மீண்டும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ! அதிகூடிய வாக்குகளால் வெற்றியடையும் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்  ஹரி ஆனந்தசங்கரி


கனேடிய தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி அதிக இடங்களை வென்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.

சற்று முன்னர் வரை வெளியான தேர்தல் முடிவு முன்னணி நிலவரங்கள் இதனை உறுதி செய்கின்றன.

லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சிறுபான்மை அரசொன்று அமையும் என தேர்தல் முடிவுகளை மேற்கேள்கதாட்சி கனேடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் (Canadian broadcasting corporation) தெரிவித்துள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் சிறுபான்மை அரசொன்றே கடனாவில் அமையும் என ஆரம்பம் முதலே தேர்தலை கண்காணித்துவரும் கனேடிய சிரிவி செய்திச் சேவையும் தேர்தல் முடிவுகளை மேற்கோள் காட்டி அறிவித்துள்ளது.

சற்று முன்னர் வரை வெளியான தகவல்களின் பிரகாரம் கனேடிய தேர்தல் மாவட்டங்களில் 158 இல் லிபரல் கட்சியினர் முன்னணியில் இருந்தனர் அல்லது வெற்றியை நெருங்கியுள்ளனனர்.

ஷீயர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியினர் 120 இடங்களில் முன்னலை பெற்றுள்ளனர்.

பிளாக் கியூபாகோயிஸ் 32 இடங்களிலும், என்.டி.பி. 24 இடங்களிலும், பசுமைக் கட்சி 3 இடங்களிலும் முன்னணியில் உள்ளனர்.

பெரும்பான்மை அரசாங்கத்தைப் அமைக்க 170 இடங்களை வெல்ல வேண்டும். எனினும் அதிக இடங்களை வென்று ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கட்சி சிறுபான்மை அரசை அமைக்கவுள்ளது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.

எனினும் அமையவுள்ள சிறுபான்மை அரசு ட்ரூடோவை பலவீனமான நிலைக்கு இட்டுச் செல்லும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பாராளுமன்றில் முக்கிய சட்டங்களை இயற்றுவதாயின் ட்ரூடோவுக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவைப்படும்.

வாக்களிப்பதற்கு முன்னதாக லிபரல் மற்றும் கன்சர்வேடிவ்களிடையே மிகக் கடும் போட்டி நிலவியமை கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்தன.

இந்நிலையில் மீண்டும் லிபரல் ஆட்சியை அமைக்க ஜஸ்டின் ட்ரூடோ மிகக் கடுமையாகப் போராடினார்.

லிபரல் கட்சித் தலைவரான 47 வயதான ட்ரூடோ உலகின் முக்கிய ஜனநாயக நாடான கனடாவின் முற்போக்கான தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

பிரச்சாரத்தின்போது இனவாத சர்ச்சையைக் கிளப்பிய புகைப்படத்தால் ஜஸ்டின் ட்ரூடோ கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார்.

மேலும் ஒரு பெரிய கனேடிய கட்டுமான நிறுவனம் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கை அவர் கையாண்ட விதம் குறித்தும் அவருக்கு எதிரான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இவ்வாறான சர்ச்சைகளால் ஏற்பட்ட சோர்வையெல்லாம் தாண்டி மறைந்த லிபரல் பிரதம மந்திரி பியர் ட்ரூடோவின் மகனான ட்ரூடோ வெற்றிக்காக மிகக் கடுமையாக போராட வேண்டியிருந்தது.

தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைந்தால் அது கன்சர்வேடிவ்களை விட தங்களை கடுமையாகப் பாதிக்கும் என ஜஸ்டின் ட்ரூடோ உணர்ந்திருந்தார்.

இந்நிலையில் மக்களை வாக்களிக்கத் தூண்டுவதில் அவர் கடுமையாகப் பாடுபட்டார். தனது ருவிட்டரில் தேர்தல் நாளான நேற்று அவர் விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

இனவாத சர்ச்சை, காலநிலை மாற்ற சர்ச்சை உள்ளிட்ட பல நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் கடுமையாகப் போராடி மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ தனது தலைமையிலான லிபரல் அரசை அமைக்கவுள்ளார்.

எனினும் முற்கூட்டிய கணிப்புகளைப் போலவே சிறுபான்மை அரசையே அவரால் அமைக்க முடியும் என்பதையே இதுவரை வெளியான தேர்தல் முடிவின் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அதிகூடிய வாக்குகளால் வெற்றியடையும் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்  ஹரி ஆனந்தசங்கரி

ரொரண்டோவின் ஸ்கார்பரோ ரூஜ் பார்க்கில் லிபரல் கட்சியைச் சேர்ந்த ஹரி ஆனந்தசங்கரி இரண்டாவது தடவையாக வெற்றிபெற்றுள்ளார்.

196 வாக்கெடுப்புக்களில் 162 ஐ வெற்றிகொண்ட ஹரி ஆனந்த சங்கரி லிபரல் கட்சி சார்பில் 63 சதவீத வாக்குகளையும், கன்சவேட்டிவ் பொபி சிங் 19 சதவீத வாக்குகளையும் என்டிபியின் கிங்ஸ்லி க்வோக் 12 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ள அதேவேளை பசுமைக் கட்சியின் ஜெசிகா ஹமில்டன் நான்கு சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளார்.