ஜெனீவாவும் கனடாவும். காத்திருக்கும் தமிழர்களும்.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத் தொடர் கடந்த 25ம் திகதி ஆரம்பித்துள்ளது. இந்த கூட்டத் தொடர் எதிர் வரும் மார்ச் மாதம் 25ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத் தொடரின் போது இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து மார்ச் மாதம் 20ம் திகதி பிரித்தானியாவின் தலைமையில் புதிய தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படும் என்று தெரியவந்துள்ளது.

மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக சிறிலங்கா சில சாதகமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளது என்று பிரித்தானிய வெளிவிவகார பணியக அமைச்சர் அகமட் தெரிவித்துள்ளார்.

‘நிலையான நல்லிணக்கத்தை எட்டுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா முழுமையான நிறைவேற்ற பிரித்தானியா ஊக்குவிப்பதாகவும்

மேலதிக காணிகளை விடுவிப்பதற்கு எடுத்துள்ள முடிவையும், இழப்பீடு வழங்கும் செயலகத்தை உருவாக்கும் முடிவையும் பிரித்தானியா பாராட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ந் நிலையில் மனித உரிமை பேரவை அமர்வுகளில் இலங்கை அரசாங்கம் நடைமுறைப்புடுத்துவதற்கு இணங்கிய விடயங்களை அமுல்படுத்துவதற்கான அழுத்தங்களை கனேடிய அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் செயல்பாட்டு தீர்மானங்கள் ( Motion ) இரண்டு கனேடிய பாராளுமன்றத்தில் கடந்த 2ம் திகதி முன்வைக்கபட்டன.

முதலாவது தீர்hனம் ( Motion ) லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன் மக்கே அவர்களால் கொண்டு வரப்பட்டது எனினும் இந்த அறிக்கையினை புதிய ஜனநாயக் கட்சி நிரகாரித்துள்ளது.

ஆதனை தொடர்ந்து இது தொடர்பான மற்றுமொரு தீர்மானம் ( Motion ) கொன்சவேற்றிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்னட்ட ஜெனுயிஸ் அவர்கள் கொண்டுவரப்பட்டது அதனை லிபரல் கட்சி நிரகாரித்திருந்தது.

இதன் காரணமாக இலங்கை தொடர்பான இரண்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்படாமல் போயுள்ளது.

இரண்டு பிரதான கட்சிகளும் கொண்டு வந்த தீர்மானமும் பெரும்பாலும் ஒரே மாதிரியான விடயங்களையே கொண்டிருந்தன.

இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட ஜெனீவாத் தீர்மானத்தின் 30- 1 ஐ நடைமுறைப்படுத்தப்ட வேண்டும் என்றும் அதனை நோக்கி இலங்கை அராசங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்பதையே அந்த தீர்மானங்கள் வலியுறுத்தியிருந்தன.

கனேடிய அரசாங்கம் இந்த விடயம் குறித்து தொடர்ச்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் இது தொடர்பான தீர்மானம் ஒன்றை கொண்டுவர வேண்டிய தேவை இல்லை என்றும் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் கனேடியத் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் இந்த நகர்வினை கொன்சவேற்றிவ் கட்சி எடுத்திருந்தாகவும் அதனை எதிர் கொள்ளும் வகையில் லிபரல் கட்சி நடந்து கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேவேளை கடந்த வாரம் இந்த தீர்மானம் குறித்து அனைத்து கட்சிகளுக்கும் தான் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தி அவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு முயற்சித்ததாகவும் எனினும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாலொ நிறைவேற்றப்படாமல் போவதனாலோ பெரியளவிலான மாற்றங்கள் ஏற்படாது என்றும் இந்த தீர்மானங்களுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் கனேடிய அரசாங்கத்திற்கு இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் கூறினார்.

ஏற்கவே இலங்கை விடயத்தில் தமது அரசாங்கம் காத்திரமான நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தமிழ் மரபுரிமை மாத நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அவர்கள் அதனை மீளவும் உறுதிப்படுத்தியிருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் ஜெனீவாவில் மனித உரிமை அமர்வுகள் ஆரம்பித்துள்ள நிலையில் கனேடியப் பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால் தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காக போராடி வரும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு ஊக்கத்தை கொடுத்திருக்கும் என்றும் குறிப்பிடபப்படுகின்றது.

இந்த தீர்மானங்களுக்கு கனேடிய அரசாங்கம் கட்டுப்பட வேண்டியதில்லை என்ற போதிலும் இது இலங்கையின் மனித உரிமைகள் குறித்து கரிசனை கொண்டுள்ள சர்வேதச நாடுகளுக்கும் இலங்கைக்கும் ஒரு முக்கியமான செய்தியை சொல்லியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்சிகளாலும் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போனது உண்மையில் தமிழர்களுக்கு துர்ப்பாக்கியமானது என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் தலைமையில் கனடா ஜேர்மனி உட்பட இன்னும் சில நாடுகள் இணைந்து கொண்டுவரவுள்ள புதிய தீர்மானம் இலங்கைக்கு மேலதிகமான கால அவகாசத்தை வழங்கும் நோக்கிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முள்ளிவாய்கால் பேரவலம் நிகழ்ந்து 10 ஆண்டுகள் கடக்கின்ற நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வுகள் எவையும் இதுவரையில் வழங்கப்படவில்லை.

காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் இரண்டு ஆண்டுகளை கடந்தும் தொடர்கின்றது, தமது காணிகள் தமக்கு வேண்டும் என்று கேற்கும் மக்களின் போராட்டமும் தொடர்கின்றது யுத்தக் குற்றங்களில் பாதிக்ப்பட்ட மக்களுக்கு நீதி இது வரை வழங்கப்படவில்லை. யுத்தக் குற்றங்களை புரிந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை அறிவிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் இலங்கைக்கு இன்னும் கால அவகாசம் வழங்கப்படுவது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கின்றது..

ரமணன் சந்திரசேகரமூர்த்தி