கனேடிய தமிழர் பேரவையின் தமிழர்களுக்கு எதிரான வழக்குகள்!

கனேடிய தமிழர் பேரவையின் தமிழர்களுக்கு எதிரான வழக்குகள்!

மனிதாபிமான உதவி கோரி கனேடிய  தமிழர் பேரவையை நாடிய  பெண் ஒருவர் அங்கு பணியாற்றிய ஒருவரால் பாதிக்கப்பட்டுள்ளதான குற்றச்சாட்டு  விடயம் எமது  கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 2015ம் ஆண்டு இந்த விடயம் எமது  கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போது இது தொடர்பில் எனக்கு வழங்கப்பட்ட பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டவரின்   ஆதாரங்களை ஆராய்ந்து பாரத்ததோடு பாதிக்ப்பட்டவரின் கருத்துக்களையும் கேட்டறிந்தேன்.இந்த விடயத்தின் பாராதூரமான தன்மையினையும் இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளையும் கருத்தில் கொண்டு இந்த விடயம் குறித்த அந்த அமைப்பின் நிர்வாகத்துக்கு கொண்டுபோகுமாறு கேட்டிருந்தேன் .

பாதிக்கப்பட்ட  பெண் தரப்பினர் அவருக்கு  இடம்பெற்றது போன்ற சம்பவங்கள் இனியும் தொடரக் கூடாது என்றும் அதனை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் கூறியிருந்தார்.

இந்த விடயம் குறித்த விடயங்கள் கனேடிய  தமிழர் பேரவை அன்றைய  தலைவர் ராஜ் தவராஜசிங்கம் அவர்களுக்கு அனுப்பிவைக்க ஆவானசெய்தேன்.. ஆனாலும் 2015 ம் ஆண்டு இதற்கான  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .
.
அந்தக் காலப் பகுதியில் பல்வேறு தனி நபர்களுக்கும் இந்த  விடயம் குறித்து தெரியப்படுத்தப்பட்டிருந்தது. அவர்களும் கனேடியத் தமிழர் பேரவையை தொடர்பு கொண்டு விளக்கம் கோரிய போது அதற்கான சரியான பதிலை கனேடியத் தமிழர் பேரவை வழங்கவில்லை. மாறாக இந்த விடயங்களை தெரியப்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதற்கான ஆதாரங்களும் தற்போது சிலரால் பகிரப்பட்டுள்ளன.கனேடியத் தமிழர் பேரவை கனடாவில் வாழும் தமிழ் மக்களுக்கும் கனேடிய அரசுகள் மற்றும் பொது அமைப்புகளுக்கும் இடையிலான உறவுப் பாலமாக விளங்கி வரும் ஒரு முக்கியமான அமைப்பு.
அந்த அமைப்பு மக்களினதும் அரசாங்கங்களினதும் நம்பிக்கையினை இழக்கும் நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக நாம் இந்த விடயத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு தயங்கினோம்.
ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் எம்மைப் போன்ற பல்வேறு ஊடக நிறுவனங்களையும் சமூக ஆர்வலர்களின் உதவியினையும் தொடர்ச்சியாக நாடிக் கொண்டிருந்தனர்.அந்த பெண்ணின் தொடர் முயற்சிகளின் பலனாக சமூக ஆர்வலரான இளைஞர்கள் சிலர் இந்த விடயத்தில் நேரடியாக தம்மை ஈடுபடத்த தீர்மானித்தனர்.முதல் கட்டமாக கனேடியத் தமிழர் பேரவையுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ள சமூகத்தின் மதிப்பு மிக்க பாராளமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் உதவியை அவர்கள் நாடினார்கள் .
அவர் மூலமாக கனேடியத் தமிழர் பேரவையை தொடர்பு கொண்டு இந்த  விடயம் குறித்து ஆராயுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் குறித்த ஊழியர் தற்போது பணியில் இல்லை , என்றும்  ஹரி ஆனந்தசங்கரிக்கு  கனேடியத் தமிழர் பேரவையின் தலைவர் மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார்.. மேலும் அதற்குரிய சுயாதீன விசாரணை செய்யக்கூடிய நிறுவங்களின் பெயர்களை சிபாரிசு செய்யுமாறும் கேட்டிருந்தார் .அவர் பணியில் இல்லை என்று அவர்கள் அறிவித்தமையின் பின்னரும் குறித்த ஊழியர் கனேடியத் தமிழர் பேரவையின் சார்பில் செயல்பட்டமை ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதனால் தாம் ஏமாற்றப்பட்டதாகவும் தமது கோரிக்கைகளை கனேடியத் தமிழர் பேரவை ஊதாசீனம் செய்துள்ளதாகவும் கருதிய அந்த இளைஞர்கள் இந்த விடயத்தை change.org  என்ற தன்னார்வ தொண்டு நிறுவன இணையத் தளத்தின் ஊடாக பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.இந்த முறைப்பாடு பகிரங்கப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அமைப்பின் செயல்பாடுகள் மீது அதிருப்தி கொண்ட பலர் தமது ஆதரவை இந்த முறைப்பாட்டிற்காக வெளிப்படுத்தி வருகின்றமை சுட்டிக்காட்டத் தக்கது.எனினும் இந்த விடயம் பகிரங்கப்படுத்தப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாத கனேடியத் தமிழர் பேரவை ,இதனை பகிர்கின்றவர்களுக்கு எதிராக , அவதூரு சட்டம் என்றால் என்ன என்று பொதுமக்களுக்கு விளக்குவதன் மூலம் ஒரு விதமான பயத்தை ஏற்படுத்தினார்கள் .சட்ட நடவடிக்கை தொடர்பான  எச்சரிக்கையினை பகிரங்கமாக தமது முகநூலிலும் வெளிப்படுத்தியிருந்தார்கள்

அதனை தொடர்ந்து இந்த முறைப்பாட்டை பதிவேற்றிய இளைஞர் மீதம் அந்த அமைப்பு Legal Notice அனுப்பியிருந்தமை இங்கு குறிப்பிடப்பட வேண்டியது அவசியமாகின்றது.
இதனை அடுத்து தமிழ் வண் தொலைக்காட்சி நிலையம் என்னை அணுகி இந்த விடயம் குறித்த நேர்காணல் ஒன்றை பெற்றிருந்தது.

அந்த நேர்காணலின் போது கடந்த காலங்களில் இடம்பெற்ற முக்கியமான சில விடயங்களையும் இந்த அமைப்பின் செயல்பாடுகளில் அதிருப்தி நிலை தோன்றியதன் காரணத்தையும் நான் அந்நேர்காணலில்  பதிவு செய்துள்ளேன்.

மிக முக்கியமாக பொது அமைப்பாக தமிழர்களுக்கான அமைப்பாக தன்னை அடையாளப்படுத்தி வரும் கனேடியத் தமிழர் பேரவை தனது ஊழியர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டை  விசாரணை செய்யத் தவறியமையும் சுயாதீனமான முறையில் விசாரணையினை நடத்தி உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரியவர்களுக்கு எதிராக legal notice அனுப்ப தீர்மானித்தமையும் எனக்கு கடும் கவலையை  ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்கான அமைப்பு தமிழ் மக்கள் பெயரால் கனேடிய அரசாங்கங்களிடம் இருந்து நிதி உதவிகளை பெற்று வரும் அமைப்பு அதே தமிழர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றே நான் கருதுகின்றேன்.

இது விடயமாக சட்டநடவடிக்கை எடுத்த உடனேயே இயக்குனர் டாண்டன் துரைராஜவிடம் இது தேவையற்றது , இதை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று அவருக்கு நெருக்கமானவர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தேன் . இது விடயமாக பேசியபோது ” இப்படியான வழக்குகளுக்காக அமெரிக்காவில் இரு வைத்தியர்கள் இரண்டு இலட்சம்  டொலர்களை தமக்கு தருவதாகவும் , கோட்டில் சந்திப்போம் என்றும் , பேசி தீர்ப்பதற்க்கான வழியை வழமையான அவரது கடும் போக்கு பாணியில் மறுத்துவிட்டார்.

இந்த அமைப்பு தனிமனிதரால் கட்டுப்படுத்தப்படுவதும் அவருடைய விருப்பத்திற்கு அமைவாக தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதும் ஆரோக்கியமற்றது என்பதை தமிழ் வண் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தெளிவுபடுத்தியிருந்தேன்.

கனேடியத் தமிழர் பேரவையின் இயக்குனராக செயல்படும் திரு. டான்டன் துரைராஜா என்பவர் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகள் கனேடியத் தமிழர் பேரவை என்ற மிக முக்கியமான அமைப்பின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி வருவதாக நான் கருதுகின்றேன். 10 வருடங்களுக்கு மேலாக ஒருவர் தொடர்ச்சியாக ஒரு அமைப்பை நிர்வகிக்கும் போது ஏற்படும் பாரதூர விளைவுகளையும் சமூகமாக நாங்கள் எதிர்வு கொள்ளவேண்டியிருக்கின்றது.

ஏற்கனவே கனடாவில் வழமையாக நடத்தப்பட்டு வரும் மாவீரர் தினத்திற்கு மாற்றாக மற்றுமொரு மாவீரர் தின நிகழ்வை  நடத்த வேண்டும் என்று அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் அது எவ்வாறான தாக்கங்களை எமது சமூகத்தில் ஏற்படுத்தியது என்பது குறித்தும் எனது நேரடியான அனுபவங்களையும் நான் வெளிப்படுத்தியிருக்கின்றேன். மாவீரர்களின் பெயரால் தமிழ் சமூகத்தை கூறுபோடும் இந்த முயற்சி இறுதியில் தோல்வியடைந்தமையை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இது தொடர்பாக தற்போது சர்ச்சையை உருவாக்கியிருக்கும் முன்னாள் பேச்சாளர் தனது சொந்த வார்த்தையால் டான்டன் துரைராஜவும் , முன்னாள் தலைவர் ராஜ் தவரட்ணசிங்கமும் , நிர்வாக சபையின் கருத்துக்கு எதிராக, அவர்களது ஆதரவு இல்லாமல்  2 வது மாவீரர் நாளை நடத்தியிருந்தார்கள் . இதற்கு அவர்  தனது எதிர்ப்பையும் தெரிவித்திருந்தார் .

மேலும் கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்திற்கு பதிலாக மற்றுமொரு வர்த்தக சம்மேளனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று அவர் முனைப்புகளை மேற்கொண்டதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இந்த முயற்சி வெற்றியளிக்காத நிலையில் மாற்று உபாயங்களையும் இவர் பல தடவை  முன்னெடுத்தார் .

அதன் தொடர்ச்சியாக  அமைச்சர் மங்கள சமரவீரவின் விசேட அழைப்பின் பேரில் இலங்கைக்கு கனேடியத் தமிழர் பேரவை விஜயம் மேற்கொண்ட போது கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளனம் , கனேடிய தமிழ் மருத்துவ அமைப்பு  பிரதிநிதிகள் சிலரையும் துணைக்கு அழைத்துச் சென்று அங்கு சந்திப்புகளை இவர்கள் மெற்கொண்டிருந்தமை சுட்டிக்காட்டபட வேண்டியது. இது வர்த்தக சம்மேளனத்திற்கும் அந்த வியஜத்தை மேற்கொண்ட அதன் பிரதிநிதிகளுக்கும் பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்தியிருந்தமையும் நினைவு கூரத்தக்கது.

தனது தலைமையின் கீழ் கனேடிய தமிழர்  சமூகத்தை கொண்டு வர வேண்டும் என்று அவர் பேரவாக் கொண்டு செயல்படுவதன் காரணமாகவே இன்று இவ்வாறான இக்கட்டான நிலை கனேடியத் தமிழர் பேரவைக்கு ஏற்பட்டுள்ளதாகவே கருதப்படுகின்றது.

அவருடனான எனது அனுபவங்களை மட்டுமே நான் வெளிப்படுத்தியிருந்தேன் .அந்த நேர்காணலுக்கு சமூக நலன் விரும்பிகள்  பலரும் ஆதரவை தந்திருந்தார்கள்

தனி மனிதர்கனோடு பேசித் தீரக்ப் படவேண்டிய பிரச்சினைகளை சட்டத் தரணிகள் ஊடாக அணுகி இந்த பிரச்சினையை பூதகரமாக்கியமைக்கான முழுமையான பொறுப்பினையும் கனேடியத் தமிழர் பேரவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வெளிக்கொணர்ந்தவருக்கு  எதிராக Legal Notice  அனுப்பிய  பின்னர்  இந்த விவாதங்களை தோற்றுவித்த விடயம் குறித்து தனியார் புலனாய்வு அமைப்பின் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக கனேடியத் தமிழர் பேரவை தற்போது  அறிவித்துள்ளது

ஆனால் அந்த விசாரணை எவ்வாறு நடைபெறுகின்றது என்பது மிகப் பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சமூக பரப்பில் உரையாடியவர்களுக்கும் , வெளியில் கொண்டுவந்தவர்களுக்கும் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று பயமுறுத்தியதன் பின்னர்   ,எப்படி  பாதிக்கப்படடவர்களோ அல்லது அவர்கள்  தரப்பினரோ  வெளியில் வருவார்கள் ?

விசாரணை நடத்தப்படுவதான அறிவித்தல் வெளியிடப்பட்ட சில நாட்களில்   தமது அமைப்பின் மீது அவதூறு பரப்புகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நிதி சேர்  கூட்டத்தை அழைக்கப்பட்ட ஆதரவாளர்களுடன் இந்த அமைப்பு நடத்துகின்றது.
இவற்றின் மூலமாக அந்த அமைப்பு தமிழ் சமூகத்திற்கு எவ்வாறான செய்தியினை சொல்ல விரும்புகின்றது.
இந்த அமைப்பில் ஜனநாயகத் தன்மையை  உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எமது அடிப்படையான கோரிக்கை. இந்த அமைப்பை அழிவுப் பாதையில் இருந்து மீட்டு எடுத்து ஜனநாயக வழியில் தெளிவான சிந்தனையும் மக்கள் நல நோக்கங்களும் கொண்ட இயக்குனர்கள் வழிநடத்தும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த அமைப்பு தனக் கான பொறுப்புக் கூறல்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் குரல் வளைகளை நசுக்கும் வகையிலான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும். தம்மீதான விமர்சனங்களை உரிய வகையில் எதிர் கொள்வதும் குற்றச்சாட்டுக்களை பக்கச்சார்பற்ற வகையில் சுயாதீனமாக விசாரணை செய்வதும் அவசியம் என்றே நாம் கருதுகின்றோம்.
ஒரு புறம் சுயாதீனமான விசாரணைகள் ஆரம்பித்துக்கொண்டு மறுபுறம் அக் குற்றச்சாட்டை கொண்டுவந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு நிதி சேர்ப்பதும் தீர்வாகுமா ?
எனவே தான் சமூகத்தில் அக்கறை  கொண்டவர்கள் இந்த அமைப்பு தொடர்ந்தும் எமது சமூகத்திற்கும் தாயக மக்களுக்கும் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களும் இந்த அமைப்பினை நேர்வழிக்கு கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும் என்பதே எனது  பேரவா.
எமது சமூகம் இன்று எதிர் நோக்கியுள்ள சவால் மிக்க சூழலை எதிர் கொள்வதற்கும் காத்திரமான பங்களிப்பை வழங்குவதற்கும் உதவிகளை வழங்க கூடிய கனேடிய  தமிழர் பேரவையை காப்பாற்ற அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
நவஜீவன் அனந்தராஜ்