவதவில்லை என்பதே களநிலவரம் சொல்லும் செய்தி. இம்மாநிலத்தில் வன்கூவர் நகரப்பகுதியில் மட்டுமே லிபரல் கட்சியின் ஆதிக்கம் நிலவுகிறது. ஏனைய பகுதிகளில் பசுமைக்கட்சி உள்ளடங்கலான ஏனைய மூன்று கட்சிகளுமே பலப்பரிட்சையில் உள்ளன. மக்கள் கருதுத்துக் கணிப்பில் கணிசமான வித்தியாசத்தில் கன்சவேட்டிவ் கட்சி முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் லிபரல் கட்சியும், மூன்றாவது இடத்தில் கடும் போட்டியில் என்.டி.பியும், பசுமைக்கட்சியும் உள்ளன. தொகுதிகள் அடிப்படையில் 20 முதல் 25 தொகுதிகளை வெல்லும் நிலையில் கன்சவேட்டிவும், 9 முதல் 14 தொகுதிகளை வெல்லும் நிலையில் லிபரல் கட்சியும், 4 முதல் 6 தொகுதிகளை என்.டி.பியும், 3 முதல் 5 தொகுதிகளை பசுமைக் கட்சியும் வெல்லும் நிலையில் இன்று உள்ளன. எனவே லிபரலும் என்.டி.பியும் தனது எண்ணிக்கையில் இங்கு சரிவைச் சந்திக்க, கன்சவேட்டிவும், பசுமைக்கட்சியும் மேல் நோக்கி நகருகின்றமை அவதானிக்கத்தக்கது. கிறீன் கட்சி எனப்படும் பசுமைக்கட்சி வெல்லக்கூடிய தொகுதிகள் அனைத்தும் இம்மாநிலத்திலேயே எதிர்பார்க்கப்படுகின்றன. லிபரல் கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க அதன் தலைவர் ஜஸ்ரின் ரூடோ அங்கு கடும் முயற்சியில் உள்ளார். இங்கு இழக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை லிபரல் கட்சி பெரும்பான்மை ஆட்சியை நோக்கி நகர்வதில் தாக்கத்தை நிச்சயம் செலுத்தும். ஆகவே தொடர்ந்தும் கவனத்தில் கொள்ள வேண்டிய மாநிலங்களில் இதுவும் ஒன்று.

அல்பேட்டா:

கனடாவின் நான்காவது பெரிய மாநிலமான அல்பேட்டாவில் 34 தொகுதிகள் உண்டு. அதில் கடந்த 2015 தேர்தலில் கன்சவேட்டிவ் 29 தொகுதிகளிலும், லிபரல் 4 தொகுதிகளிலும், என்.டி.பி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. கன்சவேட்டிவ் கட்சியின் கோட்டையான இம்மாநிலத்தில் சமீபத்தில் மீண்டும் மாநில அரசை கன்சவேட்டிவ் கட்சி கைப்பற்றியுள்ள நிலையில் கன்சவேட்டிவ் அலை ஒன்று இம்மாநிலத்தில் வீசுகிறது. இன்றைய நிலையில் ஒரு தொகுதியை வெல்லும் நிலையில் என்.டி.பியும், அதிகபட்சம் இரு தொகுதிகளையே வெல்லும் நிலையிலேயே லிபரலும் உள்ளன. ஒரு தொகுதியை வெல்வதற்கும் லிபரல் கட்சி கடுயைமாக உழைக்கவேண்டிய நிலையே அங்கு தற்போது உள்ளது.

மனிட்டோபா-சஸ்கச்சுவான்:

இரண்டு மாநிலங்களிலும் தலா 14 தொகுதிகள் உண்டு. மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் கடந்த தேர்தலில் 15 தொகுதிகளில் கன்சவேட்டிவ் கட்சியும் 8இல் லிபரல் கட்சியும் 5 தொகுதிகளில் என்.டி.பியும் வெற்றி பெற்றன. இம்முறையும் நகர்புறமான வினிப்பெக்கில் லிபரல் கட்சி சிறப்பாக செய்யும். ஆனால் கடந்த முறையைவிட அதன் ஆதரவுத்தளம் குறைந்தே காணப்படுகிறது. இந்நிலையில் அது 4 முதல் 7 தொகுதிகளை வெல்லும் நிலையே தென்படுகிறது. என்.டி.பி அதிகபட்சம் 2 தொகுதிகளையே வெல்லும் வாய்ப்பு. அதேவேளை என்.டி.பி காணாமல் போகும் மாநிலங்களாக இவை மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கன்சவேட்டிவ் கட்சி 19 முதல் 24 தொகுதிகளை வெல்லும் நிலையின் இன்று அங்குள்ளது.

ஒன்ராரியோ:

கனடாவின் 10 மாநிலங்களில் அதிகரித்த மக்கள் தொகையினூடாக அதிக தொகுதிகளைக் கொண்ட மாநிலம். 2015 தேர்தலில் ஒன்ராரியோ 108 இல் இருந்து 121 தொகுதிகளாக்கப்பட்டு முதல்முறை நடந்த தேர்தலில் லிபரல் கட்சி 80 தொகுதிகளையும், கன்சவேட்டிவ் கட்சி 33 தொகுதிகளிலும், என்டிபி 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதில் பெரு நகரப்பகுதிகளில் லிபரல் கட்சியின் வெற்றி வரலாறாக அமைந்தது. ரொரன்ரோ மாநகரில் உள்ள 25 தொகுதிகளிலும், ரொரன்ரோ பெரும்பாகத்தில் உள்ள 54 தொகுதிகளில் 49 தொகுதிகளிலும், ஒட்டாவா பெருநகரப்பகுதியில் 8இல் 7 தொகுதிகள் என அதன் வெற்றிகள் அமைந்தன. இம்முறை வெற்றிவாய்ப்பில் ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்திருந்த லிபரல் கட்சிக்கு வரமாக அமைந்தது தான் டக் போட்டின் ஆட்சி. டக் போட் மீது ஒன்ராரியோ மக்கள் கொண்டுள்ள அதிருப்தி லிபரல் கடசியின் வெற்றி வாய்ப்பை ஒன்ராரியோவில் மீண்டும் பிரகாசமாக்கியுள்ளது எனலாம். எனினும் 80 தொகுதிகளை அது மீண்டும் வெற்றி கொள்ளும் நிலையில் இல்லை என்பதே இன்றைய களநிலவரம். ரொரன்ரோ பெரும்பாகத்தில் மட்டுமல்ல, ரோரன்ரோ மாநகரிலேயே அது தொகுதிகளை இழக்கும் வாய்ப்பு உண்டு. எனினும் அது 65 முதல் 72 தொகுதிகளில் வெல்லும் நிலையில் உண்டு. கன்சவேட்டிவ் கட்சி 40க்கு மேல் தொகுதிகளை வெல்லும் நிலைக்கு இம்முறை முன்னேறியுள்ளது. என்.டி.பியும் கடந்த முறை வென்ற 8க்கு மேல் 13 தொகுதிகள் வரை வெல்லும் வாய்ப்பு நிலையில் இன்று உள்ளது.

கியூபெக்:

78 தொகுதிகளுடன் இரண்டாவது பெரிய மாநிலமான கியூபெக்கில் கடந்த தேர்தலில் 40 தொகுதிகளை லிபரல் கட்சியும், 16 தொகுதிகளில் என்.டி.பியும், 12 தொகுதிகளில் கன்சவேட்டிவும், 10 தொகுதிகளில் புளொக் கியூபெக்கும் வெற்றி பெற்றன. இங்கு இம்முறை என்.டி.பி துடைத்தழிக்கப்படும் நிலையே தென்படுகிறது. ஏனைய மாநிலங்களில் இழக்கப்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையை இங்கு என்.டி.பியின் 16ஜயும் வெற்றி கொள்வதனூடாக ஓரளவு ஈடுசெய்யலாம் என்ற கணக்கில் லிபரல் கட்சி இங்கு கடுமையாக வேலை செய்கிறது. எனினும் புளொக் கியூபெக் கட்சியின் கடந்த இரு வார வளர்ச்சி அதனை இங்கு லிபரல்க் கட்சிக்கு இல்லாது செய்துவிடுமா? என்ற அச்சத்தை லிபரல் கடசிக்கு இங்கு தோற்றுவித்துள்ளது. லிபரல் கட்சி மக்கள் ஆதரவில் தொடர்ந்தும் முதலிடத்தில் 45 முதல் 52 தொகுதிகளை வெல்லும் நிலையில் உள்ளது. புளொக் கியூபெக் 16இல் இருந்து 20 தொகுதிகளை வெல்லும் நிலைக்கு முன்னேறியுள்ளது. கன்சவேட்டிவ் 12 முதல் 14 தொகுதிகளையும், மக்சி பேனியரின் மக்கள் கட்சி ஈற்றில் வெற்றி பெறுவதானால் அந்த ஒரு தொகுதி கியூபெக்கில் தான் உண்டு என்பதுவும் சுவாரசியமான விடயங்கள். இம்மாநிலம் 2008இல் புளொக் கியூபெக்கையும், 2011இல் என்.டி.பியையும், 2015இல் லிபரல் எனமாற்றித் தெரிவு செய்த மாநிலம் என்ற வகையில், இம்முறை சற்று மாறாக மீண்டும் லிபரல் கட்சியையே பெருவாரியாகத் தெரிவு செய்யுமா? என்பதுவும் ஆவலைத் து+ண்டும் விடயம் தான்.

அட்லான்டிக் மாநிலங்கள்:

நியூபின்லாந்து லபடோர் (7 தொகுதிகள்) பிறின்ஸ் எட்வேட் ஜலண்ட் (4 தொகுதிகள்) நவஸ்கோசியா (11 தொகுதிகள்) நியூபுரொன்ஸ்விக் (10 தொகுதிகள்) ஆகிய மாநிலங்கள் உள்ளடங்கலாகிய இக்கிழக்குப் பிராந்திய அட்லான்டிக் மாநிலங்களில் மொத்தம் உள்ள 32 தொகுதிகளையும் லிபரல் கட்சி கடந்தமுறை வரலாறாக வெற்றி பெற்றது. இம்முறை இன்றைய நிலையில் அதற்கான வாய்ப்பே கிடையாது. எனினும் லிபரல் கட்சியே முன்னணியில் உள்ளது. இன்றைய நிலையில் 20 முதல் 24 தொகுதிகளை லிபரலும், 9 முதல் 13 தொகுதிகளை கன்சவேட்டிவும், 1 முதல் 3 தொகுதிகளை என்.டி.பியும் வெல்லும் நிலை இம்மாநிலங்களில் காணப்படுகிறது.

ஆகவே கியூபெக் நீங்கலாக மேல் நோக்கி நகர கடினமான சவாலை எதிர்கொள்ளும் நிலையில், பெரும்பான்மை ஆட்சியை மீண்டும் அமைப்பதாக இருந்தால் ஒரு அலையை ஏற்ப்படுத்தும் வகையில் லிபரல் கட்சியின் பரப்புரைகள், முன்னெடுப்புகள் இருந்தாக வேண்டும். அதேவேளையில் எதிர்க்கட்சிகள் மோசமான தவறை இழைத்தாக வேண்டும். அனைத்திற்கும் மகுடம் வைப்பது போல் நடக்கவிருக்கும் தலைவர்கள் விவாதம், இவற்றை தீர்மானிப்பதாக அமையப்போகிறது என்ற நிலையில், இறுதி நான்கு வாரத் தேர்தல் பரப்புரை எத்தகைய மாற்றங்களை பிரதிபலிக்கப்போகின்றன? அவை எத்தகைய மாற்றங்களை களநிலையில் ஏற்படுத்தும்? தலைவர்களும் அவர்களின் தேர்தல் களத்திலான தாக்கங்களும், இத்தேர்தலில் கனடியத் தமிழர்களின் வகிபாகம் என்ன?

நேரு குணரட்ணம்

மேலும் கனேடிய தேர்தல் தொடர்பாக செய்திகள்

தலைவர்கள் ஆங்கிலமொழி விவாதம் – அவதானிப்புக்கள் -நேரு

கனடிய தேர்தல் களம் 2019 இம்முறை பெரும்பான்மை ஆட்சியமையுமா?

சிரிப்பதுவும், அழுவதுமாக கனடிய தேர்தல் -ரதன்

நடைபெற இருக்கும் கனடிய சமஷ்டி தேர்தலில் மூன்று பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனம்- – தர்ஷினி உதயராஜா

இன்றைய நிலையில் கடசிகளின் வெற்றிவாய்ப்பு நிலவரம்