சிரிப்பதுவும், அழுவதுமாக கனடிய தேர்தல்

கனடிய தேர்தல் களம் இன்னமும் தூங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. வழமைக்கு மாறாக தமிழ் வேட்பாளர்களும் உறங்கு நிலையில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களை எதிர்த்து எந்த தமிழ் வேட்பாளாரும் போட்டியிடவில்லை.
இருவர் கொன்சவேற்றிவ் கட்சியிலும், ஒருவர் லிபரல் கட்சியிலும், மற்றொருவர் புதிய கட்சியான மக்கள் கட்சியிலும் போட்டியிடுகின்றனர்.
குயின்ஸை துரைசிங்கம் அவர்கள்  ScarboroughGuildwood தொகுதியில் போட்டியிடுகின்றார் .இத்தொகுதியில்  தமிழர்கள் அதிகளவில் வாக்களித்தால், அவர் வெற்றி பெறலாம். மக்கள் கட்சி வேட்பாளர் வெகு தொலைவிலேயே உள்ளார். கட்சியும் முறையாக தமிழர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்படவில்லை. லிபரல் கட்சி வேட்பாளர் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். அவரது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. கொன்சவேற்றிவ் கட்சி Markham—Stouffville தொகுதியில, லிபரல் கட்சியில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற  Jane Philpott இம் முறை சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து முன்னால் ஒன்ராரியோ மாநில அமைச்சராகவிருந்த  Helena Jaczek லிபரல் கட்சி சார்பாக போட்டியிடுகின்றார். இவர்கள் இருவரும் வைத்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருக்குமிடையில் லிபரல் சார்பு வாக்குகள் பிரியும் பொழுது, கொன்சவேற்றிவ் கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளது. கடந்த தேர்தலில் ரூடோ அலை அடித்த பொழுதே, கொன்சவேற்றிவ் கட்சி வேட்பாளர்  Paul Calandra 42.77 வீத வாக்குகளைப் பெற்றிருந்தார். அடுத்த புதிய பாராளுமன்றத்தில்  Theodore Antony புதிய தமிழ்; பா.உ ஆக பதவியேற்பது உறுதியாக தெரிகின்றது.

Conservative Party of Canada டிசம்பர் 2003ல் உருவாக்கப்பட்டது. இது Reform Party of Canada பின்னர் Canadian Alliance மற்றும் Progressive Conservative Party of Canada ஆகிய இணைந்து உருவாக்கப்பட்ட புதிய கட்சி. Reform Party of Canada 1987 ல் ஆரம்பமானது. இதன் தலைவராக
Preston Manning நீண்ட காலம் இருந்தார். 1998 தேர்தலில் வெறும் 2.09 வீத வாக்குகளைப் பெற்ற இக் கட்சி 1997ல் 19.35 வீத வாக்குகளைப் பெற்றது. இக் கட்சி 2003ல் ; Canadian Alliance ஆக மாற்றப்பட்ட போது நடைபெற்ற தலைமைத்துவ தேர்தலில் Stockwell Day தவைராக தேர்ந்தெடுக்கப்படுகின்றார். 2002ல் ஸ்ரீபன் கார்ப்பர் தலைவராகின்றார். அதன் பின்னர் புதிய கட்சியின் தலைவராகவும் கார்ப்பர் தேர்வாகின்றார். 2017 தேர்தலில் Andrew Scheer தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.

கார்ப்பர்,  Andrew Scheer ஆகியோர், றிபோம் கட்சியின் பாசறையில் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். அதன் தலைவர் மனிங்கின் வாரிசுகள். மேற்கத்திய மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இக் கட்சி, குடிவரவாளர்களுக்கு எதிரானது. மேல் தட்டு மக்களை பிரதிநிதிப்படுத்தும் கட்சி. அவர்கள் கொள்கைகளுக்கே முக்கியத்துவம் வழங்கும். இதனை ஹாப்பரின் அரசின் செயல்பாடுகளை கவனிக்கும் பொழுது தெளிவாகத் தெரியும். கடந்த ஒன்ராரியோ மாநிலத் தேர்தலில் கொன்சவேற்றிவ் கட்சி பெரும் வெற்றி பெற்றது. முதல்வராக டக் போர்ட் பதவியேற்றார். அதன் பின் நடந்தது என்ன? பல சமூக நலத் திட்டங்கள் நிறுத்தப்பட்டன. அடிப்படைச் சம்பள உயர்வு நிறுத்தப்பட்டது. உயர் பாடசாலைகளில் ஆசிரியர்கள் நீக்கப்பட்டார்கள். சிறுவர்கள், முதியோர் நலன் திட்டங்கள் குறைக்கப்பட்டன. எது சமூகத்திற்கும், மக்களுக்கும் முக்கியமோ, அவையெல்லாம் நிறுத்தப்பட்டன. அல்லது குறைக்கப்பட்டன.
ஓன்ராரியோவை பின்பற்றியே, மத்திய கொன்சவேற்றிவ் கட்சியும் திட்டங்களை வகுக்கின்றது. கியுபெக்கில், கியுபெக் மாநில அரசால் கொண்டுவரப்பட்ட சட்ட ஷரத்து 21ன் பிரகாரம், அங்கு வாழும் சிறுபான்மையினத்தவர்கள், அரசு வேலைகளில் அவர்களது நம்பிக்கைக்குரிய அடையாளங்களை அணிய முடியாது. உதாரணத்துக்கு சீக்கியர்கள் தொப்பி அணிய முடியாது. இதனை மத்திய கொன்சவேற்றிவ் கட்சி வரவேற்கின்றது. பழைய கொன்சவேற்றிவ் கட்சி ஆட்சியின் போது பிரதமராக பிறையன் மல்றோனியிருந்தார். அப்பொழுது தமிழ் மக்கள் கப்பலில் நியு பவுன்லாந்து கரையை வந்தடைந்தனர். ஒரு சில ஊடகங்கள் எதிர்ப்புத் தெரிவித்த போதும், மல்றோனி அவர்களை வரவேற்றார். இது பற்றி கனடிய தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தினர் வெல்கம் ரு கனடா என்ற படத்தையும் தயாரித்திருந்தனர். ஹாப்பரின் புதிய றிபோம்-கொன்சவேற்றிவ் ஆட்சியில் இரு கப்பல்கள் வன்கூவர் கரையை அடைந்தன. அதில் வந்தவர்களை மிக மோசமாக ஹாப்பர் அரசு நடாத்தியது.
தற்பொழுதும் Safe-Third Country Agreement ஐ மீள்பரிசீலனை செய்வேன் என பிராச்சாரப்படுத்துகின்றனர். இவர்களது திட்டங்கள் புதிய குடிவரவாளர்களை அதிகளவு கட்டுப்படுத்தும்.
சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரான சட்டங்களை மத்திய கொன்சவேற்றிவ் கட்சி உருவாக்கும். இதன் பாதிப்பை நாம் சற்றேனும் கவனிக்காது உறங்கினோமானால், உறங்கு நிலை நிரந்தரமாகிவிடும். ஆனால் கடந்த ஒன்ராரியோ மாநிலத் தேர்தலில் சிறுபான்மை இனத்தவர்களே கொன்சவேற்றிவ் கட்சிக்கு அதிக வாக்குகளை அளித்துள்ளனர். எங்களுக்கு எதிரான கட்சிக்கே நாங்கள் வாக்களிக்கின்றோம். நிச்சயமாக ஆச்சரியமான விடயம். ஆபத்தானதுமாகும்.
கொன்சவேற்றிவ் கட்சியின் புதிய தலைவர் பதவியேற்றவுடன், வரவு செலவு திட்டத்தை சமப்படுத்துவேன் போன்ற சபதங்களைச் செய்தார். தேர்தல் நெருங்க, நெருங்க அவரது நடவடிக்கைகளில் மாற்றமேற்பட்டது. அடுத்த தேர்தல் வரை(2023) வரவு செலவுத் திட்டம் சமநிலைப்படுத்தமாட்டாது என 2015ல் லிபரல் கட்சி கூறியதைப் போல் கூறிவருகின்றார். இவரது தற்போதைய திட்டங்கள் லிபரல் செய்வதை விட பல மடங்கு கூடுதலாக நான் செய்வேன் எனக் கூறுகின்றார். இது மக்களை வாக்குறிதிகளால் விலைக்கு வாங்கும் முயற்சியாகவேயுள்ளது.
லிபரல், கொன்சவேற்றிவ், என்.டி.பி ஆகிய மூன்று கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மிக முக்கிய விடயங்களை ஒப்பீட்டு அடிப்படையில் நோக்கும் பொழுது, இன்று மிக முக்கிய பிரச்சினைகளாக கருதப்படும் சுற்றுச் சூழல், கல்வி, வன்முறை, மருத்துவ – சுகாதார சேவைகள், வீடமைப்பு. அகதிகள் வருகை ஆகிய விடயங்களில் கொன்சவேற்றிவ் கட்சியின் கொள்கைகள் மக்கள் நலனற்றவையாகவே உள்ளது. சுற்றுச் சூழல் மாசுபடுவதைக் குறைக்கும் நோக்குடன் அமுல் படுத்தப்பட்ட ஹார்பன் வரியை நீக்குவதாக கொன்சவேற்றிவ் சபதம் எடுத்துள்ளது. ஷரத்து 71 க்கு எதிராக தங்களது கருத்துக்களை முன்வைக்கின்றனர். இச் ஷரத்து துப்பாக்கி வாங்குதலை கட்டுப்படுத்தும். கொன்சவேற்றிவ் கட்சியினர் துப்பாக்கி பாவனையை கட்டுப்படுத்தும் எந்த வித நோக்கமுமின்றியுள்ளனர். கல்வியிலும், பெற்றோர்களால் கல்விக்காக சேமிக்கும் RESP  திட்டத்துக்கான நிதியை 20வீதத்திலிருந்து முப்பது வீதமாக அதிகரிப்போம் என்கின்றனர். ஆனால் மாணவர்கள் கல்விக் கடனைக் குறைப்பதற்கோ, பல்கலைக் கழக கல்வி கட்டணத்தை குறைப்பதற்கோ எந்த வித திட்டமும் நோக்கமுமின்றியுள்ளனர். இவர்களது வீடமைப்புத் திட்டம் வங்கிகளுக்கு அதிகளவு வட்டியை வழங்க வழிகோலும். நீங்கள் வீட்டுக் கடனை முப்பது வருடங்களுக்குள் செலுத்த முடியும். அதிக காலம் எடுப்பின், அதிக வட்டியை நீங்கள் வங்கிக்கு செலுத்த வேண்டும். வீட்டின் விலைகளை குறைப்பதற்கோ, வருமானம் குறைந்தோர் வீடுகளை வாங்குவதற்கு ஏற்ற வகையில் திட்டங்களோ இல்லை.

கனடாவில் 67 வீதமானோர் 47 ஆயிரத்துக்கு குறைந்த வருமானம் பெறுவோர். இவர்களை கவருவதற்கு லிபரலும், கொன்சவேற்றிவ் கட்சியும் போட்டி போடுகின்றன. 1.25வீத வரிக்குறைப்பை கொன்சவேற்றிவ் கட்சி முன்மொழிந்துள்ளது. மற்றைய கட்சிகளுடன் ஒப்பிடும் பொழுது இது மிக மோசமானது. மருத்துவத்துறையை தனியார்மயப்படுத்தும் நோக்கம் கொன்சவேற்றிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகத் தெரிகின்றது. இதனையே ஒன்ராரியோ கொன்சவேற்றிவ் கட்சியும் செய்கின்றது.

இந்த மூன்று கட்சிகளின் கொள்கைகளில் மக்கள் நலன்களை மையமாகக் கொண்டவை என்.டி.பிக் கட்சியின் கொள்கைகள். குடிவரவாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, சுகாதார-மருத்துவ சேவைகள் அதிகரிப்பு, இலவச பல்கலைக் கழக கல்வி, நகர சபைகளுக்கு துப்பாக்கிக் கட்டுப்பாட்டிற்கு அதிக அதிகாரங்களை வழங்கல், மிக அதிக வருமானம் பெறுவோருக்கு அதிக வரி, குழந்தைகள், முதியோர் நலன் திட்டங்கள் போன்ற பல நல்ல திட்டங்கள் அவர்களிடமுள்ளன.
லிபரல் கடந்த நான்கு ஆண்டுகளின் தொடர்ச்சியாகவே தங்களது திட்டங்களை முன்வைத்துள்ளன. முதன் முதலாக வீடு வாங்குவோருக்கு 10 வீத மூலதனத்தை வட்டியில்லா கடனாக வழங்கல், துப்பாக்கிக் கட்டுப்பாடு, மருத்துவ சேவைகள் அதிகரிப்பு, முதல் பதினைந்தாயிரத்துக்கு வரி கட்டத் தேவையில்லை, சுற்றுச் சூழல் மாசுபடுதலைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள், பல்கலைக் கழக கல்விக் கடனைச் செலுத்ததில் சலுகைகள், இலவச மருந்து வழங்குதல், குடிவரவாளர்களை அதிகரித்தல் போன்ற திட்டங்களை முன்வைத்துள்ளது. மக்கள் நலன் இவர்களின் திட்டங்களில் தெளிவாகத் தெரிகின்றன.
என்.டி.பிக் கட்சியின் திட்டங்கள் மக்களை நலனைக் கருத்திற கொண்டுள்ளன என்றாலும், என்.டி.பிக் கட்சியால் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க முடியுமா? கடந்த தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி, ரூடோ அலையில் அடிக்கப்பட்டு ஏனோ? தானோ என கரை ஓதுங்கினர். வழமை போல் கடந்த தேர்தலின் பின் இரு கட்சிகள் புதிய தலைவர்களை தேர்ந்தெடுத்தன. என்.டி.பிக் கட்சியின் தலைவராக சீக்கியரான Jagmeet Singh தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சீக்கியரின் மத அடையாளமான தொப்பியை தொடர்ந்து அணிந்து வருகின்றார். இதனை என்.டி.பிக் கட்சியினுள் பலர் வரவேற்கவில்லை. பலர் இதனால் இம் முறை தேர்தலில் போட்டியிடவில்லை. கியுபெக்கில் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்ற இவரை Cut your turban off என இவரைப் பார்த்துக் கூறியுள்ளனர். கியுபெக்கில் ஜக் லேற்றன் தலைவராக இருந்த பொழுது 55 ஆசனங்களை என்.டி.பி வென்றிருந்தது. கடந்த தேர்தலில் 14 ஆசனங்களை வென்றிருந்தது. இம் முறை இரு ஆசனங்களை வெற்றி பெறுவதே மிகக் கடினம் .
தமிழர்கள் மத்தியில் பல இடது சாரி அமைப்புக்கள் உள்ளன. பலர் தொழிற்சங்க நிர்வாகிகளாக, ஆதரவாளர்களாகவுள்ளனர். கட்சியின் தலைவராகவும் ஒரு தமிழர் இருந்துள்ளார். அப்படியிருந்தும் ஒரு தமிழரும் போட்டியிடவில்லை. கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானவர்கள், கட்சி சார்பாக போட்டியிட்டுள்ளனர். அமைப்புக்கள் என்.டி.பி க் கட்சி போட்டியிட ஒரு தமிழரையும் வளர்த்தெடுக்கவில்லை. என்.டி.பிக கட்சி முறையாக தமிழர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்படவில்லை.
இம் முறை என்.டி.பிக் கட்சி வழமைக்கு மாறாக மேலும் குறைந்த ஆசனங்களையே பெறும். கட்சி அந்தஸ்தை காப்பாற்ற போராட வேண்டிய நிலையில் உள்ளது. கிறீன் கட்சி 2-4 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது.
கொன்சவேற்றிவ் கட்சி லிபரல் அரசின் முறை கேடான விடயங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்த தவறிவிட்டது, திறமையான தலைவர் இன்மை இதற்கு ஒரு காரணம். இவர்களிலிருந்து பிரிந்த மக்கள் கட்சி இவர்களது வாக்கு வீதத்தை குறைக்கலாம். ஆனால் அதன் பாதிப்பு 5 வீதமாகத்தானிருக்கும். கட்சித் தலைவரைப்பற்றிய ‘காப்புறுதி முகவரில்லை’ என்ற பிரச்சாரம் பெரிய அளவில் அவரை பாதிக்கவில்லை. கட்சியையும் பாதிக்கவில்லை.
லிபரல் கட்சி கடந்த நான்கு ஆண்டுகளில் முறையான நல்லாட்சியை நடாத்தியது எனக் கூற முடியாது. நப்ரா பேச்சுவார்த்தைகள், புதிய ஒப்பந்தம் இவர்களது சாதனை. டொனால்ட் ரம்ப் போன்ற எப்பொழுதும், எப்போதும் மாறக் கூடிய ஒரு தலைவருடன் பேச்சுவார்த்தை என்பது சவால் நிறைந்தது. அவ் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகள் அவரை கனடா மேல் ஆட்சி செய்ய முடியாமல் தடுத்தமை லிபரல் அரசின் வெற்றி என்றால் மிகையாகாது. எஸ்.என்.சி முறைகேடுகள், கியுபெக்கில் லிபரல் கட்சிக்கு செல்வாக்கை கூட்டியுள்ளன. இவர்கள் செய்த நல்ல விடயங்கள், இவர்களுக்கு எதிராகவும், தவறான விடயங்கள் இவர்களுக்கு ஆதரவாகவும் மாறியுள்ளன.
தேர்தலுக்கு முன்பாக லிபரல் கட்சித் தலைவர் ஆசிரியராக இருந்த போது கறுப்பு வேடமேற்றார் என்ற குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பிரசித்தமானது. ஆனாலும் பல கேள்விகளை எழுப்புகின்றன. இவர் லிபரல் கட்சித் தலைவராக போட்டியிட்ட போது ஏன் இவை முன்வைக்கப்படவில்லை. கடந்த தேர்தலிலும் இவை முன்வைக்கப்படவில்லை. கொன்சவேற்றிவ் கட்சியே இதனை வெளிக்கொணர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை மக்கள் நிராகரித்துள்ளனர் எனத் தெரிகின்றது. ஆரம்பத்தில் சல சலப்பை ஏற்படுத்தினாலும், பின்னர் இது அடங்கிவிட்டது. இவ் விடயம் கண்டிக்கப்பட வேண்டிய விடயம். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் இவர் தன்னை ஒரு இனவாதியாக காட்டிக் கொள்ளவில்லை. தனது அமைச்சரவையில் பெண்களுக்கு சம பங்கு கொடுத்துள்ளார்.. கறுப்பினத்தவர் குடிவரவு அமைச்சர். சீக்கியர் பாதுகாப்பு அமைச்சர். சிறுபான்மையினத்தவர்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
கொன்சவேற்றிவ் கட்சி தனது கொள்கைகளை முன்னிலைப்படுத்தாமல், தனிப்பட்ட தாக்குதல்களுக்கே முக்கியத்துவமளித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றது. என்.டி.பிக் கட்சி என்ன செய்வது என்று தெரியாமல் நகர்கின்றது. ரூடோ மக்களுடன் முறையாக உரையாடுகின்றார். மன்னிப்புக் கேட்பதிலாகட்டும், தனது தவறுகளை ஏற்றக் கொள்ளும்போதும் இவர் மக்களிடம் நெருங்கி வருகின்றார். இவ்வகையில் ஓரளவிற்கு நம்பிக்கையளிப்பது லிபரல் கட்சியே.
ரதன்