பிணை உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டியதில்லை

புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததால் கொலை செய்ய சூழ்ச்சி செய்ததாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனு இன்று (19) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி விகும் கலுஆராய்ச்சி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.

இதன்போது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, பொலிஸாரால் கைது செய்யப்படும் நபர், அவருக்கு எதிராக போதியளவு சாட்சியங்கள் முன்வைக்கப்படும் பட்சத்திலேயே சந்தேகநபராக ஏற்றுக் கொள்ளப்படுவார் என தெரிவித்தார்.

எனினும், தனது கட்சிக்காரர் தொடர்பில் இரகசிய பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த அறிக்கையில், அவர் கடமை தவறியதால் இந்த குற்றச் செயல் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தும் எவ்வித சாட்சிகளும் முன்வைக்கப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.

அதேபோல், தனது கட்சிக்காரர் வேண்டுமென்றே கடமை தவறியதாக சட்ட மா அதிபர் தனது ஆட்சேபனை மனுவில் குறிப்பிட்டிருந்தாலும், அதனை உறுதிப்படுத்தும் எவ்வித சாட்சிகளும் நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, தனது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் எவ்வித தவறும் இல்லை என குறிப்பிட்டார்.

இதன் காரணமாக நீதவானால் வழங்கப்பட்ட பிணை உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.