அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ்: தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

ஜனாதிபதி தேர்தலுடன் சேர்ந்து துணை ஜனாதிபதிக்கான தேர்தலும் நடக்க இருக்கிறது. அதன்படி குடியரசு கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடுகிறார்.
ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவது யார் என்பது இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.
துணை ஜனாதிபதி பதவிக்கு ஒரு பெண்ணை தேர்வு செய்வேன் என ஜோ பிடன் ஏற்கனவே உறுதி அளித்திருந்தார். அதே போல் அமெரிக்காவில் தற்போது நிலவிவரும் நிறவெறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டும் என ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் தனது வாக்குறுதி மற்றும் கட்சியினரின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், கருப்பின பெண்ணுமான கமலா ஹாரிசை துணை ஜனாதிபதி பதவிக்கு ஜோ பிடன் தேர்வு செய்துள்ளார்.