டக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்ரிக்கு அமைச்சுப் பதவி!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.

கண்டி மகுல்மடுவ மண்டபத்தில் இன்று இடம்பெற்ற புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர்கள் இருவரும் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.

அதன்படி, டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு 32,146 வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றிருந்தார்.

இவர் கடந்த இடைக்கால அரசாங்கத்திலும் கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல், நீதி அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

இவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.