ஈழத்தமிழரின் தீர்வுக்கு இந்தியாவோ சர்வதேசமோ கைகொடுக்குமா?

ஈழத்தமிழரின் தீர்வுக்கு இந்தியாவோ சர்வதேசமோ கைகொடுக்குமா?

இலங்கையில் இனங்களுக்கிடையே நிலவுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இந்தியாவோ இல்லையேல் சர்வதேசமோ கைகொடுக்காது!

கைகொடுக்குமென நம்புவது பொருத்தமற்றதாகும். இதுதான் இன்றய யதார்த்த நிலை.

இலங்கை நெருக்கடியானது அங்கு வாழ்கின்ற இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுடனும் விட்டுக்கொடுப்புடனும் மாத்திரமே தீர்க்கப்பட முடியுமே தவிர, சர்வதேசத்தின் நேரடியான பங்களிப்புடனோ அன்றி மறைமுக அழுத்தத்துடனோ தீர்க்கப்பட முடியாததாகும்.

இலங்கையில் முப்பது வருட காலமாகத் தொடர்ந்த யுத்த சூழலில், அயல் நாடான இந்தியாவும் சர்வதேச நாடுகளும் நடந்து கொண்ட முறையை இதற்கான உதாரணமாகக் கொள்ள முடியும்.

இலங்கையில் உள்நாட்டு இனமுரண்பாட்டைத் தீர்த்து வைப்பதில் இந்தியா மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளும் தெரியாததொன்றல்ல.வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் நீண்ட கால இனப்பிரச்சினையானது 1983 ஜுலை வன்செயலுக்குப் பின்னர் நேரடி ஆயுதமோதலாக உருவெடுத்ததன் பின்னர் இவ்விவகாரத்தில் இந்தியாவின் பாத்திரம் பிரதானமானதாக விளங்கியது.

ஜுலைக் கலவரத்தின் பின்னர் இலங்கை மீது இந்தியா மறைமுக இராஜதந்திர அழுத்தங்களை தொடர்ச்சியாகப் பிரயோகித்து வந்தது. ஜுலை வன்செயல்களையடுத்து அன்றைய இந்தியப் பிரதமரான இந்திரா காந்தி தனது சிறப்புத் தூதுவரை கொழும்புக்கு அனுப்பி வைத்து அழுத்தம் கொடுத்தார். அதன் பின்னர் இலங்கை நிலைவரம் தொடர்பாக இந்திரா காந்தி தனது தீர்மானங்களைச் செயல்படுத்தத் தொடங்குவதற்கிடையில் தனது மெய்க்காவலர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகிப் போனார்.

இந்திராவுக்குப் பின்னர் ராஜீவ் காந்தியும் இலங்கை விவகாரம் தொடர்பாக கடினப் போக்கிலேயே செயற்பட முற்பட்டார்.

ஜுலை வன்செயலுக்குப் பின்னர் இலங்கையில் அரசாங்க படையினருக்கும் தமிழர்களுக்குமிடையேயான மோதல் மோசமடையத் தொடங்கியதும், ராஜீவ் காந்தி நேரடியாகவும் மறைமுகமாகவும் அழுத்தம் பிரயோகித்தார்.

ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான அரசாங்கத்தைப் பணிய வைத்து, வடக்கு, கிழக்குத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டுக் கொள்வதற்கு ராஜீவ் அளித்த நேரடி அழுத்தமே அது. அதன் பின்னர் இலங்கை_-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகியமை, இந்திய அமைதிப் படையின் வருகை போன்றனவெல்லாம் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் இந்திய வகிபாகத்துக்கான வரலாற்று ஆதாரங்கள் ஆகும்.

இந்தியப் படையினர் மீது விடுதலைப் புலிகள் போர் தொடுக்கத் தொடங்கியதையடுத்து இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் போக்கு மாற்றமடைந்தது. புலிகள் இயக்கத்தை களத்தில் இருந்து எவ்வாறாயினும் அப்புறப்படுத்த வேண்டுமென்பதே இந்தியாவின் குறியாக இருந்தது. அதனால் இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினை முற்றாகவே புறந்தள்ளப்பட்டுப் போனது. ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னரும் இந்தியாவின் கோட்பாடு மாற்றமடையவில்லை. புலிகளின் ஆயுதப் போராட்டமும் முடிவுக்கு வந்தது.

உள்நாட்டு நெருக்கடித் தீர்வில் மற்றொரு நாட்டின் தலையீடு எவ்வாறான பலாபலன்களை அளிக்குமென்பதற்கு இந்தியாவின் வகிபாகம் எமக்கு நல்லதொரு உதாரணம்.

இலங்கை தமிழர்களின் பிரதானமான பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றைக் காண்பதற்கு சர்வதேசத்தினால் கூட முடியாதிருக்கிறது என்பதை யுத்த முடிவுக்குப் பின்னரான கடந்த பத்தாண்டு காலத்தில் நாமெல்லாம் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கின்றோம்.

இலங்கைத் தமிழர்களுடன் தொப்புள்கொடி உறவைக் கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டின் அழுத்தத்தின் பேரில் கூட இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியா எதனையுமே நகர்த்தவில்லை. மத கலாசார ரீதியில் இலங்கைத் தமிழர்களுடன் பிணைப்பைக் கொண்டுள்ள இந்தியா இவ்விடயத்தில் உருப்படியாக தமிழர்களுக்காக எதனையாவது சாதித்திருக்க முடியும்.

அயல் தேசமோ,சர்வதேச நாடுகளோ இங்கு ஓடோடி வந்து தீர்வுகளைப் பெற்றுத் தரப் போவதில்லை. எமது அரசியல் தலைவர்கள் கூறுவதுபோல் இந்தியா அல்ல எந்த ஒரு நாடும் உதவாது. எமது பிரச்சினைகளை நாமேதான் கூடிப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு விட்டுக்கொடுப்பும், நல்லிணக்கப்பாடும் முதலில் தேவை. தனது இனம் போன்று மற்றைய இனத்துக்கும் மதிப்பளிக்கின்ற உளப்பக்குவம் அவசியம்.

இன்று தோன்றியிருக்கும் நெருக்கடியைப் பொறுத்தவரை வரலாற்றில் அன்றைய பக்கங்களை மீண்டும் புரட்டிப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

இங்குள்ள சிறுபான்மையினருக்கு நெருக்கடி ஏற்படின் பிறதேசங்கள் ஓடோடி வந்து கைகொடுக்குமென முஸ்லீம் அரசியல்வாதி ஒருவர் பொறுப்பற்ற முறையில் பேசியிருக்கிறார். இவர் குறிப்பிட்ட நாட்டின் ராஜகுடும்பத்தினரையும் அனைத்து உயர்மட்டத்தினரையும் நான் நன்கு அறிவேன். அப்படியான மனநிலையில் அவர்கள் இல்லை. மக்களை உருவேற்றி, முட்டாள்களாக்க முற்படும் பேச்சு இது.பல்லின மக்கள் வாழ்கின்ற இந்நாட்டில் இவ்வாறான அறிவுபூர்வமற்ற பேச்சுக்கள் மற்றைய இனங்கள் மத்தியில் வெறுப்பையும் சீற்றத்தையும் தருமென்பதை அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

அயல்நாட்டையும், சர்வதேசத்தையும், புலம்பெயர் தமிழர்களது பொய்யான தரவுகளினால் & நம்பியதன் பலனாக தோல்வியில் முடிவடைந்ததே இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினை விவகாரம்!

பெரும்பான்மை ஆட்சியாளர்களுடன் சந்தர்ப்பம் பார்த்து தோழமையைக் கடைப்பிடித்திருப்பின், தமிழர்களின் பிரச்சினையை அன்றைய காலத்திலேயே தீர்த்துக் கொண்டிருக்க முடியும்.

ஏதோவொரு தேசத்தை நம்பியிருக்கும் மாயையில் இருந்து சிறுபான்மையினம் முதலில் விடுபட வேண்டும் என்பதே கடந்த கால வரலாறு எமக்கு கற்றுத் தரும் பாடம்!

புலோலியூரான் சதாவதானி