எங்கட புத்தகங்கள் 2020, நல்லதொரு தொடக்கம்

எங்கட புத்தகங்கள் 2020, நல்லதொரு தொடக்கம், நல்லதொரு முயற்சி. யாழ். நூலக எரிப்பிற்குப் பின்னர் அசையாது நின்ற இத்தேரை அசைத்துவைத்த அனைவர்க்கும் நன்றிகள்.

ஆயுதப்போராட்டம் எழுச்சி பெற்றிருந்த காலத்தில் தேசியம், சுயநிர்ணயம், மக்கள் புரட்சி, இயக்க நூல்கள் போதியளவு வெளிவந்தன. அதிசயித்துப் பார்க்கக்கூடியளவில் மொழிபெயர்ப்புக்கள் வந்தன. போரும் சாதாரணர்களின் வாழ்க்கையும் மிகமிக அண்மித்தவையாகவே இருந்தமையால், பத்திரிகைகள் – இதழ்களைத் தாண்டி வெளிந்த அனைத்துப் படைப்புக்களையும் மக்கள் ருசிக்குமளவுக்கான கால இடைவெளி கிடைக்கவில்லை. ஆனால் பாடசாலை மாணவர்கள் மட்டத்தில் வாசிப்பின் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்குப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. அறிவமுதின் ஆரம்பத்தோடு அது அடுத்த கட்டத்தை அடைந்தது. இயக்க எதிர்ப்பு நூல்கள் கூட அங்கே கிடைத்தன.

ஆனால் வன்னிக்கு வெளியேயான தமிழர் பகுதிகளில் இந்த முயற்சிகள் நடக்கவில்லை. மேலே குறிப்பிட்டதுபோல, ”வாசிப்பு மட்டம் குறைந்துவிட்டது”, “எக்ஸாம் புத்தகங்கள்தான் விற்கும்” போன்ற விமர்சனங்கள் அதீதமாக நம்பப்பட்டன. மக்கள் வெளியில் வரமுடியாதளவுக்கு நிலவிய அச்சசூழலும், தொடர்சாதனங்களின் அதிக வருகையும் வாசிப்பை மறக்கச்செய்தன. நாளாந்த பத்திரிகை படிப்பதற்குக் கூட பஞ்சுப்படும் மனிதர்களை நம்மிடையே உருவாக்கின.

இவ்வாறு வாசிப்பற்ற சமூகமாக சில தசாப்தங்களை நாம் கடந்திருக்கையில், வரலாற்றுக்கும் நமக்கும் இடையில் விலகல் அதிகரித்தது. வரலாறற்ற இனமானோம். ஆனால் அது நமக்கு மிக அண்மையில் உறங்கிக்கொண்டிருந்தது. பழையன மறத்தலே புதியனவாதல் என நம்பிக்கொண்டோம். கற்பனை மறந்தோம். கதைகளை மறந்தோம். கலைகளைத் துறந்தோம். உலகம் சுருங்கசுருங்க விரிவடையும் படைப்பாக்கத்திறனை கண்டடைய நாம் தவறியேவிட்டோம். இதனால் புதியவற்றை சிருஷ்டிப்பதில் பின்போனோம். நம்மைவிட வரலாற்றிலும் பண்பாட்டிலும் பின்னின்ற இனமெல்லாம் ஆய கலைகளிலும் முன்னேறிச்செல்ல நாமோ பின்னேறிக்கொண்டிருக்கிறோம்.
இவற்றுக்கெல்லாம் ஒரே காரணத்தைத்தான் சொல்லமுடியும், நம்மிடம் வாசிப்பில்லை. வாசிக்கும் ஒரு சிலரும் நம் சமூகத்தைவிட்டுப் பிரிந்துநிற்கின்றனர். அவர்களின் அறிவும், இயக்கமும் வேறொரு உலகிற்கானதாகமாறிவிடுகின்றது.

எனவே வாசிப்புத்தான் இப்போது நமக்கு மிகத்தேவை. குழந்தைகளுக்கு வாசிப்புத்தேவை. பாடசாலை, தனியார் கல்வி முறைகள் குழந்தைகளின் 24 மணி நேரங்களையும் விழுங்கிவிட, அவர்கள் சப்பிவிதையில் முளைத்த மரங்களாக வளர்கின்றனர். நாளொன்றின் ஒரு மணிநேரமாவது குழந்தை தான் விரும்பும் கதையை படிப்பதற்குப் பெற்றார் நேரமொதுக்க வேண்டும். அதற்கு இதுபோன்ற ”எங்கட புத்தக கண்காட்சிக்கு குழந்தைகளுடன் வாருங்கள். அந்த நூல்களைத் தொட்டுணரச் செய்யுங்கள். அவர்களுக்குப் பிடித்த நூலை வாங்கிக்கொடுங்கள்.

அண்மைய ஆண்டுகளில் பல்கலைக்கழக மாணவர்களின் அறிக்கைகள், ஆய்வுகளில் கனதியிருப்பதில்லை என்று சொல்லப்படுவதுண்டு. அதற்கும் பிரதான காரணமே வாசிப்பின்மைதான். ரியூற்றுக்குத் தேவையான விடயத்தை மட்டும் புத்தகங்களில் இருந்து போட்டோகொப்பி எடுத்து அதனை அப்படியே பார்த்தெழுதி நற்புள்ளிகள் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை பல்கலைக்கழக கற்பித்தல்முறை உருவாக்கிக்கொடுத்திருப்பதால், ஒரு நூலை முழுமையாக வாசித்து அதன்பொருளை முழுமையாக புரிந்துகொள்ளும் வாய்ப்பைத்தவறவிடுகின்றனர். எனவே தயவுசெய்து பல்கலைக்கழக மாணவர்களே.. மகாபொலவிலோ, வேறு உதவித்திட்டங்களிலோ கிடைக்கும் ஆயிரம் ரூபாவை இந்தப் புத்தகக் கண்காட்சியில் நல்ல நூலொன்றை வாங்கச் செலவிடுங்கள். நாம் கனதிமிக்கவர்களாக மாறவேண்டும்.

”புத்தகத்தை திறந்தாலே நித்திரைவருது” எனச் சொல்லி வாசிப்பை நிறுத்திக்கொள்ளும் இளையவர்களைப் பார்த்திருக்கிறேன். நமக்கு விருப்பற்ற செயல்கள்தான் அயர்ச்சியைத் தருகின்றன இல்லையா..? எனவே மாயாவி கதைகளில் இருந்து உங்கள் வாசிப்பைத் தொடங்குங்கள். அப்படியே சாண்டில்யன், பொன்னியின் செல்வன் என முதற் வாசிப்பை கற்பனை சார்ந்த விடயப்பரப்புக்குள் வைத்திருங்கள். இந்த வாசிப்புக்கள் போதிய திருப்தியின்மையை காலப்போக்கில்தரும். அப்போது மனித வரலாற்றையும், தனித மனிதர்களின் வரலாற்றையும் படியுங்கள். அந்த வாசிப்புக்கள் தத்துவங்களிடம் உங்ளை இழுத்துச்செல்லும். இந்தப் படிப்படியான வாசிப்பு முன்னேற்றம் உங்களை சிறந்த மனிதராக்கிவிடும். சிறந்த மனிதராக புத்தகங்களைத் தேடுங்கள்.

“படிக்கிற எதுவும் நினைவு நிற்கிறதில்ல. பிறகேன் வாசிக்கவேணும்” எனச் சலித்துக்கொள்பவர்களையும் பார்த்திருக்கிறேன். ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், நாம் வாசிக்கும் அனைத்தையும் அப்படியே மனனம் செய்து மூளைக்குள் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியமே இல்லை. வாசிக்கும் கனத்தில் அது நமக்குப் புரிந்தால் மட்டும்போதும். அதுவே அறிவாக, கற்பனையாக மாற்றமடையும். வாசிக்கும் அனைத்துவிடயங்களையும், நமக்குள் ஏற்றிக்கொண்டால் நமது சுயம் இறந்துபோய்விடும். நூல்களாக – நாம் வாசித்த நூல்களின் ஆசிரியர்களாக நம்மை மாற்றிக்கொள்ளும் அபாயம் ஏற்படும். எனவே வாசிப்பில் சலித்துப்போய் இருப்பவர்களும், இந்த விடயத்தைப் புரிந்துகொண்டு வாசிப்பைத்தொடங்க “எங்கட புத்தகங்களை“ எடுக்க வாருங்கள்.

இறுதியாக ஒருவிடயம், இதையெல்லாம் படித்து, அரிய பெரிய நூல்களை வாங்கி வாசித்துப் பெரியவர்களாகினாலும், ஒருபோதும் உங்களை இந்த சமூகத்திலிருந்து வேறானவராகப் பிரித்துப் பார்க்க – அடையாளப்படுத்த முயலாதீர்கள். பலம்பொருந்திய மூளைசாலியாக காட்டிக்கொள்ள இடம்கொடாதீர்கள். அப்படி செய்தால் நீங்கள் சமூகத்திலிருந்து விலகிநிற்பீர்கள். அப்படி நிற்பது அறமல்ல. ஏனெனில் நீங்கள் பெற்ற அனைத்தும் இந்த சமூகத்திலிருந்து எடுக்கப்பட்டவைதான். எனவே இயல்புவாழ்க்கைக்குள் இருந்தபடியே வாசிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.

Copy from Jera Thampi