உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது – டிரம்ப்

தென் சீனக்கடல் பிரச்சினையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இதற்கு மத்தியில் சீனா தனது ராணுவத்திற்கு செலவிடும் தொகையை 7 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது 152 பில்லியன் டாலர் வரை சீனா ராணுவத்திற்கு செலவு செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோர்ரிசனுடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-  பிற எந்த நாடுகளை விடவும் வேகமாக ராணுவ பலத்தை சீனா பன்மடங்கு அதிகரித்து வருகிறது. எனவே, வெளிப்படையாகவே சீனா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது. உண்மையில் அவர்கள் அமெரிக்காவின் பணத்தையே பயன்படுத்தியுள்ளனர்.

நமது அறிவுசார் சொத்துக்களையும் சொத்து உரிமையையும் சீனா திருடி வருகிறது. எனக்கு முந்தைய அதிபர்கள் இதற்கு அனுமதித்தனர். ஆனால், நான் அவ்வாறு அனுமதிக்கப் போவது இல்லை.
அமெரிக்க அதிபர்கள் அமெரிக்காவிடமிருந்து ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர்களைச் சீனா கொண்டு செல்வதை அனுமதித்தனர். சீனா நம் அறிவுசார் சொத்துரிமையை அபகரிப்பதை அவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தனர். நான் அப்படியல்ல. சீனாவுடன் நெருக்கமாக பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால்,  சீனா இறுதியில் ஒப்புக்கொள்ள மறுத்தது. இதனால், நான் உங்கள் பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரியை விதிக்கப்போகிறேன் என்று கூறினேன். அதன்படியே வரி அதிகரிக்கப்பட்டது. இது மேலும் கூடும்” என்றார்.