எங்கட புத்தகங்கள்

எங்கட புத்தகங்கள்

பண்பாட்டு இயக்கங்களின் ஒரு பகுதியாக இலக்கியங்கள் சேர்ந்து இயங்குவதன் முக்கியத்தை செயற்படுத்திப்பார்க்கும் காலத்தைத் திறந்திருக்கிறோம் ; என்பதிலிருந்து நாம் ஈழத்தின் புத்தகத் திருவிழாக்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

புத்தகங்களையும் புத்தகத் திருவிழாக்களையும், யாழ்ப்பாண மையத்தில் வைத்திருக்கின்றார்கள் என்ற விமர்சனங்கள் கடந்த ஐந்து வருடத்தில் ஈழத்தில் நடைபெற்ற புத்தகக் காட்சிகளை அவதானிக்காமல் வந்ததன் விளைவென்றே கருத வேண்டியிருக்கிறது. யாழ்ப்பாணத்திற்கு வெளியே புத்தகக் காட்சிகள், வவுனியா தமிழ்மன்ற வருடாந்த இலக்கிய விழாவில் நடை பெறுகிறது. மட்டக்களப்பில் சென்ற வருடம் இறுதியிலிருந்து புத்தகத் திருவிழா ஒன்று நடக்கத் தொடங்கியிருக்கிறது. வன்னி இலக்கியச்சந்திப்பில் சிறிய அளவில் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. இனி மலையகத்திலும் தெற்கிலும் புத்தகக் காட்சிகள் இடம்பெறும் என்ற நம்பிக்கை கைகூடத் தொடங்கியிருக்கிறது.

நிலத்திலிருந்து செயற்படும் பெருமெடுப்பிலான பதிப்பகங்கள், அச்சகங்கள் இல்லாத பின்னணியிலும் சொந்தக்காசைப் போட்டு இதழ்களையும் பதிப்பு முயற்சிகளையும் மேற்கொள்ளும் நபர்களையும், பதிப்பகங்களையும், புத்தகக் கடைகளையும் ஏனைய பண்பாட்டு அமைப்புகளோடு இணைக்கின்ற புள்ளிகளாக இக்காட்சிகளை இன்னும் செறிவாக்க வேண்டும். புத்தகங்களைப் புழங்கு பண்பாட்டுக்குள் எடுத்து வந்து முதலில் மக்களுக்கு கூட்டாக அவற்றை கண்படுத்த வேண்டியிருக்கிறது.

அவதானித்த வரையில் வவுனியாவிலும் சரி மட்டக்களப்பிலும் சரி யாழ்ப்பாணத்துலும் சரி புத்தகத் திருவிழா என்று வைத்தால் சனங்கள் வருகிறார்கள். புத்தகங்கள் வாங்குகிறார்கள். புத்தகம் வாங்குவது பெரிய விடயமா என்று கேட்டால், ஈழத்திற்கு புத்தகத்திருவிழாக்கள் புதிய கொண்டாட்டங்கள்தான். ஈழத்திற்கு ‘சமூகபண்பாட்டு இயக்கங்கள்’ எவ்வளவு புதிதோ அவ்வளவு புதியவை புத்தகத்திருவிழாக்கள்.
சனநாயகத்தைப் பழகுவதற்கு தேர்தலில் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு போருக்குப் பிறகு எவ்வாறு பழகத் தொடங்கியிருக்கிறோமோ அப்படித்தான் இதுவும். புத்தகங்கள் குழுநிலையில் இருந்து, மிகவும் குறைந்த அளவே இருக்கும் வாசகர்களில் இருந்து, விரிந்து சென்று மக்களை அதிகமாக பண்பாட்டு இயக்கங்களில் சுய கருத்தியலோடு பங்குபற்ற வைக்க புத்தகங்களையும் அதுசார் திருவிழாக்களையும் காட்சிகளையும் தொடக்க வழிகளாகக் கொள்ள வேண்டும்.

கடந்த பத்து வருடத்திற்கு முதல் பெருமெடுப்பில் தோன்றியிராத பண்பாட்டு இயக்கங்களை இப்போது காண்கின்றோம். இயற்கை மற்றும் சூழலியல் இயக்கங்கள், மரபுரிமை இயக்கங்கள், மாற்றுக்கல்வி சார் இயக்கங்கள், பால்புதுமையினர் சார் இயக்கங்கள், நூலகவியல் சார் இயக்கங்கள், இலக்கியச் செயற்பாட்டு இயக்கங்கள், சமூக நீதி சார் சனநாயக இயக்கங்கள், என்று பண்பாட்டு இயக்கங்கள் சிந்திக்கவும் செயற்படவும் தொடங்கியிருக்கின்றன. இவற்றின் பகுதியாக இலக்கியங்களும் வாசிப்பும் இணணந்து கொள்வதற்கான வழிகளை இப் புத்தகக் காட்சிகளும் திருவிழாக்களும் திறக்கின்றன.

இதுவரை ஈழத்தில் இலக்கியம் இருக்க வில்லையா என்று கேட்டால்? இலக்கியம் இருந்தது அமைப்புக்கள் இருந்தன. ஆனால் அவை பெரும்பாலும் தனிநபர்களின், இலக்கிய மதிப்பீடுகளின் , அரசியலிடுதல்களின் , சார்பு நிலைகளின் குறுக்கங்களுக்குள் சிதறி இருந்தன. இங்கே நாம் பேச வேண்டியது அவை பண்பாட்டு இயக்கங்களாக இணைந்து முதலில் இலக்கியங்களை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்பது. புத்தகக் காட்சிகளில் சென்று புத்தகம் வாங்குவதை, வாசிப்பதை ஒரு புழங்கு பண்பாடாக மாற்ற வேண்டும் என்பதைக் குறிக்கிறது. முதலில் வாசிப்பைப் பண்பாடாகப் பரவலடையச் செய்ய வேண்டும். சமநேரத்தில்
உரையாடல்களை செறிவு படுத்துவதன் மூலம் ‘நல்ல’ வாசிப்பிற்கு வாசகரை நகர்த்த இயலும்.

புத்தகங்களுக்கு இங்கொரு பெரிய சந்தை கிடையாது. நிலத்தில் இருந்து சென்று தமிழ்நாட்டில் பதிப்பிக்கவும் விற்கவும் வேண்டியிருக்கிறது. ‘எங்கட கதையள’ எங்கட சனம் வாசிப்பதே பெரும் பிரயத்தனமாகியிருக்கிறது. இதழ்களும், பிரசுரங்களும், நல்ல பத்திரிக்கையியலும் சேடமிழுத்தபடி காலத்தையும் சேர்த்து இழுக்கின்றன. இலக்கியம் இது வரைகாலமும், பெரும்பான்மையில் ‘ ‘எழுதுபவர்களே வாசகர்கள் வாசகர்கர்களே எழுத்தாளர்களும்’ என்ற சர்கஸ் கிணற்றுக்குள் ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. வாசிப்பும் எழுத்தைப் போலொரு ‘கலை’ என்பதாக இலக்கியம் பண்பாடாக்கப் பட வேண்டியிருக்கிறது.

வருடா வருடம் நடக்கும் யாழ் வர்த்தகக் கண்காட்சியில் முதல் முதலில் இரண்டு புத்தக ஸ்ரோல்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. ‘எங்கட புத்தகங்கள்’ எனும் பெயரில் ஈழத்தின் பல்வேறு இலக்கிய மதிப்பீடுகளைக் கொண்ட தரப்பும் ‘வாசிப்பு’ என்ற புள்ளியில் இணைந்திருக்கிறார்கள். இதழ்கள், பண்பாட்டு அமைப்புகள், கலை இலக்கியச் செயற்பாட்டாளர்கள் என்று அமைப்புக்கள் சேர்ந்து ‘எங்கட புத்தகங்களை ஒரே இடத்தில் திருவிழாவாக்கியிருக்கிறார்கள்.

இங்கே இலக்கிய மதிப்பீடுகள் என்பவை வாசகர் சார்ந்தும் இலக்கியச் செயற்பாடு சார்ந்து அசையப் போகும் உரையாடல் வழி வர வேண்டியவை. முதலில் நாம் புத்தகங்களை வாங்கப்பழகுவோம். பிள்ளைகளுக்கு வாங்கப் பழக்குவோம். வாசிக்கப் பழகுவோம்.
இலக்கியம் வாழ்கையை கொண்டாடமாகப் புரிந்து கொள்ளவும் வாழவுமானது.

முற்றவெளியில் இன்றும் நாளையும் புத்தக கூடங்கள் திறந்திருக்கும். கலை இலக்கியச் செய்ற்பாட்டாளர்களும் வாசகர்களும் அங்கே உலாத்துவார்கள். சென்று புத்தகங்கள் வாங்குங்கள், கதையுங்கள்.

ஈழத்து இலக்கியத்திற்கு மரபுகளுண்டு மதிப்பீடுகள் உண்டு. அவற்றை சனநாயத்தோடும் சமகாலப் பண்பாட்டோடும் இணைத்து விடுங்கள்!

Copy from Pratheep Kunaradnam