‘இகுருவி ஐயாவும் நானும்” – ‘அரசாங்கத்திற்கு விரோதமாக எழுதப் பயப்படக் கூடாது..”

‘ஐயா… வலென்ரைன் டேக்கு என்ன செய்தனியள்? சீனாக்காற பெட்டையள் ஆருக்காவது பூ.. கீவ்… கொடுத்தனியளே..?” என்று கலாய்த்தேன்.

சிரித்தார் இகுருவி ஐயா.

‘ஐயா… உங்கட பிறந்தநாள் அண்டைக்கு உங்களுக்கு நண்பர்கள் தந்த ஸப்ரைஸ் பார்ட்டியில சீனத்துப் பைங்கிளியள் உங்களுக்குப் பின்னால சுழண்டுகொண்டு நிண்டவையாமே… கனபேர் சொன்னவை… அதை கனடாவின் மூத்த பத்திரிகையாளர் ஒருவரும் குறிப்பிட்டிருந்தாரே… வாழ்வுதான்…” என்றேன் விடாமல்.

‘போடா.. போடா..” என மீண்டும் கூச்சப்பட்டார் 65 வயது இளைஞர். பிறகு ‘என்னவோடாப்பா… இப்பிடி அன்பைக் காட்டி என்னைப் பெருமைப்படுத்திட்டியள்…” என்றார். கண்ணாடியை கழற்றி கண்களைத் துடைத்துக் கொண்டார். கசிவு.

‘நீங்க இகுருவின்ரை ஆள் எண்டாலும் சக பத்திரிகைகளான ஈழநாடு, உதயன் எல்லாம் உங்களை வாழ்த்தியிருக்கினம்… பாத்தியளே…”

‘ஒரு சாதாரண போட்டோக்கிராபரான எனக்கு உப்பிடி ஒரு அன்பான பிறந்தநாள் கொண்டாட்டத்தை எல்லாருமாச் சேந்து செய்திருக்கிறியள்… இதுக்கு நான் தகுதிதானோ எண்டுதான் யோசிக்கிறன்…” என்று மீண்டும் குரல் தழுதழுத்தார்.

‘அய்க்.. அய்க்.. ஆளின்ரை தன்னடக்கத்தை பாரு..” என்று மீண்டும் கலாய்த்த நான் ‘மூவாயிரம் பேருக்கு மேல உங்களை வாழ்த்தியிருக்கினம் ஐயா… அந்த ஸப்ரைஸ் பார்ட்டிக்கு திடீரெண்டு 150 பேருக்குக் கிட்ட வந்திருக்கினம்… இதெல்லாம் சும்மாவே… இனி நீங்க எலெக்சனிலகூட நிக்கலாம்போல…”

‘டேய்.. டேய்… வெளுத்துப்போடுவன்… ஒரு அளவுக்குத்தான் பகிடி விடலாம்… திடீரெண்டு என்னைப்பாத்து எலெக்சன் அது இது எண்டுறாய்… எல்லாரும் கரி ஆனந்தசங்கரி ஆகிட முடியுமே..” என்றார்.

‘அதுவும் சரிதான்.. உங்கட தலபோல் வருமா… எது எப்பிடியானாலும் வெற்றிகரமான 100 நாட்களைத் தாண்டிப் படம் ஓடுது…” என்றேன்.

‘அட.. ஒமடாப்பா… எலெக்சன் முடிஞ்சு அதுக்குள்ள 3 மாதங்களுக்கும் மேல ஆயிட்டுது என….! ம்… லிபரல்கள் பதவிக்கு வந்து நூறு நாட்கள் ஆகிட்டுது….”

‘இந்த நூறு நாட்களுக்குள்ள லிபரல் அரசாங்கம் செய்த வேலைகளை கவனிச்சுப் பார்த்தா… சிரிய அகதிகளுக்கு ஜஸ்ரின் காட்டின தீவிரம் வியப்பளிக்குது… அதே நேரம் கொன்சவேடிவை வெல்லுறதுக்காக சொல்லப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில பல நிறைவேற்றப்பட முடியாத நிலைமையில் இருக்குது எண்டதும் அவரால ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கு…”

‘அரசாங்கம் எண்டு வந்திட்டா அவருக்கு வேறசில பிரச்சனைகள் இருக்கும்..” என்றார் அவர் சமாதானமாக.

‘எலக்சனுக்கு முதலே அதையும் தெரிஞ்சு தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கியிருக்கலாமெல்லே… என்னதான் சனம் மறந்திடும் எண்டாலும் அரசியல் ஆய்வாளர்கள் சிலர் நினைப்பில வச்சிருப்பினம் ஐயா..”

‘போடா… மத்திய கிழக்கில கனடா படைகள் செய்த வான்வெளித் தாக்குதல்களை குறைச்சாச்சில்லே…”

‘அப்படிப்பாத்தா…??? நிலத்தில் நடாத்தப்படுகிற பயிற்சித் திட்டங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கெல்லே…!!?? வான்வெளி தாக்குதலைவிட இதில கனடா படைக்கு உயிராபத்து அதிகமெல்லே…” என்று நான் தாக்குதலை ஆரம்பித்தேன்.

‘இளையர் வேலைவாய்ப்புக்களுக்கான தொகையை ஜஸ்ரின் இரண்டு மடங்கு ஆக்கித் தந்திருக்கிறார்… அதையும் கவனி… அரசாங்கம் எண்டா சில கொம்ரமைஸ_கள் செய்யத்தான் வேணும்.. ஆனாலும் இந்த முறை வரவுசெலவுத் திட்டம் பற்றாக்குறையோடதான் வரப்போகுது எண்டும் வெளிப்படையா இப்ப லிபரல்கள் சொல்லிற்ரினம்.. கேட்க கஸ்டமாத்தான் இருக்கு…” என்றார் அவர்.

‘இண்டைய நிலைமையில ஒரு அரசாங்கம் தன்ரை பட்ஜட்டை சமன்படுத்திறதுக்கு மக்களும் சில பிரச்சினைகளுக்கு முகம் குடுக்க வேணும்.. ஆனா இதுக்கு முன்னர் ஹாப்பர் சமன்படுத்தின பட்ஜட்டை தந்தார் எண்டதை மறக்கக்கூடாது…”

‘இனி என்ன நடக்கும் எண்டு பொறுத்திருந்து பாப்பம்.. நடக்கிற உண்மையளைப் பயப்பிடாமச் சொல்லத்தான் மீடியா இருக்கே.. நாங்க அரசாங்கத்திற்கு விரோதமாக எழுதப் பயப்படக் கூடாது…” என்றார் இகுவி ஐயா.

‘ஆனாலும் சில மீடியாக்கள் ஆதரவு விளையாட்டெல்லே செய்து விட்டு விடும்… போன எலெக்சனில சிபிசி வெளிப்படையாவே ஜஸ்ரினுக்கு உதவி செய்தது. சிபிசியின்ரை பீற்றர் மான்ஸ்ப்ரிட்ஜ்கூட கவனமா அதை செய்தார்…”

‘அது வேற கணக்கு… அதைவிடு… ஒரு அரசாங்கத்தைப் பற்றி நல்லாச் சொன்னோமெண்டா அது ஆளும் கட்சிக்கு சார்பாத்தான் போய் முடிந்துவிடும்…”

‘அது ஜால்ராவா இல்லாதவரைக்கும் சரி… இப்ப பாருங்கோ.. தமிழ்மக்கள் அதிகமா வாழுற இன்னொரு இடமான விற்பி-ஓஸாவாவில ஒன்ராறியோ சட்டசபைக்கான இடைத் தேர்தல் இந்த பெப்ரவரியில நடந்துது. ஒன்ராறியோ பிசி கட்சிக்கு ஆதரவா ஒன்ராறியோ எதிர்கட்சித் தலைவர் பற்றிக் பிரவுண் பிரச்சாரம் செய்தார். ஒன்ராறியோ லிபரல் கட்சிக்கு ஆதரவா ஒன்ராறியோ முதல்வர் கத்ரின்வீன் மட்டுமில்லை… கனடாப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் பிரச்சாரம் செய்தார். கடைசில விற்பி தொகுதியில இப்ப எதிர்க்கட்சியா இருக்கிற ஒன்ராறியோ பிசி கட்சின்ரை வேட்பாளர் லோர்ன் கோய் வெண்டிருக்கிறார். ஆனா மீடியாக்கள் அந்த வெற்றி பற்றி அதிகம் பேசவில்லை கவனிச்சீங்களே…” என்றேன்.

‘அது ஒரு இடைத்தேர்தல்தானேயடாப்பா…”

‘அதுதான் கவனிக்கப்படவேண்டியது.. கனடா பிரதமர் ஜஸ்ரின் பிரச்சாரம் செய்து பார்த்தும், ஒன்ராறியோ முதல்வர் கத்லின்வீன் பிரச்சாரம் செய்து பார்த்தும் ஒன்ராறியோ எதிர்க்கட்சித்தலைவர் பற்றிக் பிரவுணின்ரை கட்சிதான் வெண்டிருக்கு.. இந்த விசயத்தைபற்றி பெரிய மீடியாக்கள் மட்டுமில்லை எங்கட பேஸ்புக் மேதைகளும் – தமிழ் ஆக்களைத்தான் சொல்லுறன்.. – அதிகம் கவனிக்காம மெதுவா நழுவிற்றினம்..”

‘இடைத்தேர்தல் முடிவு ஒண்டால அரசாங்கத்திற்கு தோல்வி எண்டு சொல்ல ஏலாது. அது பி.சி. கட்சின்ரை தொகுதி.. அதாலதான் பலர் அலட்டிக்கொள்ளேல்ல. அது மட்டுமல்ல நம்மட பிரதமர் வந்தது முதல்வருக்கு அவர் நன்றி செலுத்தும் நிகழ்வாக இதை பார்க்கலாம் …”

என்றார் பிரதமருக்கு ஆதரவாக ..

 

‘அதுவல்ல பிரச்சனை.. அரசாங்கத்திற்கு விரோதமாக எழுதுதில எடுக்கிற அதீத கவனம்தான் பிரச்சினை.. புலிகளின்ரை அரசாங்கம் இருக்கேக்கை அதைப்பற்றி விரோதமா ஆரும் எழுதிறதில்லை… அதுக்குப் பிறகு பலர் மகிந்தா அரசை போட்டு தாக்கு தாக்கெண்டு தாக்குவினம்… இப்ப அவையே மைத்திரியின்ரை அரசாங்கத்திற்கு எதிரா எழுதிறத தவிர்க்கிறதில வலு கவனமா இருக்கினம்.. அரசாங்கம் எண்டு ஒண்டு கிடந்தா அதன் நடவடிக்கைகளை விமர்சிச்சு தைரியமா எழுதோணும்…”

‘நீ சொல்றதும் சரிதான்.. அரசாங்கம் எண்டா அது மக்களின்ரை சொத்து… அதை விமர்சிக்கப் பயப்பிடக் கூடாது..” என்றார் இகுருவி ஐயா.

‘அந்த அரசாங்கங்கள் கிடக்கட்டும் ஐயா. நாடுகடந்த தமிழீழ அரசின்ரை தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்திற்கு போனனீங்களெல்லே… நீங்க எடுத்த படங்களைப் பாத்தனான்… நிகழ்ச்சி நல்லா இருந்திருக்கும்.. ஆனா மேடையின்ரை பின் பக்கத்தில போட்டிருந்த படங்கள்தான் பாக்கிறதுக்கு ஒரு மாதிரியா இருந்துது…”

‘நீ என்னடாப்பா குண்டு வீசுறாய்… நடுவில திருவள்ளுவர் படமும் அதைச் சுற்றி கனக்கத் தமிழறிஞர்கள் படங்களும் இருக்கிற மாதிரி ஒரு பெரிய பானர் போட்டிருந்தவங்கள்… அதில என்ன குற்றம் கண்டுபிடிக்கிறாய்?”

‘தமிழ் மரபு எண்டுட்டு அதுக்குத் தமிழ்நாட்டிலதான் இருந்தவையின்ர படங்ளைத்தான் போட வேணுமே…? ஈழத்து அறிஞர்கள் கொஞ்சப்பேற்ர படங்களையும் போட்டிருந்தா நல்லா இருந்திருக்குமெல்லே…”

‘ஓ… அதில திருவள்ளுவர் மட்டுமில்லை… எம்ஜிஆர் இப்பிடி கனபேற்ரை படங்கள் கிடந்தது… பொருத்தமில்லாத ஆக்களிரை படங்களை போட்டிட்டினம் எண்டுறியோ?”

‘சே… சே… எங்கட தமிழ் மரபில திருவள்ளுவருக்கும் இடம் இருக்கு… எம்ஜிஆருக்கும் இடமிருக்கு… அதுவல்ல என்ரை முறைப்பாடு… அதில ஒரு ஈழத்தமிழாக்களின்ரை படமும் இருக்கேல்ல எண்டுறது என்ர அவதானம்..”

‘ம்… சொல்லு…” என்றார் இகுருவி ஐயா.

‘மரபு எண்டுறது எங்கட விழுமியங்களை தொடர வைக்கிற முயற்சில ஈடுபட்டிருக்கிற ஆக்களின்ரை செயல்பாட்டால உருவாகிறது… எங்கட தமிழ்ப் பண்பாட்டின்ரை மரபுசார் தொடர்ச்சிக்கு ஈழத்தமிழர்களும் சம அளவில பங்காற்றியிருக்கினம்… ஆறுமுக நாவலர், ஆனந்தக் குமாரசாமி, விபுலானந்த அடிகளார், தனிநாயகம், கலையரசு சொர்ணலிங்கம், வி.வி.வைரமுத்து, கைலாசபதி, சிவத்தம்பி, எஸ்பொ எண்டு எத்தினையோ பேர் இருக்கினம்… இவையளும் திருவள்ளுவர் மாதிரி தமிழ் மரபினரை உயர்ச்சிக்கு பங்காற்றினவை… ஏன் எங்களோட இருந்து சமீபத்தில மறைஞ்ச அதிபர் கனகசபாபதியைக்கூட நாங்க மரபுத்திங்களில நினைவு கூரலாம்… இவையைப்பற்றி நாங்களே சொல்லாம விட்டா… பிறகு ஆர்தான் கொல்லப்போயினம்?”

‘நீ என்ள இப்பிடிச் சொல்லுறாய்…? மரபுத்திங்களில கோயில் கட்டினதையும், பண்டைய இலக்கியங்களையும், காவியங்களையும் தந்தவையையும்தான் நினைக்கவேணும் எண்டு நினைக்கிறன்..”

‘அட போங்கைய்யா… குழந்தையளுக்கு பஞ்சால தாடி ஒட்டி திருவள்ளுவர் எண்டுறதும், தலையை வெள்ளையாக்கி ஒளவையார் எண்டுறதுமா ஒண்டையே திருப்பி திருப்பி செய்யிறதுதான் மரபுத்திங்கள் எண்டா எங்ட அறிவுத்திறமையில ஒரு குறைபாடு இருக்கு எண்டுதான் நான் சொல்லுவன். புதிசு புதிசா நாங்களும் தேட வேணும்..”

‘புதிசு புதிசா எண்டா???” என்று குழம்பினார் இகுருவி ஐயா. ‘மரபில எதையடா புதிசு புதிசா தேடுறது?” என்றார் கிண்டலாக.

‘அப்படிக் கேளுங்கோ… தமிழ் மரபில கனக்க இருக்கு… கட்டிடக்கலை மரபு, இலக்கிய மரபு, நாடக மரபு… எண்டு கனக்க இருக்கு.. உதாரணத்துக்கு தமிழ்ச் சமூதத்திற்கு வீரமரபை போதிக்க வந்தவையின்ரை வரிசையை பட்டியல் போட்டுப்பாருங்கோ.. இண்டைவரைக்கும் எத்தினையோபேர் அதில இருக்கினம்… தமிழரிடம் வீர மரபு இருந்ததைப்பற்றி பேசினா இண்டைய ஆயுத இயக்கத் தலைவர்ளைப்பற்றிவரைக்கும் பேசலாம்.. தமிழ்க்கடவுள் யார்? ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் எண்டு ஆரம்பிச்சு இண்டைய காலகட்டம்வரை வரலாம்… பிரபாகரன் கூட தமிழற்ரை வீரமரபிற்கு பங்களிப்புச் செய்த ஒருவர் எண்டும் சொல்லலாம். இது புதிசு.. பழசோட புதிசு…”

‘ஆ… என்னடா இப்பிடிச் சொல்லுறாய்… மரபுத்திங்களில இப்பிடி எல்லாம் செய்யப்போனா பிறகு சண்டையள்தான் வந்து முடியும்… பாதுகாப்பா இருக்கவேணுமெண்டா பிரச்சினைகளை அவொய்ட் பண்ணுறதுதான் நல்லது. குறிப்பா அரசாங்கங்களுக்கு விரோதமா நாங்க போகக்கூடாது…”

‘அரசாங்கம்தான் உங்களுக்கு திருப்பியும் பிரச்சனையோ? எந்த அரசாங்கம்? கனடா? ஸ்ரீலங்கா? இந்தியா? எந்த அரசாங்கம்? ஒண்டு சொல்லுறன்.. மரபு எண்டா என்னவெண்ட விவாதங்களை வைக்கிறதுகூட மரபுத்திங்களில செய்யக்கூடிய விசயங்கள்தான்… அதை ஆய்வுரீதியில செய்யிறதுக்கும் இந்த மாதத்தைப் பயன்படுத்த வேணும்…”

‘அது சரியடாப்பா… ஆனா விமர்சனங்கள் வருமெல்லே…”

‘வரும்தான்…! அதுக்காக?? ஆரை வணங்கிறது ஆரை விடுகிறது எண்டது காலமும் மக்களும் சேர்ந்து தீர்மானிக்கிற விசயம்.. காலம் உருவாக்கிற ஆக்களைத்தான் உருவத் திருமேனியாக நாங்க வழிபடுகிறம். எல்லாரையும் இல்லை… லெனின் உருவம் இப்ப ஆராதனை செய்யப்படுவதில்லை. ஆயிரம் ஆயிரமா எத்தினையோபேர் சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டு செய்தாலும் நாயன்மாரா அறுபத்தினான்குபேரைத்தானே நாங்கள் பூசிக்கிறம்.. விழிப்புணர்வை உருவாக்கிற எந்த விசயத்தையும் நாங்க தைரியமா செய்து பாக்கலாம்… அதில தவறே கிடையாது…”

‘அடுத்த தலைமுறைக்கான விழிப்புணர்வு வர நடத்துறதுதான் மரபுத் திங்கள் எண்டு மட்டும் ஏற்பாட்டாளர்கள் நினைக்கிறதா இருக்கலாமெல்லே…”

‘அதையே ஏற்பாட்டாளர்களுக்கு மரபு பற்றின ஆழ்ந்த அறிவு கிiடாது எண்டும் மற்றவை நினைக்கலாம். அடுத்த தலைமுறைக்காகத்தான் மரபுத்திங்கள் செய்யிறம் எண்டா இன்னும் கவனமாக இருக்கோணும்.. இண்டைய தலைமுறையைவிட அடுத்த தலைமுறை பயங்கர ஸ்மார்ட்… அதுக்கு ஒரு குட்டிக் கதை சொல்லுறன் கேளுங்கோ..”

‘சொல்லு…”

‘தமிழ்மரபில ஆர்வம் உள்ள ஒருத்தர் தன்ரை குழந்தைக்கு பாரி மன்னன் பற்றி கதை சொல்லியிருக்கிறார். ஒரு முல்லைக் கொடியின் வாட்டத்தைப் போக்கி அது படர வளர பாரி மன்னன் தன் தேரையே தந்த கதையை உருக்கமாக சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது…”

‘ஏனடாப்பா?”

‘ஒரு கொடிக்காக இப்ப தன்ரை தேரை ராசா கொடுத்துட்டார். இனி ராசாவுக்கு புதுத் தேர் வேணுமே… புதுத் தேர் செய்ய இனி எத்தினை மரங்களை ராசா வெட்டப்போகிறாரோ என்று நினைத்து – வெட்டப்படப்போகிற மரங்களுக்காக பரிதாபப்பட்டு – குழந்தை அழ ஆரம்பித்துவிட்டதாம்…”

– கனடா மூர்த்தி