டெல்லி சட்டசபை தேர்தலும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் – தர்சினி உதயராஜா

டெல்லி சட்டசபை தேர்தலும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும்
– தர்சினி உதயராஜா

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் வென்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 51 வயது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 3வது முறையாக டெல்லி முதல்வராகியுள்ளார். எஞ்சிய 8 தொகுதிகளில் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி இம்முறை எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பற்றி………
எளிமையான தோற்றம், சாமானியர்களை அணுகும் போக்கு, அடித்தட்டு மக்களை ஈர்க்கும் பேச்சு – அவர்தான் அரவிந்த் கெஜ்ரிவால்
ஹரியானாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் மின் பொறியியலாளரின் மூன்று பிள்ளைகளில் மூத்த மகனாக Aug 16, 1968 இல் பிறந்தார்.
இந்திய தொழில்நுட்ப கழக நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் அதிக புள்ளிகளைப் பெற்று, இயந்திரவியல் பொறியியல் துறையில் பட்டம் பெற்ற இவர், 1989-1991வரை Tata Steel இல் பணியாற்றினார். பிறகு கொல்கத்தாவில் சில ஆண்டுகள் வாழ்ந்தபோது, அன்னை தெரசா நடத்தி வந்த தொண்டு நிறுவனம், ராமகிருஷ்ணா மடத்தின் சேவை, நேரு யுவ கேந்திரா ஆகியவற்றில் தன்னார்வத் தொண்டாற்றினார்.
1995ல் வருமான வரித்துறையில் உதவி ஆணையராக சேர்ந்து 2006ல் விலகினார். இக்காலப்பகுதியில் கேஜ்ரிவாலும், மணிஷ் சிசோடியாவும் சேர்ந்து 1999-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரிவர்தன் என்ற அமைப்பை நிறுவினார்கள். பிறகு இருவரும் கபீர் என்ற மற்றொரு தத்துவார்த்த சிந்தனை அமைப்பை நிறுவினார்கள். அதன் மூலம் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்தனர்
இந்த நிலையில், மகராஷ்டிராவை சேர்ந்த அன்னா ஹசாரேவுடன் கேஜ்ரிவாலுக்கு தொடர்பு ஏற்பட்டது. அப்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பயன்களை, பாதிக்கப்பட்டவர்கள் பெறுவதற்கு ஆதரவாக கேஜ்ரிவால் குரல் கொடுத்தார். பரிவர்தன் அமைப்பு மூலம் ஆற்றிய சேவைக்காக ரமொன் மகசாசே விருது கேஜ்ரிவாலுக்கு கிடைத்தது.
‘ஊழலுக்கெதிரான இந்தியா’ இயக்கம் பற்றி………..

பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்ற சுதந்திர இந்தியாவில் அனைவருக்கும் பொதுவான நீதி மற்றும் சமத்துவம் இருக்கவில்லை. சாதாரண பொதுமக்களின் குறைகள் கேட்கப்படவில்லை. எங்கும் ஊழல் புரையோடிப்போய் இருந்தது. இதன் காரணமாக ஊழலற்ற ஒரு ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் ‘ஊழலுக்கெதிரான இந்தியா’ என்ற இயக்கம் 2011இல் உருவானது. அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றாக இணைந்து அன்னா அணியாக இதில் செயற்பட ஆரம்பித்தனர்.

ஜன் லோக்பால் மசோதா பற்றி :
“குடி மக்கள் காப்பு முன்வரைவு – ஜன் லோக்பால் மசோதா” என்பது ஊழல், பொதுமக்களின் பணத்தைக் கையாடும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படை சித்தாந்ததில் முன்மொழியப்பட்ட ஒரு மசோதா ஆகும்.
முதலில் இம்மசோதா 1968ல் தாக்கல் செய்யப்பட்டு. 1969ல் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் ஒப்புதல் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து 1971, 1977, 1985, 1989, 1995, 1998, 2001, 2005, 2008, 2011 ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டும் நிறைவேற்றப்படவில்லை.
ஒவ்வொரு காலங்களிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட இம்மசோதாவில் அன்னா ஹசாரே, சாந்தி பூஷன், கிரண் பேடி மற்றும் சந்தோஷ் ஹெக்டே போன்ற சமூக ஆர்வலர்களும் இணைந்து புதுப்பிக்கப்பட்ட மசோதா உருவாகப்பாடுபட்டனர்.
அன்னா ஹசாரே தொடர்ச்சியாக பல உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுத்து மசோதா சட்டமாக்கப்படவேண்டும் என்று ‘ஊழலுக்கெதிரான இந்தியா’ இயக்கத்தினூடாக இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். இவரால் முன்னெடுக்கப்பட்ட காலவரையறை அற்ற உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து இந்த மசோதா 2013ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆம் ஆத்மி கட்சி உருவாக்கம் பற்றி…………

‘ஊழலுக்கெதிரான இந்தியா’ என்கிற இந்த இயக்கத்தை ஒரு மக்கள் இயக்கமாகப் பேணவே அன்னா ஹசாரே விரும்பியிருந்தார். ஆனால், இந்த இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாக மாற்றி அதன் மூலம் தேர்தல் அரசியல் ஊடாக மக்களுக்கு சேவை செய்யவும், ஊழலுக்கெதிரான மசோதாவை நிறைவேற்றவும் முடிவு செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால். அதனால் அன்னா ஹசாரே விலகிக்கொள்ள, ஆம் ஆத்மி கட்சி ஒரு அரசியல் கட்சியாக Nov 26, 2012 இல் பதிவு செய்யப்பட்டு முதன்முதலில் Dec 4, 2013தேர்தலில் போட்டியிட்டது.
இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 70 ஆசனங்களில் பாரதிய ஜனதாக் கட்சி 34 ஆசனங்களையும், இரண்டாவது நிலையில் ஆம் ஆத்மி கட்சி, 28 ஆசனங்களையும், மூன்றாவது நிலையில், கொங்கிரஸ் 8 ஆசனங்ளையும் பெற்றன. ஆட்சி அமைக்க எந்தக்கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தொங்கு சட்டமன்றம் உருவானது.
பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்த போதிலும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைக்க விரும்பவில்லை. அதனால். காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு வழங்க ஆம் ஆத்மி கட்சி சிறுபான்மை ஆட்சியை அமைத்தது. முதன்முதலாக டெல்லியின் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார். ஆனால், ஊழலுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற போதிய ஆதரவு இல்லாதமையால், 49 நாட்களில் பதவியைத் துறக்கவேண்டி ஏற்பட்டது.

பின்பு Feb 7, 2015 தேர்தலில், மிகப் பெரும்பான்மையாக 67 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. பாஜகவுக்கு வெறும் 3 ஆசனங்களே கிடைத்தன. கொங்கிரஸ் கட்சி எந்த ஆசனங்களையும் பெறவில்லை, அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டாவது தடவையாக முதல்வரானார்.

அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சிக்காலம் 2015 – 2020

ஆட்சிக்கு வந்த முதல் ஆறு மாதங்களில், டெல்லி அரசு தலைமைச் செயலகத்தையும் தமது வீட்டையும் வாக்காளர்களையும் டெல்லி மக்களையும் சந்திக்கும் மக்கள் குறைதீர் முகாம்களாக மாற்றி சில தடாலடி நடவடிக்கையை கேஜ்ரிவால் மேற்கொண்டார்.
இருப்பினும், பின்னாளில் மக்களை நேரடியாக சந்திப்பதை தவிர்த்த கேஜ்ரிவால், ஒவ்வொரு துறைக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை மக்களை சந்திக்கும் பிரதிநிதிகளாக அறிவித்தார்.
கேஜ்ரிவாலின் குறிப்பிடத்தக்க ஆரம்பகால ஆட்சியின் சாதனையாக 1000 இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தலைநகர் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்ட சுமார் 450 மொஹல்லா கிளினிக்குகளை (சமுதாய ஆரம்ப சுகாதார மையம்) குறிப்பிடலாம்.

குடிநீர் விநியோக அளவை கணக்கிடும் மீட்டர்களை பொருத்துவதன் மூலம் தள்ளுபடி சலுகையை பெறலாம் என்றும் நிலுவை கட்டண தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டன.
முதல் 200 யூனிட்டுகள் மின்சார பயன்பாடு இலவசம். அத்துடன் முதல் 400 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டது.
பெண்களை கவரும் மற்றொரு சிறப்பம்சமாக டெல்லி நகர பேருந்துகளில் பெண்கள், குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் பிங்க் நிற பயணச்சீட்டை பெண் பயணிகள் வாங்குதல்.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை கல்வியில் பின்தங்கியவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

2020 தேர்தல் வாக்குறுதிகள்
இலவச மின்சாரம், 24 மணி நேர குடிநீர், ஒவ்வொரு மாணவருக்கும் உலகத்தர கல்வி என்பன உட்பட 10 உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஊழலுக்கெதிராகவும், அனைவருக்கும் தரமான கல்வி, சுகாதாரம், குறைந்த கட்டணத்தில் மின்சாரம், மற்றும் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர் வழங்கல் போன்ற பலவற்றை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதில் கடந்த காலத்தில் சிறப்பாக இருந்த
இவரது ஆட்சிக் காலம், தொடர்ந்தும் சிறப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.