திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது- பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப விழாவின் உச்ச கட்டமாக இன்று 6 மணிக்கு 2, 668 அடி அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்தையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது. பக்தர்கள் தரிசனத்துக்கும் பரணி தீபம் கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தி கோ‌ஷம் முழங்கி தீபத்தை தரிசித்தனர்.
 பக்தர்கள் ‘‘அரோகரா அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா’’ என்று பக்தி கோ‌ஷம் முழங்கினர். பவுர்ணமி நாளை காலை 11.10 மணிக்கு தொடங்கி நாளை மறுதினம் காலை 11.05 மணி வரை இருக்கிறது. இதனால் பக்தர்கள் இன்றும் நாளையும் என 2 நாட்கள் கிரிவலம் செல்வார்கள்.