கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் மார்ச் 29 மாதம் ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை

மார்ச் 29, 2020

கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை 

கோவிட்-19 உலகளாவிய பெருந்தொற்று நோய் காரணமாக ஏற்பட்டுள்ள சுகாதார, சமூக, பொருளாதார பாதிப்புக்களை நலிவடைந்த கனேடியர்கள் எதிர்கொள்வதற்கு உதவியான நடவடிக்கைகளைப் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று அறிவித்தார். 

இளையோருக்கு மனநலம் பேணலுக்கான ஆதரவையும், முதிய கனேடியர்களுக்கு நடைமுறை உதவிகளையும் இந்த நடவடிக்கைகள் வழங்கவுள்ளன. மிக எளிதாகப் பாதிக்கப்படக்கூடிய கனேடியர்களில் சிலருக்குப் பாதுகாப்பான புகலிடம் கிடைப்பதற்கும், தங்குமிடம் கிடைப்பதற்கும் இவை உதவியாக இருக்கும். கனேடிய அரசு,

  • வீடற்ற நிலையில் இருக்கும் கனேடியர்களுக்கும், வன்முறையில் இருந்து தப்பிச் செல்லும் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் உதவியை அதிகரிக்கும். 2020 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆந் திகதி அறிவித்ததைப் போன்று வீடற்ற நிலையில் இருக்கும் கனேடியர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக கனேடிய அரசு மேலதிகமாக 157.5 மில்லியன் டொலரை வழங்கும்.
  • பெண்களுக்கான பாதுகாப்புத் தங்குமிடங்களுக்கும் (ஷெல்ட்டர்), பாலியல் தாக்குதலுக்கு உள்ளானோருக்கான உதவி நிலையங்களுக்கும் ( sexual assault centres) அவற்றின் உதவு திறனை அதிகரிப்பதற்கோ, நோய்ப் பரம்பலைத் தடுப்பதற்கோ 50 மில்லியன் டொலரை வழங்கும். பூர்வகுடியினரின் பகுதிகளில் உள்ள நிலையங்களுக்கும் இந்த உதவி வழங்கப்படும்.

(வீட்டில் வன்முறையை எதிர்கொள்ளும் பெண்கள் உதவிக்கு தாக்கப்பட்ட பெண்களுக்கான உதவி இலக்கமான 1-866-863-0511 ஐ அழைக்கலாம், அல்லது அவசர உதவிக்கு 911 ஐ அழைக்கலாம்) 

  • சிறுவர்களுக்கும், இளையோருக்குமான உளவளத்துணைச் (counselling) சேவைகளுக்கு ஆதரவு வழங்கும். பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாலும், சமூகத்தில் உள்ள வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் குறைவடைந்துள்ளதாலும், சிறுவர் உதவித் தொலைபேசியின் (Kids Help Phone) நாள் முழுவதுமான (24/7), அந்தரங்கம் பேணப்படும், இணைய, தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி வழி உளவளத்துணைச் சேவைகளுக்கான தேவை கனடா முழுவதிலும் அதிகரித்துள்ளது. தற்போதைய நெருக்கடியான வேளையில் இளையோருக்கு மனநலம் பேணலுக்குத் தேவையான ஆதரவை வழங்கும் வகையில் Kids Help Phone இற்குக் கனேடிய அரசு 7.5 மில்லியன் டொலரை வழங்கும்.

(உதவியோ, உளவளத்துணையோ தேவைப்படும் சிறுவர்கள் 1 800 668 6868 என்ற இலக்கத்தில் Kids Helpline ஐ அழைத்து உதவி கோரலாம்.) 

  • கோவிட்-19 காரணமாகப் பாதிக்கப்பட்ட முதிய கனேடியர்களுக்கு உடனடியான அத்தியாவசிய சேவைகளை வழங்கும். முதிய கனேடியர்களுக்கு நடைமுறை உதவிகளை வழங்கி வரும் உள்ளுர் அமைப்புக்களுக்குக் கனேடிய அரசு United Way Canada வின் ஊடாக 9 மில்லியன் டொலரை வழங்கும். பலசரக்குப் பொருட்களையும் மருந்துகளையும் ஏனைய தேவைப்படும் பொருட்களையும் விநியோகம் செய்தல், தனிநபர்களின் தேவைகளைக் கண்டறிவதற்கு அவர்களைச் சந்திப்பது, சமூகத்தில் உள்ள உதவிகளுடன் அவர்களைத் தொடர்புபடுத்துவது போன்றன இதில் உள்ளடங்கலாம்.

(சமூகத்தில் உள்ள அனைத்துச் சேவைகள் குறித்த விபரங்களும் 211 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் அல்லது  211toronto.ca வைப் பார்வையிடுவதன் மூலம் பெறப்படலாம்.) 

நாடு முழுவதும் முக்கியமான சேவைகளை வழங்கிவரும் அமைப்புகளினதும், பணியாளர்களினதும், தொண்டர்களினதும் பணியைப் பாராட்டிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார். இந்த நெருக்கடியான வேளையில் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையையோ, உடலுழைப்பு உதவியையோ வழங்கக் கூடிய கனேடியர்கள் அத்தகைய ஆதரவை வழங்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

 

 

மேலதிக தகவல்களுக்கும், ஊடகங்களின் கேள்விகளுக்கும்:

டொறீன் சவுந்தரநாயகம்

Gary.Anandasangaree.C1A@parl.gc.ca

 

– 30 –