கூட்டு தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு என்ன?

கூட்டு தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு என்ன?

தர்சினி உதயராஜா

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில், திரு. விக்னேஸ்வரன் அவர்கள் “தமிழ் மக்கள் கூட்டணி” என்கிற புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். அவருடன் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து பயணிக்கவேண்டும் என்கிற கோரிக்கை பலராலும் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், தங்கள் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகம் ஒன்றிடம் அண்மையில் தெளிவுபடுத்தியிருந்தார். அவரின் நேர்காணல் சுருக்கமாக இங்கு தரப்படுகிறது.

  • உங்கள் கட்சி இதுவரை மக்களுக்கு செய்த உதவிகள் என்ன?

புலம் பெயர் தமிழ் மக்களின் பங்களிப்போடு பாதிக்கப்பட்டமுன்னாள் போராளிகள் கிட்டத்தட்ட 1000 பேருக்கு உதவி, சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பண உதவி

 

  • உங்கள் அரசியல் செயற்பாடுகள் அனைத்து பகுதிகளுக்கும் பரவலாக்கப்பட்டுள்ளதா ?

ஆம், அடுத்த தேர்தலில் அதனை உணரலாம்.

 

  • புதிய கட்சிகளின் உருவாக்கம் ஏன் ?

முன்னணி புதிய கட்சி கிடையாது.  ஆனால் கூட்டமைப்பின் கொள்கைகளுடன் முரண்படும் தரப்புக்கள் ஒன்றாக செயற்படலாம். புதிய கட்சிகள் தேவையில்லை.

 

  • திரு. விக்னேஸ்வரன் அவர்கள் அனைவருடனும் சேர்ந்து பயணிக்க விரும்பும் போது, உங்கள் பதில் என்ன ?

 

ஒரு நாட்டில் இரு தேசங்கள் என்று விக்னேஸ்வரன் ஐயா பேசிய காலத்திலிருந்து அவரின் தலைமையை ஏற்று, அவரோடு சேர்ந்து பயணிக்கவே விரும்பினோம். இன்று, தமிழர் தேசிய அரசியலுக்கு ஒரு திருப்பு முனையைக் கொடுக்கக்கூடிய அளவுக்கு சாதகமாக நிலைமை உருவாகியுள்ளது. விக்னேஸ்வரன் ஐயா, எங்களுடன் இணைந்து கொள்ள அழுத்தங்களை மக்கள் கொடுக்க, தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். அதற்கு முழு ஒத்துழைப்பையும் நான் கொடுக்கிறேன்.

அவர்மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டபோது, மக்கள் எதிர்ப்பை திரட்டி அதனை முறையடித்தோம்.

இதற்கு முன்பு, முன்னைய உள்ளூராட்சி தேர்தலில் ஆனந்தசங்கரியின் உதயசூரியனின் கீழ் போட்டிபோட முடியாது என்று தமிழ் மக்கள் பேரவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் தீர்மானித்திருந்த அடிப்படையில் – முன்னணியும், EPRLFஉம் இணைந்து – பொதுச்சின்னம் (மகர யாழ்), பொதுப்பெயரின் கீழ், EPRLFக்கு சமப்பங்கும், தலைமைத்துவமும் வழங்கப்பட்டு, முக்கிய பிரமுகர்களின் அத்தாட்சியுடன் எழுத்துவடிவில் MOU ஒன்று தயாரிக்கப்பட்டு பேசப்பட்டது.

2001 இல் கூட்டமைப்போடு 4 கட்சிகள் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டன. இதனை மீறி – தமிழ் தேசம், அதன் இறைமையை அங்கீகரிக்காத 13ம் திருத்த சட்டத்தை தீர்வாக ஏற்றுக்கொள்ள, எம்மைத் தவிர மற்றைய 3 கட்சிகளும் முடிவெடுத்தன. நாம் எதிர்ப்பு தெரிவித்தபோது, சம்பந்தர் எதுவும் செய்யமுடியாது, விலகும்படி கூறினார்.

அடிப்படைக் கொள்கைகளில் மாற்றம் செய்யும் போது, அனைத்து தரப்பினரும் இணங்கவேண்டும் என்று அப்போது குறிப்பிடப் படவில்லை. அதனால், எதுவும் செய்யமுடியாது விலகினோம். அதே பிழையை மீண்டும் செய்யாமல் இந்தமுறை அதனை குறிப்பிட்டு தயாரிக்கப்பட்ட MOUயை எடுத்துக்கொண்டு, புதுடெல்லி சென்று திரும்பி வந்த பின்பு, சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் – உங்களுடன் கூட்டுக்கு வரமுடியாது. வருவதாயின், உதய சூரியனுக்கு கீழ் தான் வரமுடியும் என்று கூறியிருந்தார்.

கடந்தகால அனுபவங்களின்படி, எமது இலக்கை அடைய பிழையான தரப்பை சேர்க்கமுடியாது. முக்கியமான கட்டங்களில் முடிவுகள் எடுக்கும் சந்தர்ப்பங்களில் குழப்பங்களை ஏற்படுத்தி இலக்கை அடையமுடியாத நிலைதான் உருவாகும். ஆகவே, விக்னேஸ்வரன் ஐயா எம்மோடு சேர்ந்து பயணிக்க வேண்டும்.

 

  • இதில் தமிழ் மக்கள் பேரவையின் முடிவு அப்போது என்னவாக இருந்தது?  

தேர்தல்  அரசியலில்  ஈடுபடாமல்  மக்கள்  இயக்கமாகவே    செயற்படவேண்டும்  என்கிற  விக்னேஸ்வரன்  ஐயாவின்  முடிவினடிப்படையில், அவர்கள் இதில் தலையிடவில்லை.

 

  • மக்கள் நலனுக்காக கூட்டமைப்பை விமர்சிக்கும் அனைவரும் ஏன் ஒன்றிணைத்து செயற்படக்கூடாது ?

விக்னேஸ்வரன் ஐயா கூட்டமைப்பை விமர்சித்தார். அவரின் விமர்சனம் சரியாக இருந்த காரணத்தால் அவரோடு சேர்ந்து பயணிக்கவே விரும்பினோம்.  நாங்கள் ஐங்கரநேசனையோ. அனந்தி சசிதரன். அருந்தவபாலன் போன்றவர்களையோ இணைப்பதில் எந்த மறுப்பும் சொன்னதில்லை. EPRLF, கூட்டமைப்பை  விமர்சித்த போதும், கொள்கைக்கு அமைவாக அவர்களும் செயற்படவில்லை.

நாம் EPRLF அமைப்பை சேர்க்கக்கூடாது என்று கூறுவதற்கான காரணம்:

கூட்டமைப்பு கொள்கை ரீதியாக மாறாக செயற்படுகிறது. அரசைக் கண்மூடிக்கொண்டு ஆதரிக்கிறது. உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க EPDP, SLFP, UNP போன்ற கட்சிகளுடன் கூட்டுசேர்ந்துள்ளது. (இதனை அந்த நேரத்தில் விக்னேஸ்வரன் ஐயா கண்டித்திருந்தார்.) இவை தான் பிரதானமான குற்றச்சாட்டுக்கள்.

EPRLF வவுனியாவில் தவிசாளர் பதவியைப் பெற அதனையே செய்தது. இரண்டும் ரணிலுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ஆதரவு தெரிவித்தன. அத்துடன் கூட்டமைப்பே செய்யாத வகையில் தாமைரை மொட்டின் ஆதரவுடன் தவிசாளர் பதவிக்கும் EPRLF போட்டியிட்டிருந்தது.

கூட்டமைப்பை தோற்கடிக்கும் எண்ணம் எங்களுக்கு எப்போதும் இருந்ததில்லை. கொள்கை ரீதியாக தமிழ் தேசியத்தை அழிக்கும் விதத்தில்  செயற்படுவதனாலேயே மாற்றுத்தலைமை தேவை என்கிற நிலை ஏற்படுகிறது. ஆகவே அதே பிழையை விடும் அமைப்புகளோடு ஒன்றிணைவதில் அர்த்தம் இல்லை.

கூட்டமைப்பை தோற்கடிக்க இன்னுமொரு கூட்டை தயவுசெய்து உருவாக்க வேண்டாம்.

கொள்கைரீதியாக ஒரு தரப்பு பிழை விடுகிறதென்றால், அந்த கொள்கையை முன்னெடுக்கக்கூடிய நேர்மையாக, உறுதியாக இருக்கக்கூடிய தரப்பைத் தான் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 

  • ஆனால், கூட்டமைப்பு, விக்னேஸ்வரன், முன்னணி என்று பிரிந்து நிற்பது தமிழர் தரப்பை பலமிழக்கச் செய்துவிடுமல்லவா?

 

விக்னேஸ்வரன் ஐயாவுடன் கூட்டுசேர்வதில் எமக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் சுரேஷ் அணியா? நாங்களா? என்று வரும் போது, ஏன் விக்னேஸ்வரன் ஐயா, சுரேஷ் அணியைத் தெரிவு செய்யவேண்டும் ?

2010 இல் இருந்து நாம் கூட்டமைப்பு பற்றியும், சர்வதேசம் தொடர்பிலும் கூறிவந்த எதுவும் பிழைக்கவில்லை. அவரின் பதவியைக் காப்பாற்ற மக்களை அணி திரட்டி போராடியிருந்தோம். இருந்தும், ஏன் எங்களை விடுத்து, கொள்கையை கைவிட்டு செயற்படும் EPRLFவுடன் கூட்டுச்சேர விரும்புகிறார் ? ஏன் இதனை மக்களும், ஊடகங்களும் விக்னேஸ்வரன் அவர்களிடம் கேட்கக்கூடாது ?

இன்றைய தென்னிலங்கை அரசியலில் ரணிலுக்கு கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களின் ஆதரவுடனேயே பெரும்பான்மையைக் காட்ட முடிகிறது. ஆதரவு வழங்குவதாயின், மக்களுக்கு நீங்கள் செய்து காட்டவேண்டும் என்று கூறாமல், கண்ணை மூடிக் கொண்டு நிபந்தனையற்ற ஆதரவை கூட்டமைப்பு வழங்குகிறது.

பூகோள அரசியல் பற்றி பேசும் நாங்கள், மேற்கு நாடுகளுடனும் இந்தியாவுடனும் பேரம் பேசக்கூடிய ஒரு தரப்பாக இருக்கவேண்டும்.  அதற்கு கொள்கையில் உறுதியாக இருப்பது முக்கியம்.

ஆரம்பத்தில் 40 வருட அரசியல் அனுபவங்கொண்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள், ஆனந்த சங்கரியுடன் கூட்டு சேர்வதால் தாம் தோல்வியடைவோம் என்று உறுதியாக தெரிந்தும் போட்டியிட்டார். இந்தியாவின் ஆணையை அவரால் மீறமுடியவில்லை.

இன்று விக்னேஸ்வரன் ஐயா உடல்நலத்துடன் இருக்கும் போது உருவாக்கும் கூட்டு அவர் அரசியலில் இருந்து ஒதுங்கிய பின்பு, பிழையான ஒரு கூட்டாக மாற இயலாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற இன்னுமொரு கூட்டமைப்பை உருவாக்க நாம் துணைபோக தயாரில்லை.

  • தேர்தலில் வாக்குகள் பிளவுபடுவதை தவிர்க்க ஒரு தேர்தல் கூட்டைத் தன்னும் ஏற்படுத்த முடியாதா ?

விக்னேஸ்வரன் ஐயாவுடன் நாங்கள் இணைந்து போட்டியிட்டால் ஒற்றுமையை விரும்பும் மக்கள் எம்மை நிச்சயம் ஆதரித்து தனிப்பெரும் தரப்பாக நாம் வருவோம் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. கூட்டு சேராமல் இருந்தால் இழப்பு எமக்குத் தான். ஆனால், தேர்தலுக்கு பின்பு, நிச்சயம் பிரச்சனை வரும். கூட்டு உடையும். அதனால், எந்த பிரயோசனமும் இருக்கப் போவதில்லை.