காஷ்மீர் விவகாரம் – இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் – சீன அதிபர்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு  கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச  பிரச்சினையாக்க முயற்சித்த பாகிஸ்தான், அதில் தோல்வி அடைந்தது. சீனா மட்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அவ்வப்போது கருத்துக்களை வெளியிட்டு வந்தது.
கடந்த மாதம் நடைபெற்ற ஐநா பொதுக்குழுவில் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க சீனா பாகிஸ்தானுக்கு உதவிசெய்தது.
இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று சீனா சென்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது சீன அதிபர்  ஜி ஜின்பிங்  காஷ்மீரின் நிலைமையைக் கவனித்து வருவதாகவும், அதன் முக்கிய நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கப்படும்  என்று கூறியதாக  அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.
பெய்ஜிங்கில் நடந்த கூட்டத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம், இந்த நிலைமையின்  சரியானதும் தவறும் தெளிவாக உள்ளது. இரு நாடுகளும் அமைதியான  பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையை தீர்க்க வேண்டும் என்று கூறியதாக சின்ஹுவா செய்தி வெளியிட்டு உள்ளது.