இஸ்ரேலில் தொழில் எதிர்ப்பார்த்து உள்ளவர்களுக்கான அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்!

இதற்கு பின்னர் இஸ்ரேலுக்கு தொழிலுக்கு இலங்கையர்களை அனுப்பும் செயற்பாடு அரசாங்கத்தினால் மாத்திரமே இடம்பெறும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் ஏற்படுத்திக் கொண்டுள்ள இராஜதந்திர உடன்படிக்கைக்கு அமைய இது செயற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலில் வீட்டு வேலைகள் மற்றும் விவசாயப் பிரிவுக்கு கடந்த காலங்களில் தனியார் பிரிவுகளின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட இலங்கையர்களிடம் இருந்து இந்நாட்டு முகவர் நிலையங்கள் பெருந்தொகை பணத்தினை அறவிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன் காரணமாக இஸ்ரேல் அரசினால் இந்நாட்டு முகவர் நிலையங்கள் ஊடாக தொழிலாளர்களை பெற்றுக் கொள்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கருத்து தெரிவித்த அமைச்சர், குறித்த உடன்படிக்கை ஊடாக இதற்கு பின்னர் தனியார் நிறுவனங்களுக்கு இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்ப சந்தர்ப்பம் கிடைக்காது என தெரிவித்தார்.

இதன் காரணமாக இஸ்ரேலில் தொழில் பெற்றுத் தருவதாக சிலர் மேற்கொள்ளும் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.