கனடா பொதுத் தேர்தல் களம் – வாக்காளர் பங்களிப்பு

கனடா  பொதுத் தேர்தல் களம் –   வாக்காளர் பங்களிப்பு

இவ்வருடம்  அக்டோபர் மாதம்  21 ஆம் திகதி கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.  முக்கிய கட்சிகளான லிபரல் கட்சி,  பழைமைவாதக் கட்சி, புதிய சனநாயகக் கட்சி என்பனவற்றுடன், பசுமைக்கட்சி  மற்றும் மக்சிம் பேர்ணியரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கனேடிய மக்கள் கட்சி உட்பட  ஏனைய சில கட்சிகளும் போட்டியிடுகின்றன.

கடந்த 2015 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில்  பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 68.5% ஆனவர்கள் வாக்களித்திருந்தனர்.  இது 2011 இல் வாக்களித்த  61.1% ஆனவர்களைவிட அதிகமானதாகும்.  2008 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் 58.8% ஆனவர்களே வாக்களித்திருந்தனர்.

பெரும்பாலான கனேடியர்கள், அதுவும் குறிப்பாக இளையோர்கள் அரசியலில், தேர்தலில் அக்கறை அற்றவர்களாகக் காணப்படுகிறார்கள்.  தேர்தலில் தாங்கள் வாக்களிக்காமைக்கு பெரும்பாலானவர்கள் பின்வரும் ஆறில் ஒன்றையோ அல்லது  ஒன்றுக்கு மேற்பட்டவைகளையோ  காரணங்களாகக் கூறுகிறார்கள்.  அவையாவன  “அரசியலில் எனக்கு நாட்டம் இல்லை”, “வேட்பாளர்கள் யாரென்று எனகுத் தெரியாது”, “இப் பிரச்சினைகள் ஏதும் என்னைப் பாதிப்பதில்லை”, “எனக்குத் தெரிந்தவர்கள் எவருமே வாக்களிப்பதிலை”, “எங்கே , எப்படி வாக்களிப்பது என்று எனக்குத் தெரியாது”, “வாக்களித்தல் மூலமே எனது அரசியல் நம்மிக்கைகளை வெளிபடுத்தவேண்டும் என்ற அவசியம் இல்லை”, என்பனவாகும்.

தேர்தல் காலங்களில் முக்கியத்துவம் பெறும் பிரச்சனைகள் எந்த அளவுக்கு விறுவிறுப்பாக அமைகின்றனவோ அந்த அளவுக்கே தேர்தல் மீதும், வாக்களிப்பின் மீதும் மக்களின் ஆர்வமும் இருக்கும். விறுவிறுப்பான, பிர்ச்சனைகள், அனல் பறக்கும் பிரச்சாரங்கள், தேர்தல் விளம்பரங்கள் என்பனவே மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கும், வாக்களிப்பு வீதத்தையும் கூட்டும்.    இவ்வருடம் நடைபெற உள்ள தேர்தல் விறுவிறுப்பானதாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

வாக்களித்தல் என்பது ஓரு தனிமனித முடிவே. ஆயினும்  நண்பர்கள், குடும்ப அங்கத்துவர்கள் அம்முடிவில் பாரிய அளவில் செல்வாக்குச் செலுத்துகின்றனர்.

ஓருவரை வாக்களிக்க வைப்பதில், நண்பர்கள் அல்லது குடும்ப அங்கத்துவர்களிடமிருந்து  கிடைக்கும் ஒரு சிறிய ஊக்குவிப்பு , தேர்தல் விளம்பரங்களை விட பாரிய அளவில் வினைத்திறண் மிக்கது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.