ekuruvi Light 2019 – 10 Years | Remembrance 2009 – 2019 நிகழ்வின் ஒரு பார்வை …..

தொடர் நிகழ்ச்சிகளில் சுமார் 10,000க்கும் மேற்படடவர்கள் பங்கேற்பு ,

eகுருவி மூலம்  $ 20,000 தாயக சமூக மனிதாபிமான பணிகளுக்கு வழங்கப்பட்டது

 

 

      சுமார் ஒரு வருடத்துக்கு முன்னராகவே வழமையாக இகுருவி நடத்தும் இகுருவி இரவு வர்த்தக நிகழ்வு இம்முறை முள்ளிவாய்க்கால் 10 வது ஆண்டு நினைவு நிகழ்வாக நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தோம்.

வழமையாக நடைபெறும் இகுருவி நிகழ்வு என்பது, இங்கு நடைபெறும் பல  நிகழ்வுகள் போல் நேரத்தை வீணடிக்காமல் , தற்புகழ்ச்சி பாடாது , சமூக நோக்கம் கருதி நடைபெறும் நிகழ்வுகளில் முதன்மையான நிகழ்வாக கடந்த  காலங்களில் தன்னை நிலைநிறுத்தியிருந்தது.

நேர்த்தியான பேச்சாளர்கள், நிகழ்வுகளின் விருதுகள், 1000 பேருக்கும் மேலான இகுருவியின் வாடிக்கையாளர்கள் மற்றும் நிகழ்வின் பிரமாண்டம் என்று பல கடந்த கால பதிவுகளை நினைவுகூறலாம்.

2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் படி படியாக ஆரம்பிக்கப்படட   Biztha, ekuruvi மற்றும் புதிய வெளிச்சம் போன்ற இலாப மற்றும் இலாபமற்ற அமைப்புகளினால், கடந்த 10 வருடங்களாக  தாயக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாக சென்று, ஆற்றுப்படுத்துகை, வலுவூற்றல் மற்றும் தன்னிறைவு பொருளாதார மேம்படுத்தல் திட்டங்களையும், நிகழ்வுகளையும் நடத்தியிருந்தோம். ஈகுருவி விருது விழாவில் அங்கிருக்கும் சாதனையாளர்களை தேர்ந்தெடுத்து கனடாவுக்கு அழைத்து விருது கொடுத்து சமூகத்தை மேலும் ஊக்கப்படுத்தியிருந்தோம்.

 

அதன் தொடர்ச்சியாக இம்முறை முள்ளிவாய்க்கால் 10 ஆவது நினைவு நிகழ்வை சமூக பொறுப்புள்ள ஊடகமாக, இகுருவி நிகழ்வை முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வாக நினைவுகூர திட்டமிட்டிருந்தோம்.

 

இந்நிகழ்வுகள் 2015, 2017 ஆம் ஆண்டுகளில்  தாயகத்தில் (வடக்கு, கிழக்கு) எம்மால் நிகழ்த்தப்பட்ட சுமார் 10, 000 பேர் பலனடைந்த புதிய வெளிச்ச நிகழ்வுகள் போன்று, ,இந்த ஆண்டு  கனடாவிலும் அதன் இலக்கை அடைந்துள்ளது

#மூன்று நிலைகளில் திட்டமிட்டிருந்தோம்

1) Humanitarian (தாயக மக்களுக்கான உதவி)
2) Tamil Genocide (
தமிழ் இனப்படுகொலை பரப்புரை)
3) Passing memories (
ஞாபகங்களை கடத்தல்)

இகுருவி மற்றும் புதிய வெளிச்சம் ஒழுங்கு செய்த 2019 மே மாத இனவழிப்புக்கு எதிரான மற்றும் மனிதாபிமான உதவி தொடர் நிகழ்ச்சிகளில் சுமார் 10,000 க்கும் மேற்படடவர்கள் பங்கேற்பு.

 

செயற்பாடுகள்

 

1) விளம்பரமில்லாத உலக தரமான எழுத்தாளர்களுடன் இகுருவி பத்திரிகை 15,000 பிரதிகள் வெளிவந்தது. (Print and Digital)

இகுருவி விசேட இதழ், தமிழ் இனப்படுகொலை குறித்த பெரும் ஆவணமாக வெளிவந்திருக்கிறது. இனப்படுகொலைப் போரில் தப்பிய பலரது சாட்சியப் பதிவுகள், மற்றும் கலை இலக்கியப் பதிவுகள் என்பன வெளிவந்துள்ளது. இவ்விதழில் இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த சுமார் 130 இனப்படுகொலை பதிவுகள் ஆவணப்படுத்தப்பட்டு இரண்டு பக்கங்களுக்கு வெளிவந்தன. மேலும் கனடா, இலங்கை, பிரித்தானியா ஆகிய நாடுகளில் வெளிவந்துள்ளன. இச்செயற்பாட்டுக்கு சுமார் 7500 டொலர்கள் செலவிடப்பட்டது.

http://www.ekuruvi.com/wp-content/uploads/2019/05/final-web-file.pdf

2) 70 வருட இனப்படுகொலை தொடர்பான சம்பவங்களை இணைய பரப்புரை மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தமை (

 

Digital Marketing). அடுத்த சந்ததியினருக்கும், கனேடிய மற்றும் பல்நாட்டு மக்களுக்கும் நாம் எப்படியான தொடர்ச்சியான இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படுகின்றோம் என்பதனை நூற்றுக்கும் மேற்பட்ட Digital பதாதைகளை மூலம் சமூக வளைதளங்களில் பதிவேற்றி  சுமார் 230,000 பார்வையளர்களுக்கு சென்றைய வழிவகுத்தோம்.

 

3) 30 வருட யுத்த வடுக்கள் ஓவியங்களாக ஓவியர் புகழேந்தியின் “Faces of War” எனும் ஆங்கில, தமிழ் புத்தகம் உலகம் முழுவதும் செல்ல அதன் ஒரு பகுதிக்கு பெரும் தொகை பணம் வழங்கி இகுருவி பதிப்பிட்டது. தேசிய தலைவரால் விருது பெற்ற ஓவியர் புகழேந்தி சுமார் 200 க்கும் மேற்பட்ட தமிழினவழிப்பு தொடர்பான ஓவியங்கள் உள்ளடங்கிய நூல் அச்சிடப்பட்ட உலகெங்கும் வழங்கப்பட்டது . இதற்கு சுமார் 3,500 கனேடிய டொலர்கள் செலவிடப்பட்டது .

 

4) “From War Crimes to Tamil Genocide – An Awareness Conference” – காலை, மாலை தொடர் நிகழ்வுகளாக, மதிய உணவுடன் இலவசமான நிகழ்ச்சி – சுமார் 150 பேர் பங்கேற்பு . (காலை: Passing memories, Tamil Genocide / மாலை: Humanitarian).

 

இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக வல்வை ந. அனந்தராஜ் அவர்கள் எழுதிய “வல்வை படுகொலை” நூல் 30 வது வருட நிகழ்வாக தமிழ், ஆங்கிலத்தில் அந்நூல் மீள் பதிப்பு செயற்பட்டு, வல்வை ந. அனந்தராஜ் அவர்கள் இந்நூலின் 30 ஆண்டுகள் எனும் பொருளில் உரை நிகழ்த்தினார் .

இந்நிகழ்வில் இனப்படுகொலைக்கான  நீதியை பெறுவதில் கடந்த பத்தாண்டுகளான  தமிழ் அரசியல் எனும் கருப்பொருளில் நிலாந்தனும், இது ஏன் இனப்படுகொலை? எனும் தலைப்பில் பேராசிரியர் சேரன் உருத்திரமூர்த்தி அவர்களும், சர்வதேச சட்டத்தில் இனப்படுகொலை எனும் தலைப்பில்  ஜனகன் முத்துக்குமரன் அவர்களும், கனேடிய அரசாங்கமும்  இலங்கை இனப்படுகொலையும் எனும் தலைப்பில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்களும் சிறப்பு ஆய்வுரை நிகழ்த்தினார்கள்.

மதிய உணவின் பின்னர் டாக்டர். ஆறுதிருமுருகன் அவர்கள் மற்றும்  டாக்டர். லம்போதரன் அவர்களும் கடந்த பத்து ஆண்டுகள் நிகழந்த மனிதாபிமான பணிகள் மற்றும் அடுத்த பத்து ஆண்டுகள் தொடர வேண்டிய மனிதாபிமான பணிகள் எனும் கருப்பொருளில் கருத்தரங்கில் பேசினார்கள். இதில் அன்புநெறி, வன்னிச்சங்கம், வாழவைப்போம், உறங்காத விழிகள், கிழக்கு கல்வி அபிவிருத்தி சபை போன்ற பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்கு பற்றின.

 

5)

இனவழிப்பு மாதத்தில்  டாக்டர். ஆறுதிருமுருகன் அவர்கள் முலம் சுமார் 15க்கும் மேற்பட்ட கோயில்கள் மற்றும் Senior Centre களில்  தாயகம் நோக்கிய தேவைகளையும், மனிதாபிமான தேவையான உதவிகளையும் வழங்கிடுவதற்குமான  விழிப்புணர்ச்சி  ஆற்றுப்படுத்துகை

 

, அறநெறி நிகழ்வுகள் நடத்தப்பட்டன. தமிழ் இனவழிப்பு நிகழ்ந்த மே மாதத்தில் புலம்பெயர் மக்களை தாயகம் நோக்கி சிந்திக்க, செயலாற்ற வைப்பது பெரும் சவாலாகும். அச்சவாலை இம் மே மாதம் நாம் முயற்சி செய்திருந்தோம்.

தாயகத்துக்கான மனிதாபிமான பணிகளை அதிகரிக்கும் புதிய வெளிச்சம் அவரது சொற்பொழிவுகளில் சுமார் 10,000 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

இதே போன்று 2015 ஆம் ஆண்டு பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவுகளில் தாயகத்தில் சுமார் 15,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

 

6)

கடந்த 7 வருடமாக சுமார் 1000 பேருடன் நடைபெறும் ekuruvi night எனும் பிரத்தியேக தனிப்பட்ட இகுருவியின் விளம்பர மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வர்த்தக நிகழ்வு, இம்முறை “ekuruvi Light 2019” எனும் நிகழ்வாக மாற்றப்பட்டு 556 பேருடன் உலக புலம்பெயர் மக்களுக்கு ஒரு மைல் கல் நிகழ்வாக இடம்பெற்றது.

எமது கருப்பொருள்களான Passing memories, Tamil Genocide, Humanitarian என்பவற்றை எமது மக்களுடன் பகிர்ந்து கொண்டமையானது, ஒரு முன்னுதாரணமாக உங்கள் தனிப்பட்ட நிகழ்வுகளிலும் எம் இனம் சார்ந்து இவ்வாறு கொண்டு செல்லப்படவேண்டும் என்ற செய்தியை சொல்லியிருக்கிறது.

 

7)

இகுருவியின் பிரத்தியேக நிகழ்வில் இரவு உணவாக ‘கஞ்சி ‘ கொடுக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் அவ்வாரம் ஆரம்பிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் மக்களுக்கு கிடைக்கக்கூடிய உணவாக கஞ்சி மட்டுமே இருந்ததை நினைவுகூறுமுகமாக, அன்றைய மாதத்தில் அதை நினைவுகூறுமுகமாக மக்கள் கஞ்சியை ஒரு நேர உணவாக உட்கொண்டு இந்நோன்பை கடைபிடிக்கலாம் என்று மே மாதம் 1 ம் திகதி வெளிவந்த முள்ளிவாய்க்கால் இகுருவி பத்திரிகையில் நிலாந்தன் அவர்களது சிறப்பு கட்டுரை மூலம் தெரிவித்திருந்தோம். அதே போன்று ekuruvi Light 2019 நிகழ்விலும் சிறப்பு பேச்சாளர் நிலாந்தன் மூலம் முள்ளியவாய்க்கால் கஞ்சி தொடர்பான கருத்துக்கள் பகிரப்பட்டு,  கஞ்சிக்கான பாடல் எழுதி, இசை அமைக்கப்பட்டு அதற்கான நாட்டிய நடனம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ekuruvi Light 2019 க்கு வந்தவர்கள் அனைவருக்கும் அன்றைய இரவு உணவாக ‘கஞ்சி ‘ வழங்கப்பட்டது.

 

8) நிலாந்தன் அவர்களது மே 18 க்கான நினைவு பேரூரையும், இணையப்பரப்பில் அதனை சுமார் 1.5 லட்சம் மக்களுக்கு கொண்டு சேர்த்தமையும் உலகமெங்கும் நடைபெறும் மே 18 நிகழ்வுகளுக்கு வலுசேர்த்தன.

 

 

9) முள்ளிவாய்க்கால் கஞ்சிப் பால் 

ekuruvi light 2019 நிகழ்வுக்கான முள்ளிவாய்க்கால் கஞ்சிப் பாடலை உருவாக்கியமை . வசனம் இசையமைப்பு, நடனம், இணைய பரப்புரை,

ekuruvi Light 2019 Mullivaikkal “Kanchi” song with the remembrance of our genocide victims Thaayage Manne Singers: Sarika Navanathan, Prabha Balakrishnan ,Steve Cliff Valentine Composition: Steve Cliff Valentine, Prabha Balakrishnan Music: Steve Cliff Valentine Lyrics: Indran Raveendran Recording, Mixing & Mastering: Studio Fourteen Choreography : Anojini Kumaradasan Aadalaham Dance Acadamy Abisha Sivakumar ,Anreeya Nantheeswaran ,Kaaviya Vasanthakumar, Tharsika Sritharan, Abenayaa Vigneswaran ,Akshey Vigneswaran , Harrani Rajasegar Production: , Ekuruvi

 

10) தாயகத்திலிருந்து Humanitarian புதிய வெளிச்ச விருதுக்காக விமானம் மூலம் அழைக்கப்பட்ட  Dr. Sencholselvar Aaruthirumurukan, Rasaiya Kuventhiranathan மற்றும் அவர் மனைவி

 

சமூக மனிதாபிமான பணிகளுக்கான புதிய வெளிச்ச விருது  கலாநிதி ஆறுதிருமுருகன்

எம் தாயகப்பரப்பிலேயே அனைவராலும் அறியப்பட்ட நாமங்களில் இவர் நாமமும் ஒன்றாகும். செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், ஆன்மீகத்துக்கூடாக எம் சமூகத்துக்கு மிகப்பெரும் சேவையாற்றி வரும் இவர், மக்கள் சேவைக்காகவே தனது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்த ஒருவராவார்.

கோண்டாவிலில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை, தொழிற்பயிற்சி நிலையம், வாழ்வாதார நிதியம், மருத்துவ நிதியம் மற்றும்  சிவபூமி கல்வி நிதியம் என்பனவும் சுழிபுரத்தில் முதியோர் இல்லம், கீரிமலையில் சிவபூமி மடம், கலைக்களஞ்சியம் மற்றும் யாத்திரிகர் விடுதி என்பனவும் குப்பிளானில் ஞானாச்சிரமம், ஆனைக்கோட்டையில் அபயம் இலவச மருத்துவமனை, நாவற்குழியில் திருவாசக அரண்மனை, கிளிநொச்சியில் மனவிருத்திப் பாடசாலை, இயக்கச்சியில் சிவபூமி கோட்டம் மற்றும் நாய்கள் சரணாலயம் அத்துடன் பச்சிலைப்பள்ளியில் பஞ்சாமிர்த தோட்டம் என்பவற்றுடன் திருகோணமலையில் சிவபூமி பாடசாலை மற்றும் மடம் என்பவற்றை அமைத்தும் வருகிறார்.

தொடர்ச்சியாக 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து சேவையாற்றி வரும் கலாநிதி ஆறுதிருமுருகன்அவர்களுக்கு இகுருவி புதிய வெளிச்சம் விருது வழங்குவதில் பெருமையடைகிறது.

 

 

தாயக கொடைவள்ளல் புதிய வெளிச்சம் விருது ராசையா குவேந்திரநாதன்

“கடவுள் கொடுத்ததைத் தான் மக்களிடம் கொடுக்கிறேன்” மற்றைய எவரது உதவியும் இன்றி தன் சொந்தப்பணத்தில் பல கோடிகளை மக்களுக்கே வாரி வழங்கி விட்டு இந்த வசனத்தை சர்வ சாதாரணமாகச் சொல்லி விட்டுக் கடந்து செல்கிறார் ராசையா குவேந்திரநாதன் ஐயா.

2012ம் ஆண்டு கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலத்துக்கு காணி வாங்கி கட்டடம் அமைத்து மின்சார குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்ததுடன் ஆரம்பமான இவரது மக்கள் பணியனது வடக்குப் புன்னாலைக் கட்டுவனில் 15 வீடுகளை அமைத்துக் கொடுத்ததுடன் மீண்டும் அடுத்த கட்டமாக 30 வீடுகளை அமைத்துக் கொடுத்து வீடற்ற மக்களை குடியேற்றினார். ஈவினைப்பகுதியில் 54 வீடுகள் அமைப்பதற்குரிய காணியை வாங்கிக் கொடுத்திருக்கிறார். கோண்டாவில் உப தபாற்கந்தோர் அமைத்துக் கொடுத்ததுடன் குட்டிச் சுட்டி முன்பள்ளிக்கு காணி வாங்கி அதன் மேல்மாடியையும் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

யாழ் பலாலி வீதியில் இலுப்பையடி சந்தியில் இருந்து ஊரேழு வரையான 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 300 மரங்களை நட்டு மாதாந்தம் 40 ஆயிரத்துக்கு மேல் செலவழித்து நீரூற்றியும் வருகின்றார்.

இப்படியாக தாயகத்தில் இருந்து கொண்டே சமூகத்துக்கு அள்ளிவழங்கிய வள்ளல் திரு ராசையா குவேந்திரநாதன் அவர்களுக்கு புதிய வெளிச்சம் 2019 க்கான விருதை வழங்குவதில் இகுருவி பெருமையடைகிறது.

 

 

11) வன்கூவர் இலிருந்தும், ரொறன்ரோவில்  அழைக்கப்படட இகுருவியின் Genocide ஆவணப்படுத்தல் தொடர்பான விருதுக்காக Suren karththikesu மற்றும் சினங்கொள் Ranjith Joseph.

 

இகுருவியின் ஆவணப்படுத்தலுக்கான  விருது சுரேன் கார்த்திகேசு

மிகக் கொடிய இரத்த ஆறை உருவாக்கிய கொடிய யுத்தத்தின் சாட்சியங்களாக பல மனிதர்கள் இருந்தாலும் அதன் ஆவணப்படுத்தலுக்கு ஊடகப் போராளிகளின் பங்கு மிக முக்கியமாக இருந்தது.
இன்று எம் அரங்கை அலங்கரிக்கும் ஊடகப் போராளியான சுரேன் கார்த்தி கேசு இறுதிப் போரின் குண்டு மழைக்குள் துணிந்து நின்று ஆவணம் சேர்த்த ஒப்பற்ற பணிக்காக எம் முன்னே நிற்கின்றார்.

2002ம் ஆண்டில் இருந்து ஈழநாதத்துடன் ஆரம்பித்த இவரது ஊடகப் பயணமானது ஒரு குறுகிய நிலப்பரப்பின் யுத்த மேகத்தின் கீழே குண்டு மழைக்குள்ளும் 25.4.2019 அன்று காயப்படும் வரை தொடர்ந்தது.
2003இல் இருந்து வெள்ளிநாதத்தின் வடிவமைப்புக்கு பொறுப்பாக இருந்த சுரேன் கார்த்திகேசு அவர்கள் எமக்குள்ளிருக்கும் முன்னுதாரணமான ஊடகவியலாளர்களில் ஒருவராவார்.

 

sunsea கப்பல் மூலம் 2009 க்கு பின்னர் கனடா வான்கூவர் வந்து சேர்ந்தும் தொடர்ந்து, இனப்படுகொலையின் முக்கிய சாட்சியாக தொடர்ந்தும் எழுதி வருகின்றார் . குறைந்த நிலப்பரப்பில் இறுதிவரை வெளிவந்த ஈழநாதம் பத்திரிகையை நினைவுக்கூர்ந்தும், அந்த மக்கள் பத்திரிகையில் கடமையாற்றும் போது இறுதி யுத்தத்தில் கொள்ளப்பட்ட சக ஊடகவியாளர்களையும் நினைவு கூர்ந்து இகுருவியின் ஆவணப்படுத்தலுக்கான விருது சுரேன் கார்த்திகேசு அவர்களுக்கு வழங்கப்படுவதில் பெருமையடைகிறது.

 

இகுருவியின் ஆவணப்படுத்தலுக்கான  விருது  சினம்கொள் படத்தயாரிப்பாளர் ரஞ்சித் ஜோசப்

எம் இனத்தின் அடையாளங்களையும் உரிமையையும் பேச மிகச் சிறந்த ஆயுதங்களில் ஒன்றான திரைப்படத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குனர்களில் ரஞ்சித் ஜோசப்பும் ஒருவராவார்.

சிறு வயதிலேயே கனடாவிற்கு குடிபெயர்ந்தாலும் சினிமாவின் மேற்கொண்ட காதலால் தனது பொறியியல்துறை கற்கையை கைவிட்டு சினிமாக் கற்கையை பூர்த்தி செய்து தென்னிந்தியத் திரைப்படங்களில் பணியாற்றியிருக்கின்றார்.

சினம் கொள் என்ற திரைப்படத்தின் மூலம் எம் இனத்துக்கு ஏற்பட்ட அவலங்களையும் எம் சமூகம் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் வெளி உலகுக்கு திரைப்படமாகக் காட்டியிருக்கின்றார்.

கமரா என்ற மிகப்பெரும் ஆயுதத்ததால் வரலாறு எழுதும் இவரைக் கௌரவப்படுத்தி இகுருவியின் ஆவணப்படுத்தலுக்கான  விருதினை வழங்குவதில் இகுருவி பெருமையடைகிறது.

ஏப்ரல் மாத இகுருவி பத்திரிகையில் முன் அட்டையில் சிறப்பு பதிவாக இத்திரைப்படம் பற்றி நிறையவே எழுதியிருந்தோம். தமிழ் மக்கள் அனைவரும் பார்க்கவேண்டிய படம் “சினம்கொள் “.  உலக தேசிய விருதுகளுக்கு முன்னர் இகுருவி  எம் தேசம் சார்ந்து இப் படைப்பை ஆக்கிய ரஞ்சித் சோசப் அவர்களுக்கு விருதினை வழங்குவதில் பெருமையடைகிறது.

 

12)

 

வல்வை படுகொலைநூல் பற்றிய ஆவணப்படம் 

 

1989 ஆண்டு நடைபெற்ற “வல்வை படுகொலை” நூல் – 30 வருட நினைவாக மீள் பதிப்பித்தலும், அதன் ஆவணப்படம் வெளியிடலும. தாயகத்திலிருந்து அழைக்கப்பட வல்வை ந.அனந்தராஜ் அவர்கள் பங்கேற்பு.

30 ஆண்டுகளுக்கு முன்னர் வல்வெட்டித்துறை கிராமத்தில் இந்திய ராணுவத்தினால் தொடர்ச்சியாக மூன்று நாட்க்கள் ஓகஸ்ட் 1,2,3 ஆம் திகதிகளில் நடைபெற்ற படுகொலை நிகழ்வும் மற்றும் அப்படுகொலையை பாதிக்கப்படடவராக பதிவு செய்த வல்வை ந.அனந்தராஜ் அவர்களுடனான ஆவணப்படமாக்களும் வெளியிடப்பட்டது.

1989 ஆம் ஆண்டு பாடசாலை அதிபராக கடமையாற்றிய, பிரஜைகள் குழு செயலாளராக இருந்த வல்வை ந. அனந்தராஜ் அவர்கள் முற்றாக பாதிக்கப்படடவராக, குற்றுயிராக தப்பி மீண்டுவந்து, பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களை  ஆவணப்படுத்தி, படகு மூலம் இந்தியா சென்று பகிரங்கப்படுத்தி நீதிகேட்டு சத்திய கடதாசிகள் அடங்கிய  “வல்வை படுகொலை” எனும் வரலாற்று நூலின் 30 ஆண்டுகள் பயணம். தனிமனிதனாக படுகொலைக்கான நியாயம் கேட்டு அவர் பயணித்த பயணம் ஆவணப்படமாக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 1989  ஆண்டு சுமார் 60,000 பிரதிகள் வெளிவந்த “வல்வை படுகொலை”  நூல், மீண்டும் 2005 ஆண்டு லண்டனில் இரண்டாம் பதிவாக வெளியிடப்பட்ட இந்நூல், ekuruvi light 2019 லும்  மூன்றாம் பதிவாக தமிழ், ஆங்கில ஆகிய இரு மொழிகளிலும் அச்சிடப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டது.

 

13)

  A Note from the No Fire Zone ஆவணப்படம்

அமெரிக்காவிலிருந்து மருத்துவர் வரதராஜா அவர்கள் பங்கேற்பும், A Note from the No Fire Zone ஆவணப்படம் trailer காட்சிப்படுத்தலும்.

“தமிழர்களின் கனவுகள் சிதைக்கப்பட்டு, உறவுகள் குதறப்பட்டு எமக்காக நாமே அன்றி வேறொருவருமில்லை என்று உணர வைத்த முள்ளிவாய்க்கால் அனர்த்தங்கள் நிகழ்ந்து பத்து ஆண்டுகள் ஓடிச் சென்று விட்டன. முள்ளிவாய்க்கால் அனர்தங்களின் போது ஆயிரமாயிரம் துயர் கதைகள் எம்மவர்களுக்கு நிகழ்ந்தன. அவற்றினை உலக அரங்கினில் வெளிக்கொணர வேண்டிய பாரிய பொறுப்பு தமிழர்களுக்கு உண்டு. இந்த வகையில் ஊடகங்களுக்கும் கலை இலக்கியம் சார்ந்து செயல்படுகின்ற படைப்பாளிகளுக்கும் பொறுப்பும் கடமையும் நிறையவே உண்டு. இரண்டாம் உலகப் போரின் போது, யூதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அறுபது ஆண்டுகள் கழிந்தும் இன்னமும் உலக சினிமாவில் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இந்த அறுபது ஆண்டுகளிலும் சொல்லித் தீராத கதை அவர்களது. அந்தக் கொடுமைகளைப் போலவே, ஈழ தமிழர் மண்ணில் நிகழ்ந்த சோகங்களும் சொல்லப்பட வேண்டியவை. Channel 4 Callum Macrae இன் No Fire Zone போன்ற ஆவணப்படங்கள் ஐ.நாவிற்கு கொடுத்த அழுத்தங்களை தமிழர்கள் நன்கு அறிவர்.

இதன் மற்றுமொரு பரிணாமமாக, மருத்துவர் வரதராஜாவின் A Note from the No Fire Zone எனும் ஆங்கில நாவல் வெளிநிகழ்வும் பொய்யா விளக்கு அறிமுக நிகழ்வும் அமைந்திருந்தது.

 

 

14)

eகுருவி பத்திரிக்கைக்கு உண்டியல் பணம் $1975.70

கடந்த வருடம் இகுருவி பத்திரிகை $1 பத்திரிகையாக அறிமுகம் செய்திருந்தது. பத்திரிகையின் பெறுமதி $1 தான். நீங்கள் தானமாக ஒரு டொலர் கொடுக்க வேண்டாம். அதன் பெறுமதியை மட்டும் தாருங்கள். நாங்கள் அந்த பத்திரிகையின் பணத்தை தாயக மனிதாபிமான பணிகளுக்கு செலவு செய்கின்றோம் என்று கடந்த இகுருவி நிகழ்வில் நவஜீவன் அனந்தராஜ் அவர்கள் அறிவித்திருந்தார். பத்திரிகைக்கான பெறுமதி ஒன்று இருக்கும் போது அதன் வாசிப்பாளர்களுக்கும் , தேவையானவர்களுக்கும் சென்றடைய வாய்ப்பு அதிகம். அதே நேரம் $1 உண்டியலில் இடும் போதும் தாயக வாழ்வாதார தேவையை நினைவுகூருவதற்கும் சந்தர்ப்பம் அதிகம் அன்று இத்திட்டத்தை கொண்டுவந்தோம்.

அதனை தொடர்ந்து சிவத்த உண்டியல் அறிமுகப்படுத்தப்பட்டது .

கடந்த ஒரு வருடமாக இகுருவி பத்திரிக்கைக்கு உண்டியல் மூலம் பணம் கொடுத்து வாங்கியவர்கள் மூலம் பெற்றுக்கொண்ட $1375.70 பணம், டாக்டர். ஆறுதிருமுருகன் அவர்களது தொடரும் மனிதாபிமான பணிகளுக்கு வழங்கப்பட்டது.

இது வெறுமனே, கடந்த ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட, சிவத்த உண்டியல் திட்டம்.  மாதம் ஒன்றுக்கு 10,000 பிரதிகள் படி கடந்த 10 மாதங்களிலும் சுமார் சுமார் 100,000 பிரதிகள் மூலம் $100,000 டொலர்கள் மக்களிடமிருந்து வந்திருக்க வேண்டும் . ஆனால் 1375 டொலர்கள் மட்டுமே உங்களிடமிருந்து வந்துள்ளன. அத்தொகை அன்பளிப்பாக  கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களின்   சிவபூமி அறக்கடடளைக்கு வழங்கப்பட்டது.

ekuruvi light 2019 தொடர்ச்சியான நிகழ்வுகள் மூலம்  15,000 கனேடிய டொலர்களும் , தனிப்பட்டவர்கள் மூலம் சுமார் 5000 கனேடிய டொலர்களும் மொத்தமாக $ 20,000 தாயக சமூக மனிதாபிமான பணிகளுக்கு வழங்கப்பட்டது .

 கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களது சமூக பணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக நடைபெற்ற  தனிப்பட்ட நிதிசேர் நிகழ்வில்  (22, மே 2019) அன்று Scarborough Convention Centre இல் நடைபெற்ற நிகழ்வில் ஜெகன் மயில்வாகனம் (Owner  Scarborough Convention Centre) , சந்திரன் ராசலிங்கம் ( Owner  Invorce Life) , தயாளன் ராசையா (Thermocare Heating and Cooling Inc) ,சங்கர் நல்லதம்பி  (Director at Vibrant Hospitality Group)  சாந்த பஞ்சலிங்கம் ( Owner Canadian Tamil’s Chamber Of Commerce’s President) , Pat Kandiah, தீபன் ராஜ் , லலிதா பாலா  ஆகியவர்கள் கலந்து கொண்டு தமது நிதி பங்களிப்பை வழங்கியிருந்தார்கள்.

 

15) அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் வருகை, அவரது சந்திப்புகள் (மே 14, அவரது தாயார் இறந்த செய்தி கேட்டு அவர் உடனடியாக தாயகம் சென்றதால், அதன் பின்னர் பல நிகழ்வுகள் நிறுத்தப்பட்டன)

 

16) ஒட்டொவாவிலும், ரொறன்ரோவிலும் நடைபெற இருந்த ஓவியர் புகழேந்தியுடனான ஓவியப் பயிற்சி பட்டறைகள், Genocide ஓவிய கண்காட்சி நிகழ்வுகள் – முதல் நாள் அவரது பயணத்தில் தடங்கல் ஏற்பட்டதால் இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்டன. பின்பு ஒரு சந்தர்ப்பத்தில் நடைபெறும்.

 

18) தாயகத்தில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை இகுருவி பத்திரிகையின் வெளியிட்டு விழா

சேனல் 4 – Callum Macrae அவர்களையும் அழைத்திருந்தோம். இறுதிநேரத்தில் முடியாமல் போனது. ஒரு சிறிய ஊடகத்தினால் எம்மால் முடிந்ததை செய்திருக்கிறோம்.

இச்செயற்பாடுகள் சுமார் 10 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டன. விசா ஒழுங்குகளிலிருந்து நூல்கள் வரை திட்டமிடல், செயற்படுத்தல் என நீண்ட மனித உழைப்பு, பண விரயம், மன உளைச்சல், சோர்வு என்பவற்றுக்கு மத்தியில் என்னோடு முதுகெலும்பாக நின்று செயலாற்றிய ரமணன், ஜெயகௌரி, இந்திரன், ரதன், ரஜீவ், மதிசுதா, Pat, இகுருவி ஐயா, தரசிகன், தீபன், ஸ்ரீ போன்றவர்களுக்கும், பெயர் குறிப்பிடாமல் விட்ட பலரது உழைப்புக்கும், ஒத்துழைப்புக்கும் ஏற்பட்ட பணவிரயத்துக்கும் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிக்கிறேன்.

கடந்த வருடம் புதிய வெளிச்ச ஆசிரிய விருதை ஆரம்பித்து வைத்த ஞா.ராகினி இம்முறை முள்ளிவாய்க்கால் ஈகச்சுடரை ஏற்றிவைத்தார் என்ற செய்தி, புலம்பெயர் ஊடகமாக நாங்கள் மக்களோடு நிக்கின்றோம் என்ற ஒரு சிறு மன ஆறுதலைத் தந்தது.

 

புகைப்படங்களை பார்வையிட இந்த இணைப்பில் Click

https://images.biztha.com/Latest-Events-2019/E-Kuruvi-Light-2019-Photos-by-Tharshigan-e-Kuruvi-May-12

 

 

 

 

 

பாடல் வரிகள் 

தாயக மண்ணே… தாயக மண்ணே…
இது பிள்ளைகள் பாடல்.
பிள்ளைகள் பாடல்..!
ஒரு பேராற்றல் தேடல்.
பேராற்றல் தேடல்..!

அல்லாடிய நிலமங்கே..?
மன்றாடிய நிலையங்கே..?
ஒன்றாகிடும் பலமெங்கே..?
வென்றாகிடும் களமெங்கே..?
தாயக மண்ணே…
தாயக மண்ணே …

அனல் விழுந்தெரியும் மணல் வெளி நிலத்தில்
கஞ்சிக்கு அலைந்தன கால்கள்..!

மாய் இருள் கவியும் கடல் வெளி வனத்தில்
பாலின்றி மடிந்தன மகவுகள்..!

ஊன் நிறை சேற்றில் உடல் புதைத்தழுது
உறவுகள் விழுந்தன சாவில்..!
சிலை வடிவாக ஒளி தரு தேசம்
சிதைந்து சிவந்தது போரில்.!
காற்றினில் கூட கந்தகம் கலந்த
காலம் கழித்தோமே..!
வீட்டினை தொலைத்து வீதிகள் எங்கும்
விலங்குகள் ஆனோமே..!
விலங்குகள் ஆனோமே..!

தாயக மண்ணே.. தாயக மண்ணே…
உதறும் குண்டுகள்
சிதறும் உயிர்கள்
படுகின்ற பாடு
அழுகின்ற நாடு
காத்து நின்றோமே..!
பாவிகளாய் நாம்
பார்த்து நின்றோமே..!
ஏதும் இயலா
பாவிகளாய் நாம்
பார்த்து நின்றோமே..!

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு
அறிவாய் சனமே அறிவாய்..!
தீதும் நன்றும் பிறர்தர வாரா
திடம் கொள் மனமே திடம் கொள்..!

ஆயிரம் ஆண்டுகள்
சேர்த்த கண்ணீரை
அழுது முடிப்போம்
அடியெடுத்து நடப்போம்

தமிழர் காணும் துயரம் களையும்
சபதம் ஏற்று எழுமின் எழுமின்..!
என்றோ ஒருநாள் விடிய வேண்டி
இரவைச் சுமக்க எழுமின் எழுமின்..!
நூற்றாண்டுத் தோல்வியில் பாடம் படித்து
புதிதாய் பிறக்க எழுமின் எழுமின்…!
நம்பும் கனவு நனவாய் மாறும்
நம்பிக்கையோடு எழுமின் எழுமின்..!

தாயக மண்ணே
தாயக மண்ணே
இது பிள்ளைகள் பாடல்
பிள்ளைகள் பாடல்
ஒரு பேராற்றல் தேடல்
பேராற்றல் தேடல்