இகுருவியின் “இனவழிப்பு” கருத்தரங்கு

இ-குருவியின் ஏற்பாட்டில் மே 18 – தமிழினப்படுகொலை தொடர்பான வருடாந்த நினைவேந்தலின் ஒரு பகுதியாக இவ்வாண்டு இ-குருவி இரண்டு நாள் நிகழ்வுகளில், முதலாம் நாள் இனவழிப்பு (Genocide) தொடர்பான ஓர் கருத்தரங்கினை ஒழுங்கு செய்திருந்தது. தமிழ் ஊடக வரலாற்றிலேயே இதுவே முதல்முறை என சொல்லக்கூடிய வகையில் – இனவழிப்பு அது தொடர்பான சமகால சமூக, சட்டரீதியான மற்றும் அரசியல் ரீதியான பார்வைகள், குறிப்பாக தமிழ் சமூகம் எவ்வாறாக மே 18 இனவழிப்பை அடுத்த சந்ததியினருக்கு புரியச்செய்தல் – அது தொடர்பான விழிப்பூட்டலை மையமாக கொண்ட ஒரு கருத்தரங்காக அது அமைந்திருந்தது. ஈழத்து அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், பேராசிரியர் சேரன் ருத்திரமூர்த்தி, சர்வதேச சட்ட ஆய்வாளர் ஜனகன் முத்துக்குமார், கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி மற்றும் வல்வை ந. அனந்தராஜ் அவர்கள் உரையாற்றியிருந்த குறித்த கருத்தரங்கை லங்காதாஸ் பத்மநாதன் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்திருந்தார்.

குறித்த கருத்தரங்கில் முதலாவது பேச்சாளராக வல்வை ந.அனந்தராஜ், தனது ‘வல்வைப் படுகொலை’ என்ற நூலாக்கம் 1989 – 2019 ,30 ஆண்டுகள் , வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் புரிந்திருந்த படுகொலைகள், அதிலிருந்து தப்பி இந்தியா சென்று குறித்த படுகொலையை பின்னர் ஒரு சாத்தியக்கூற்று நூலாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியமை, அதற்கு இந்திய பின்னைநாள் பாதுகாப்பு அமைச்சர் முன்னுரை வழங்கியது பற்றியும், வரலாற்றுக்களை ஏன் தொடர்ச்சியாக பேணவேண்டும், எவ்வாறாக அதை அடுத்த சந்ததியினருக்கு கடத்தவேண்டும் என்பது பற்றி குறிப்பிட்டிருந்தார்.

ஜனகன் முத்துக்குமார், சர்வதேச சட்டத்தில் இலங்கையின் படுகொலை பற்றி கருத்து தெரிவித்திருந்தார். தனது உரையில் ஏன் சர்வதேச சமூகம் இலங்கை படுகொலை நடைபெற்றபோது ஒரு மனிதாபிமான இராணுவ தலையீட்டை செய்யவில்லை, அத்தலையீடுகள் செய்வதற்கு எதிராக நின்ற சட்ட மற்றும் கொள்கை ரீதியான காரணங்கள் பற்றியும், இலங்கையில் நடைபெற்ற குற்றச்செயல்களை ஒரு இனப்படுகொலை என வாதிடுவதில் உள்ள சட்ட சிக்கல்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்திருந்தார்.

அவரை தொடர்ந்து பேசியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பான தீர்மானங்கள், அவற்றில் எவ்வாறாக இலங்கையை சர்வதேச ரீதியில் குறித்த மே 2009 படுகொலைகள் தொடர்பாக ஒரு விசாரணையை மேற்கொள்ள அழுத்தம் கொடுத்தல், அதில் புலம்பெயர்ந்தோரின் பங்கு பற்றி சில குறிப்புக்களை மேற்கொண்டிருந்திருந்தார்.

பேராசிரியர் சேரன் அவர்கள், இனப்படுகொலையை வரையறுப்பதில் உள்ள சிக்கல்கள், குறிப்பாக இலங்கை மற்றும் ருவாண்டா படுகொலைகள் எவ்வாறாக ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன – சர்வதேசம் எவ்வாறாக நடவடிக்கைகளை இரு நிலைமைகளிலும் மேற்கொண்டிருக்கவேண்டும் என வாதிட்டார்.

நிலாந்தன் அவர்களின் பேச்சு, மே 2009க்கு பின்னர் தமிழ் அரசியல் எவ்வாறாக உள்ளது, ஏன் மாற்று அரசியல் ஒன்று ஜனநாயகம் ஒன்றில் தமிழ் மக்களுக்கு தேவையான ஒன்றாகும், மாற்று அரசியலை தமிழர்கள் இதுவரை எவ்வளவு தூரம் ஏற்றுக்கொன்றுள்ளனர் என கருத்துரை வழங்கியிருந்தார்.

குறித்த கருத்தரங்கானது தமிழர் தரப்பிலுருந்து கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு விடையளிப்பதாக இருந்தமை, தமிழர் தரப்பில் புலம்பெயர் தமிழர்கள் ஆக்கபூர்வமான கருத்தாடலை செய்ய தயாராக இருப்பதை கோடிட்டு காட்டியது. குறித்த கருத்தரங்கு எவ்வளவிற்கு விடைகளை, விளக்கங்களை அளித்ததோ, அதே அளவுக்கு புதிய கேள்விகள், புதிய யதார்த்தங்களை கண்டறிதல், அவற்றுக்கு முகம்கொடுத்தல், சர்வதேச தரப்பில் தொடர்ச்சியாக தமிழர் விடுதலை தொடர்பாக பேச்சுக்களை நாடாத்துதலின் தேவையையும் பறைசாற்றியிருந்தது. புலம் பெயர் தமிழர்கள், தொடர்ச்சியாக ஈழத்தமிழரின் வாழ்வில் முன்னேற்றங்களை மற்றும் அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் இந்நேரத்தில், குறித்த கருத்தரங்கானது ஒரு காலத்தின் தேவை என்பதில் கடுகளவேனும் சந்தேகம் இல்லை.

 

இந்நிகழவின் காணொளிகளை biztha மற்றும் ekuruvi இணையத்தளங்களிலும் ,மற்றும் Youtube இலும் பார்வையிடலாம்

மயூரன் செல்வகுமார் (கருத்தரங்கத்தில் பங்குபற்றியிருந்த ஒருவர்)

 From War Crimes to Tamil Genocide An Awareness Conference – Ekuruvi light 2019