விமர்சகர் விருது – சிறந்த திரைப்படத்துக்கான கே.எஸ். பாலச்சந்திரன் நினைவு விமர்சகர் விருதுக்கு அனுசரணை வழங்கிய இகுருவி ஊடகம்

13வது சர்வதேசத் தமிழ்க் குறும்படப் போட்டி முடிவுகள்

கனடா – ரொறன்ரோவில் சுயாதீன கலை, திரைப்பட மையமும் தாய்வீடு பத்திரிகையும் இணைந்து நடத்திய 13வது சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழா ஜூலை 7, 2018 சனிக்கிழமை மாலை Warden / Lawrence சந்திப்புக்கருகேயுள்ள இரட்சணிய சேனை மண்டபத்தில் நடைபெற்றது. குறும்படப் போட்டிக்கு ஈழம், தமிழகம், கனடா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அவற்றுள் தெரிவு செய்யப்பட்ட  குறும்படங்கள் நடுவர் குழுவின் பார்வைக்குச் சென்றன.

சுயாதீன கலை, திரைப்பட மையமும் தாய்வீடு பத்திரிகையும் இணைந்து மாற்று ஊடகத்துக்கு அளப்பரிய சேவையாற்றுவோருக்கு ‘அகேனம்’ விருதினையும் இத்திரைப்பட விழாவன்று வழங்கிவருகின்றன. ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உணர்வுகளை, அவற்றின் வரலாற்றை, சமகால நிலைமையை திரைப்படங்கள் வழியாக வெளிப்படுத்தி, ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருபவரும் ஈழத்தின் வடக்கு, கிழக்கில் திரைத்துறைப் பயிற்சி முகாம்களை நடத்துவதில் முன்னின்றவரும்  அண்மைக்காலத்தில் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் ‘உரு’ குறும்படத்தின் இயக்குநரும்  விரிவுரையாளரும்  பிரதி எழுத்தாளருமான   திரு. ஞானதாஸ் காசிநாதர் அவர்களுக்கு இம்முறை அகேனம் விருது வழங்கப்பட்டது. திரு. ஞானதாஸ் காசிநாதர் சார்பில் திரு. சிவஹரன் ராம் விருதினைப் பெற்றுக்கொண்டார்.

சிறப்புக்காட்சியாக ஈழத்திலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட ‘வெடி மணியமும் இடியன் துவக்கும்’, ‘தர்மா’ ஆகிய படங்கள் காண்பிக்கப்பட்டன.

அகேனம் விருது பெறுநர் இயக்கிய ‘Under Pressure’ குறும்படமும் காண்பிக்கப்பட்டது.

விருது விபரம்

சிறந்த ஒளிப்பதிவு – யாதவராயர் இராமநாதன்  நினைவு விருது
(அனுசரணை – திரு. இராமநாதன் குடும்பம்)
– மணிமாறன் (நெய்தல் – இந்தியா).

சிறந்த படத்தொகுப்பு –  குமார் மூர்த்தி நினைவு விருது
(அனுசரணை – திரு. நிமால் விநாயகமூர்த்தி)
– மதுரன் இரவீந்திரன் (விடமேறி – ஈழம்).

சிறந்த நடிகர்  – என்.கே. ரகுநாதன் நினைவு விருது
(அனுசரணை – திரு. வின்ஸ் சின்னத்துரை)
– அஜந்தன் (வேடம் – பிரான்ஸ்).

சிறந்த திரைக்கதை –  எஸ். கதிர்காமநாதன் நினைவு விருது
(அனுசரணை – திரு. அ. கந்தசாமி)
– தினேஷ் கோபால் (மணல் நாடு – கனடா).

சிறந்த இயக்குநர் – கவிஞர் செழியன் நினைவு விருது
(அனுசரணை – திரு. வின்ஸ் சின்னத்துரை)
– பிரதீபன் (சருகுவெளி – ஈழம்).

விமர்சகர் விருது – சிறந்த திரைப்படத்துக்கான கே.எஸ். பாலச்சந்திரன் நினைவு விமர்சகர் விருது
(அனுசரணை – ஈ-குருவி)
– சருகுவெளி (ஈழம்).

சிறந்த திரைப்படம் – தோழர் சண்முகநாதன் நினைவு விருது
(அனுசரணை – திரு. சண்முகநாதன் குடும்பம்)
– சருகுவெளி (ஈழம்).

சிறந்த திரைப்படத்துக்கு ஒரு இலட்சம் இலங்கை ரூபாவும் சான்றிதழும் ஏனைய பிரிவுகளுக்கு 250 கனடிய டொலரும் சான்றிதழும் உரியவர்களுக்கு 60 நாளுக்குள் அனுப்பிவைக்கப்படும்