இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்..!

Winning Scarborough-Rouge Park Liberal candidate Gary Anandasangaree, his wife Harani Sivalingam and daughter Sahanah, 4, push past supporters as they arrive at his election night headquarters at the Scarborough Convention Centre.

கனடிய அரசியலில் தமிழர்களாகிய நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பது இப்போது முக்கியமான கவனத்தில் கொள்ள வேண்டிய விடையமாக இருக்கின்றது. தேர்தல் முடிந்து முக்கிய கட்சிகளில் ஒன்றான லிபரல் கட்சி பதவிக்கு வந்திருக்கின்றது. ஐனநாயக நாட்டில் மாற்றங்கள் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு கனடா நல்ல உதாரணமாகவும் இருக்கின்றது. சுமார் 10 வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் இருந்த பிரதமர் கௌரவ ஸ்ரிபன் காப்பர் அவர்களின் கொன்சவேற்ரிவ் கட்சி இன்று எதிர்க்கட்சியாக மாறிவிட்டது. தற்போதைய பிரதமராக ஜஸ்ரின் ரூடோ (துரளவin வுசரனநயர) அவர்கள் பதவி ஏற்றிருக்கின்றார். முதன் முதலாக ஈழத்தமிழர்கள் பெருமளவில் கப்பலில் வந்து தஞ்சம் கேட்டபோது மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்குத் தஞ்சம் கொடுத்தவர் அப்போது பிரதமராக இருந்த இவரது தந்தையான பிய ரூடோ ( Pநைசசந வுசரனநயர) அவர்கள் என்பதை ஈழத்தமிழர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அவர் துணிவோடு அன்று எடுத்த அந்த முடிவுதான் இன்று எங்களை இந்த மண்ணின் குடிமக்களாக, ஜனநாயக செயற்பாடுகளில் துணிவோடு பங்கு பற்றக்கூடியதாக, பாராளுமன்றத்தில் அங்கம் பெறக்கூடியதாக மாற்றியிருக்கின்றது.

இந்த மாற்றங்கள் காரணமாக, கனடிய உள்ளுராட்சி மன்றங்களில் எம்மவர்கள் பிரதி நிதிகளாக அங்கம் வகிக்க முடிந்தது. அது மட்டுமல்ல, முதன் முதலாகக் கனடிய சரித்திரத்தில் ஒரு தமிழர் பாராளுமன்றத்தில் என்டிபி கட்சியின் அங்கத்தவராகப் பிரநிதித்துவம் பெற்றுச் செல்ல முடிந்தது. அந்தப் பெருமை 2011 ஆம் ஆண்டு கௌரவ ராதிகா சிற்சபைஈசனுக்குக் கிடைத்தது. தமிழர்களின் முதற் பெண் பிரதிநிதியாகவும் அவர் கனடிய பாராளுமன்றத்தில் கடமையாற்றினார். இதைத் தொடர்ந்து இன்று ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. ஈழத்தமிழர் ஒருவர் லிபரல் கட்சியின் அங்கத்தவராகப் பாராளுமன்றத்திற்குச் சென்றிருக்கின்றார். கனடிய பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர் ஒருவர் அங்கம் வகிப்பார் என்பதை 1970 களில் நாங்கள் நினைத்தும் பார்த்திருக்க மாட்டோம். அப்படிக் கனவு கண்டிருந்தாலும் அது இன்று நிஜமாகியிருக்கின்றது.

இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம் தான் ஈழத்தமிழர்களைப் பெரும் அளவில் புலம் பெயர வைத்தது. அப்படிப் புலம்பெயர்ந்த மண்ணில் இன்று ஈழத்தமிழர்கள் பல்வேறு துறைகளிலும் சாதனைகள் படைத்து வருகின்றார்கள். பெரும்பாலான ஈழத்தமிழர்கள் கனடா நாட்டிற்கே புலம் பெயர்ந்தார்கள். கனடா பல்கலாச்சார நாடாக இருப்பதால், எமது இனத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் இந்த மண்ணில் காத்திருக்கின்றது. புலம்பெயர்ந்த மண்ணில் ஒரு இனத்தின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமானால் முதலில் அவர்கள் ஒற்றுமையாக இருப்பது அவசியம். அப்பொழுதுதான் அவர்கள் தமது இலட்சியத்தை நோக்கி முன்னேற முடியும். அதற்கு அந்த நாட்டு அரசியலிலும் அவர்களின் கணிசமான பங்களிப்பு இருக்க வேண்டும். உதாரணமாக இந்திய கனடியர்களை எடுத்துக் கொண்டால் 338 அங்கத்தவர்களைக் கொண்ட கனடிய பாராளுமன்றத்தில் பத்தொன்பது இந்தியக் கனடியர்கள் இம்முறை அங்கம் பெற்றிருக்கின்றார்கள். இவர்களில் 18 பேர் சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவர்களில் சீக்கிய இனத்தைச் சேர்ந்த நான்கு அமைச்சர்களும், குறிப்பாகப் பாதுகாப்பு அமைச்சரும் அடங்குவர். கனடிய சனத்தொகையில் 4 வீதமானவர்கள் இந்தியர்களாகவும், அதில் 1.5 வீதமானவர்கள் சீக்கியர்களாகவும் இருக்கின்றார்கள். அவர்களது தாய் நாடான இந்தியாவில்கூட அவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகின்றேன். தங்களது வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டதன் பலனை அவர்கள் இந்த மண்ணில் இன்று மகிழ்ச்சியோடு அனுபவிக்கின்றார்கள்.  ஓற்றுமையாகச் சாதிக்க வேண்டும் என்ற அடங்காத ஆர்வம் அவர்களிடம் இருப்பதை அவர்களின் பிரதிநிதிகள் சிலருடன் உரையாடும்போதே அறிந்து கொண்டேன்.

எம்மினத்திற்கும் இது அவசியம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அரசியல் மாற்றம் தேவை என்பதால் இம்முறை கனடிய மக்கள் லிபரல் கட்சியைத் தேர்ந்து எடுத்திருக்கின்றனர். லிபரல் கட்சி தான் கொடுத்த வாக்குறுதிகளைக் கடைசிவரை காப்பாற்றும், செயற்படுத்தும் என்ற நம்பிக்கை கனடிய மக்களுக்கு இருப்பதால்தான் அந்தக்கட்சியை இம்முறை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். புதிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அவர்கள் தனது அமைச்சரவையில் பல சாதனைகளைச் செய்திருக்கின்றார். முக்கியமாக 31 அங்கத்தவரகளைக் கொண்ட அமைச்சர் அவையில் 50 வீதமானவர்கள் பெண் அங்கத்தவர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகின்றது. இந்த மாற்றம் கனடிய அரசியல் சரித்திரத்தில் முக்கிய மைல் கல்லாகவும் அமையலாம்.

எம்மவரான ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் கனடிய அரசியலில் இணைந்து பாராளுமன்றத்திற்குப் பிரதிநிதியாகச் செல்வது புதிய அனுபவமாகும். ஏற்கனவே எமது சமூக அமைப்புகளில் அதிக ஈடுபாடு கொண்ட சட்டத்தரணியான இவர், நீண்ட நாட்களாகவே குடும்ப நண்பராக இருக்கின்றார். எனது அக்காவின் மகன் அமரர் மணிமாறனின் கல்லூரித் தோழனாகத்தான் எனக்கு முதன்முதலாக அறிமுகமானார். ஓட்டாவா கால்ரன் பல்கலைக்கழகத்திலும் இருவரும் ஒன்றாகவே கல்வி கற்றார்கள். மணிமாறன் எங்களை மாமா, மாமி என்று அழைத்ததால் ஹரியும் எங்களை அப்படி அழைப்பார். அவர்களின் நட்பின் ஆழத்தை மணிமாறனின் மறைவின்போது என்னால் அவதானிக்க முடிந்தது.  மரணச் சடங்கின் போது எல்லாப் பொறுப்புக்களையும் இவரும் இவரது நண்பர்களுமே முன்னின்று செய்து முடித்தார்கள். மணிமாறனுக்காக இரங்கல் கூட்டம் ஒன்றையும் ஒட்டாவா பல்கலைக் கழகத்தில் ஏற்பாடு செய்து அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்களையும் என்னையும் அந்த இரங்கல் கூட்டத்தில் இரங்கலுரை ஆற்ற வைத்தார். இன்றும் நல்லதொரு குடும்ப நண்பராக ஹரி இருக்கின்றார். எனது இலக்கிய முயற்சிகளைப் பாராட்ட அவர் என்றும் தயங்கியதில்லை. ஹரி ஆனந்தசங்கரியின் மாமனாரும், ஹரணியின் அப்பாவுமான அமரர் சிவலிங்கம் அவர்கள் மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் மட்டுமல்ல, எமது குடும்ப நண்பராகவும் இருந்தார் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

இன்று எங்கள் பிரதிநிதியாக அவர் கனடிய பாராளுமன்றம் செல்கிறார். அவருக்காக ‘யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே’ என்ற சூரியகாந்தி படத்தில் வரும் கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள பாடல் வரிகளை இங்கே குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். இச்சந்தர்ப்பத்தில், நல்ல நண்பருக்குச் சொல்லக்கூடியது என்னவென்றால் உங்களுக்கு அரசியலில் குழி பறிப்பவர்கள் வெளியேதான் இருக்கிறார்கள் என்று நினைத்து ஏமாந்து விடவேண்டாம். குழி பறிப்பவர்கள் எங்கேயும், எப்போதும், எந்த உருவத்திலும் இருக்கலாம். நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் முதுகிலே குத்தக் கூடியவர்கள் உங்களுக்கு அருகேதான் நெருக்கமாக இருப்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று இலகுவாக எடுத்து விடவேண்டாம். எனவே விழிப்போடு இருங்கள், எங்கள் ஆதரவு என்றும் தங்களுக்குக் கிடைக்கும் என்பதைக்கூறி, தங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய எங்கள் குடும்பத்தின் சார்பில் வாழ்த்துகின்றேன்.

– குரு அரவிந்தன்