கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு

ஆந்திராவை  தலைமையிடமாக கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. விஜயகுமார் என்பவர் தன்னை கல்கி பகவான் என்று அறிவித்து கொண்டு ஆசிரமங்களை தொடங்கினார்.
ஆசிரமங்களுக்கு சென்னை, ஆந்திரா, கர்நாடகா என நாடு முழுவதும், வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. இங்கு காணிக்கை, சிறப்பு பூஜை என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதே போல் கல்கி விஜயகுமாரின் மகன் பல தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கல்கி ஆசிரமங்களில் அதிகளவு வரி ஏய்ப்பு செய்யப் பட்டுள்ளதாக வருமானவரி துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 16-ந்தேதி சென்னை, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் உள்ள கல்கி ஆசிரமங்கள் உள்பட 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
சென்னை, பெங்களூரு, சித்தூர் உள்ளிட்ட 40 இடங்களில் 5 நாட்கள் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. அந்தச் சோதனையின்போது, வையிட் லோட்டஸ் குழு தொடர்புடைய சோதனையில் ரூ.409 கோடி மதிப்புள்ள ரசீதுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதேபோல, கல்கி சாமியாரின் மகன் வீடு, அலுவலகங்களில் கணக்கில் வராத ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
வருமானவரித்துறை ஐந்து நாள் சோதனை முடிவில் 90 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.20 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மறைக்கப்பட்ட மூலதனம் ரூ.61 கோடி கண்டுபிடிக்கப்பட்டது.
ஹவாலா மூலம் வெளிநாடுகளில் ரூ.85 கோடி முதலீடு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வட்டி வருவாயாக வந்த ரூ.90 கோடி மறைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கி சாமியர் குடும்பம் வெளிநாடுகளில் சொத்துக் குவித்துள்ளதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.