ஓளி ஓவிய ஆளுமை கருணா

கருணாவின் ஓவியக் கண்காட்சி ஒன்று ரொரன்ரோ பல்கலைக் கழகத்தில், தமிழர் வகை துறை வள நிலையத்தினரால் 83 யூலை படுகொலைகளின் பத்தாண்டுகள் நிறைவுற்றதை நினைவு கூறுமுகமாக நடைபெற்றது. அதன் போது அவரது நவீன ஓவியங்களை பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதன் பின்னர் பல ஓவியக் கண்காட்சிகளில் கருணாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மரபுத் திங்கள் நிகழ்வுகளில் அதிகமாக கருணாவின் ஓவியங்கள் அலங்கரித்தன.

கருணாவிற்கு பல முகங்கள் உண்டு. அவர் நவீன ஓவியங்களுடன், டிஜிட்டல் ஓவியங்கள், எடிட்டிங், புகைப்படங்கள், ஒளிப்பதிவுக்கருவி போன்ற பல விடயங்களில் நன்கு பரிச்சயமானவர். அது மட்டுமல்ல கனடாவில் வந்து கொண்டிருக்கும் பல பத்திரிகைகளின் லே அவுட் பாரியளவில் மாற்றம் கருணாவால் ஏற்படுத்தப்பட்டது. தமிழ்த் தேசியம் வளர்ந்து கொண்டிருக்கும் காலத்தில் கருணா பல ஓவியங்களை வரைந்துள்ளார். இவை பல அச்சு ஊடகங்களில் வெளியாகியுள்ளன. போரினால் பாதிக்கப்பட்ட மக்களினை அவர்களது வலியை கருணா தனது ஓவியத்தில் பதிவு செய்துள்ளார். மார்க் மாஸ்ரரின் மாணவனான கருணா, ஓவியங்கள் பற்றிய பரிச்சயமற்ற கரவெட்டியில் பிறந்தார். கலையைப் பற்றிய கணிப்பீடுகள் அற்ற கரவெட்டியில் தான் அவரது கலை வளர்ந்தது. இவரது வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் தான் சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரத்தின் வீடு இருந்தது. அவர் ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்ற காலங்களில் (அப்போது ஹாட்லிக் கல்லூரி கல்வியில் சிறந்து விளங்கிய ஒரு நிறுவனம்) சித்திர புத்தகங்கள் தனது கைப்பட கீறியிருந்தார். அவரது வகுப்புத் தோழர்கள் பலர் இன்று கலையுலகில் இயக்குனர்களாக ஊடகவியலாளர்களாக உள்ளனர்.

அவர் ஓவியத்தின் மீது கொண்டிருந்த பற்று அவரை கலைரீதியாக பல மாற்று ஊடகங்களில் அவரது கவனம் செலுத்தியது. குறிப்பாக மனவெளி அரங்காற்றக் குழுவின் ஸ்தாபகர்களில் ஒருவர். நாடகங்களின் ஒளியியலில் அதிக கவனம் செலுத்தினார். கனடாவில் மேடையேற்றப்பட்ட நாடகங்களில் இவரது ஒளிக் காட்சி வடிவங்களால் பல மேடைக் காட்சிகளில் காட்சியமைக்கப்பட்டன. மேடையமைப்புக்குச் சிரமமான பல காட்சிகளை தனது ஒளிக்காட்சிகளால் அலங்கரித்தார். கனடா தமிழ் நாடக மேடையில் இவரது பங்களிப்பு அளப்பரியது.
பல சஞ்சிகைகளின், நிகழ்வுகளின் நூல்களின், இலக்கிய நூல்களின் அட்டைப் படங்களை இவரது படங்கள் அலங்கரித்தன. இவை அந் நூல்களுக்கு ஒரு இலக்கிய தரத்தைக் கொடுத்தன.. காலச்சுவட்டின் பல நூல்களுக்கு கருணாவின் ஓவியங்களே அட்டைப் படங்களாக அமைந்தன. நூலின் அட்டையே உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும்.

கருணா ஒரு புதிய அத்தியாயத்தை விளம்பரங்களில் ஏற்படுத்தினார். விளம்பர ஓவியங்களுக்கு இலக்கிய அந்தஸ்தை இவர் ஏற்படுத்திக் கொடுத்தார். இவரது பல விளம்பரங்கள் வித்தியாசமனவை. ராஜீவ் கோணேஸ்வரன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் இதனை சிறப்பாக வெளிப்படுத்துகின்றது.

எமது தனிப்பட்ட வளர்சியிலும் தொழில் முயற்சியிலும் கருணா அண்ணாவின் பங்கு மிகப் பெறுமதி மிக்கது. எமது வளர்ச்சியின் ஒவ்வொரு படி நிலைகளிலும் தன் திறமையால் மெரு கூட்டியவர். இங்குள்ள பல வெற்றிகரமான தொழில் முனைவுகளில் அவரின் திறமை பங்களிப்புச் செய்துள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.

கருணா அண்ணா பிடிவாதக்காரன் என்று சொல்வார்கள் அவரின் அந்த பிடிவாதம் என்பது தரமான படைப்புகளை நோக்கியதாக இருந்தது என்பதை அவரோடு பழகிய பொழுதுகளில் நான் உணர்ந்து கொண்டேன்.இந்த நாட்டின் பல்லின சமூகங்களுக்கும் இணையாக தமிழ் சமூகத்தினை உயர்த்துவதற்கான கலையம்சத்தையே அவர் வேண்டி நின்றார்.
அதனை நோக்கியே அவர் எங்களை எந்தி தள்ளினார். ஏனைய சமூகங்களால் மதிக்கப்படுகின்ற அங்கீகரிக்கப்படுகின்ற வகையில் எமது தொழில் முனைப்புகள் வெற்றியடைவதற்கு அவரின் வணிகச் சின்னங்களும் சந்தைப்படுத்தல் உத்திகளும் பேருதவி புரிந்தன.

கனடாவில் உள்ள தமிழ்ப் புகைப்படக் கலைஞர்களில் கருணா குறிப்பிடத்தக்கவர். இவரது புகைப்படங்களை இவரது முகநூலில் தரிசிக்கலாம். திருமண விழாக்கள் போன்ற நிகழ்வுகளைக் கூட இவர் மிக வித்தியாசமாக படம் பிடிப்பார். இவர் புகைப்படக் கலையை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றவர் என்றால் மிகையாகாது. அதனால்தான் இவரை ஒளி ஓவியர் என்பார்கள்.

கருணா நல்ல ஒளிப்பதிவாளர், எடிட்டரும் கூட. இவர் சில விவரணத் திரைப்படங்களை படைத்துள்ளார். இவை பொது மக்கள் பார்வைக்கு வரவில்லை இவை தரமான படைப்புக்கள். இவர் ஒரு வித்தியாசமான படைப்பாளி என்பதனை இப் படைப்புக்கள் வெளிப்படுத்தும்.
கனடாவில் நடைபெற்று வரும் திரைப்பட விழாக்களில் இவரது பங்கு கணிசமானது. திரைப்படப் படைப்பாளிகளுடன் அதிகளவு உரையாடுவது இவராகத்தானிருக்கும். இவர்களை உற்சாகப்படுத்துவதுடன், இவர்களது குறை நிறைகளை மென்மையான குரலில் வெளிப்படுத்துவார்;.
பல ஓவியப் பட்டறைகளை கருணா நடாத்தியுள்ளார். தாய்வீடு பத்திரிகைக்காக பல பட்டறைகளை நடாத்தியுள்ளார். தாய்வீட்டில் பல ஓவியம் பற்றிய கட்டுரைகளை எழுதியுள்ளார். பிக்காசோவை பிரித்தெடுத்து அறிமுகப்படுத்தினார்.

டுத்த சந்ததிக்கு ஓவியக் கலையை எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்து அதற்காகச் செயல்பட்டார். கனடாவில் உள்ள பெரும்பாலான ஓவிய காட்சியகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவற்றிக்கு அப்பால் இவருக்கு ஓவியம், லே அவுட், புகைப்படம், ஒளிப்பதிவு போன்ற அனைத்துறையிலும், அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பத்தை இவர் நன்கறிந்து வைத்திருந்தார். இது உண்மையில் பலருக்கு உதவியாகவிருந்தது. தான் செய்யும் விடயங்கள் மிகவும் தரமாகவும், நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்று மிகவும் அவதானத்துடன் செயல்படுவார்.

இவர் ஒரு சிறந்த பயணியும் கூட. பயணங்கள் செல்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். கனடாவின் முதன் குடிகள் வாழும் பிரதேசங்கள் எங்கும் பயணித்துள்ளார். கனடா வரும் வெளிநாட்டுத் தமிழர்களை (இந்தியா உட்பட) முதலில் இப் பிரதேசங்களுக்கே அழைத்துச் செல்வார். இவரது இணையத்தளத்தில் அல்லது முகநூலில் இவர் பயணித்த பல இடங்களின் படங்களைக் காணலாம். கடுஞ் சூறாவளி அடிக்கும் காலத்தில் கியுபாவிற்கு பயணம் செய்து, கடுஞ் சூறாவிளியை நேரடியாகவே எதிர் கொண்டவர். இருதய அடைப்பின் சுழலில் எம்மைவிட்டு மறைந்து விட்டார். அவர் கூறுவது போல். அவரது ஓவியங்கள் காலம், காலமாக பேசப்படும், பார்க்கப்படும்.

 

 

Drawn From Memory: An Interview with Tamil Visual Artist Karuna Vincent

https://tamilculture.com/drawn-memory-interview-tamil-visual-artist-karuna-vincent?fbclid=IwAR15Smhr47b8w5e01u8lKU5LcHNDQu8bqrxpfqElY9kvGx1Zi4hx51457Ws

சமூக வலைத்தளங்களில் கருணாவுக்கு வந்த அஞ்சலி குறிப்புகளில் தொகுப்பு

 

Rajeef koneswaran
எமது தனிப்பட்ட வளர்சியிலும் தொழில் முயற்சியிலும் கருணா அண்ணாவின் பங்கு மிகப் பெறுமதி மிக்கது. எமது வளர்ச்சியின் ஒவ்வொரு படி நிலைகளிலும் தன் திறமையால் மெரு கூட்டியவர். இங்குள்ள பல வெற்றிகரமான தொழில் முனைவுகளில் அவரின் திறமை பங்களிப்புச் செய்துள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.
கருணா அண்ணா பிடிவாதக்காரன் என்று சொல்வார்கள் அவரின் அந்த பிடிவாதம் என்பது தரமான படைப்புகளை நோக்கியதாக இருந்தது என்பதை அவரோடு பழகிய பொழுதுகளில் நான் உணர்ந்து கொண்டேன்.இந்த நாட்டின் பல்லின சமூகங்களுக்கும் இணையாக தமிழ் சமூகத்தினை உயர்த்துவதற்கான கலையம்சத்தையே அவர் வேண்டி நின்றார்.
அதனை நோக்கியே அவர் எங்களை எந்தி தள்ளினார். ஏனைய சமூகங்களால் மதிக்கப்படுகின்ற அங்கீகரிக்கப்படுகின்ற வகையில் எமது தொழில் முனைப்புகள் வெற்றியடைவதற்கு அவரின் வணிகச் சின்னங்களும் சந்தைப்படுத்தல் உத்திகளும் பேருதவி புரிந்தன.

======================

Ravi Atchuthan

Not only did we lose a great soul today but we lost a talented artist. He designed the poster of my first movie “Uyire Uyire” I directed in 1995. He will never be forgotten, and will always be remembered for his wonderful creations. Our prayers are with you as you Rest in Peace Karuna.

=======================

Missing our dearest friend..கருணா… with us for every important milestone…part of our family…our Lhasa pasa loved him too and could always be seen at Karuna’s side during long visits at our home. A great spirit, huge talent and most loyal friend. //என்னுடைய பல கவிதைகளின் உயிராக இருந்தவன். என் நெஞ்சின் அழியா நிழல். சொல்ல ஒரு வார்த்தையில்லை.சூட ஒரு பூவும் இல்லை.//

=======================

மரணிக்கும் வயதல்ல வாழ வேண்டிய வயது. எப்படி நடந்தது என்று மனம் குமுறுகின்றது. நாம் வைகறை என்ற பத்திரிகை நடாத்திய போது எமக்கெல்லாம் ஊக்கம் தந்து , தொடர்புகளை ஏற்படுத்தி தந்து ஆதார புரிஷனாக இருந்த ஆத்ம நண்பர் மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரியதாக இருந்த நண்பர். ரொறன்டிவில் எந்த இலக்கிய வெளியீடுகள், பத்திரிகைகள். விளம்பரங்கள் எதுவாயினும் நண்பர் கருணாவின் கை படாதவை எதுவுமே இல்லை என கூறலாம்.
கருணாவின் இழப்பினால் ரொறன்டோ வாழ் தமிழ் சமூகம் விக்கித்து நிற்கிறது .
நணபரின் ஆத்ம சாந்திக்காக பிரார்திப்போம்.

==========================

கருணா அண்ணா உங்கள் கலை படைப்புகள் ஊடாக என்றும் வாழ்வீர்கள்்்்

Karuna Anna You will live forever through your art.

===================

P A Jayakaran Arullingam

தேடல் சஞ்சிகைக்கு அவரது ஓவியத்தைப் பெறுவதற்காக முதலில் கருணாவை சந்தித்தேன். அதன் பின்னர் தேடகத்தின் கலை இலக்கிய முயற்சிகளுக்கு உறுதுணையாக தனது பங்களிப்பை நல்கிய கலைஞர். 1994ல் தேடகம் நிகழ்த்திய ஓவியக் கண்காட்சியில் தனது ஓவியங்களைக் காட்சிப்படுத்தியவர். அதுவே அவரது கனேடிய அறிமுகக் கண்காட்சி. அவரது ஓவியங்கள் பல கனேடியக் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தேடகத்தின் “The D.M.O” நாடகத்தின் கலை மற்றும் தொழில்நுட்ப விடயத்தை கவனித்துக்கொண்டவர் ஓவியர் கருணா. நிகழ்த்து கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அரங்காடல் அளிக்கை, தாய் வீடு அரங்கியல் விழா அளிக்கை போன்றவற்றுக்கு தனது கலைத்துவமான ஒளியமைப்பால் மெருகேற்றியிருக்கிறார். 1994 இல் இருவரும் இணைந்து Digi Graphics and Studios எனும் வரைகலை நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தியிருந்தோம். அதனால் அவர் Digi கருணா என்றும் அழைக்கப்பட்டார். ஓவியம், புகைப்படம், வரைகலை என்பனவற்றுக்கூடாக நன்கு கவனிக்கப்பட்டவர் கருணா. நவீன ஓவியத்தை அனைவரும் அறியும் வகை ஓவியப் பட்டறைகளையும் நெறிப்படுத்தியவர். இன்று கருணாவின் நினைவோடு மிகை துயரே எம்மை சூழ்ந்துள்ளது.

=====================

Katsura Bourassa

நண்பன் கருணாவின் மறைவு அழியாத் துயர்.
வழமைபோல வொட்காவும் பியரும் ஒன்றாகிப்
பகை முறிக்க இன்னமும்
நாட்கள் இருக்கிறதுதானே.
அதற்குள் என்ன அவசரம்?
வக்கிர மனது என்னுடையது.
எழுந்து வா நண்பனே.
இன்னொரு தேனிலவு
கொண்டாடவேண்டும் உன்னுடன்.
கைவிட்டகலாத காலத்தில் கரைந்து
விடக் கூடியவனா நீ?
இல்லை எனச் சொல்வதற்கு
எந்தச் சொல்லைத் தேடுவது?

==========================
Dushy Gnanapragasam

ஓவியங்களையெல்லாம் அனாதரவாக விட்டுவிட்டு ஓவியன் அவசரமாக விடைபெற்றுக்கொண்டான்.

‘இணைந்து செய்யவேண்டிய வேலைத்திட்டங்கள்’ என நீண்டதொரு பட்டியலே இட்டுவைத்திருந்தோமே கருணா! இனிமேல் என்னாவது?

ஓ! அனாதரவானது ஓவியங்கள் மட்டுமில்லையோ?

Rest in Peace Karuna Vincent. If the heavens did not yet know ‘art appreciation’, I am sure it does now, for you are now there teaching/preaching it!

=========================
வல்வை.ந.அனந்தராஜ்

புகழ் பூத்த அற்புதமான ஓவியர் திரு.வின்சனற் கருணா அவர்கள் இளம் வயதில் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரவெட்டியைச் சேர்ந்த யா/திரு இருதயக் கல்லூரியின் முன்னாள் புகழ் பூத்த அதிபராகவும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளராகவும், கடமையாற்றி எல்லோரது மனதையும், தனது வசீகரமான பேச்சினாலும், தோற்றத்தினாலும் கவர்ந்திழுத்து அமரத்துவம் அடைந்த திரு.வின்சன் மாஸ்ரரின் மகன் இவ்வளவு பெயரும்,புகழுடனும் கனடாவில் வாழ்ந்து வருகின்றார் என்பதை அறிந்து அவருடன் பழகிய பொழுது, தந்தையின் சாயலையும் பண்பை யும் அவரிடம் கண்டேன். எனது மகன் நவஜீவனுடன் அவரது இல்லத்திற்குச் சென்று என்னால் எழுதப் பட்ட “வல்வைப் புயல்”, “சமர் கண்ட முல்லைத் தீவு” ஆகிய இரு நூல்களுக்கு மான முகப்பு ஓவியங் களை வரைந்து உதவுமாறு கேட்கப் போயிருந்த பொழுது என்னிடம் அவற்றின் பின்னணி தொடர் பாக உன்னிப்பாகக் கேட்ட கருணா அவர்கள் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். வல்வையின் புகழ்பூத்த பிரபல ஓவியர் அமரர் மோகனின் அழகிய உணர்வு பூர்வமான ஓவியத்தை அடிப்படையாக வைத்து வல்வைப் புயலின் வெளி முகப்பு ஓவியம் அவரால் வரைப்பட்டிருந்தது. ;அன்று இரவு நடுங்கும் குளிரிலும், அவரது வீட்டிற்குச் சென்று >இந்தப் பணியில் உதவு மாறு கேட்ட பொழுது, எவ்வித மறுப்புமின்றி, எத்தனையோ வேலைப் பளுக்களின் மத்தியிலும் அழகிய உணர்வு பூர்வமான ஓவியங்களாக ஒரு நாளிலேயே வரைந்து தந்து உதவிய அந்த மாபெரும் கலைஞனின் இழப்பு தமிழ் உலகத்திற்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்.

===================

கதி செல்வகுமார்
தெரிந்த பலருக்கும் நன்கு தெரிந்ததுதான் . 1980 தை மாதம் உன் பெயர் தெரிந்து நான் சந்தித்தேன் . கலைதான் எங்களின் நெருக்கத்தை அதிகப்படுத்தியது . நாங்கள் எங்களின் 12 வயதிலேயே சித்திரக்கதைப் புத்தகம் வெளியிட்டவர்கள் . என் கதையும் உன் வரைகலையும் செய்து கொண்ட தொடர் ஒப்பந்தம் அப்போதே ஆரம்பமாகிவிட்டது . உன் இறுதி நாட்களில் என்னை நீ பல முறை தேடிய போதும் உன்னோடு பேசும் தூரத்தில் நான் இருக்கவில்லையே கருணா . என்னை என்னாலேயே மன்னிக்க முடியாது . இது தெரிந்துதான் தேடினாயோ ? எப்படி இனி என்னால் அறிந்து கொள்ள முடியும் ? விடையற்ற வெறும் கேள்விகளால் இப்படி நிகழ்ந்துவிட்டதே கருணா . நீ எனக்கு மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டாய் . நீ செய்ய எண்ணியதெல்லாம் இனி யாரால் செய்ய முடியும் ? உன் இழப்பு டிஜிட்டல் தமிழுக்கு நேர்ந்த மாபெரும் பின்னடைவு . பகிரங்கமான இந்தப் பதிவு உன் இழப்பின் ஆழத்தை எம்முலகம் உணரத் துணை செய்தால் சிறிது ஆறுதல் . அவன் மரண வீட்டில் மட்டும் என்னை யாரும் பேசக் கேட்டு விடாதீர்கள் . அவனின் நினைவை நான் பேசியது அவனது 50 வது பிறந்த நாளாகவே இருந்துவிட்டு போகட்டும்
இப்படிக்கு கருணாவின் உற்ற நண்பர்களில் ஒருவன் இறுதி நாட்களில் பேச முடியாமல்போன துர்ப்பாக்கியசாலி

=================

Thamarai Nada

Karuna Mama… An inspiration has left us all.

You taught me how to use a camera, and how to take photography to the next level.

You showed me that it’s not about the camera, it’s about the photographer’s eye, and what they want to capture.

You revealed to me that I can take beautiful photos with my phone and showed me how to do it.

You explained the meanings of your paintings in simplified terms so that I would understand.

You helped me understand the beauty of your paintings.

At your art exhibition, you asked for me to be a volunteer. That made me very proud, did you know that?

You made me write articles for the Thaiveedu newspaper, and you edited them for me. You were the reason people started to appreciate my words.

You had much more to teach me… but suddenly you have left all of us.
What you have taught me is now priceless
We will miss you forever.

======================
Jeeva Nanthan
மரணம் தீண்டா மனிதர் இல்லை …ஆனாலும் அதை தாங்கும் இரும்பு இதயமும் நமக்கு இல்லை.
சிறந்த ஓவியரும் அற்புத புகைப்படக்காரருமான கருணா Karuna Vincent மரணச்செய்தி கேட்டு அதிர்ந்து கிடக்கிறேன்.
=================
Senthi chelliah
1990 காலப்பகுதியிலிருந்து தமிழ், கலை, கலாச்சாரம் பண்பாட்டுக்கோலங்கள் என தம்மை ஈடுபடுத்தியவர்கள் என பலரை புலம் பெயர்ந்த கனடிய மண்ணில் வரிசைப்படுத்த முடியும்.
1990 காலப்பகுதியிலிருந்து ரொரன்ரோவில் Creative ஆக வரைகலை (ஓவியர்), புகைப்படம் எடுத்தவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் DIGI கருணா!
தமிழன் வழிகாட்டியில் அக்கறை கொண்டவர் மட்டுமல்ல தமிழன் வழிகாட்டிக்கு பெருமை தேடித்தந்த பல படங்களின் சொந்தக்காரரும் அவர்தான்.
இன்று DIGI கருணா எம்மோடு இல்லை. அன்னாரின் மறைவிற்கு தமிழன் வழிகாட்டி தலை வணங்குகிறது.
====================

Kana Praba

இழப்பல்ல, பேரிழப்பு.
ஈழத்தின் தலை சிறந்த ஓவியர், படப்பிடிப்பாளர் சகோதரர் கருணா Karuna Vincent இன் பிரிவுச் செய்தி கேட்டுப் பேரதிர்ச்சி அடைகிறேன்.

ஓவியர் மாற்கு மாஸ்டரின் மாணவன் என்று கருணா அண்ணனிடம் பெருமையடிக்க ஒரு கட்டுரை எழுதி அவருக்குக் காட்ட இருந்தேன். இவரின் ஒவ்வொரு படைப்பையும் நின்று நிதானித்து ரசிப்பேன். தாய் வீடு அனுப்பிய புத்தாண்டு ஓவியம் இன்னும் என் சேகரிப்பில் இருக்கு. உங்களுக்கெப்படி பிரியாவிடை கொடுப்பேன் :

===================
Lankathas Pathmanathan

கலைஞன் கருணா மரணம்.

#ஓவியன்
#வரைகலைஞன்
#வடிவமைப்பாளர்
#எழுத்தாளர்
#விமர்சகன்
#புகைப்படப்பிடிப்பாளர்
#பல்கலைவல்லுனன்

====================

Nedra Rodrigo

Karuna anna was one of the kindest souls you could ever hope to meet. He loved art, he wanted to see our young people more engaged with art, and he often helped out with projects for the Symposium. He gave of himself with such generosity and humility, and he loved speaking of others more than he ever spoke of himself.
His passing is such a huge loss to our community.

==========
Kannan Panchalingam

கணணி வரைகலை வித்தகர், சிறந்த ஓவியர், நூற்றுக்கணக்குக்கு மேற்பட்ட திருமணவிழாக்கள் கொண்டாட்டம்களை தனது மனத்திரையில் இருக்கும் எண்ணக் கருவை புகைபட கருவிக்குள் உள் வாங்கிய தலை சிறந்த நிழல்ப்படக் கலைஞர், மேடை நாடகக் கலைஞர் டி.யி .கருணா என செல்லமாக அழைக்கும் “கருணா வின்சன்ட்” னின் மறைவு தமிழர் சமூகத்திற்க்கு கிடைத்த பேரிழப்பு. முக்கியமாக கனேடிய தமிழர் சமூகத்திற்க்கு கிடைத்த பேரிழப்பு. அவருடைய இந்த வரைகலை துறையில் மிகவும் அரிதாக ஆர்வம் காட்டும் நம்வரிடையே தனக்கென ஒரு தடம் பதித்து இவ்வுலக வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுள்ளார். 2009க்கு முன்பு தேசிய விடுதலை போராட்டம் தீவிரமடைந்து வந்த நெருக்கடியான காலகட்டம்களில் எல்லாம் பத்து வருடம்களுக்கு மேலாக இன் முகம் கொண்டு வரவேற்று தோளோடு தோள் நின்று தன்னிடம் உள்ள வளம்களை தந்து உதவிய “கருணா வின்சன்ட் ” க்கு இறுதி வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றேன்.

============

Yamuna Rajendran

இது என்ன கொடுமை? நாளை நாம் காலையைப் பார்ப்போமா என அச்சமாக இருக்கிறது. இருவாரம் ஒருமுறை தொலைபேசி எடுப்பார். ஓவியர்கள் பற்றி உணர்ச்சிவசமாகப் பேசுவார். தான் தாய்வீட்டில் ஓவியர்கள் பற்றி எழுதிவரும் தொடர் பற்றி அபிப்பிராயம் கேட்பார். அத்தனையும் தொகுத்து அனுப்பியிருந்தார். எழுத்தில் அபிப்பிராயத்தைப் பதிவுசெய்து தரச் சொல்லிக் கேட்டார். ரொம்பவும் கூர்மையான (மெல்லிய) மனதுக்குச் சொந்தக்காரர். சுருக்கென்று கோபம் வரும். அது சுயமரியாதை தொடர்பான அவரது முன்னுணர்வு என்பது பிற்பாடு எனக்குப் புரிந்தது. இந்தப் புன்னகையும் மறையுமா என்று மனம் பதறுகிறது. கனடா சென்ற வேளையில் என்னை இவர் எடுத்த படங்களில் அத்தனைப் பிரியம் குழைந்திருந்தது. கருணா எப்பிடி இருக்கிறீர்கள் எனக் கேட்க வேண்டும் போலத் தோன்றுகிறது.

==============
கணன் சுவாமி

is feeling sad.

சிறந்த ஓவியரும் சிறந்த புகைப்படகலைஞரும் அன்பான அண்ணருமான கருணா அண்ணரின் பிரிவு எமை மிகுந்த துயரில் ஆழ்த்துகிறது. கனேடிய தமிழ் சமூகத்தில் கருணா அண்ணர் அவர்கள் ஆற்றிய கலைச்சேவையும் பங்களிப்பும் வானளாவியது.!

===============

Trotsky Marudu Maruthappan

Karuna ,my dear friend ! How can I think Canada with out you
and your voice,my friend ! Oh!! Karuna !

=========================
Avvai Vickneaswaran
கருணா, ஆறுதலாக நிறையபல பேசவேண்டும் எனக் காத்திருந்தேன். காத்திருப்புக் கனவாகவே தொடர வேண்டுமெனக் காலம் சொல்லிக் கண்கலங்க வைக்கிறது.
கருணா என்றவுடன் எத்தனை ஞாபகங்கள் …
விதம் விதமாக எங்களைப் படம் எடுப்பதும், புதுப்புது இடங்களுக்கு அன்போடு அழைத்துச் செல்வதும், கனடாவின் அரசியலைக் கதைப்பதும், அரசியை முதலில் கனடாவின் நாடக மேடையில் ஏற்றியதும் கருணாவைத் தவிர யார் செய்திருக்க முடியும்?
நட்பை நினைவு கூர்வதைத்தவிர இன்று எதையுமே செய்ய முடியாமல்நாங்கள்.
நீ ஓடோடி ஏன் காலத்தில் கரைந்தாய்.?
=======================================
Ma Sithivinayagam
தமிழ்ச்சமூகத்தின் அதிசயிக்கத்தக்க வல்லமையுள்ள ஓவியராக,புட்சிகர முற்போக்கும், தனித்துவமும் நிறைந்த ஓவியங்களை தமிழர்களுக்கு வழங்கிய ஓவியர் கருணாவின்
சடுதியான இழப்புச்செய்தி மிகுந்த துயர் தருகின்றது. அவரது ஓவியங்கள் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தி சிந்திக்கச் செய் பவை. புலம் பெயர் நிலங்களில் வாழும் வளமான ஓவியர்கள் பலருக்கு முன்னுதாரணமாக விளங்கிய கருணா அவர்கள் ஓவியர் மாற்கு அவர்களின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது .புரட்சிகர மாற்றுக் கருத்திற்கான பெருவெளியாக கனடாவில் வெளிவரும் காலம் சஞ்சிகை நிகழ்வுகளில் அவரோடு பழகுகின்ற வாய்ப்பு கிடைத்தமை பெரும் பாக்கியமானதாகும். சமூக மாற்றத்திற்கான உயிரோட்டமாக தன் தூரிகையை சுழற்றிய அவரின் அற்புதக் கைகள் இன்று ஓய்ந்து போயின என்கின்ற செய்தி மிகக் கொடியது. அந்த அற்புதக் கலைஞருக்கு என் ஆத்மார்த்த அஞ்சலிகள் !!==================
Amshan Kumar கனடா பயணத்தின்போது மற்ற நண்பர்களுடன் பல இடங்களுக்கு கூட்டிச்சென்றார். தாய்வீடு இதழ் பேட்டிக்காக என்னை புகைப்படங்கள் எடுத்தார். இனியவர். துறுதுறுப்பானவர். கேமரா இல்லாமல் அவரைப் பார்த்ததில்லை. திலீபும் அவரும் இரட்டையர்களாக வலம் வந்தனர். வருந்துகிறேன்.
===========================
Yamuna Rajendran
இது என்ன கொடுமை? நாளை நாம் காலையைப் பார்ப்போமா என அச்சமாக இருக்கிறது. இருவாரம் ஒருமுறை தொலைபேசி எடுப்பார். ஓவியர்கள் பற்றி உணர்ச்சிவசமாகப் பேசுவார். தான் தாய்வீட்டில் ஓவியர்கள் பற்றி எழுதிவரும் தொடர் பற்றி அபிப்பிராயம் கேட்பார். அத்தனையும் தொகுத்து அனுப்பியிருந்தார். எழுத்தில் அபிப்பிராயத்தைப் பதிவுசெய்து தரச் சொல்லிக் கேட்டார். ரொம்பவும் கூர்மையான (மெல்லிய) மனதுக்குச் சொந்தக்காரர். சுருக்கென்று கோபம் வரும். அது சுயமரியாதை தொடர்பான அவரது முன்னுணர்வு என்பது பிற்பாடு எனக்குப் புரிந்தது. இந்தப் புன்னகையும் மறையுமா என்று மனம் பதறுகிறது. கனடா சென்ற வேளையில் என்னை இவர் எடுத்த படங்களில் அத்தனைப் பிரியம் குழைந்திருந்தது. கருணா எப்பிடி இருக்கிறீர்கள் எனக் கேட்க வேண்டும் போலத் தோன்றுகிறது.
=============
Varatharajan Mariampillai
கருணாவுக்கு மருது அனுப்பியது…!
காலையில் என்னுடன் கதைத்த விக்கி Vickneaswaran Sk, சொன்னார்:
“கருணா மற்றவர்களைப் படம் பிடிப்பாரே தவிர தன்னைப் படம் எடுக்க விரும்புவதில்லை.. நாங்கள் படம் எடுத்தால் இங்கு தாருங்கள்.. நான் ஒழுங்காய் எடுத்துத் தருகிறேன் .. என கமராவைப் பறிப்பார்” – என்றார்.
அண்மையில் என்னுடன் பேசும்போது அவரது பிறந்த நாளுக்கு மூத்த ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்கள் தமக்கு அனுப்பிய வாழ்த்து மடலை அனுப்புவதாகவும் பார்க்கும்படியும் சொன்னார்.
மருது மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.
உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் பற்றிய தனது ஆய்வினைப் பல்கலைக்கழக ‘ஓவிய பீடத்தினர்’ ஏற்காவிட்டாலும், ஓவியமேதை மருது அவர்கள் ஏற்று அங்கீகரிப்பதே பெரிய விடயம், பெரிய சந்தோசத்தைத் தருகிறது அண்ணா! – எனச் சொன்னார்.
மருது அனுப்பிய வாழ்த்தை, அவர் தமது முகநூலில் பதிவு செய்யவில்லை.
உட்பெட்டியில் எனக்கு அனுப்பி வைத்தார்.
அது பற்றி அவருடன் பேசியிருந்தால் இப்படம் பற்றிய ஒரு நல்ல குறிப்பை இங்கு பதிவு செய்திருக்கலாம்…
===============
Vickneaswaran Sk

அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளமுடியவில்லை. உன்னிடமிருந்து இனி ஒருபோதும் ஒரு தொலைபேசி அழைப்பு வராது என்பதை நம்பவே முடியவில்லை. என்னதான் ஆயிற்று உனக்கு? உலகம் முழுவதும் உறவுகள் நிறைந்திருந்தும் தன்னந்தனியாக, அருகிலே யாருமில்லாத நிலையில் நீ இருக்கும்போது மரணம் உன்னை நெருங்கியதை என்னால் இன்னமும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஏன்..ஏன் இப்படி என்ற கேள்வி திரும்பத் திரும்ப என்னுள் எழுந்து என்னைத் வதைக்கிறது. உன்னைப் பிடித்து உலுக்கி ஏன் ஏன் இப்படி என்று கேட்கவும் முடியாதே என்பதை சகிக்கவும் முடியவில்லை…..கருணா..

========================

க.கலாமோகன்
சயிக்கிள்களின் மரணம்: கருணாவுக்கு அஞ்சலிகள்
================
Sritharan Thurairajah

அருமை நண்பனை இழந்தோம்

நான் எனது காப்புறுதித்தொழில் ஆரம்பித்த 2002 ஆம் ஆண்டு முதல் இன்று வரை எனக்கும், எமது நிறுவனத்திற்கும் தேவையான அனைத்து வடிவமைப்புகளும் கருணாவினால் செய்யப்பட்டது.
எமது LIFE 100 நிறுவனத்தின் இலச்சினை (LOGO) முதல் எல்லா வர்த்தக விளம்பரங்கள், பத்திரிகைக்கான வடிவமைப்புகள், ஒளிப்பதிவுகள், புகைப்படங்கள் விளம்பர சம்பந்தமான ஆலோசனைகள் வழங்குவார். நாங்கள் எப்படி எமது சேவையை மக்களுக்கு செய்ய வேண்டும், எப்படி விளம்பரங்கள் செய்வதன் மூலம் எமது தகுதியை உயர்த்த முடியும் போன்ற விடயங்களில் மிகவும் முக்கிய பங்கு செலுத்தியவர் .தனது கொள்கையிலும், கருத்திலும் மிகவும் தெளிவாகவும் ஆணித்தனமாகவும் இருந்தவர் கருணா.
ஒருவரையும் மனம் நோகாது செயல்பட்டார் கருணா. அமைதியாகவும், பண்பாகவும் மற்றவர்களை மதிப்பதிலும் முக்கிய கவனம் காட்டுபவர்

அவர் எனது மகனின் அரங்கேற்றத்திற்கான மடலைத் தயார் செய்து தந்தார். அதைப் பார்த்த ஒரு கர்நாடக சங்கீத மேதை சொன்ன வார்த்தை, “இந்த புத்தகமே சங்கீதம் போல் உள்ளது”. அவ்வளவு அருமையான வடிவமைப்பு.
கருணாவின் வரைகலை வடிவமைப்பில் அவருக்கு நிகர் அவரே.
============
கனடிய தமிழ் ஊடக துறைக்கு நிரப்பமுடியாத இடை வெளி
கருணா……….காத்திரமான. படை ப்பாளி காத்திரமான கவிஞர்.
காத்திரமான ௐவியர் காத்திரமான விமர்சகர் காத்திரமான ஊடக வியலாளன்.
காத்திரமான புகைப்படபிடிப்பாளன். காத்திரமான பத்திஎழுத்தாளன்.
காத்திரமான நாடகர். காத்திரமான முற்போக்கு சிந்தனையாளன்.
காத்திரமான உறவு அண்ணா……….சற்று கடினமான
இதுவரை என் ஆத்மா ஏற்க மறுக்கிறது உன் இழப்பை.
அண்ணா என்……. கார் கூட நம்பவில்லை நாம் பாட்டிமுடிய
வீட்டை வருவது என் கார்தானே.அண்ணா நீ…இல்லாவிடினும்….
உன்… ௐவியங்களாவது…..என்னுடன்….பேசும்.
====================
Huge loss for all of us. The gentleman who amazed me with his talent and his knowledge of art. May his soul Rest In Peace. May the good lord give him an eternal rest in his kingdom.
மென்மையான பேச்சு அன்பான சிரிப்பு ஆற்றல் நிறை ஓவியக்கலைஞன் . உள்ளம் கலங்குகிறது. சென்று வாருங்கள் கருணா!

Rudy Ruthran

கருணா நீ
நேர்த்தியானவன்..
போய் வா…
வாழ்ந்து முடித்தவன்
எவனுமில்லை..
வார்த்தைகள்
இல்லாமல்
போன மரணம்..
போய் வா தோழா…
சந்திப்போம்
மிக விரைவில்….

ஓவியர் கருணா அவர்களின் புகைப்படங்களின் தொகுப்பு

https://images.biztha.com/Latest-Events-2019/Oviyar-Karuna/


Packiyanathan Murugesu
அமரர் கருணா வின்சென்ட் அவர்களின் மறைவு என்னைத் திகைப்பூட்டுவதாகவும் அதிர்ச்சியூட்டியதாகவும் இருந்தது. தாய் வீட்டின் வளர்ச்சியில் அவர் கொண்ட பங்கினை அதன் எழுத்தாளன் என்ற ரீதியில் ஓரளவு அறிவேன். எனது அண்மைய பாடசாலைக் கட்டுரையின் இறுதி கட்டுரையாகிய “கரவெட்டி வதிரி திருஇருதையக் கல்லூரி பற்றி எழுதிய போதுஇ அதற்குரிய உசாதுணை நூல்கள் கிடைக்காதபோது நான் பத்திரிகையூடாகக் கேட்டபோது அவராகவே முன்வந்து அவரது தந்தை அங்கு அதிபராகக் கடமையாறடறிய படியால் அவரது காலத்திலேயே 75வது ஆண்டு விழா நடைபெற்றதனால் உடனே தந்தையிடமிருந்து அதன் பிரதிகளை தொலை மடல் மூலம் பெற்று எனக்கு தந்ததனால் பாடசாலையின் 75 ஆம் வருடம் வரை எழுதி முடித்து கரவெட்டி செனறு நூற்றாண்டு சஞசிககையைப் பெற்று கட:டுரையையும் முடித்து அச்நேற்றினேன். அதன் பின்பு தாய்வீடு பத்திரிகையில் வெளியிட அனுப்பிய போது தானே முன்னின்று அதன் படங்கள் கட்டுரை போன்றவற்றை தானே ஒழுங்கமைத்துக் கொடுத்து அழகாக்கினார் என்பது பற்றி தம்பி டிலிப்குமார் சொலக் கேட்டேன். இவர் இறந்த செய்தி அறிந்தபோது இதுவே என் மனக்கண் முன் ஓடியது. மனம் வெம்பி அழுதது. அமைதியானவர் நிறைகுடம் தளம்பாது என்பது போலவே அமைதியானவர். அவரது புகைப்படக் கண்காட்சியைப் பார்த்து பிரமித்துவிட்டேன் மிக அற்புதமாக அவரது மனம் மாதிரியே அழகாக இருந்தது.
ஓம் சாந்தி அன்னரின் நம்பிகைப்படி யேசுவை வேண்டுகின்றேன் அவரை மகிமையில் சேர்ப்பீர்களாக. ஆமென்

ஆதவன் வானொலியின் வாராந்த நேரலை நிகழ்ச்சியான வாரம் ஒரு வலத்தின், நேற்றைய (24/02/2019) நிகழ்ச்சியில் பங்கேற்று அஞ்சலி செய்த,
தமிழக ஓவியர் மருது, ஓவியர் மாற்குவின் மற்றுமொரு மாணவரான ஓவியர் கிருஸ்ணராஜா மற்றும் ஓவியர் கருணாவின் பள்ளித்தோழரும் திரைச் செயற்பாட்டாளருமான ஞானதாஸ் காசி நாதர் ஆகியோரின் குரல்கள் அடங்கிய தொகுப்பு இது

Thiagarajah Wijayendran

நெஞ்சம் அதிர்கிறது, தாங்க முடியவில்லை. எனது கவிதைத் தொகுதியின் இரண்டாம் பதிப்பு கனடாவில் வெளிவந்தபோது, அதன் அட்டையை மிகுந்த சிரத்தையுடன் வடிவமைத்துத் தந்தவர். எம்மிடை வாழ்ந்த ஒரு பேராற்றல்!! வாழ்வு இவ்வளவுதானா கருணா Karuna Vincent ?

அவரது ஓவியங்களை ஒருசேர இங்கு பதிய விரும்பியிருந்தேன், அது இப்படியானதொரு தருணமாகுமெனக் கனவிலும் நினைக்கவில்லை. படங்களை ஒழுங்காக்கிவிட்டு, எனது பக்கத்தில் சேமித்துவிட்டு, முற்குறிப்பை நேரம் கிடைக்கும்போது எழுதி, ஒழுங்காகப் பதிவிட விரும்பினேன், இது நிகழ்ந்தது கடந்த 16ம் திகதி. காலம் கொடியது. இந்த ஒரு வாரத்திற்குள் என்ன நடந்தது?

தாய்நாடு நோக்கிய செயற்பாடுகள் நிறையவே செய்யவேண்டும் என்ற கனவோடு இருந்தார். இதுபற்றி, அடுத்த தலைமுறையைச் சேர்ந்த Mhmd Nawshad, நான், கருணா மூவரும் ஓரிரவு நீண்ட நேரம் உரையாடியது நினைவில் மேலெழுந்து துயரை அதிகரிக்கிறது! அஞ்சலிகள்!!

 

Neethan Shan

After starting Tamil Heritage Month Initiative in late 2009, the first person I went to see to get the first ever Tamil Heritage Month poster was Karuna anna. I knew that his work always had creativity, innovation, progressive and futuristic thinking, respectful, broad appeal and high standard. He delivered this awesome poster for January of 2010 and this image on the poster became a widely used image for the past ten years.

He was a humble individual, yet always had a strong sense of pride in the work he did, rightly so. As we reflect today, a significant part of Tamil Canadian history is filled with his work and has his mark all over it (from music album designs, book covers, event photos, business and organizational logos, posters, advertisement designs for businesses, artwork depicting our journeys, relationships, histories and struggles, illustrations that supported many literary works and the list goes on).

Because he maintained a strong sense of independence as an artist, he continued to produce the highest quality work. Many people who valued that became his close friends and well-wishers. Those who seek to control and restrict artists couldn’t find ways to co-opt his work. He is a very knowledgeable person with an articulate speaking style but he often didn’t speak much as he wanted his work to speak, and we all know that his work speaks volumes.

In the unfortunate current reality where awards are being given on a weekly basis, (most not all, but significant portion of them) being given to friends, sponsors and family members, we sometimes end up not honouring and celebrating great talents to the level they deserve. But every social media post I see online about Karuna anna in the last few hours comes with deep reflection of the kind of impact he has had. This is the testament of the work this incredible artist had done. His legacy will live on through his work and through the artists he inspired. He will be remembered not just as a talented artist, but as a great human being who taught us a lot more, through the way he lived.

 

ஓவியர் கருணாவின் திடீர் மறைவு ஈழத் தமிழ்க் கலை, இலக்கிய உலகில் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் இழக்கக்கூடாததொன்றை இழந்துவிட்ட தவிப்பினையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கனடாவுக்கு நான் வந்தபின்னர் ஏறத்தாழ இருபது வருடங்களுக்குமுன் எனது கவனத்தை ஈர்த்த இளைஞர்களில் கருணா முக்கியமானவர். 1997ஆம் ஆண்டு, எனது “வாழ்ந்து பார்க்கலாம்” என்ற நாடக நூலுக்கு முகப்பு அட்டையை வடிவமைத்துத் தந்ததுமுதல் அவரை ஊன்றி அவதானிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் கிடைத்தன.
அவரது அமைதியும் அதிராத, மிகக் குறைந்த தொனியிலான பேச்சும் வசீகரமான புன்னகையும் அனைவரிடமும் காட்டும் மரியாதையும் எவரையுமே எளிதில் ஈர்த்துவிடுவன. அவருடன் உரையாடினால் அவரது பன்முகக் கலைத்திறமையும் தனித்துவமான இரசனையும் அவரிடம் ஓர் அபிமானத்துடன்கூடிய அன்பை ஏற்படுத்தும்.
மனவெளிக்காக நான் மொழிபெயர்த்து இயக்கிய இயூஜின் அயனஸ்கோவின் நாற்காலிகள் நாடகத் தயாரிப்பில் ஒலியமைப்புப் பணியைப் பொறுப்பேற்று, அத்துணை நேர்த்தியாக நிறைவேற்றிய அவரது தீவிர உழைப்பும் ஈடுபாடும் அவர்மீது மிகுந்த மதிப்பை ஏற்படுத்தியது. திறமை இருந்தாலும் அதனை செய்நேர்த்தியுடன் வெளிக்கொணர்வதற்கான தீவிர உழைப்பு மிகமிக அவசியம். அது கருணாவிடம் நிறையவே இருந்தது.
நீண்டகால அறிமுகத்தில் என்னுடன் பேசிய மிகக்குறைவான சந்தர்ப்பங்களில் அவர் பேசியதெல்லாம் திரைப்படங்கள் பற்றியும் ஐரோப்பிய ஓவியங்கள் பற்றியுமே. அவரது நண்பர் ஞானதாஸின் உரு குறுந்திரைப்படத்திற்காக எனது அபிப்பிராயத்தை ஒளிப்பதிவுசெய்ய எமது வீட்டிற்கு வந்தபோது, நண்பர்களுக்காக அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறையையும் மேற்கொள்ளும் கடும் உழைப்பையும் பார்த்து வியந்தேன்.
ஈழத் தமிழர் ஆர்வமே காட்டாத ஓவியக் கலையில் மிகுந்த ஈடுபாடுகொண்டு, தனது ஆற்றலை வெளிப்படுத்தும்போது, ‘கருணா தனித்துவமானவர்’ என்ற உணர்வை என்னுள் ஏற்படுத்தினார். அவரது ஓவியக் கண்காட்சி மறக்கமுடியாததொன்று. எமது வாழ்வியலை முன்னிறுத்தி அவர் வரைந்த ஓவியங்கள் எமக்கான தனித்துவத்தை வெளிப்படுத்தின. அவற்றுள், சூழ்ந்திருக்கும் இருளை அகற்றக் கையில் ஒளியேந்தியிருக்கும் மகனை சைக்கிளில் வைத்து ஏதோ ஒரு இலக்குநோக்கிப் பயணிக்கும் ஒரு தந்தையின் படம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. தந்தை – மகன் உறவு, ஒருமுகப்பட்ட உணர்வுடன் பயணிக்கும்போது நிலவும் ஆழ்ந்த மௌனம், அவர்களின் செயற்பாட்டில் வெளிப்படும் உடல்மொழி இவற்றையெல்லாம் நூலிழைக் கோடுகளால் அற்புதமாக வரைந்திருந்த கருணாவின் ஆற்றலை உணர்ந்தபோது, அவர் ஓவியத்துறையில் ஈழத்தமிழர்களுக்கு ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுத்தரப்போகிறாரென்று நம்பினேன். அந்தப் படம் இப்போது மௌனமாக எனது வீட்டுச் சுவரில். அதைவிடவும் ஆழ்ந்த மௌனத்தில் கருணா. நான் அவர் அடைவாரென்று எண்ணிய உச்சங்களை எட்டுமுன்னரே நிரந்தரமான அமைதியைக் கருணா அடைந்துவிட்டார்.
கருணா போன்றவர்களின் இழப்பே ஓர் இனத்தின் பேரிழப்பு.

=======================================

Nehru Gunaratnam

சாமானியப் பெருங்கலைஞன் கருணா – இட்டு நிரப்பமுடியாத பெருவெற்றிடம்

இதுவும் நடந்துவிட்டதா? என இன்றும் நம்பமுடியாமல் ஒரு வாரம் ஓடிமுடிந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும், அவன் நினைவுகளின் மலர்வுகளை படித்துப் படித்து, கருணா என்ற அந்த சாமானிய பெருங்கலைஞனின், பல பக்கங்களை தரித்து வருகின்றேன். ஏதோ ஒரு வகையில், பலரில் தாக்கம் செலுத்திய, அவனின் ஆளுமையே, ஒவ்வொரு பதிவின் வெளிப்பாட்டின் ஊடாகவும் எங்கும் வெளிப்பட்டு நிற்கிறது. யார் இந்தக் கருணா? என்பதை முழுமையாக புரியவேண்டும் என்றால், அந்தப்பக்கங்கள் அனைத்தும் ஒன்றினைக்கப்பட்டால் தான், கருணா என்ற பெருவடிவம் துல்லியமாக புலனாகும்… ஒரே பாடசாலை, தவழ்ந்து, பிரண்டது, ஒரே இடம் என்றாலும், இளைய கருணாவை தாயகத்தில் எனக்குத் தெரியாது… கனடாவில் தாயகம் சார்ந்த விடயங்களுக்காக, அவன் துறைசார்ந்து, அவ்அவ்போது சந்தித்திருக்கிறேன்.. பேசியிருக்கிறேன்… ஆனாலும் அவனுக்குள் இருந்த தேடுதல்களையும், அதில் அவனுக்கு இருந்த ஆத்மார்த்த ஈடுபாட்டையும், அதில் இருந்த மண் மணத்தையும், அனைத்தையும் இணைத்த ஆழமான பார்வைகளும், இவன் இன்றைய நிலையில் தமிழினத்திற்கு, அதிலும் குறிப்பாக புலம்பெயர் தமிழினத்திற்கு, எவ்வளவு முக்கியமான ஒரு பொக்கிசம் என்பதையும், எனக்கு அவவப்போது உணர்த்தியே வந்தன.

அதை அவன் வார்த்தைகளிலேயே எடுத்து வருகின்றேன். இது கருணா பகிர்ந்த கருத்து… “எமது சமூகத்தைப் பொறுத்தவரையில், ஏனைய கலைகளுக்கு வழங்கப்படுகின்ற முக்கியத்துவம் ஓவியத்திற்கு வழங்கப்படுவதில்லை, என்ற குற்றச்சாட்டு என்னிடம் இருக்கிறது. அதாவது ஓவியம் என்ற கலையைப் புறம்தள்ளி, நாம் ஒரு சமூகமாக எழுமுடியாது… அந்த ஒரு கலையினுடைய, அதாவது எங்களுடைய கதையை, இன்றைக்கு சொல்லி வைப்பதற்கும், எதிர்காலத் தலைமுறைக்கு நாம் எவ்வாறு வாழ்ந்தோம், எவ்வாறு எங்களுடைய கலாச்சாரம், பண்பாடு இருந்தது, போன்றவற்றை எதிர்கால தலைமுறைக்கு சொல்வதற்கு, ஓவியம் ஒரு முக்கியமான ஊடகம்… ஏனென்றால், ஓவியத்திற்கு மொழி தேவையில்லை…” இப்போது சொல்லுங்கள்… இந்த கருத்தியலை நடைமுறையில் இனி யாரால் செய்துவிட முடியும்..

இதற்கு தாயக மணம் முழுமையாக கமழ வேண்டும்… கலையில் உச்சம் வேண்டும்…. கூடவே ஓவியத்தின் நவீனப் பக்கம் மட்டுமல்ல, அதை இன்றைய கணணி உலகத்துடனும், நவீன முறைமைகளையும் இணைத்து, அது எக்காலத்திலும் வாழும் நிலையை எட்ட வேண்டும்… இவை அனைத்தும் இணையும் புள்ளியே கருணா.. அவ்வாறான மேலும் ஒரு புள்ளியை உருவாக்குவது சாத்தியமேயில்லை.. இதிலும் இதில் ஒரு புள்ளியில் உச்சம் பெற்றவர்கள், பல புள்ளிகளை பார்க்கவேயில்லை… ஆனால் ஒன்றோடு இன்னொன்றாக இணைந்த, இந்தப் புள்ளிகள் அனைத்தையும் தானாக சென்று தரிசித்து, உச்சம் பெற விழைந்ததே கருணாவின் உச்சம்…. அதனாலேயே Artist, Designer, Writer, Narrator, Art Director, Animator, Special Effect Director and Photographer என ஒன்றுடன் ஒன்று இணைந்த பல புள்ளிகளில் பல்பரிமாணக் கலைஞனாக மிளிர்ந்தான்… இதில் ஏதோ ஒரு புள்ளியில் அவனுடன் பரிச்சியமான பலருக்கும் கூட, அவனின் அடுத்த பரிமாணங்கள் குறித்த பக்கங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத் தான்…

இந்த இளைய வயதில், இந்த நிரந்தரப் பிரிவை அவனும் எதிர்பார்த்திருக்க மாட்டான்… நாமும் எதிர்பார்க்கவில்லைத் தான்… ஆனாலும் இன்றைய உலகில், என்றும், எதுவும், சாத்தியம் என்றாகிவிட்ட நிலையில், எதிர்காலத்தில் பலவற்றில் சமூகமாக அதீத கவனம் செலுத்த வேண்டிய, பல பக்கங்கள் இருக்கின்றன என்பதை கருணாவின் திடீர் மறைவு சுட்டி நிற்கிறது. ஒரு கலைஞனுக்கான செருக்கு இருந்தாலும், பந்தா இல்லாத ஒரு சாமானியக் கலைஞனாகவே, எவ்வித அங்கீகாரத்தையும் யாரிடம் இருந்தும் எதிர்பார்க்காமல், தன் ஆழ்மனத்திற்கு மட்டும் மகிழ்ச்சியை வழங்கிப் பயணித்தவன் கருணா என்ற இந்த மகாகலைஞன்… பகட்டுக்கு மட்டும் வெளிச்சம் போடும் சமூகமாக இருந்துவிடாமல், என் சமூகம் இன்று நிரந்தரமாக விடைபெற இறுதி யாத்திரையை ஆரம்பிக்கும், இந்த கருணா என்ற மாபெரும் கலைஞனுக்கு சமூக அங்ங்கீகாரம் வழங்கி, ஒன்றுபட்ட இனமாக வழியனுப்பி வைப்போம்…

 

================

கருணாவின் சொல்லும் செயலும்,
சிந்தனையும் செயற்பாடும்,
அனைவரயும் அதிரவைக்கும்
அதேபோல் உனது இழப்பும் அதிரவைக்கிறது
உனது உடல் மட்டும் இன்னும் இரு நாட்களே……
மனம் வேதனையில் தவிக்கிறது நண்பா..
இனிமேல் உனது நினைவில் தான் நாம்
உனது ஆத்மா சாந்தியடையட்டும்

நண்பன் கருணாவின் கைவண்ணம்,

==================

Thamayanthi Simon

 

TSounthar Sounthar

அஞ்சலி
ஓவியர் கருணா
1969 – 2019

 

 

 

Navajeevan Anantharaj

கருணா அண்ணாவும் நானும் ..

பெரும் படைப்பாளியின் அருமை இருக்கும போது தெரியவில்லை . அவர் இல்லை என்றநிலையை நானும் ஒரு சமூகமாக ஏற்கமுடியவில்லை .ஒரு 100 வயது வரை இருந்து படைப்புகளை தரவேண்டிய மனிதர் .அவரது இறப்பு இன்னும் நம்பமுடியவில்லை .இருக்கும் போது “அவரில்” தேடவில்லை என்ற குற்றவுணர்வு கொள்ளுகின்றது

படம் 1 “Apple iMac System” எனது மகனும்

என் மகனுக்கு அப்போது 3 வயது , 2012 ஆம் ஆண்டு கருணா அண்ணா வீட்டுக்கு வந்த போது ” நீ இன்னும் விண்டோஸ் தான் பாவிக்கிறாயா ? என்று கேட்டு , உடனேயே Apple store க்கு சென்று மிக பெறுமதியான System ஒன்றை கட்டாயபடுத்தி வாங்கித்தந்தார் . அந்த பணத்தை தவணை முறையில் Apple company க்கு கட்டுவதற்கு 3 வருடம் எடுத்துமுடித்தேன் . இன்றுவரை எனக்கு Mac System பாவிக்கத்தெரியாது, பாவிக்காமல் வைத்திருக்கும் அந்த மூன்று வருடமும், அவரை மனதுக்குள் பேசுவேன் .
இப்பொது மகனுக்கு 10 வயது ” அப்பாவுக்கு இன்னும் Mac Computer பாவிக்கத்தெரியாது ” என்று ஊரெல்லாம் சொல்லித்திரிவான் . இப்போது அது அவனுக்கு புது Mac System .
அந்த மனிதன் என்னை “next generation” க்கு கொண்டுபோக எண்ணியுள்ளான் . முடியாமல் திட்டியுள்ளேன் .

படம் 2
வாத்தியார் விட்டு பிள்ளை என்றதால் ஒரு ரவுடி கெட்டப்பில் படம் எடுக்க முடியாமல் இருந்தது , கருணா அண்ணா ஒருநாள் தனது வீட்டுக்கு கூப்பிட்டு ,
இப்படியொரு “நானும் ரவுடிதான்” எனும் படத்தை எடுத்தார் , தன் கையால் தலை சீவி , கிரீம் போட்டு அதுவும் கட்டாயபடுத்தி எடுத்தார் .

படம் 3
இது கருணா அண்ணா வீடு ,இலங்கை செல்லும் போது எனது வீட்டுக்கு போய் கொஞ்ச படம் எடுத்து அனுப்பு என்று கேட்டுக்கொண்டார் . மிகவும் இயற்கை சோலை வனங்களுக்குள் அவ்வீடு அமைந்திருந்தது . வீடு , கிணறு , கொல்லைப்புறம் , காணி , வீட்டில் உள்ளோர் என்று அனைவரையும் படம் ,வீடியோ எடுத்து கொடுத்தேன் . அடிக்கடி அது பற்றி கதைப்பார் .

படம் 4
எனக்காக அவரது கைவண்ணம் ,மற்றும் அவர் மூலம் வரைந்து கொடுத்த முதலாவது மாக்கம் நகர பொங்கல் , மற்றும் குழந்தைகளுக்கான நிறம் தீட்டும் ஓவியம் .

அவரது பல் துறை திறமைகளை வெளிக்கொணர்ந்த முக்கியமான ஊடகமாக தாய் வீடு திலீப் அண்ணாவும் அவரது ஊடகமும் முக்கியமானவை . அவரது கட்டுரைகள் , காணொளிகள் , ஓவியங்கள் மூலம் நமது தேடல்கள் தொடரவேண்டும்.

 

Sasi Chaseendran

Garland or Wreath?? 😢🤔😫
*******************************
I never knew Late Mr. Karuna until he passed away few days before. I never saw his photo or his drawings. I don’t remember anyone shared or praised him. Karuna is known as an illustrator of book covers, website designer, great artist & an excellent photographer!

After he died, I saw at least 15 posts! Everyone is sharing his arts, photos, his exhibition events, birthday cards, few people drew his face…why?? 🤔😢

You could have done all that when he was alive & he would have lived bit longer with that happiness! We have to learn to appreciate & recognize people while they are alive. Its much much & more better to put a garland on someone’s neck and making him/her happy rather than laying a wreath at the funeral. It’s my humble opinion!👍🙏🏻👌
👍👍 Let’s be the change!👌👌

Shabeetha Gnanen

ஓவியன் இறப்பதில்லை !
ஓவியனே நீ
ஓவியமாகி ….
காவிய பாட எம்மை
கனத்த இதயத்துடன் ….
பவ்யமான உன் பேச்சு …
தவறை தவறென்று சொல்லாது
தட்டி கொடுத்து
திருத்தும் அழகு தனி !
எத்தனை திறமைகள்
அத்தனையும் இன்று
மண்ணுக்கு !
ஒரு கலைஞனின்
இழப்பு
அந்த கலைக்குமே !
மண்ணுடன் உன் உடல் மட்டும் ‘
நீ உன் கலையால்
என்றும் எம்முடன் !