இலங்கை இந்தியப்படை வல்வை படுகொலை 30 வது ஆண்டு ஆவண சாட்சியம்

இலங்கை இந்தியப்படை வல்வை படுகொலை 30 வது ஆண்டு
ஆவண சாட்சியம்

 

வாக்குமூலங்கள்
( தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ” காலச்சுவடு ” பத்திரிகையில் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த கட்டுரையின் மீள் பதிவு )

 

” “

வல்வை ந. அனந்தராஜ், யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். இப்போது 71 வயது ஓய்வுநிலை சமூக சேவகர் . இவர் வல்வெட்டித்துறை நகர முதல்வராகவும் , வடக்கு கல்வி அமைச்சரின் செயலாளராகவும், வடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சில் பணிப்பாளராகவும் . யாழ்ப்பாணத்தில் கல்லூரி அதிபராகப் பல பள்ளிக்கூடங்களிலும், கல்வி அதிகாரியாகவும் பணியாற்றியவர். கல்வித்துறைச் செயற்பாட்டாளர். ‘வல்வைப்படுகொலை / India’s Mai Lai:Massacre at Valvettithurai’ நூலை எழுதியவர். அதற்கு முன்பாகவே இலங்கைப்படையினர் வல்வையில் நடத்திய ஊறணிப் படுகொலைகள் பற்றியும் ஆவணப்படுத்தியவர். இந்தியப் படையினர் யாழ்ப்பாணத்திலிருந்தபோது வல்வெட்டித்துறைப் பிரஜைகள் குழு என்னும் சிவில் சமூகத்தில் செயலாளராக கடமையாற்றியவர்    வல்வெட்டித்துறைப் பிரஜைகள் குழு தமிழ் மக்களுக்கும் இந்தியப்படைகளுக்கும் முரண்பாடுகள் எழுகிற போதெல்லாம் சமாதானத்தை உருவாக்கப்பாடுபட்டவர்.  இந்தியப்படையினரின் முக்கியமான தளபதிகள் இவரை அறிந்திருந்தார்கள். எனினும் இந்தியப் படையினரால் கைது செய்யப்பட்டு மோசமாகச் சித்திரவதைக்குள்ளானார். அந்த அனுபவத்தை விவரமாகவே எழுதியுள்ளார். இவரதுகண் முன்னாலேயே இவரது மாணவர்கள் பலர் இந்தியப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர் எழுதிய ‘முல்லைத்தீவுச் சமர்’,  ‘வல்வைப்புயல்’ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த போது எடுத்த படமே மேலுள்ளது.
இலங்கையில் இந்திய இராணுவத்தினரின் குரூரத்தைப்பதிவு செய்யும் ஆவணம் இது. காலப்பொருத்தம் கருதி நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளன.

அங்கு நின்ற சீக்கியச் சிப்பாய், பெருத்த அட்டகாசத்துடன் கருவிக் கொண்டிருந்தான். அவன் அப்படிச் சொன்ன அதே கையோடு, அந்தக் கூட்டத்திலிருந்து எழுந்தமானமாக, ஆறு பேரைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய்ச் சுடுவதற்கு ஆயத்தப்படுத்தினான். அப்பொழுது தூரத்தே வல்வெட்டித்துறைப் பக்கத்திலிருந்து ஒரு இராணுவ ஜீப் வண்டி வருவதைக் கண்டதும் அவனுடைய கவனம் திசை திருப்பப்பட்டதால்,  அங்கிருந்து விலகிச் சென்றான்.
அந்த ஜீப் வண்டியிலிருந்து சுமார் ஆறு,  இராணுவ பொலிசார் இறங்கினார்கள்.
அதிலிருந்து இறங்கிய ஒருவனுடைய உத்தரவைத் தொடர்ந்து, அங்கு ஏற்கெனவே நின்ற இராணுவத்தினர் ஜங்ஷனை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். அப்பொழுதுதான் அங்கிருந்தவர்களுக்குப் போன உயிர் திரும்பி வந்தது.
இந்தச் சம்பவம் நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில், வல்வெட்டித்துறை ஜங்ஷனுக்கும் ஊறணிக்கும் இடையிலுள்ள கொத்தியால், காட்டுவளவு ஆகிய சந்துகளில் பல நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருந்தனர்.
அங்கு ஒரு மரணவீட்டில், துக்கம் கொண்டாடுவதற்காக இருந்த ஆண்கள் அனைவரையும் வயது வேறுபாடின்றி வெளியே இழுத்துவந்து வரிசையாக நிற்கவைத்தார்கள்.
“நீங்கள் எல்லாரும் எல்.ரீ.ரீ.ஈ உங்கள் எல்லாரையும் சுட வேணும்…” அங்கு நின்ற சிப்பாய் வெறிபிடித்தவன் போல் கத்தினான். அங்கே மரண வீட்டிலிருந்த பெண்கள் எல்லோரும் வெளியே ஓடிவந்து, மூர்க்கத்தனமாக நின்று கொண்டிருந்த சிப்பாய்களின் காலில் விழுந்து அழுதார்கள்.
கருங்கல்லை இளக வைக்கலாம், இந்தக் கயவர்களை இளக வைக்க முடியுமா?
அந்த இராணுவத்தினர், தாங்கள் கைது செய்தவர்களை இழுத்துக் கொண்டு ஜங்ஷனை நோக்கி நடந்தார்கள். அவர்களின் பின்னால், அழுது கூக்குரலிட்டுக்கொண்டே ஓடிவந்த பெண்களைச் சப்பாத்துக்காலினாலும் ரைபிள் பிடியினாலும் ஓங்கி அடித்தார்கள். அந்தச் சிப்பாய்களில் ஒருவன், தனது கையிலுள்ள ரைபிளினால் குறிவைத்துக்கொண்டு நின்றதும், அந்தப்பெண்களின் வேகம் தடைப்பட்டது.
அவர்களுடன் சுமார் முப்பது பொதுமக்கள் வரை கூட்டிச்செல்லப்பட்டனர். வல்வெட்டித்துறை ஜங்ஷனை அடைந்ததும், அவர்களை நடுச்சந்தியிலுள்ள தார்ரோட்டில் இருக்க வைத்தார்கள்.
முதல்நாள் சுடப்பட்டவர்களின் சடலங்கள் ஊதிப்பொருமல் அடைந்து போய் இருந்தன.
சில நிமிடங்களில் ஒரு சிப்பாய், அவர்களுக்கு அருகில் வந்து, அங்கிருந்தவர்களில் சிலருடைய  மயிரைப்பிடித்துத் தூக்கி இழுத்துக் கொண்டுபோய்ச் சந்தியின் எதிர்ப்புறமாக உள்ள எரிந்த கடை ஒன்றின் முன்னால் நிற்க வைத்தான்.
அங்கிருந்தவர்களின் முகங்கள் பேயறைந்ததுபோல் இருந்தன; கண்கள் இமைக்க மறுத்தன… என்ன நடக்குமோ என்ற ஏக்கம் எல்லோரையும் கதிகலங்க வைத்துக்கொண்டிருந்தது.
எதுவுமே நடந்துவிடக்கூடாது என்று நினைத்துப் பார்ப்பதற்கு முன்னரே, அங்கு நின்ற ஜவான் ஒருவன், அந்த ஆறுபேரையும்  ‘படபட’வென்று சுட்டுத் தள்ளிவிட்டுத் தன்கையில் வைத்திருந்த செலவ் லோடிங் ரைபிளை(SLR) திருப்பிக்கொண்டு அப்பால் சென்று கொண்டிருந்தான்.
அவர்கள் அந்த ஒரு கணத்திலேயே விழுந்து கால்களைத் தரையுடன் அடித்துத் துடித்துக்கொண்டிருந்தார்கள்.
ஒருமுறை ஜே.என். தீக்க்ஷித் இலங்கைக்கான தூதுவராக இருந்தபொழுது, யாழ்ப்பாணம் அன்னையர் முன்னணியைச் சேர்ந்த பெண்கள் குழுவொன்று கொழும்புவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் அவரைச் சந்தித்தபொழுது இடம்பெற்ற சுவையான சம்பாஷணை இந்த இடத்தில் நினைவு கூரப்பட வேண்டும்.
தூதுக்குழுவில் சென்ற ஒருபெண்,  யாழ்நகரில் இந்திய இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்ட முப்பது இளம்பெண்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரமாண வாக்குமூலங்களைத் தூதுவர் தீக்க்ஷித் அவர்களிடம் கொடுத்து,  “மேன்மைக்குரிய தூதுவர் அவர்களே!… இப்படியான செயல்களை உங்கள் படைவீரர்கள் தொடர்ந்தும் செய்யாது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்…  அவர்களுடைய இந்த நடவடிக்கைகள் பாரம்பரியமிக்க பாரதத்திற்குத்தான் களங்கத்தை ஏற்படுத்தும்…”
அந்தப் பெண்,  தீக்க்ஷித்திடம் தனது மன உணர்வுகளை வெளிப்படுத்தி, அவர் என்ன சொல்லப்போகின்றார் என்பதைக் கேட்கும் பாவனையில் நின்றார்.
“என்ன சொல்கிறீர்?…  எங்களுடைய ஜவான்கள்  ஒருபோதும்,  எந்தச் சந்தர்ப்பத்திலும் இவ்வாறான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.”
அவருடைய தன்மானம் அவரைச் சுட்டெரித்திருக்க வேண்டும். தனது ஜவான்கள்,  தனிமையில் இருந்தால்கூட இவ்வாறான பாவச்செயல்களைச் செய்யமாட்டார்கள் என்று அடித்துப்பேசினார்.
“ஓ…  அப்படியென்றால் உங்களுடைய இந்திய ஜவான்களுக்கு ஆண் உறுப்புக்கூட இல்லாமல் போய்விட்டதோ?”  சிரிக்காது,  முகத்தில் எந்தவிதமான மாறுதலுமின்றி அந்தப் பெண் சொன்னதும் தூதுவர் முகத்தில் ஈயாடவில்லை. இந்தியப்படையினர் நடத்திய காமவெறியாட்டங்கள் பற்றி ஆதாரங்களுடன் கொடுத்த புகார்களை அலட்சியம் செய்த தீட்சித்தின் மீது ஆத்திரமுற்ற அந்தப் பெண்மணி அவ்வாறு கேட்டாள்.
36 வயதான,  உடுப்பிட்டி,  வீரபத்திரர் கோயிலடியைச் சேர்ந்த இந்திரா என்ற பெண்,  அன்று தனது வீட்டில் ஆறு வயது மகனுடன் தனித்தே இருந்தாள். அந்தச் சம்பவம் பற்றிக் குறிப்பிடும்பொழுது,  “எனது கணவர் யாழ்ப்பாணத்தில் வேலைக்குப் போனவர், ஊரடங்குச் சட்டத்தினால் வீட்டிற்குத் திரும்பவில்லை. நானும் எனது மகனும் வீட்டில் இருந்தபொழுது இந்திய அமைதிப்படையைச் சேர்ந்த நான்கு சீக்கியர்கள் எனது வீட்டிற்குள் வந்து,  வீட்டைச் சோதனையிடப் போவதாகக் கூறினார்கள்.  நான்,  உடனே வீட்டைவிட்டு வெளியே வந்து முற்றத்தில் நின்றேன்.  அப்பொழுது ஒரு சிப்பாய் எனது முதுகில் துப்பாக்கியினால் தள்ளிப்பிடித்தபடி அறைக்குள் போகுமாறு கூறித்தள்ளினான். எனது ஆறு வயது மகன் பயத்தினால் வெளியே ஓடிப்போய் அழுதுகொண்டு நிற்க மற்றைய சிப்பாய் அவனைப்பிடித்து இழுத்து வந்து ஒரு மூலையில் உட்காரவைத்தான்.  இரண்டு சீக்கியர்கள் என்னைப் பிடித்து அறைக்குள் இழுத்தார்கள்.  ஒருவன்,  நான் சத்தமிடாதபடி என் வாயை அமுக்கிப்பிடித்தான்; மற்றவன் எனது ஆடைகளைக் கழற்றி மானபங்கப்படுத்தினான். எல்லாம் முடிந்து போகும்பொழுது,  அந்த வெறிபிடித்த சிப்பாய்,  என் அருகில் வந்து இதுபற்றி எவரிடமாவது முறையிட்டால் உங்கள் எல்லோரையும் குடும்பத்துடனேயே சுட்டுத்தள்ளிவிடுவேன் என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.”
கண்ணீரின் மத்தியில் கூறிக்கொண்டிருந்த அந்தப்பெண் குலுங்கிக்குலுங்கி அழுதாள்.
“நான் மற்றைய பெண்கள் மாதிரி தற்கொலை செய்யவோ மூடிமறைக்கவோ போவதில்லை.  அந்த வெறிநாய்கள் இங்கே அமைதிப்படை என்ற பெயரில் வந்து செய்கிற அட்டூழியங்களை நாளை உலகுக்கு அம்பலப்படுத்தத்தான் போகிறேன்.”
சூரியன் மெல்லமெல்ல மேற்கே இறங்கிக் கொண்டிருந்தான்!
வல்வெட்டித்துறைச் சந்தியில் தடுத்து வைக்கப்பட்டவர்களும் காயம்பட்டிருந்தவர்களும் அதே இடத்திலேயே நீண்ட நேரமாக வைக்கப்பட்டிருந்தனர்.
எவ்வித மருத்துவ உதவியுமின்றி,  இரத்தம் ஓடிய நிலையில் மணிக்கணக்காக இருந்தவர்களை அந்த இராணுவத்தினரில் ஒருவனாவது ஏனென்றுகூடத் திரும்பிப் பார்க்கவில்லை.
இந்தப் படுகொலைகளையடுத்து பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் சேவை செய்யும் பிரெஞ்சு வைத்தியர்குழு வல்வெட்டித்துறைக்கு வர முயற்சித்தபொழுது, பொலிகண்டி இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களால் திருப்பி அனுப்பப்பட்டதால்,  அவர்களால் கூட அந்தக் காயப்பட்ட அப்பாவி மக்களுக்கு உதவி செய்ய முடியாது போய்விட்டது.
சந்தியில் நின்ற காரிலிருந்து சுட்டுக்கொல்லப்பட்ட பிரேம்ராஜ், சலவைத் தொழிலாளியான சிவபாக்கியம் ஆகியோரின் சடலங்களை அங்கிருந்தவர்களின் உதவியுடன் சந்தியிலிருந்து மேற்கே செல்லும் சிறிய சந்தினுள் கொண்டு போய் வைக்கச் சொன்னார்கள். அதிலிருந்து சிறிது தூரத்தில் தங்கராஜா என்ற வயோதிகரின் சடலம் வெள்ளை வேட்டியினால் மூடப்பட்டிருந்தது.
அந்த வீடுகளில் கொழுந்து விட்டெரிந்த தீயை அணைத்துக் கொண்டிருந்த அனந்தராஜாவைத் தூரத்தே வந்து கொண்டிருந்த சீக்கிய இராணுத்தினன் ஒருவன் கண்டுவிட்டான். அவனைக்கண்டதும் அவர் ஓட முயற்சிக்கவில்லை. இராணுத்தினரைக் கண்டால் ஓடுவது ஆபத்து என்பதாலும் ஏற்கெனவே பல இராணுத்தினரும் அதிகாரிகளும் தெரிந்தவர்களாக இருந்ததாலும் அந்த இடத்தை விட்டு ஓட முயற்சிக்கவில்லை.
அருகில் வந்த அந்தச் சிப்பாய், அவரது கன்னத்தில் பலமாக ஓங்கி ஒரு அறை கொடுத்து நேரே தங்களுடன் வரும்படி கூறினான். அவர்கள், ஏற்கெனவேதங்களுடன் மேலும் எட்டுப் பொதுமக்களையும் கூட்டி வந்து கொண்டிருந்தனர்.
அவர்களின் பின்னால் சுமார் 22  வயதுள்ள,  உடுப்பிட்டி முகாமைச் சேர்ந்த கேப்டன் பறிக்,  கடுகடுத்த முகத்துடன் நடந்துவந்து கொண்டிருந்தான்.  திரு ந. அனந்தராஜாவுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமானவன்தான் கேப்டன் பறீக். அந்த அறிமுகத்தினால்,  அவனுக்கு அருகில் சென்று பேச வாய் எடுத்ததும், “ஒன்றும் பேசவேண்டாம்,”   என்று அவன்  கூறிவிட்டுத் தன்னிடம் இருந்த ரைபிளை அவருக்கு நேரே பிடித்தான்.
வல்வெட்டித்துறை ஜங்ஷனில் ஏற்கெனவே தடுத்துவைக்கப்பட்ட சுமார்  50  பேரையும் வரிசையாக நிறுத்தி அவர்களிலிருந்து 34 பேரை உடுப்பிட்டியை நோக்கிப் போகுமாறு பணித்துவிட்டு,  அங்கு நின்ற இராணுவ வாகனம் ஒன்றில் சிறிது காயம்பட்ட நிலையிலிருந்த அ. மதிவர்ணன், ஆ. பரம்சோதி என்ற இரு மாணவர்களையும் ஏற்றினார்கள். ஏனையவர்களை வீடுகளுக்குப் போக அனுமதித்த இந்தியப்படையினர் மற்றைய 34  பேரையும் வரிசையாக முன்னே நடக்கவிட்டு அவர்களுக்குக் காவலாக இருபக்கங்களிலும் தானியங்கி ரைபிள்களை நீட்டிப்பிடித்தபடி நடந்துகொண்டிருந்தனர்.
அவர்களின் பின்னால் சென்றுகொண்டிருந்த கேப்டன் பறீக், அனந்தராஜாவைக் கூட்டிக்கொண்டு நடந்தான்.  உடுப்பிட்டி இராணுவ முகாம் நெருங்கியதும், பொறுப்பதிகாரி கேணல் சர்மாவிடம் கூட்டிச் செல்லாது பின்புறமாக உள்ள சேர் வழியாக அவரையும் மற்றையவர்களையும் கொண்டுசென்றான்.  ஒரு
திறந்த வகுப்பறைக் கட்டடத்தினுள்,  விடுதலைப்புலிகளுடனான மோதலில் இறந்த இராணுவத்தினரின் சடலங்கள் எரிந்து கொண்டிருந்தன. அங்கே நூற்றுக்கணக்கான ஜவான்கள்  நின்றனர். அவர்களில் முன்னர் பொலிகண்டி இராணுவ முகாமில் இருந்த கேப்டன் கோபால கிருஷ்ணமேனன்,  முகத்தில் கோபக்கனல் தெறிக்க நின்றான்.
அவனின் முகத்தில் பொதுவாகவே,  புன்முறுவலைக் காண்பது அரிது…  அன்றோ அவனது முகம் இன்னும் கடுகடுப்பாக இருந்தது. அவனுடன், கப்டன் சுக்ளா,  கப்டன் சிகாரி,  கப்டன் டாக்டர் சௌத்ரி ஆகியோரும் நின்றனர். அங்கு கொண்டுவரப்பட்ட, அந்த அப்பாவிப் பொதுமக்களை ஒவ்வொருவராகப் பிடித்துத் தனது பூட்ஸ் காலால் உதைத்தும் கன்னத்தில் அடித்தும் ஒரு அறைக்குள் அனுப்பிக்கொண்டிருந்தான்.  அந்த அறையின் வாசலில் குண்டர்கள் போல் ஆறு ஏழு சீக்கியர்கள் உருளைக் கம்புகளினால் அடித்தும் குத்தியும் ஒவ்வொருவராக அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.
அந்த அறை முழுவதும்  “ஐயோ!… அம்மா!”  என்ற அவலக் குரல்கள்,  அந்தப் பிரதேசத்தையே அதிரவைத்துக் கொண்டிருந்தன. அதற்கு அடுத்த சுவரை அடுத்துள்ள,  கூடாரத்தின் கீழிருந்த கேணல் சர்மா எதுவுமே தெரியாதவர்போல்,  யாருடனோ டெலிபோனில் பேசிக்கொண்டிருந்தார். ஒரு இராணுவ முகாமில் நடைபெறுகின்ற ஒவ்வொரு விஷயமும் அந்த முகாமின் பொறுப்பதிகாரி தெரிந்திருக்கவேண்டும்;  அல்லது அவரது உதவி இராணுவ அதிகாரிகள் அவரது கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும்.
இவை இரண்டுமே இல்லாவிட்டால் அவர்களை ஒரு கட்டுக்கோப்பான இராணுவம் என்று எப்படி அழைக்க முடியும்? கேணல் சர்மா, தனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்வது மிகவும் வேடிக்கை!  உலகின் நான்காவது பெரிய இராணுவம்,  இப்படியா செயல்படுகிறது?  அங்கிருந்த 34 அப்பாவிகளையும் அந்த அறையினுள் தள்ளிவிட்டு,  தமது வழமையான சித்திரவதைப் பரிசோதனைகளை நடத்திக் கொண்டிருந்தனர்.
அவர்களுடைய சித்திரவதைகள் நவீன,  இஸ்ரேல் மொசாட் படையினரையும் மிஞ்சும்.  சில சித்திரவதைகள் நம்பமுடியாமல்கூட இருக்கலாம். ஆனால் அதிலிருந்து தப்பிவந்தவர்கள் கூறும் கண்ணீர்க் காவியங்களோ ஏராளம்.
ஆண் உறுப்பில் மின்சாரத்தைச் செலுத்துவது,  ஆள் அளவு குழி தோண்டி,  அதனுள் நிற்கவைத்துக் கழுத்துவரை மண்ணால் மூடிவிட்டு இரண்டு, மூன்று நாட்கள் வரை நீர் கூட இல்லாது விடுவது, தலைகீழாகத் தொங்கக் கட்டிவிட்டுக் காய்ந்த மிளகாய்ப் புகை பிடிப்பது,  கைகளையும் கால்களையும் நைலோன் கயிற்றினால் கட்டிவிட்டு வாயினுள்ளும் மூக்கினுள்ளும் தொடர்ச்சியாகத் தண்ணீரை விடுவது!…
நான்கு,  ஐந்து பேரை ஒன்றாகப் பிணைத்து அவர்களது கண்களைக் கட்டிவிட்டு ஓடவிடுவது,  ஓடி விழுந்தால் அடிபோடுவது!…  சித்திரவதை செய்வதற்கென்றே தாம் பயிற்றுவிக்கப்பட்டதாக கேப்டன் சுக்ளாவும் கேப்டன் சிகாரியும் சொன்னதைப் பார்த்த அனந்தராஜாவினால் அவர்களது அழுகுரலைக் கேட்டதும் நெஞ்சே வெடிப்பதுபோல் இருந்தது.

1989  ஆகஸ்ட்  2, 3, 4ஆம் திகதிகளில் இந்திய அமைதிப்படையினரால் ஏற்படுத்தப்பட்ட இழப்புக்களின் விபரம்: தி நியூஸ் லைன் பத்திரிகையில் வெளியானது.
1.  இறப்புக்கள்:  மொத்தம் கொல்லப்பட்டோர்  69
1.1 வீடுகளிலிருந்தும் சாலைகளிலிருந்தும்  52 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.   11 பொதுமக்கள் உடுப்பிட்டி இந்திய இராணுவ முகாமில் அடித்துக்கொல்லப்பட்டு அங்கேயே எரிக்கப்பட்டனர்.  இவர்களில் குழந்தைகள், பெண்கள்,  மாணவர்கள்,  வயோதிகர்களும் அடங்குவர்.
1.2 பலர் மருத்துவ வசதியின்மையால் இறந்தனர். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது பிரெஞ்சு வைத்தியக்குழுவினர் வல்வெட்டித் துறைக்குள் வருவதற்கும் அனுமதிக்கப்படவில்லை.
1.3  தொடர்ந்து  3  நாட்கள் இராணுவத்தினர் ஊரைச் சுற்றி வளைத்திருந்ததால் இறந்த சடலங்கள் அழுகி உருத்தெரியாது போனதால் அந்தந்த வீடுகளிலும் தெருக்களிலும் வைத்தே எரிக்கப்பட்டன.
1.4  ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
1.  தந்தையும் மகனும்
திரு. வெ.  சுப்பிரமணியம் (தந்தை)
சு.  அமுதன் மார்க்கண்டன் (மகன்)
2.  இந்திரா ஆதி அருணாசலம் என்ற தாயின் மூன்று மகன்கள்
1.  ஆ.  பராசர்
2 . ஆ.  பரஞ்சோதி
3.  ஆ.  சுந்தரேஸ்வரன்
3.  திருமதி.  தளையசிங்கம் என்ற தாயின் இரண்டு மகன்கள்
1.  த.  சிவகுமார் (அண்ணன்)
2.  த.  ஜெயமோகன் (தம்பி)
4. ஒரே வீட்டில் இரண்டு சகோதரர்கள்
1.  கந்தசாமி மகேந்திரராஜா (அண்ணன்)
2.  கந்தசாமி வேலும் மயிலும் (தம்பி)
5.  தந்தையும் மகளும்
1.  எஸ்.  கணேசலிங்கம் (தந்தை)
2.  க.  சசி (மகள்)
6.  பாலசுப்பிரமணியம் என்பவரின் மகனும் மருமகனும்
1.  பா.  மகேந்திரதாஸ் (மகன்)
2.  த. ஞானதாஸ் (மருமகன்)
7.  தாயும் மகனும்
1.  இ.  புஸ்பராணி 49 வயது விதவை (தாய்)
2.  இ.  ஜவனராஜ் 11 வயது மாணவன் (மகன்)

2.  காயப்பட்டோர்கள்
2.1  நூற்றுக்கணக்கானவர்கள் கொதிக்கும் தார்றோட்டில் உருட்டி விடப்பட்டுத் தாக்கப்பட்டதால் காயமடைந்தனர்.
2.2  மோசமாகக் காயப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 43 பேர்
2.3  மிகுதிப்பேர் ஊரைவிட்டே இடம்பெயர்ந்து  சென்று விட்டனர்.
3.  எரிக்கப்பட்ட வீடுகள்
3.1  123 வீடுகள் அதனுளுள்ள பொருட்கள்,  தளபாடங்கள், வானொலி, தொலைக்காட்சி, உடைகள் என்பவற்றுடன் சேர்த்து முற்றாகவே எரிக்கப்பட்டன.
3.2  மேலும்  40க்கும் அதிகமான வீடுகள் சிறிதளவில் பாதிப்பு.
4.  எரிக்கப்பட்ட கடைகள்
4.1  நகரில் உள்ள  45  கடைகள் முற்றாகவே எரிக்கப்பட்டுச் சாம்பலானது.
4.2  பெரும்பாலானவை மளிகைக்கடைகள்,  இதனால் மக்களுக்கு உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
4.3  சில கடைகளில் அவற்றின் முதலாளிகளை உயிருடன் வைத்து எரித்துள்ளனர்.
5.  எரிக்கப்பட்ட கார்,  மோட்டார் சைக்கிள்,  சைக்கிள் மொத்தமாக 62 போக்குவரத்து வாகனங்கள் எரிக்கப்பட்டன.
6.  மீன்பிடிப் படகுகள்,  இயந்திரங்கள்,  வலைகள்
படகுகள்,  இயந்திரங்கள் – 12
மீன்பிடி வலைகள்  – 176
7.  கொள்ளைகள்
பல வீடுகளில் இராணுவத்தினர் தங்க நகைகள், பணம், எலக்ரோனிக் உபகரணங்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
8.  மானபங்கப்படுத்தப்பட்டவர்கள்
8.1  15  திருமணமான பெண்கள் இந்திய இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர்.
8.2  பல இளம் பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமது கௌரவம் கருதியும் எதிர்கால வாழ்வு கருதியும் பெயர்கள் வெளியிட விரும்பவில்லை. பாரபட்சமற்ற விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படுமானால் சகல கட்சிகளும் சமூகமளிப்பர் என்று வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இணைக்கப்பட்ட மாதிரி வரைபடத்தில் கொலைகள் நடந்த சில இடங்களும்  அக்கொலைகளின் பின்னணியும்
இடம் – 1
வித்தனை என்ற இடத்தில்  –  இது ஜங்ஷனிலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்தில் உள்ளது.  இங்கு இளைப்பாறிய சுப்பிறின்டன் வெ.  சுப்பிரமணியம் வீடு உண்டு. இது சிமெண்ட் கூரையாதலால்,  இராணுவத்தினரின் செல்தாக்குதலிலிருந்து தப்புவதற்காக வீட்டுக்காரர்களுடன் அயலவர்களுமாக சுமார்  40  பேர் வரை இருந்தனர்.  2.8.89  அன்று பிற்பகல்  1.30  மணியளவில் வீட்டினுள் புகுந்த  இராணுவத்தினர் சரமாரியாகச் சுட்டதில்  9  பேர் ஸ்தலத்திலேயே இறந்தனர்.
1.  வெ.  சுப்பிரமணியம்  –  56 வயது
2.  அ.  இளையபெருமாள்  –  70  வயது
3.  இ.  புஸ்பராணி  – 45  வயது விதவை
4.  இ.  யவன்ராஜ்  –  11 வயது மாணவன்
5.  ஆ . சுந்தரேஸ்வரன்  –  11 வயது மாணவன்
6.  எஸ்.  கணேசலிங்கம்  –  35  வயது
7.  பேபி சசி கணேசலிங்கம் – 1½ வயது
8.  அமிர்தம் உமாதேவி  –  26  வயது
9.  ஈ.  இராஜலட்சுமி  –  40  வயது
இந்த ஒன்பது பிரேதங்களும்   4.8.89 இல் அருகிலுள்ள குழியில் தகனம் செய்யப்பட்டன.
இடம்   –  2
தீருவில் அமைந்துள்ள காலம் சென்ற எஸ்.  சிவகணேசன் வீடு. மோதல் நடைபெற்ற இடத்திலிருந்து  400 மீற்றர் தூரத்தில் உள்ளது. இங்கு 150 பேர் வரை தஞ்சம் அடைந்திருந்தனர்.  2.8.89  அன்று பிற்பகல்  3.30  மணியளவில் அந்த வீட்டினுள் நுழைந்த இந்திய இராணுவத்தினர் ஆண்கள் வேறாகவும் பெண்களை வேறாகவும் பிரித்து அங்கிருந்த கார் செட்டின் முன்னால் அவர்களை முழங்காலில் நிற்க வைத்துச் சரமாரியாகச் சுட்டதில் நான்கு பேர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.  மிகுதி நால்வர் படுகாயமடைந்திருந்தனர்.
கொல்லப்பட்டோர் –
1.  ஆ.  இராமச்சந்திரன்  –  41 வயது
2.  க.  சிவனேஸ்வரராஜா –  36  வயது
3.  பொ.  ரஞ்சித்குமார்  –  25 வயது
4.  ந.  ரவீந்திரன்  –  32 வயது
இடம்  –  3
புட்டணிப்பிள்ளையார் கோயிலின் முன்னால் அமைந்துள்ளள க. மகேந்திரராஜா வீடு  –
இது மோதல் இடம்பெற்ற இடத்திலிருந்து  450 மீற்றர் தூரத்தில் உள்ளது. இங்கே புகுந்த இராணுவத்தினர் அடுக்களையினுள் இருந்த இரு சகோதரர்களை இழுத்து வந்து சுவருடன் நிற்க வைத்துச் சுட்டுக்கொன்று, அவர்களது தாயையும் சுட்டுக்காயப்படுத்தினார்கள். அங்கு நின்ற மோட்டார் காரையும் வீட்டையும் எரித்தனர்.
1. க. மகேந்திரராஜா  – 49 வயது
2.  க.  வேலும் மயிலும்  – 42  வயது
இந்த இரண்டு சடலங்களும் மனைவிமார்களால் அவருடைய வீட்டிலேயே தகனம் செய்யப்பட்டன.

இடம்  –  4
தீருவில் நினைவுத் தூபிக்கு அருகிலுள்ள முருகன் ஆலயத்திற்கு எதிரில் இருக்கும் எஸ்.  சிவலிங்கம் வீடு  –
இது ஜங்ஷனிலிருந்து சுமார்  500  மீற்றர் தூரத்தில் உள்ளது. இந்த வீட்டில் பருத்தித்துறையிலிருந்து இந்திய இராணுவத்தினரின் நெருக்கடிகளினால் இடம்பெயர்ந்து அகதிகளாக வந்திருந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1.  இ.  நடராஜா  –  62 வயது இளைப்பாரிய போஸ்ற்மாஸ்ரர்
2.  வி.  அருள் சோதி  – 25 வயது சீமெந்துக் கூட்டுத்தாபனம்  இவரது மருமகன்
இடம்  –  5
வல்வெட்டித்துறை சந்தி (ஜங்சன்)  –  2.8.89இல் (1ம் நாள்)
பிற்பகல் 1.30  மணியளவிலிருந்து ஆங்காங்கே உள்ள வீடுகளிலிருந்தும், கடைகளிலிருந்தும் பொதுமக்களை இழுத்து வந்து சுட்டதில் நால்வர் கொல்லப்பட்டனர்.  50க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1.  க.  சிவபாக்கியம்  –  40 வயது
2.  இ.  இராசரத்தினம்  – 35 வயது
3.  க.  தங்கராஜா  – 60  வயது
4.  பா.  பிரேம்ராஜ்  –  22 வயது
வல்வெட்டித்துறை சந்தி –  3.8.89ல் (2ம் நாள்)
சந்தியிலிருந்து  300  மீற்றர் தூரத்திலுள்ள கொத்தியால் என்ற இடத்திலுள்ள ஒரு சாவு வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களும் ஒரு கிலோ மீற்றர் தூரத்திலிருந்து தார் ரோட்டில் உருண்டு வருமாறு அடித்துக் கட்டி வரப்பட்டவர்களும் சந்திக்குக் கொண்டு வரப்பட்டு,  அவர்களிலிருந்து சிலரை எழுமாற்றாகத் தெரிந்து சந்தைக் கட்டிடத்தின் முன்னால் வரிசையாக நிற்கவைத்துச் சுட்டதில் 6 அப்பாவிகள் துடிதுடித்து இறந்தனர்.
1.  த.  ரவிச்சந்திரன்  – 28 வயது
2.  செ.  மயில்வாகனம்  – 55 வயது
3.  சு.  உமாசங்கர்  – 19 வயது
4 . த.  நாகதாஸ்  – 28 வயது
5.  பா.  மகேந்திரதாஸ்  – 16 வயது
6.  ஆர்.  நவரட்ணம்  – 29 வயது
இடம்  –  6
உதவி அரசாங்க அதிபர் சந்து,  மானாங்கனை, வல்வெட்டித்துறை
மோதல் இடம் பெற்ற பகுதியிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது.  3.8.89ல் திருமதி. சோ.  இராஜேஸ்வரியின் வீட்டில் புகுந்த இந்திய இராணுவத்தினர்,  அங்கிருந்த இரண்டு மாணவர்களைப் பிடித்து அவர்களின் கைகளை நைலோன் கயிற்றினால் கட்டி இழுத்துச் சென்று அங்கிருந்த 200 மீற்றர் தூரத்திலுள்ள ஊரணி என்ற இடத்திற்குக் கொண்டு சென்று கத்தியினால் குத்தியும் துப்பாக்கியினால் சுட்டும் கொன்றனர்.

1.  அ.  சுவர்ணதாஸ்  –  18 வயது மாணவன்
2.  கு.  செல்வானந்தவேல்  –  18 வயது மாணவன்
இடம்  –  7
பொலிகண்டி இந்திய இராணுவ முகாமிலிருந்து வந்தவர்கள், வல்வெட்டித்துறையை நோக்கி வரும் வழியில் பின்வருவோரைச் சுட்டுக் கொண்டிருந்தனர்.
1.  வி.  முரளிதரன்  –  20 வயது
2.  சோ.  ரமேஸ்குமார்  –  18 வயது
3.  பொ.  இராசேந்திரம்  –  23 வயது
4.  எஸ்.  சிவமணி  –  35 வயது
5.  பி.வி.  கிருஷ்ணவதனா  –  33 வயது
இடம்  –  8
வல்வெட்டி –  சம்பவம் நடந்த இடத்திலிருந்து  1½ கி.மீ. தூரத்தில் உள்ளது. சாலையில் ரோந்து சென்ற இராணுவத்தினர் வீட்டினுள்ளிருந்த 70 வயது ந. நல்லமுத்து என்ற மூதாட்டியைச் சுட்டுக்கொன்றனர்.
இடம்  – 9
சிவன் கோயிலின் பின் வீதி வழியாகப் போய்க் கொண்டிருந்த 60 வயது சி. தம்பிதுரை என்ற வயோதிபர் காவல் நின்ற இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உடுப்பிட்டி இந்திய இராணுவ முகாம்
இங்கு சுற்றி வளைத்துப் பிடித்துச் செல்லப்பட்ட 11 இளைஞர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டனர்.
1.  த.  சிவகுமார்
2.  த.  ஜெயமோகன்
3.  ஆ.  பராசர்
4.  ஆ.  பரம்சோதி
5.  த.  சாம்பசிவம்
6.  செ.  யோகராஜா
7.  சி.  சிவலிங்கம்
8.  சு.  பேரின்பம்
9.  பொ.  சத்தியரூபன்
10.  அ.  மதிவர்ணன்
11.  நா.  சிவகுமார்
மற்றைய இடங்கள்
இதே போன்று பல இடங்களில் ஆண்களும் பெண்களும் வயது வேறுபாடின்றிக் கொல்லப்பட்டனர்.
வல்வெட்டித்துறையில் 1989 ஆகஸ்ட் 2, 3, 4ஆம் திகதிகளில் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்ட பொதுமக்கள் பட்டியல்.

இந்தியாவின் ‘மை லாய்’
ஜோர்ஜ் ஃபெர்னாண்டஸ்

வல்வெட்டித் துறையில் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் இந்தியப் படையினர் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 1989 ஆகஸ்ட் மாதம் 2, 3, 4 ஆம் தேதிகளில் இந்தியப் படையினர் 63 பேரை -குழந்தைகள், சிறுவர்கள், மாணவர்கள், பெண்கள் – சுட்டும் எரித்தும் கொன்றனர். இது பற்றி முழுமையான ஆவணங்களோடு வெளியான தமிழ் நூல் வல்வை ந. அனந்தராஜ் எழுதிய ‘வல்வைப் படுகொலை.’
இதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் ஃபெர்னாண்டஸ் எழுதிய முன்னுரையின் தமிழாக்கத்தைக் கீழே தருகிறோம். ‘India’s Mai Lai: Massacre at Valvettithurai’  எனும் தலைப்புடன் இதனை வெளியிட்டிருப்பவர்கள்: Hind Mazdoor Kissan Panchayt, Bombay(Mumbai).
இலங்கைக்குப் படைகள் அனுப்பிய ராஜீவ்காந்தியின் ராணுவ சாகசத்தை இந்தியாவின் ‘வியட்நா’மாக இலங்கை அமைந்துவிடும் என 1987 ஆகஸ்ட் மாதம் நான் சொல்லியிருந்தேன். எனினும் இந்தியாவின் வியட்நாமிலும் மை லாய் படுகொலைகள் ஒன்று நடக்கும் என எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லா இடங்களிலும் ராணுவத்தினர் மிகவும் மோசமான முறையில் மனித நலன்களை மீறி நடக்கிறார்கள் என அறிவேன். அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி, கட்டிறுக்கமான வாழ்க்கை, போர் அவர்களுக்கு ஊட்டியிருக்கிற மூர்க்கம் இவையெல்லாம் சேர்ந்து தருகிற அழுத்தம்தான் இவ்வாறு செயல்பட அவர்களைத் தூண்டுகிறது எனவும் சொல்லியிருக்கிறேன்.
இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கைகளின் ஆரம்ப நாட்களிலேயே அவர்கள் புரிந்த பாலியல் வல்லுறவு, இரக்கமற்ற படுகொலைகள் பற்றிய கதைகள் வெளியானபோது இந்திய அரசின் பிரச்சாரகர்களும் ஊடக ஏற்பாட்டாளர்களும் அவற்றை மறுத்தனர். போர்ப் பகுதிகளில் அலைந்து திரிந்து ஏதாவது வகையில் பொதுமக்களுக்கு நன்மை செய்துவிடத் துடித்த சாரணர்களாகவும் (Boy Scouts) அவலத்தில்  கதறியழும் பெண்மணிகளின் மீட்பர்களாகவும் இந்தியப் படையினரைக் கருதியிருந்த பலரோடு நான் முரண்பட்டேன்.
இப்போது, வல்வெட்டித்துறையில் தன்னுடைய ‘மை லாயை’இந்திய ராணுவம் நடத்தியிருக்கிறது.
லண்டன் நாளிதழான டெய்லி டெலிக்ராஃப் வல்வெட்டித்துறையில் இந்திய ராணுவம் வெளிப்படுத்திய காட்டுமிராண்டித் தனத்தைப் பற்றி ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டதுபோல, “வல்வைப் படுகொலைகள், மை லாயை விட மோசமானவை. வியட்நாமில் அமெரிக்கப் படைகள் கண்மூடித்தனமாகச் சுட்டார்கள். ஆனால் வல்வெட்டித்துறையிலோ இந்திய ராணுவம் முறையாகத் திட்டமிட்டே இந்தப் படுகொலைகளை நடத்தியிருந்தது. எல்லோரையும் நிலத்தில் குப்புறக்கிடத்திவிட்டுத் தலையில் சுட்டிருக்கிறார்கள்”.
ஆனால் இதுமட்டுமல்ல, இன்னுமொரு வேறுபாடும் உண்டு. மை லாய்ப் படுகொலைகளை அம்பலப்படுத்தியவர்கள் அமெரிக்கப் பத்திரிகையாளர்கள்.  மைலாயில் அப்பாவிப் பொதுமக்களை அமெரிக்க ராணுவம் கொன்றொழித்தமைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தவர்கள் அமெரிக்க மக்கள். குறிப்பாக அமெரிக்க ஊடகத் துறையும் மாணவர்களும் இளைஞர்களும்.
வல்வைப் படுகொலைகளை வெளியில் கொண்டு வந்தவர் லண்டன் நாளிதழான Financial Times தில்லிச் செய்தியாளரான டேவிட் ஹவுஸ்கோ (David Housego). வல்வைப் படுகொலைகள் நடந்து முடிந்து பதின்மூன்று நாட்களுக்குப் பிறகே அவர் வல்வெட்டித் துறையில் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்குச் சென்றிருந்தார். ஆகஸ்ட் 17 1989இல் அவருடைய செய்தி வெளியாகியது. எனினும் ஆகஸ்ட் 13 அன்றே Daily Telegraph நாளிதழில் அதன் தில்லிச் செய்தியாளரான ஜெரிமி காவ்றன், தில்லி வட்டாரங்களில் தான் கேள்விப்பட்டதை அடிப்படையாக வைத்து ஒரு செய்திஎழுதியிருந்தார். இந்தியப் பத்திரிகைகளில் மிகமிக மிகச்சிலவே இந்தப் படுகொலைகளில் அக்கறை காட்டின. இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் ரீட்டா செபஸ்தியன் செப்டம்பர் 3 அன்று ஒரு கட்டுரைஎழுதியிருந்தார்.
உண்மையில் வல்வைப்படுகொலைகள் பற்றிய தகவல்கள் வெளியே தெரியாதவாறு இந்திய அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டே மறைக்கப்பட்டது. இந்திய ஊடகத்துறையினரில் பெரும்பாலானோர் இந்த விடயத்தில் இந்திய அரசுக்கு ஒத்தாசையாக நின்று மகிழ்வுடன் செயல்பட்டார்கள்.
நல்ல காலங்களிலேயே இந்திய ராணுவம் மிகப் ‘புனிதமானபசு’வாகக் கருதப்படுவது. படுகொலைகளைப் புரிகிறபோது அந்தப் பசுக்களின் புனிதம் மேலும் பல மடங்கு அதிகரித்து விடுகிறது.
இந்தியாவின் வடக்கு கிழக்கு மாநிலங்களில் இந்தியப்படையினரின் பாலியல் வன்புணர்வுகள், கொள்ளைகள் பற்றி யாராவது பேசுகிறார்களா? ஒய்னம் (மணிப்பூர்) கிராமத்தில் நடந்த படுகொலைகள் பற்றி இந்தியாவில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஒய்னம் படுகொலைகய், ராணுவ உடையில் இருக்கின்ற கிரிமினல்களும், குரூரச் சிந்தை படைத்த கயவர்களும் ஆடிய நிர்வாண நடனம் அது.
மை லாயும் வியட்நாமும் கண்டிக்கப்பட்டன.  பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து அரசியல்வாதிகளையும், தளபதிகளையும் கொள்கைவகுப்பாளரையும் நிர்ப்பந்தித்தமையால் அவை முடிவுக்கு வந்தன.
வல்வெட்டித்துறையில் என்ன நடந்தது என்பதை உலகமெங்கும் –குறிப்பாக இந்தியா எங்கும் – தெரிய வைக்க இந்தச் சிறு பிரசுரம் உதவும் என்று நம்புகிறேன்.
படுகொலை செய்யப்பட்ட வல்வெட்டித்துறை மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்திய மக்களின் மனச்சாட்சியைக் கிளற வைக்குமானால் இந்தச் சிறு பிரசுரத்தின் நோக்கம் மேலதிகமாகவே நிறைவேறிவிடும்.
தமிழில்: சேரன்

‘Indian Mai lay’ ஆங்கில நூலுக்கு ஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ் எழுதிய முன்னுரையின் தமிழாக்கம்.