ஜமால் கசாகி கொலை ஏன்? எதற்கு?

ஜமால் கசாகி கொலை ஏன்? எதற்கு?
ரதன்
அண்மைக் கால சரித்திரத்தில், அதிகளவு ஊடகங்களால் பதிவு செய்யப்பட்ட மரணம் ஜமால் கசாகியினுடையது. ஜமால் கசாகி, துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்திற்கு, செப்ரம்பர் 28ல் தனது திருமணப் பத்திரங்களைப் பெறுவதற்காக சென்றிருந்தார். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்துச் செய்திருந்தார். இவரது துருக்கிய காதலியை, திருமணம் முடிப்பதற்கு, இவர் விவாகரத்து பெற்ற பத்திரங்கள் தேவை. மீண்டும் இரண்டு வாரங்களின் பின்னர்  வருமாறு கூறியமையால், ஒக்ரோபர் 2ல் மீண்டும் சென்றிருந்தார். அவரது துருக்கிய காதலி, சவூதி தூதரகத்திற்கு வெளியே காத்திருந்தார். கசாகி, தான் நான்கு மணித்தியாலத்திற்கு பின்னரும் வராவிட்டால், துருக்கிய பொலிஸாருக்குத் தெரிவிக்குமாறு கூறியிருந்தார். கசாகி வரவில்லை. முதலில் சவூதி, அவர் தூதரகத்தில் இல்லை என்றார்கள். பின்னர் பல நாட்களின் பின்னர் அவர் இறந்து விட்டார் என்றார்கள். அதன் பின்னர் உலக நாடுகள் வற்புறுத்தவே, அவர் கொலை செய்யப்பட்டார் என்றது சவூதி.
இந்தக் கொலையை செய்தவர் யார்? ஏன்?
நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய நாட்களில் ஜி20 மகாநாடு, இம் முறை ஆர்ஜன்ரீனாவில் நடைபெற்றது. அதற்கு முன்பாக சவூதி இளவரசர் மொகமட் பின் சல்மன், (இவரை எம்.பி.எஸ் என அழைப்பார்கள் (Mohammed bin Salman ன் சுருக்கம் MBS )) தனது நட்பு நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தார். பாலஸ்தீனியத்துக்கு 60 மில்லியன் டொலர்களை சவூதி கொடுத்திருந்தது. அமெரிக்கா, பாலஸ்தீனியத்துக்கான நிதியுதவியை நிறுத்துவேன் என்று சொன்னதன் பின்னரே, இதனை சவூதி செய்திருந்தது. இதற்கிடையில் கட்டார், ஹமாஸின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதிக்கு 150 மில்லியன் டொலர்களை கொடுத்திருந்தது. ஹமாசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மக்கள் மிகவும் குறைந்த வசதிகளுடன் வாழ்ந்து வருகின்றனர். குடிப்பதற்கு தூய நீர், அவர்களுக்கு கிடைப்பதில்லை. ஒரு புறம் இஸ்ரேலால் ஒடுக்கப்படுகின்றார்கள். மறு புறம் ஹமாசின் கடும் போக்கால், பல நாடுகள் தள்ளியே நிற்கின்றன. அம் மக்கள் நிலை மிகவும் மோசமானது. கட்டாருக்கு போட்டியே சவூதியின், பாலஸ்தீனத்துக்கான உதவி. அத்துடன் தன் மேல் சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்கும் இவ்வாறான உதவிகள், உதவி செய்யும் என்ற உள்நோக்கமும் காரணம்.
சவூதி இளவரசர், தன் மேல் சுமத்தப்பட்டுள்ள ஜமால் கசாகியின் கொலை குற்றத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள நட்பு உதவி தேவைப்படுகின்றது. அத்துடன் கட்டார் மீதான நடவடிக்கைகளுக்கு ஆதரவு பெறுவதும் இளவரசரின், நேச நாடுகளுக்கான விஜயமாகவிருந்தது. ஜி20 மாநாட்டில், கனடிய பிரதமரைத் தவிர வேறு எவரும் குரலெப்பவில்லை. ஆனாலும், இளவரசரை சநதிப்பதை தவிர்த்தனர்.
 
ஏன் இந்தக் கொலை? யார் இந்த ஜமால் கசாக்கி
ஜமால் கசாகி சவூதியின் முக்கிய குடும்பமொன்றில் பிறந்தார். இவரது பாட்டனர் துருக்கியைச் பிறப்பிடமாகக் கொண்டவர், பாட்டி, அப்போதைய சவூதி அரசர் அப்துல்அசிஸ் அல் சவுட்டிற்கு ((Abdulaziz Al Saud) ) பிரத்தியேக வைத்தியராக கடமையாற்றிருந்தார். கசாகியின் ஒன்று விட்ட சகோதரர் டோடி பயிற் (first cousin of Dodi Fayed) டயானாவுடன் கார் விபத்தில் இறந்தவர். டயானாவின் காதலன் எனக் கூறப்பட்டவர். Harrods என்ற பிரபல்ய பிரித்தானிய நிறுவனத்தின் தலைவராக இருந்தவர். இவர் எகிப்தில் பிறந்திருந்தாலும், இவரது தாயார் சவூதியைச் சேர்ந்தவர். கசாகி, இந்தியானா பல்கலைக் கழக வணிக முகாமையியலில் பட்டதாரியாவார். பின்னர் சவூதி கசட் உட்பட்ட பல பத்திரிகைகளில் பத்திரிகையாளராக கடமையாற்றிருந்தார். சவூதி உளவுப் பிரிவிற்கும் இவர் வேலை பார்த்தாக கூறப்படுகின்றது. சவூதி அரச குடும்பத்திற்கு மிக நெருக்கமானவராகவும் இருந்துள்ளார். இவ் வருடம் சித்திரை மாதம் போஸ்ட் பத்திரிகையில் சவூதி வெளிநாட்டுக் கொள்கைகளை கண்டித்துள்ளார். கட்டாருக்கு சவூதி கொடுக்கும் நெருக்கடிகள் மனிததன்மையற்றவை என கண்டித்திருந்தார். சவூதி, பெண்களை நடாத்தும் முறையும், அவர்களுக்கு சமத்துவம் கொடுக்காமையும் கண்டிக்கப்படவேண்டும் என இவர் வோசிங்டன் போஸ்ட் பத்திரிகையில், அவர் எழுதி வந்த பத்திகளில் குறிப்பிட்டுள்ளார்.
இவரது முன்னால் மனைவி ஒரு வைத்தியர். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உண்டு. இவரது மூன்று பிள்ளைகள் அமெரிக்க பிரசைகளாவார்கள். இவர் கொலை செய்யப்பட்டபோது இவரது பிள்ளைகள் சவூதியில் இருந்துள்ளார்கள். இவர்கள் வெளியேற அப்போது தடை விதிக்கப்பட்டது.
மொகமட் பின் சல்மன், (இவரை எம்.பி.எஸ் என அழைப்பார்கள் (Mohammed bin Salman ன் சுருக்கம் MBS ) மாற்றங்களை விரும்பினாலும், அவரின் பின்னால் உள்ள பழமைவாதிகள் அவரை வேறு விதமாகத் தூண்டுகின்றார்கள் என போஸ்ட் பத்தியில் எழுதியிருந்தார். அதே போல் எகிப்தையும் இவர் சாடியிருந்தார். அறுபாதியிரம் எதிர்க்கட்சியினரை எகிப்து சிறையிலடைத்ததாக இவர் எழுதியிருந்தார்.
இதன் விளைவு, இவரை சவூதி கொலை செய்யத் திட்டமிட்டது. துருக்கிக்கு ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும். அதே சமயம் திட்டமிட்டவாறு இவரையும் கொலை செய்ய வேண்டும். சவூதியும், துருக்கியும் சுனி முஸ்லீம் நாடுகளாக இருந்த போதும், துருக்கியின் எழுச்சியை சவூதி விரும்பவில்லை. கசாகி தனது குடிவரவு ஆவணங்கள்  விடயமாக, துருக்கியில் உள்ள சவூதித் தூதரகத்திற்கு சென்ற போது, அவரை பின்னர் வருமாறு ஒரு கூறி, அவரை கொலை செய்ய திட்டமிடப்பட்டது. தூதரகத்தைச் சுற்றியுள்ள விடியோ கமராக்கள் அகற்றப்பட்டன. கொலை செய்யப்பட்ட அன்று, இவர் தனது மனைவியுடன் சவூதி தூதரகத்திற்கு சென்றுள்ளார். மனைவியிடம், நான் நான்கு மணித்தியாலங்கள் சென்றும் வராவிட்டால், துருக்கி பொலிசாருக்கு அறிவிக்க வேண்டும் எனக் கூறிச் சென்றார். அதன் பின்னர் நடைபெற்றவை உலகறிந்தவை.
 
அமெரிக்க வெளியுறவுக் கொள்கை

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையானது ஒபாமாவின் பின்னர் பல மாற்றங்களை கொண்டதாக உள்ளது.  ஒரு குழப்பமான கொள்கை கொண்டதாக காணப்படுகின்றது. சில கொள்கைகள் முந்தைய கொள்கைகளை கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிப்பதாக உள்ளது. அதே சமயம் சில கொள்கைகள் தீர்க்கமான முடிவாக தெரிவிக்கப்படுகின்றது. அது தவறான கொள்கையாயினும், அதற்கு ஒரு விளக்கம் கொடுக்கப்படுகின்றது. அது மக்களோ அல்லது தேசம் சார்ந்ததாகவோ இல்லாமல், வணிக நலன் சார்ந்ததாக உள்ளது.
இந்த மூன்றாவது நிலையை அண்மையில் கொல்லப்பட்ட சவீதி அரேபிய ஊடகவியலாளர் விடயத்தில் டொனால்ட் ரம்ப் கூறிய கருத்தில் காணலாம். கடந்த காலங்களில் டொனால்ட் ரம்ப்பின் வெளியுறவுக் கொள்கைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சீனா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஜெருசலேம் என பல நாடுகளின் மீதான, அமெரிக்காவின் நடவடிக்கைகள் இவற்றிற்கு சிறந்த உதாரணங்கள். மறுபுறம் இவ்வாறான நடவடிக்கைள் ருசியா, சீனா போன்ற நாடுகளின் பலத்தை அதிகரித்துள்ளன.

சீனாவின் வளர்ச்சிக்கு அமெரிக்காவின் தற்போதைய வெளிநாட்டுக் கொள்கையும் ஒரு காரணம். டொனால்ட் ரம்ப்பின் முதல் இரண்டு ஆண்டுகள் பல தடங்கல்கள், தடைகள், ஊடகப் போர்கள், நீதிபதிகளின் மாறான தீர்ப்பு, அதிரடியாக அமைச்சர்கள், அதிகாரிகள் நீக்கம் என பலவற்றை மீறியும் கடந்து கொண்டிருக்கின்றது. றிப்பளிக்கன் கட்சி, இரண்டு அவைகளிலும் பலமாகவிருந்தமை ரம்ப்பிற்கு சாதகமாகவிருந்தது. நவம்பர் மாதம் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் டெமோகிரட்டிக் கட்சி ஒரு சபையை கைப்பற்றி விட்டது. செனட் மட்டுமே றிப்பளிக்கனின் ஆட்சியில் உள்ளது. இது ரம்பின் பல கொள்கைகளை அமுல்படுத்த முடியாமல் போகச் செய்யும். அத்துடன் கடந்த அமெரிக்கத் தேர்தலில், ருசியாவின் ஊழலுக்கு எதிரான விசாரணையில், ரம்ப்பை மேலும் சிக்கலில் மாட்ட டெமோகிரட்டிக் கட்சி முயலும்.

இந் நிலையில் ஜமால் கசாகி (Jamal Khashoggi) துருக்கியில் அமைந்துள்ள சவூதித் தூதரகத்துக்கு சென்ற பொழுது, தூதரகத்தினுள் வைத்து கொல்லப்பட்டார். இவர் ஒரு ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எவரையும் உலகம் கண்டு கொள்வதில்லை. ஆனால் ஜமால் கசாகியின் கொலையானது உலகை அதிரவைத்துள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. சம்பவம் நடைபெற்ற இடம் துருக்கி. துருக்கி அரசை மீறி இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரு நாட்டில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கேற்பவே செயற்படவேண்டும். சவூதி இதனை கட்டுடைத்துள்ளது. இக் கொலையின் பின்னரான ஆய்வுகள் இதில் சவூதியின புதிய இளவரசர் முகமட் பின் சல்மனின் நேரடி தலையீடு இருப்பது தெரியவந்துள்ளது.
சுவூதிக்கு உலகின் பல நாடுகள் ஆயுதங்களை விற்பனை செய்கின்றன. கனடா, அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, சீனா, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஜோர்ஜியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து சவூதி ஆயுதங்களை கொள்வனவு செய்கின்றது. இதில் 61 வீதமான ஆயுதங்கள் அமெரிக்காவிலிருந்தும், 23 வீதமான ஆயுதங்கள் இங்கிலாந்தில் இருந்தும் வாங்கப்படுகின்றன. ஆனாலும் கனடா உட்பட பல நாடுகள், தங்களது நாட்டின் இறமைக்கு பாதிப்பு வருமளவிற்கு சவூதி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது. கனடிய பிரசை ஒருவருக்கு எதிரான சவூதியின் மனித உரிமை மீறல்களை கனடா கண்டித்திருந்தது. இதனை எதிர்த்து சவூதி, கனடாவில் கல்வி கற்கும் சவூதி மாணவர்களை உடனடியாக வேறு உலக பல்கலைக் கழகங்களுக்குச் செல்லுமாறு பணித்திருந்தது. இதனைத் தொடர்ந்து வேறு சில வணிக முரண்பாடுகளும் கனடாவுக்கும் சவூதிக்குமிடையில் ஏற்பட்டன. இன்றும் அந்த முறுகல் நிலை தொடர்கின்றது. இந்த மனித உரிமை மீறலை, அமெரிக்கா கண்டும், காணாமல் இருந்தது. பிரிட்டன், பிண்ணனியில் சவூதியை கண்டித்து பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லுமாறு கூறியிருந்தது.
அமெரிக்கா 2018 ஒக்ரோபர் வரையிலான காலப்பகுதியில் 10.8 பில்லியன் டொலர்கள் பொருட்களை சவூதி அரேபியாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதே சமயம் எண்ணெய் உட்பட்ட பல பொருட்களை இறக்குமதியும் செய்கின்றது. பெரும்பாலான ஆண்டுகளில் சவூதி அரேபியாவிற்கு அமெரிக்கா இறக்குமதியை விட ஏற்றுமதியே அதிகமாகவிருக்கும். இந் நிலையில் சவூதி அரேபியாவின் திட்டமிட்ட ஊடகவியலாளர் ஜமால் கசாகியின் கொலையை அமெரிக்கா கண்டிக்கவில்லை. சி.ஐ.ஏ இது மொகமட் பின் சல்மானின் நேரடி தலையீட்டின் மூலமே இக் கொலை நடைபெற்றது என்று கூறிய பின்னரும், டொனால்ட் ரம்ப் May be he did, May be he didn’t  எனக் கூறினார். ஏன் அமெரிக்கா அரசு, சவூதியை கண்டிக்கத் தவறுகின்றது. முதலாவது காரணம் சவூதியுடனான வணிக உறவு, இரண்டாவது மத்திய கிழக்கில் சவூதி அரேபியா மிக ஆளுமையும், பண பலமும் பொருந்திய, ஒரு செல்வாக்கான நாடு, மூன்றாவது ஜனநாயகமற்ற நாடு. எனவே தேர்தல்கள் மூலம், கொள்கைகள் மாற்றமேற்படாது, நான்காவது தீவிர சுனி முஸ்லீம் நாடு, மக்கள் எழுச்சியை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. ஐந்தாவது மத்திய கிழக்கில் பல நாடுகளில் புதிய தீவிரவாத இயக்கங்களை சவூதி தோற்றுவித்துள்ளது. இந்த அமைப்புக்ளுக்கு அமெரிக்கா, சவூதி அரேபியாவின் ஊடாக ஆயுதங்களை விற்பனை செய்கின்றது.
உலகெங்கும் ஜனநாயக மீறல்களுக்காக குரல் கொடுக்கும் அமெரிக்கா சவூதி அரேபியாவையிட்டு கவலை கொள்ளவில்லை. அங்கு இராஜ குடும்பத்தின் தொடர்ச்சியான ஆட்சியே அமெரிக்காவின் தேவையாகவும் உள்ளது. 9-11ன் பின்னர் சவூதி அரச குடும்பத்தினர் தனி விமானத்தில் சவூதிக்கு அனுப்பப்பட்டனர். 9-11 ன் தாக்குதலின் குற்றவாளிகள் என அடையாளங் காணப்பட்ட 19 பேரில், 15 பேர் சவூதி பிரசைகள.; ஒசமா பின் லாடனின் வளர்ச்சியில் கணிசமான பங்கு சவூதி அரேபியாவிற்குமுண்டு. குளோபல் ரிசேர்ச் நியுஸ்ன் பிரகாரம் 2001ல் அதாவது 9-11 நடைபெற்றபோது உலகில் 60,000 ஜிகாடியினர் இருந்தனர். இன்று 70 நாடுகளில் 240,000 ஜிகாடியினர் உள்ளனர். இந்த தொகை அதிகரிப்புக்கு சுனி முஸ்லீம் நாடான சவூதி அரேபியா பிரதான காரணமாகும்.
வோசிங்டன் போஸ்ட்ன் செய்தி ஆய்வு ஒன்றில், மத்திய கிழக்கில் சுதந்திரமாக இயங்கி வந்த பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை சவூதி அரேபியாவே செய்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. Tewfik Mishlawi பாலஸ்தீனியர். இவர் நடு நிலைமையான ஊடகவியலாளர். இவர் 2012ல் கொல்லப்பட்டார். An Nahar  பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் Samir Kassir . லெபனானை பிறப்பிடமாகக் கொண்டவர். 2005ல் படு கொலை செய்யப்பட்டார். May Chidiac  மற்றொரு லெபனிய தொலைக் காட்சி நிருபர். 2005ல் காரினுள் குண்டு வைக்கப்பட்டு, உடல் உறுப்புக்களை (இடது கால்,கை) இழந்துள்ளார். Gebran Tueni,  An Nahar  பத்திரிகை ஆசிரியர். லெபனான் பாராளுமன்ற உறுப்பினர். டிசம்பர் 2005ல் கார்க் குண்டால் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, இவரது தந்தையாரும், சிறந்த ஊடகவியலாளருமான Ghassan Tueni பின்வருமாறு எழுதியிருந்தார். எங்களுக்கு, உண்மைச் செய்தியகமானது ஐனநாயகமனதும், சுதந்திரமானதுமாகும். இங்கு மக்கள் கருத்துக்களை, அபிப்பிராயங்களை சுதந்திரமாக முன்வைக்கும் பொதுஸ்தலமாகும். இது நல்ல பயனளிக்கக் கூடிய மாற்றத்துக்கான கருவியாகும். ‘“For us, a real press is democratic and free. It is a forum where public opinion can express itself. It is an effective tool for change.”

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை என்பது தார்மீகமானதல்ல. சுய நலமானது. இது டொனால்ட் ரம்ப்பினால் மட்டும் தீர்மானிக்கப்பட்டதல்ல. முன்னரும் இதே நிலைதான் இருந்தது. ஆனாலும் இடைக் காலத் தேர்தல் மூலம் ஒரு சபையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த டெமோகிரட்டிக் கட்சியினர் இந் நிலையை மாற்றக் கூடியவர்கள். இம் முறை அதிகளவு பெண்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். எனவே தீர்க்கமான முடிவு ஒன்றிற்கு அமெரிக்க அரசு தள்ளப்படலாம்.
சவூதி அரேபியா, அமெரிக்காவிடம் 80 பில்லியன் டொலர்கள் பெறுமதியான அணு ஆயுத திட்டம் ஒன்றை வாங்குவதற்கு அல்லது அமெரிக்கா, சவூதியில் அமைத்துக் கொடுப்பதற்கு கேட்டுள்ளது. இது ரம்ப்பிற்கு ஒரு பெரிய லாபமான விடயம். ஆனால் டெமோகிரட்டிக் கட்சியினர் முதலில் கசாகியின் கொலைக்கான தீர்வின் பின்னரே, இதனைப் பற்றி சிந்திக்கலாம் எனக் கூறுகின்றனர். எனினும், சவூதியின் இந்த அணு ஆயுத திட்டத்தை எப்படியும், அமெரிக்கா செயற்படுத்தவே முயலும். பக்கத்தில் ஈரான் அணு ஆயுத உற்பத்திச் சாலைகளுடன் உள்ளதாக நீண்ட காலமாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகின்றது. ஈரானில் உண்டோ, இல்லையோ, அமெரிக்காவிற்கு சவூதி ஒரு பொன் முட்டையிடும் கோழி.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் அதிகளவு அட்டூழியங்களும், மனித உரிமை மீறல்களும் சவூதி அரேபியாவால், யமனுடான போரில் செயப்பட்டுள்ளது. ஜமால் கசாகியின் கொலை, சவூதியின் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களைப் பற்றி அமெரிக்கா மவுனம் சாதிப்பதற்கு, சவூதி தொடர்ச்சியாக ஆயுதங்களையும், இராணுவ ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டிருக்கும். ஏற்கனவே 110 பில்லியன் டொலர்களுக்கான ஆயுத விற்பனை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. செப்ரம்பர் 30க்கு முன்னர் முழமையான ஆயுதங்களையும் சவூதி வாங்க வேண்டும். இரண்டு நாட்களின் பின்னர் ஒக்ரோபர் இரண்டு கசாகி கொல்லப்பட்டுள்ளார்.
ஜமால் கசாகி அமெரிக்க வோசிங்டன் போஸ்ட் உட்பட்ட பத்திரிகைகளில் எழுதி வந்தார். அற்லான்றிக் உட்பட்ட பத்திரிகை ஆசிரியர்களின் நெருக்கமான நண்பர். அமெரிக்க ஊடகங்களின் தலையீடும், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை ஆய்வு செய்யும் கொங்கிரசின் குழுவும், டொனால்ட் ரம்ப்பை ஒரு தீர்மான முடிவை எடுக்குமாறு வலியுறுத்துகின்றது. இது சவூதி அரேபியாவிற்கு எதிராக இருக்கும் பட்சத்தில், அது சவூதி- அமெரிக்க உறவில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் டொனால்ட் ரம்ப் ஆட்சியிலிருக்கும் வரை அது சவூதிக்கு எதிராக அமையாது. அமெரிக்கா கண்துடைப்புக்கு கண்டிக்கும். அமெரிக்கா ஒரு பொழுதும், சவூதி அரேபியாவிற்கு எதிராக செயற்படாது, செயற்படவும் இல்லை