யாழ்ப்பாணத்தில் பொங்கலன்று மாலை ஏர்முனை சஞ்சிகை அறிமுக நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் பொங்கலன்று மாலை ஏர்முனை சஞ்சிகை அறிமுக நிகழ்வு

இயற்கையை நாடும் விவசாயிகளுக்கான நூறிற்கும் மேற்பட்ட இயற்கை பூச்சி விரட்டிகள், இயற்கை பசளைகள் செய்முறைகளை தாங்கிய  ஏர்முனை சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு வரும் தைப்பொங்கலன்று 15/01/2020 புதன்கிழமை மாலை 3 மணிமுதல் 5 மணிவரை ஊரெழுவில் உள்ள மார்கோசா கிறீன் விடுதியில் இடம்பெறவுள்ளது.

2020 ஆம் ஆண்டானது ஐக்கிய நாடுகள் சபையில் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தால் பயிர்நலத்திற்கான சர்வதேச ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பயிர்நலத்தையும் உயிர்நலத்தையும் ஒருங்கே காப்பது இயற்கைவழி வேளாண்மையில் மட்டுமே சாத்தியமானதொன்று.

பூச்சிவிரட்டிக் கரைசல்கள், இயற்கை பசளைகள் பற்றிய விபரங்களைத் தாங்கிய ஏர்முனை சஞ்சிகையை புதிய வெளிச்சத்தின் அனுசரணையுடன் இயற்கைவழி இயக்கம், நெடுங்கேணிப் பண்ணையாளர் சங்கத்துடன் இணைந்து வெளியிடுகின்றது.

ஏர்முனை சிறப்பிதழினை அதன் ஆசிரியரும், விவசாய போதனாசிரியரும், இயற்கைவழி செயற்பாட்டாளருமாகிய மாவடியூர் சூ.சிவதாஸ் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்து பல நாட்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த போதிலும் சிறப்பாக தொகுத்திருக்கிறார்.

ஒவ்வொரு இயற்கை விவசாயிகளினது வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய இந்த சிறப்பிதழின் அறிமுக நிகழ்வுக்கு  அனைவரையும் அவசியம் கலந்து சிறப்பிக்குமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றார்கள் இயற்கை வழி இயக்கத்தினர்.

ஏற்கனவே இதன் அறிமுக நிகழ்வு கடந்த 12.01.2020 ஞாயிறு காலை 9 மணி முதல் 2 மணிவரை வவுனியாவில் உள்ள வெளிக்குளம் பாடசாலையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.