ஈழத் தமிழரின் நீதி தேடும் அரசியலில் பத்து ஆண்டுகள். ஓர் உரையாடலுக்கான முன்வரைபு யதீந்திரா

ஈழத் தமிழரின் நீதி தேடும் அரசியலில் பத்து ஆண்டுகள்.
ஓர் உரையாடலுக்கான முன்வரைபு
யதீந்திரா

தன்முன் எழுந்துள்ள சவாலை எதிர்த்து தக்கபடி பதிலளிக்கும் சமூகம்தான் சிறந்த பண்பாட்டை பெற்றிருக்கும் சமூகம்.
– வரலாற்று ஆய்வாளர் டாயன்பி

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு பத்து ஆண்டுகளாகின்றன. இந்த பத்தாண்டுகளில் களத்திலும் புலத்திலும் பல்வேறு செயற்பாடுகள் அரங்கேறியிருக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்த அமைப்புக்கள், அவற்றின் அரசியல் அணுகுமுறைகள் மற்றும் நம்பிக்கைகளை ஒரு புறமாக வைத்துவிட்டு, கடந்த பத்தாண்டு கால செயற்பாடுகளின் அடைவு தொடர்பில் உரையாடலொன்றை ஏற்படுத்துவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
2009இல் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட போது, தமிழர்கள் மத்தியில் – யுத்தத்தின் ரணங்களும் அவநம்பிக்கையும்தான் எஞ்சிக்கிடந்தது. எதை நோக்கிப் பயணிப்பது? – எங்கிருந்து ஆரம்பிப்பது? – என்னும் கேள்விகள்தான் அனைவரையும் அலைக்கழித்தது. இந்த நிலைமை புரிந்துகொள்வதற்கு கடினமான ஒன்றல்ல. மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலத்தை தன்வசப்படுத்தியிருந்த ஒரு ஆயுதவிடுதலைப் போராட்டம் சற்றும் எதிர்பாராத வகையில் நிர்மூலமானபோது, அவநம்பிக்கைகளும் தடுமாற்றங்களும் எழுவது இயல்பே! இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், தமிழரின் அரசியல் முன்னெடுப்புக்கள், உரிமைசார் அரசியல் – என்பதிலிருந்து நீதி தேடும் அரசியலாக உருமாறுகிறது.

இறுதி யுத்தத்தின் போது நிகழ்ந்ததாக கூறப்படும், போர்க்குற்றங்கள் – மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றுக்கான நீதி கோரும் அரசியலாக தமிழர் அரசியல் மாற்றம்பெற்றது. அந்த நீதி தேடலின் ஒரு அங்கமாகவே அரசியல் உரிமைகள் பார்க்கப்பட்டன. நான் இவ்வாறு கூறுவதற்கு ஒரு காரணமுண்டு. 2009வரையில் தமிழ்த் தேசிய அரசியல் என்பது யுத்த வெற்றியில் மையம் கொண்டிருந்தது. தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுத்தல் என்பது யுத்த வெற்றியின் விளைவான ஒன்றாகவே பார்க்கப்பட்டது. அந்த யுத்தம் தோல்வியில் முடிவடைந்த போது, யுத்தத்தின் விளைவுகள் மட்டுமே தமிழர்களிடம் எஞ்சியிருந்தது. கடந்த பத்தாண்டு கால அரசியலை எடுத்து நோக்கினால், யுத்தத்தில் தோல்வியடைந்த தரப்பான தமிழர் தேசம், யுத்தத்தில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான நீதியை கோரிவருவதும், யுத்தத்தில் வெற்றி பெற்ற தரப்பான சிங்கள தேசம் அதனை மறுதலித்து வருவதையும் காணலாம். சிங்கள தேசத்தின் மறுதலிப்பு தவறு என்பதை நீரூபித்து, சர்வதேசத்தின் துணையுடன் தமிழர்களுக்கான நீதியை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளில்தான் தமிழர் தேசம் தனது உழைப்பை முதலீடு செய்திருந்தது. கடந்த பத்தாண்டுகளில் நடந்தது இதுதான்.
இந்த பத்தாண்டுகளில் பல்வேறு செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. மக்கள் போராட்டங்கள், ராஜதந்திர சந்திப்புக்கள், ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை பயன்படுத்துதல் – என பல்வகை செயற்பாடுகளில் களமும் புலமும் ஈடுபட்டிருக்கிறது. 2012இல் இலங்கையின் மீதான அமெரிக்கப் பிரேரணை ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2015 வரையில் ஒவ்வொரு வருடமும் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இந்த ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஜெனிவாவிற்கு சென்ற ஈழத்து அரசியல் வாதிகள் உண்டு. தவறாமல் ஜெனிவா சென்ற புலம்பெயர் அமைப்புக்கள் உண்டு. ஆனாலும் குறித்த அமைப்புக்கள் மற்றும் அரசியல் வாதிகளால் பிரேரணையின் உள்ளடக்கத்தில் தாங்கள் விரும்பியவாறு எந்தவொரு மாற்றங்களையும் ஏற்படுத்த முடியவில்லை. 2015இல் ஆட்சிக்கு வந்த புதிய மைத்திரி-ரணில் கூட்டரசாங்கம், இணையணுரசனை வழங்கி, குறித்த பிரேரணையை ஏற்றுக் கொண்டது. அதன் மூலம் ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஊடாக இலங்கையின் மீது பிரயோகிக்கப்பட்டு வந்த அழுத்தங்கள் முடிவுக்கு வந்தது. இதனை முடிவுக்கு வந்தது என்று குறிப்பிடுவதற்கும் ஒரு காரணம் உண்டு.
மனித உரிமைகள் பேரவையின் ஊடான அமெரிக்க அழுத்தங்களை, அப்போது ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிங்கள ஆளும் வர்க்கம் பொருட்படுத்தவில்லை. இதன் காரணமாகத்தான் அமெரிக்கப்பிரேரணைகள் நீண்டு சென்றது. ஒருவேளை 2012இல் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கப் பிரேரணையுடன் மகிந்த ராஜபக்ச உடன்பட்டிருந்தால், அடுத்த பிரேரணை ஒன்றிற்கான அவசியம் இல்லாமல் போயிருக்கும். யுத்த வெற்றியை இலக்கு வைத்து செயற்பட்ட ராஜபக்சே மேற்குலக நிகழ்சிநிரலுடன் ஒத்துப்போகவில்லை. ராஜபக்சே-மேற்குலக முரண்பாடுதான் அமெரிக்கப் பிரேரணைகள் 2015 வரையில் நீண்டதற்கு காரணம். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் மைத்திரி-ரணில் கூட்டரசாங்கம், 2015இல் குறித்த பிரேரணைக்கு இணையனுசரனை வழங்கியதன் மூலம், அதுவரை இலங்கையின் மீதான அழுத்தங்களாக தொடர்ந்தவற்றை, இலங்கையின் கடப்பாடாக மாற்றியது. ஆனாலும் புதிய அரசாங்கமும் வாக்குறுதியளித்தவாறு குறித்த பிரேரணையை முழுமையாக அமுல்படுத்தவில்லை. இந்த பின்புலத்தில் நோக்கினால், கடந்த நான்கு வருடங்களாக அந்த பிரேரணையி;ல் கூறப்பட்டவற்றை அரசாங்கம் அமுல்படுத்தவில்லை என்னும் குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் தமிழர் அரசியல் நகர்ந்தது.
இந்த இடத்தில் விடயங்களை தொகுத்து நோக்கினால் ஒரு கேள்வி எழும் – அதாவது, கடந்த பத்தாண்டுகளில் சிறிலங்காவின் மீதான சர்வதேச அழுத்தங்கள் படிப்படியாக வலுவடைந்து சென்றனவா அல்லது பலவீனமடைந்து சென்றனவா? இன்று தமிழர் அரசியல் வந்தடைந்திருக்கும் இடத்தை உற்றுநோக்கினால் – தமிழர் தரப்புக்கள் நம்பிக்கையுடன் நோக்கிய சர்வதேச அழுத்தங்கள் என்பவை படிப்படியாக பலவீனமடைந்திருக்கின்றன என்பதுதான் இன்றைய யதார்த்தம். இந்த இடத்தில் பிறிதொரு கேள்வி எழலாம் – அவ்வாறாயின், கடந்த பத்தாண்டுகளாக தமிழர் தரப்புக்கள் – களத்திலும் – புலத்திலும் மேற்கொண்ட முயற்சிகளின் பெறுமதி என்ன? இந்தக் கேள்விக்கான பதிலை தேடிக் கண்டடைய வேண்டிய பொறுப்பு, அனைத்து தமிழ்த் தேசிய தரப்புக்களுக்கும் உண்டு. இந்தக் கட்டுரை அதற்கான பதில் அல்ல மாறாக, அந்த பதிலை கண்டடைய வேண்டிய பொறுப்பை உணர்த்தும் ஒரு சிந்தனைத் தூண்டல் மட்டுமே!
நாம் ஒரு விடயத்திற்காக தொடர்ந்து செயற்படுகிறோம் . அதற்காக கடினமாக உழைப்பதாக நம்புகிறோம் ஆனால் அதில் பெரிய முன்னேற்றங்கள் எதனையும் எங்களால் நிரூபிக்க முடியவில்லை என்றால், அதன் பின்னரும் அந்தச் செயற்பாடுகளை சுயபரிசீலனையின்றி தொடர முடியுமா? ஈழத் தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக நம்பும் எந்தவொரு அமைப்பும் – அவைகள் ஒன்றில், அரசியல் கட்சிகளாக இருக்கலாம் அல்லது அரசியல் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களாக இருக்கலாம் –  அவர்கள் எவருமே மேற்படி கேள்வியை புறக்கணித்து செயற்பட முடியாது.
கடந்த பத்தாண்டுகால அரசியல் அனுபவங்களை எடுத்து நோக்கினால் ஒரு உண்மை துருத்திக்கொண்டு மேற்தெரிகிறது. அதாவது, கடந்த பண்தாண்டுகால தமிழர் செயற்பாடுகள் எவற்றாலும் சிறிலங்கா அரசாங்கத்தை அதன் நிலைப்பாடுகளிலிருந்து கீழிறக்க முடியவில்லை. ஆட்சி மாற்றத்தின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்னும் நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைத்தவர்களும் இறுதியில் படுதோல்வியடைந்திருக்கின்றனர். அந்த வகையில் தாயக மக்களின் பெரும்பாண்மை ஆதரவைப் பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறைகள் முற்றிலுமாக தோல்வியடைந்துவிட்டன. கூட்டமைப்பின் அணுகுமுறைகள் மூலம் மாற்றங்களை ஏற்படுத்திவிடலாம் என்னும் நம்பிக்கை புலம்பெயர் சமூகத்தின் ஒரு பகுதியினரிடமும் இருந்தது. அந்தத் தரப்பு அதிகம் தங்களை தமிழ் மிதவாத உயர் அடுக்கினராக கருதிக்கொண்ட தரப்பினராவர். ஆனால் அவர்களது எதிர்பார்ப்பும் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது.
மறுபுறமாக புலம்பெயர் சமூகத்தின் பெரும் பகுதியினர் – கூட்டமைப்பின் மீது அதிருப்தியுள்ளவர்களாகவும் மாற்றுத் தரப்புக்களை தேடியவர்களாகவும் இருந்தனர். அதே வேளை, சிறிலங்கா விவகாரத்தை ஜ.நாவின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல வேண்டும், சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றவாறான சுலோகங்களோடு அவர்களது செற்பாடுகள் நகர்ந்தன. ஆனால் அதிலும் கடந்த பத்தாண்டுகளில் எந்தவொரு முன்னேற்றத்தையும் காண்பிக்க முடியவில்லை. மொத்தத்தில் அனைத்து தரப்பினருமே தங்களது தோல்வியைத்தான் பதிவு செய்திருக்கின்றனர். இதன் காரணமாகவே, இந்தக் கட்டுரை தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ஒரு சிந்தனை உடைவு தேவையென்று வாதிடுகிறது. அவ்வாறானதொரு சிந்தனை உடைவு ஏற்பட வேண்டுமென்றால், முதலில் இந்தக் கட்டுரை முன்வைத்திருக்கும் கேள்வகளுக்கான பதிலை கண்டடைய வேண்டும் என்பதில் அனைத்து தரப்பினர் மத்தியிலும் சிந்தனைத் தூண்டல் ஏற்பட வேண்டும். சிந்தனைத் தூண்டலொன்று ஏற்பட்டால்தான் சிந்தனை உடைவு சாத்தியப்படும். நாம் அனைவரும் ஒரு சிந்தனைப் போக்கில் பயணித்திருக்கிறோம் ஆனால் எங்களால் முன்னேற்றங்களை காண்பிக்க முடியவில்லை என்னும் போது, அந்தச் சிந்தனைப் போக்கில் ஒரு உடைவை நாம் ஏற்படுத்தித்தான் ஆக வேண்டும். அதனைத்தான் இந்தக் கட்டுரை நம்மத்தியில் நிகழ வேண்டிய சிந்தைனையுடைவு என்று வரையறுக்கிறது.
அரசியல் போக்குகள் எப்போதுமே மாற்றங்களுக்குரியவை. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட சூழலி;ன் அரசியல் போக்கை பல்வேறு புறக்காரணிகள் தீர்மானிக்கின்றன. நிலைமைகள் எப்போதும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ மாறலாம். அரசியலில் அந்த முன்னெச்சரிக்கை எப்போதும் இருக்க வேண்டிய ஒன்று. இன்று சற்றும் எதிர்பாராத புதிய நிலைமை ஒன்றிற்கு நாம் முகம்கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். நாம் பத்து வருடகால அரசியல் அனுபவங்களை தெகுத்துக் கொண்டிருக்கும் போது, சிறிலங்காவோ வரலாற்றின் முதல்முறையாக உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டிருக்கிறது. முழு உலகின் கவனமும் அந்த தாக்குலின் மீது திரும்பியிருக்கிறது. ஏனெனில் இது ஒரு உலகளாவிய பிரச்சினையாக நோக்கப்படும் ஒன்று. சர்வதேச புலனாய்வு அமைப்புக்கள் கொழும்பில் முகாமிட்டிருக்கி;ன்றன.
கடந்த 10 வருடமும் தவறாமல் ஜெனிவாவிற்கு சென்ற ஈழத்து அரசியல் வாதிகள் உண்டு. தவறாமல் ஜெனிவா சென்ற புலம்பெயர் அமைப்புக்கள் உண்டு. ஆனாலும் குறித்த அமைப்புக்கள் மற்றும் அரசியல் வாதிகளால் பிரேரணையின் உள்ளடக்கத்தில் தாங்கள் விரும்பியவாறு எந்தவொரு மாற்றங்களையும் ஏற்படுத்த முடியவில்லை
2001 செப்டம்பர் 11இல் அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீது, அல்ஹய்டா (Al-Qaeda) என்னும் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது. இதன்போது, 2926 அமெரிக்க மக்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை (றுயச ழn வநசசழச) பிரகடணம் செய்தது. அந்தப் பிரகடணம், அதுவரையான உலக ஒழுங்கையே உருமாற்றியது. அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான பிரகணடம், எது பயங்கரவாதம் – எது விடுதலைப் போராட்டம் – என்று பிரித்து நோக்கும் சிந்தனைத்தளத்தை முற்றிலுமாக இல்லாமலாக்கியது. அரசற்ற ஆயுத அமைப்புக்கள் அனைத்துமே பயங்கரவாதம் என்னும் புரிதல் உலகமயப்படுத்தப்பட்டது. அவ்வாறானதொரு பி;ன்புலத்தில்தான், விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில், ராஜபக்ச தலைமையிலான சிங்கள ஆளும் வர்க்கம் வெற்றிபெற்றது. அந்த யுத்த வெற்றி, தெற்கின் தேர்தல் அரசியலை தீர்மானிக்கவல்ல ஒன்றாக இப்போதும் இருக்கிறது. ஆனால், இன்று பத்து வருடங்கள் கழித்து, அந்த யுத்த வெற்றியை கேள்விக்குள்ளாக்கும் வகையில், சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான   ஐளுஐளு எனப்படும் இஸ்லாமிய அரசு கத்தோலிக்க மக்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கிறது. இந்தத் தாக்குதல்கள் இதுவரையான இலங்கையின் அரசியல் வரைபடத்தையே மாற்றியமைத்திருக்கிறது. உலகளாவிய இஸ்லாமிய அரச நிகழ்ச்சிநிரலுக்குள் இலங்கையும் உள்வாங்கப்பட்டிருக்கிறது.
2009 இற்கு பின்னரான அரசியல் போக்கு என்று நாம் இதுவரை பேசிவந்த அரசியல், இனிவரப் போகும் காலத்தில் 21.ஏப்பிரல்,2019 உயிர்த்த ஞாயிறுக்கு பின்னரான அரசியல் போக்கு என்று குறிப்பிடும் அளவிற்கு இலங்கையின் அரசியல் நிலைமைகள் முற்றிலும் மாறியிருக்கின்றன. முன்னரையும் விட இலங்கை, அதிகம் சர்வதேச நிகழ்ச்சிநிரலுக்குள் சென்றிருக்கிறது. இந்த புதிய நிலைமை தமிழ்த் தேசிய அரசியலில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும்? மேற்குலக நாடுகளை பொறுத்தவரையில், இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினை. இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்கொள்ளுதல் என்னும் நிலையில் சர்வதேச நாடுகள் கொழும்புடன் முன்னரைவிடவும் நெருங்கிச் செயலாற்றும். ஒரு பிரச்சினையை பிறிதொரு பிரச்சினையை கொண்டு கையாளுதல் என்னும் அடிப்படையில், இலங்கை அரசு தமிழர் விவகாரத்தை கையாள முற்படும். இந்த புதிய சவாலை எதிர்கொள்ளவல்ல தயார்படுத்துலுடன் தமிழர் தரப்புக்கள் இருக்கின்றனவா? இராணுவத்தின் மீதான எந்தவொரு குற்றச்சாட்டுக்களையும் சிறிலங்கா இதுவரை ஏற்றுக்கொண்டதில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு என்னும் விடயம் மீளவும் பேசுபொருளாகியிருக்கிறது. ஒரு பிரச்சினையை பிறிதொரு பிரச்சினை கொண்டு கையாளுதல் என்னும் வகையில், புதிய நிலைமையை கொண்டு பழையவற்றை பலவீனப்படுத்தும், அதன் முக்கியத்துவத்தை இரண்டாம் பட்சமாக்கும் அணுகுமுறைகளையே அரசாங்கம் கைக்கொள்ளும். அதற்கான அனைத்து வாய்ப்புக்களும் அரசாங்கத்திற்கே சாதகமாக இருக்கின்றன. அவ்வாறன நகர்வுகளில் கொழும்பு கைதேர்ந்த ராஜதந்திர பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது என்பதையும் நாம் அறிவோம். இந்த சவாலை தமிழர் தேசம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது?
  தமிழர் அரசியலை பொறுத்தவரையில் சுயபரீசீலனை, சுயவிமர்சனம் என்பன எப்போதுமே, மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படுவதில்லை. இதுதான் நமது கடந்தகால பட்டறிவு. ஆனால் இந்த நிலைமைதான் இனியும் தொடரப் போகிறதென்றால், தமிழர் அரசியல் எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள எந்தவொரு சவாலையும் அதனால் எதிர்கொள்ள முடியாமல் போகலாம். தனக்கு முன்னாலுள்ள சவால்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகின்ற எந்தவொரு சமூகத்தாலும் அதன் இலக்கில் முன்னோக்கி பயணிக்க முடியாது. எனவே தமிழ் தேசிய தரப்புக்கள் மற்றவர்களை குற்றஞ்சாட்டும் அரசியலை விட்டுவிட்டு, அதிகம் தங்களை நோக்கி பார்க்க முயற்சிக்க வேண்டும். அதன் மூலம்தான் அவர்கள் எங்கு நிற்கின்றனர் – உண்மையில் எந்த இடத்தில் நின்றிருக்க வேண்டும் – தற்போது நிற்கும் இடத்திலிருந்து எங்கு செல்லப் போகிறோம் என்னும் கேள்விகளுக்கான பதில்களை அவர்களாகவே கண்டடைய முடியும். இது ஒரு உரையாடலாக முன்னெடுக்கப்பட வேண்டும். சரியும் தவறுகளும் காய்த்தல் உவத்தலின்றி ஆராயப்பட வேண்டும். இதன் மூலம்தான் பத்தாண்டுகளின் சரிகளையும் தவறுகளையும் குறித்துக் கொண்டு, நாம் முன்னோக்கி பயணிக்க முடியும். இல்லாவிட்டால், 2029இலும் இந்தக் கட்டுரையையே மறுபிரசுரம் செய்யும் நிலையேற்படும்.
யதீந்திரா